‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 28

[ 9 ]

பீமனும் அர்ஜுனனும் முன்னரே விதுரரின் குடில்முகப்பில் நின்றிருந்தனர். தருமனும் நகுலனும் அவர்களைப் பார்த்தபின் சற்று நடைவிரைவுடன் நோக்கு விலக்கி அணுகினர். “ஐவரையும் வரச்சொன்னார் அமைச்சர்” என்றான் நகுலன். தருமன் கேட்காமலேயே “நம்மை மட்டும்தான், அரசியை கூப்பிடவில்லை” என்றான். தருமன் தலையசைத்தார். வெயில் உடலிலிருந்து வியர்வையை ஆவியாக எழச்செய்தது. அன்றும் மழை இருக்கும் என்று தோன்றியது. ஆனால் வானம் ஒளிநிறைந்திருந்தது.

அவர்கள் அவர் வருவதற்காகவே காத்திருந்தனர் எனத்தெரிந்தது. அவர் அருகே வந்ததும் சொல்லின்றி தலைவணங்கினர். தருமன் முதலில் நடந்து உள்ளே செல்ல பீமன் தொடர்ந்து வந்தான். அவன் உடலில் இருந்து காட்டின் தழைமணமும் சேற்றுமணமும் எழுந்தது. அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் இறுதியாக வந்தனர். காலடிகள் மட்டும் ஒலித்தன. அவர்கள் குடிலுக்குள் நுழைந்ததும் அவை ஒலிமாறுபாடு கொண்டன.

தருமன் அமர்வதற்கு மட்டுமே பீடமிருந்தது. அவர் அமர்ந்ததும் மருத்துவ உதவியாளன் அவருக்கு தலைவணங்கியபின் விதுரர் தோளைத்தொட்டு “வந்து விட்டார்கள், அமைச்சரே” என்றான். அவர் கண் திறந்தபோது அவை தெளிந்திருப்பதை தருமன் கண்டார். நோயுற்றவர்களின் கண்களில் இருக்கும் அனற்படலம் அவற்றில் இருக்கவில்லை. உதடுகளும் ஈரம்கொண்டிருந்தன. மருத்துவ உதவியாளன் “பழச்சாறு அருந்தினார். காய்ச்சல் பெரும்பாலும் நின்றுவிட்டது” என்றான்.

தருமன் “வணங்குகிறேன், தந்தையே. உடல்நிலை மீண்டுவிட்டது என்றனர். இன்னும் சிலநாட்களில் எழுந்துவிடுவீர்கள்” என்றார். விதுரர் “ம்” என தலையை அசைத்து “உடல்நிலை சீரடைந்ததும் நான் தமையனிடமே மீளப்போகிறேன்” என்றார். தருமன் “ஆம், தாங்கள் அங்கிருப்பதே நன்று. இந்தக் காடு தங்களுக்கு ஒவ்வாதது. அஸ்தினபுரியில் நல்லுணவும் மருத்துவ உதவியும் உங்களை மீளச்செய்யும்” என்றார். “ஆம்” என்றார் விதுரர். “அங்கு தமையன் இருக்கிறார். நான் அவரிடம் மீண்டுசெல்லவேண்டும்.”

சிலமுறை முனகியபின் விழிகளை மூடியபடி “என் இடம் அதுவே. நான் அவரை ஒருகணமும் மறக்கவில்லை. என்னால் உறவுகளிலிருந்து விலக முடியாது. உறவுகளுக்கு மேலே எனக்கு எதுவும் இல்லை. அறமென்றும் விடுதலை என்றும் நான் எண்ணிக்கொள்ளலாம். அது உண்மை அல்ல என உறவுகளை விட்டுவிட்டு வந்தபோதுதான் தெரிந்தது” என்றார். சொல்லத் தொடங்கியதும் அவர் துயர் முழுதும் மொழியாகியது. “எத்தனை ஏங்கியிருக்கிறேன் இப்படி கிளம்பி வருவதைப்பற்றி! இத்தகைய ஒரு கானக வாழ்க்கையைப்பற்றி. யுதிஷ்டிரா, அங்கிருக்கையில் ஒவ்வொருநாளும் அங்கிருந்து கிளம்பிச்செல்வதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருப்பேன். நுணுக்கமாக திட்டங்கள் போடுவேன். ஆகவேதான் மிக எளிதாக நான் அஸ்தினபுரியிலிருந்து வெளியேற முடிந்தது.”

“என் பேரன்னை சத்யவதியும் அன்னையரும் காடேகக் கண்டபோது என்னுள் உருவான எண்ணமாக இருக்கலாம் இது. அவர்களை காட்டுக்குள் கொண்டுசென்று விட்டவன் நான்தான். ஒருநாள் நானும் வந்துவிடுவேன் என்பதே அன்று என் உள்ளம் கொண்ட எழுச்சி. அஸ்தினபுரியிலிருந்து கிளம்பியபோது அக்காட்டுக்குத்தான் சென்றேன். அங்கு சென்றதும் ஒன்று தெரிந்தது, என் உள்ளத்திற்குத்தான் அது அரசியரின் காடு. காடு அதை மறுநாளே கடந்துவிட்டது. புதிய முளைகள், புதிய உயிர்கள் என அது மாறுதோற்றம் கொண்டுவிட்டது. எத்தனை சிறியவர்கள் மானுடர்! நீர்மேல் ஓயாது எழுதிக்கொண்டிருக்கும் நீர்ப்பூச்சிகள்…”

அவர் பேசட்டும் என தருமன் காத்திருந்தார். “இங்கு வந்தபோதுகூட நான் தனியாக வரவில்லை.” அவர் அஸ்வதந்தம் பற்றிச் சொல்லப்போகிறார் என தருமன் எண்ணினார். ஆனால் அவர் அதைக் கடந்து “எங்கும் நான் தனியாகச் செல்லமுடியாது. உன்னைப் பார்ப்பவர் யோகி என எண்ணக்கூடும். நீ பிரியமுடியாத உறவுகளுடன் காடேகியவன் என அவர்கள் அறிவதில்லை. என் உறவுகள் விழிக்குத்தெரியாமல் தொடர்பவர்கள்.” அவர் மெல்ல புன்னகை செய்தார். “ஆனால் நான் நம்பி அமர்ந்திருந்த ஒன்று உடைந்துவிட்டது. அறமென நான் எண்ணிய ஒன்றின்மேல் கட்டப்பட்டவை என் எண்ணங்கள் யாவும். இவ்வுலகை சமைப்பதில் அறம் எப்பங்கும் ஆற்றவில்லை என்று உணர்ந்தபின் ஆடையற்று அவைமுன் நிற்பவனாக உணர்ந்தேன்.”

அச்சொல் அவர் வாயில் வந்தபோதுதான் அது தன்னுள் எப்போதுமிருக்கும் எண்ணம் என உணர்ந்தார். “ஆம், அந்த அவைநிகழ்ச்சி. அது அனைவருக்கும் காட்டியது அவர்கள் உண்மையில் எவர் என. மிகைநடிப்பு வழியாகவும், அமைதியினூடாகவும், சொற்களினூடாகவும், கனவுகளினூடாகவும் அவர்கள் அதை கடந்துசெல்கிறார்கள். நான் அதைக் கடந்து செல்லாதவன். ஏனென்றால் அவை நடுவே அவ்வண்ணம் நின்றது அவள் அல்ல.” பெருமூச்சுடன் “அப்போதே கிளம்பியிருக்கவேண்டும். ஆனால் ஒவ்வொன்றையும் சீரமைத்துவிடலாமென்னும் நம்பிக்கை அப்போதும் எஞ்சியிருந்தது. என் மீதான நம்பிக்கை, அதைவிட என் தமையன் மீதான நம்பிக்கை” என்றார்.

“நான் துவைதக்காட்டுக்குத்தான் சென்றேன்” என்றார் விதுரர் “அங்கே சார்வாக மெய்யறிவை கேட்டேன். நான் எண்ணிவந்தவை அதே சொற்கள். அறமென்பது அரண்மனகளைப்போல, கோட்டைகளைப்போல பயனுள்ளது. ஆனால் எவருடையது அது என்பதே அறியப்படவேண்டியது. இன்பவிழைவன்றி இப்புவியில் எதுவுமே உண்மையான விசைகள் அல்ல. அது நீர் மதுவென்றும் தேனென்றும் மருந்தென்றும் மாற்றுருக்கொள்வதுபோல நம் முன் வந்து நிற்கிறது என்றார்கள்.”

“அங்கு கேட்ட ஒரு வரி என்னை நிலையழியச் செய்தது” என்றார் விதுரர் “அறத்தை நாம் ஏன் நம்புகிறோம் என்றால் நம் இன்பவிழைவை நாம் மறைக்க விரும்புகிறோம் என்பதனால்தான். உண்மை உண்மை என என் உள்ளம் அந்த அவையிலமர்ந்து ஆயிரம் முறை உரக்கக் கூவியது” விதுரர் சொன்னார். “ஆனால் மெல்லமெல்ல அந்த அவையிலிருந்து நான் விலகத்தொடங்கினேன். முற்றிலும் சீரான சொல்லொழுங்குடன் முன்வைக்கப்பட்ட அவ்வெண்ணங்கள் அவற்றின் ஒழுங்காலேயே முழுமையற்றவை என எண்ணத்தலைப்பட்டேன். உண்மையின் நடுவே ஒர் அறியமுடியாமை இருந்தே தீரும். இல்லையேல் மானுடனின் எண்ணப்பெருக்கு என்றோ நின்றிருக்கும். இன்று தொடங்கி பல்லாயிரமாண்டுகாலம் கடந்த பின்னரும் மையமானது சொல்லப்படாமலேயே எஞ்சும்.”

“அங்கிருந்து இங்கு வந்தேன். என்னுள் அனைத்தும் கலைந்திருந்தன. என்னால் அவற்றை சொற்களாக்கி அடுக்கி எண்ணமாக்கிக் கொள்ளமுடியவில்லை. ஆனால் உள்ளம் சலிப்பதே இல்லை. அதற்கு வேறுவழியே இல்லை. அது தன் புடவியை தன்னிலிருந்து நூற்று நெய்து எடுத்தாகவேண்டும்.” அவர் புன்னகைத்தார். “இந்த நோயுறுதல் ஒரு நல்லூழே. ஓயாது ஓடிக்கொண்டிருந்த தறி நின்றது. கனவும் கடந்து ஆழ்நிலை கூடியது. அங்கே அனைத்தையும் கண்டேன். மொழி சென்றடையாத ஆழங்கள். யுதிஷ்டிரா, கனவுத்தளம் காட்சிகளால் ஆனது. ஆழ்தளமோ வெறும் உணர்வுகள். உடலற்ற ஆத்மாக்களைப்போல இம்மண்ணில் எதன்மேலும் ஏறிக்கொள்ளாதவை. எதன்பொருட்டுமென்றில்லாத உணர்வுகளை அளைந்தபடி இங்கே கிடந்தேன்.”

“அப்போது ஒன்றும் தெரியவில்லை. விழித்தெழுந்தபோது அடைந்தவற்றை சொல்லாக ஆக்கமுயன்றேன். உடைபட்ட சொற்களாக அவை மாறத்தொடங்கியதும் மீளலானேன்” என்றார் விதுரர். “அங்கு நான் அடைந்த உணர்வுகள் அனைத்தும் என் உறவுகளுக்கானவை. என் மைந்தர், மனைவி, மூத்தவர்…” பெருமூச்சுடன் “அவைதான் நான் என்றால் அவற்றை நான் ஏன் அஞ்சவேண்டும்? ஏன் உதறி வெவ்வேறு மாற்றுருக்களை சூடவேண்டும்? நான் இனி அவற்றை எவ்வகையிலும் தவிர்க்கப்போவதில்லை, அவற்றால் ஆனது என் உள்ளம்” என்றார்.

“சார்வாக நெறி இருபெரும் ஆசிரியர்களால் இரண்டாக பகுக்கப்பட்டுள்ளது” என்றார் விதுரர். “முதலாசிரியரான பிரஹஸ்பதி இன்பமே விழுப்பொருள் என்கிறார். ஆனால் பிறருக்கும் இன்பம் தேவையென்ற கட்டுப்பாடு அதன் எதிர்விசை. அந்த உணர்வை மானுடர் இங்கு வாழ்வதற்கு இன்றியமையாதது என்கிறார். சுக்ரரோ அந்த எதிர்விசை தூய ஆற்றலால் மட்டுமே எதிர்கொள்ளப்படவேண்டும் என்கிறார். இருவருமே காணாத ஒன்றுண்டு. அறமென்றும் பிறிதென்றும் இங்கு அணிசூடி நின்றிருப்பது மானுடனின் பற்று மட்டுமே. இன்பத்தைவிட முதன்மையானது அது.”

“யுதிஷ்டிரா, இப்புவியில் விழியிழந்த என் தமையனின் அருகமைதல் எனக்கு எந்த இன்பத்தைவிடவும் மேலானது. மானுடம் உறவுகளால் பின்னப்பட்டது. பற்றே இதன் இயக்கவிசை. அன்பென்று அதை சொல்கிறோம். இரக்கமென்று பிறிதொரு தருணம் கூறுகிறோம். நெஞ்சுருகாதவன் வாழ்வதே இல்லை. இங்குள்ள அனைத்தும் அவனுக்கு மறுக்கப்பட்டுள்ளது” என்றார் விதுரர். “அதை இப்போது மலைகளைப்போல பெரும்பருவடிவாக அருகறிகிறேன். அன்பு செலுத்துக, அதன்பொருட்டே வாழ்க! பிறிதொன்றுமில்லை. தெய்வங்களெனத் தோற்றம்காட்டி நின்றிருக்கும் பிற அனைத்தும் நம் ஆத்மாவை திருடிச்செல்லும் பூதங்கள்.”

“நான் சென்று என் தமையனிடம் இதை சொல்வதாக இருக்கிறேன்” என்றார் விதுரர். “அவர் இருக்கும் நிலையே உயர்ந்தது. விலங்குகளைப்போல எண்ணப்படலத்தால் மறைக்கப்படாத அன்பு. அது அழிக்கலாம், அன்பில்லாத அழிவை விட அன்பால் நிகழும் அழிவு மேல் என்பதே என் மறுமொழி.” அவர் பெருமூச்சுடன் கண்களை மூடிக்கொண்டார். பேச்சின் விசையால் அவர் மூச்சு விரைவுகொண்டிருந்தது. மெல்லிய சீழ்க்கை ஒலி ஒன்று மூச்சுடன் கலந்திருந்தது.

சிவந்த விழிகளைத் திறந்து “நான் இன்னும் சரியான சொற்களில் இவற்றை சொல்லப்போகிறேன் என எண்ணுகிறேன்” என்றார். உடனே பற்கள் தெரிய நகைத்து “பின்னாளில் சூதர் இதை விதுரநீதி என்றே சொல்லக்கூடும்” என்றார். தருமன் புன்னகை செய்து “அவ்வாறு ஒரு நெறிநூல் நமக்கு அமையட்டுமே, அமைச்சரே” என்றார். விதுரர் “இங்கிருந்து எங்கு செல்லவிருக்கிறீர்கள்?” என்றார்.

“இங்கிருந்து பிரகதாரண்யகம் செல்லலாம் என்பது எங்கள் எண்ணம். இங்கே அனைத்தும் மெல்ல திரும்பி எங்களுக்கு எதிராக ஆகிக்கொண்டிருக்கின்றன. விழிகளெல்லாம் விலகிவிட்டன” என்றார் தருமன். “ஆம், அதை என்னால் உணரமுடிகிறது. இங்குள்ள வேதநிலைகள் அனைத்திலுமே வேர்என இளைய யாதவர் மீதான சினம் கரந்துள்ளது” என்றார் விதுரர். புன்னகையுடன் திரும்பி சகதேவனிடம் “முதியவன் பல சுவர்களில் முட்டிச்சலித்து நீ சொன்ன இடத்துக்கே வந்துவிட்டேன், இளையவனே” என்றார்.

சகதேவன் “ஆம்” என்றான். “இத்தனை கடந்து அனைத்தையும் பார்ப்பவன் எப்படி எதிலுமே பற்றின்றி இருக்கிறாய், மைந்தா?” என்றார் விதுரர். “அமைச்சரே, நிமித்திகன் வெறும் சான்றுமட்டுமே. ஊழ் வடிவில் அவனுக்கு பிரம்மம் காட்சியாகிறது. தன்னிலை கரைந்து வழிபட்டு நிற்பதன்றி அவன் செய்யக்கூடுவது பிறிதொன்றுமில்லை” என்றான் சகதேவன். விதுரர் அவனையே சிலகணங்கள் நோக்கியபின் விழிதிருப்பி “நன்று” என்றார்.

 

[ 10 ]

விதுரர் கிளம்பிச்செல்லும் நாளில்தான் துவாரகையின் செய்தி வந்தது. காலனுக்கு பறவைவழியாக குந்தி அனுப்பிய செய்தி நான்குநாள் பயணத்தில் அவனுக்கு வந்தபோது அப்பால் விதுரரின் குடில்வாயிலில் தருமனும் தம்பியர் நால்வரும் நின்றிருந்தனர். விதுரரை அழைத்துச்செல்வதற்கான அத்திரியும் துணைசெல்லும் வீரர்கள் இருவரும் பொதிசுமக்கும் அத்திரியும் அதை ஓட்டும் மலைமகனும் அப்பால் நின்றிருந்தனர். அத்திரிகள் காதுகளை அடித்துக்கொண்டும் தும்மிக்கொண்டும் குனிந்து நிலத்தில் கிடந்த சருகுகளை எடுத்து கடித்துத் துப்பிக்கொண்டும் நின்றன.

காலன் அவர்களை அணுகி இயல்பாக நின்றான். அவன் வந்து நின்றதைக் கண்டதுமே நகுலன் அவனிடம் செய்தி ஏதோ இருப்பதை உணர்ந்துகொண்டான். அவர்கள் அவனை உளமில்லா விழிகளால் நோக்கிவிட்டு திரும்பிக்கொண்டனர். நகுலன் மெல்லிய குரலில் “அவருக்கான மாற்றாடைகள் எந்தப் பொதியில் உள்ளன?” என்றான். ஏவலன் “அத்திரிமேல், இளவரசே” என்றான். “அவர் நீராடி உடைமாற்றுகையில் அனைத்துப் பொதிகளையும் அவிழ்க்கமுடியாது. அவற்றை மட்டும் தனியாக எடுத்து ஏவலன் தன் தோளில் போட்டுக்கொள்ளட்டும்” என்றான். ஏவலன் தலை வணங்கினான்.

பீமன் “வரும்போது இவை ஏதுமில்லாமல் வந்தார்” என்றான். மிக இயல்பாக அச்சொற்கள் விழுந்தாலும் அதிலிருந்த இடக்கை காலன் உணர்ந்தான். “உறவுகள் தேவை என அவர் மெய்யறிவை அடைந்ததும் ஒவ்வொன்றாக ஒட்டிக்கொள்கின்றன. பெரும்பாலும் அஸ்தினபுரியைச் சென்றடையும்போது ஒரு சிறு ஊரே அவருடன் செல்லும் என எண்ணுகிறேன்” என்றான். “மந்தா, விடம்பனம் தேவையில்லை” என்றார் தருமன் மெல்லிய கசந்த குரலில். “அதை இத்தருணத்தை அமைத்த விசைகளிடம் அல்லவா சொல்லவேண்டும், மூத்தவரே?” என்றான் பீமன்.

நகுலன் புன்னகைக்க தருமன் தலைதிருப்பிக்கொண்டார். அப்போது அவன் அவர் பார்வையில் பட்டான். “என்ன?” என்றார். ‘ஒன்றுமில்லை’ என அவன் தலையசைத்தான். ஏவலன் ஒருவன் குடிலைவிட்டு வெளியேவந்து ஒரு சங்கை எடுத்து ஊதினான். அங்கிருந்த அனைவரும் சித்தமான உடலசைவுகள் எழுந்தன. அப்பால் குடில்களுக்குள் இருந்து வேதமாணவர்கள் வெளியே வந்தனர். மையக்குடிலில் இருந்து ஒரு முதியமாணவன் தாலத்தில் பழங்களும் நீரும் மலர்களும் தகழியும் சுடரும் கொண்டு நடந்துவந்தான். அவனுடன் இன்னொருவன் ஒரு மூங்கில்பெட்டியுடன் வந்தான். மூன்றாமவன் மணியொன்றை ஒலிக்கவைத்தபடி தொடர்ந்தான்.

குடிலுக்குள் இருந்து ஏவலன் ஒருவனின் தோளைப்பற்றியபடி விதுரர் மெல்ல காலடி எடுத்துவைத்து நடந்து வந்தார். மூச்சிளைத்து நின்று பின்பு மெல்ல படிகளில் கால் வைத்து இறங்கினார். தருமன் அவர் அருகே நெருங்கி கைகளைப்பற்றி உதவினார். முற்றத்தில் நின்று இளைப்பாறிய விதுரர் அவர்களை திரும்பிப்பார்த்தார். “இன்னும் சிலநாட்களுக்குப்பின் கிளம்பியிருக்கலாம், அமைச்சரே. மலைச்சரிவில் அத்திரிப்பயணம் கடினமானது” என்றார் தருமன். “ஆம், ஆனால் கடினமான பயணம் என்னை மீண்டெழச்செய்யும்” என்றார் விதுரர்.

“தாங்கள் சொன்னவற்றைத்தான் எண்ணிக்கொண்டிருக்கிறேன், அமைச்சரே. என் சொற்களாக அதையே பெரியதந்தையிடம் சொல்லுங்கள். எங்கள்பொருட்டு அவர் சற்றேனும் துயர்கொண்டிருந்தால் அது தேவையில்லை. நாங்கள் இங்கு உவகையுடன் இருக்கிறோம். பன்னிரண்டு ஆண்டுகாலம் நீண்டது, அதை முடித்து நாங்கள் அவரை மீண்டும் காண்போம் என நான் எண்ணவில்லை. அவர் எங்களைப்பற்றிய குற்றவுணர்வு ஏதுமின்றி கடந்து செல்லட்டும்” என்றார் தருமன். “ஆம், அதை உன் சொற்களாகச் சொல்கிறேன்” என்றார் விதுரர்.

பீமனை நோக்கிய தருமன் “மந்தா, தந்தையை வணங்கு” என்றார். பீமன் அருகே சென்று குனிந்து வணங்க விதுரர் வெடித்துச் சிரித்து “குனிந்தபின் என் உயரம் இருக்கிறான். இவனை மானுடன் என்றே எண்ணத் தோன்றவில்லை” என்றார். “நான் உண்மையில் குனிவதே இல்லை, அமைச்சரே” என்றான் பீமன். “அவ்வண்ணமே என்றும் திகழ்க!” என விதுரர் வாழ்த்தினார். அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் சென்று வணங்கி வாழ்த்து கொண்டனர்.

“செல்கிறேன்” என்று சொல்லி அவர் கிளம்பினார். அவர் திரௌபதியைப்பற்றி ஏதேனும் கேட்பார் என காலன் எண்ணினான். அவர் அச்சொல்லையே எடுக்கவில்லை. ஆனால் அவர்கள் அப்போது அவளைத்தான் எண்ணுகிறார்கள் என எப்படியோ தெரிந்தது. விழிகள் இருக்கும்வரை மானுடர் மறைப்பது என ஏதுமில்லை. விதுரர் நடக்கத்தொடங்கியதும் எதிரே வந்த தாலப்பொலியினர் அவரை சந்தித்தனர். தாலமேந்திய மாணவன் “தங்கள் வருகை மங்கலம் கொணர்ந்தது. விடைபெறல் மெய்யறிவை எஞ்சவைக்கிறது. நன்று சூழ்க என ஆசிரியர் வாழ்த்தினார்” என்றான்.

“ஆம், நான் மறக்கமுடியாத ஓர் இடம். இங்கு ஒரு புதையலை நான் முற்பிறவிகளில் புதைத்து மறந்திருந்தேன்” என்றார் விதுரர். இன்னொருவன் மூங்கில் பேழையைத் திறந்து உள்ளிருந்து ஒரு மஞ்சள்நிறமான பட்டுத்துணியை எடுத்து விதுரருக்குப் போர்த்தி “இது எங்கள் ஆசிரியரின் வழித்துணை வாழ்த்து, அமைச்சரே” என்றான். “பேறுபெற்றேன்” என்றார் விதுரர்.

அவர்கள் நடந்து அத்திரியை நோக்கி சென்றனர். வீரர்களின் உதவியுடன் விதுரர் அத்திரிமேல் ஏறிக்கொண்டதும் அவர் கால்களை சேர்த்து தோல்நாடாவால் கட்டினர். அவர்கள் ஒருவருக்கொருவர் சொல்பரிமாறிக்கொண்டதும் முகப்பில் செல்பவன் தன் சங்கை ஊதினான். குருநிலையின் அனைத்து மாணவர்களும் “வழி சிறக்க! பூஷன் துணை வருக!” என வாழ்த்தினர்.

அவர்கள் சென்று மறைவதை நோக்கி நின்றிருந்த பீமன் “நமக்கு எவரும் இப்படி வழியனுப்புகை அளித்ததில்லை” என்றான். “நாம் கானகர்” என்றார் தருமன். “ஆம், மீண்டும் அரசர்கள் ஆவோம் என்பதில் உறுதியுமில்லை. பட்டு ஏன் வீணாகவேண்டும்?” என்றான் பீமன். முகம் சுளித்து திரும்பிய தருமன் “என்ன செய்தி?” என காலனிடம் கேட்டான். “அரசே, துவாரகை பற்றிய செய்தி வந்துள்ளது” என்று அவன் சொன்னான். அர்ஜுனன் முகம் மாறியது. அவன் அருகே வந்து “ம்” என்றான்.

28

“செய்தி அஸ்தினபுரிக்கு பேரரசியின் கைகளுக்குச் சென்றிருக்கிறது. எனக்கு வந்தது அவர் அனுப்பிய மந்தண ஓலை. தங்களிடம் செய்தி சொல்லும்படி ஆணை” என்றான் காலன். “ம்” என்றார் தருமன். “துவாரகையின் யாதவர்களுக்குள் மெல்லிய ஊடல்கள் எப்போதும் இருந்துகொண்டிருந்தன என அறிந்திருப்பீர்கள். அரசியின் குலமான அந்தகர்களும் அரசரின் குலமான விருஷ்ணிகளும் தங்களை முதன்மைக்குடிகளாக எண்ணுவதை தடுக்கமுடியவில்லை. போஜர்களும் ஷைனியர்களும் குக்குரர்களும் ஹேகயர்களும் சினம்கொண்டபடியே சென்றனர். நாம் சூதுக்களத்திற்குச் சென்ற நாட்களில் அப்பிளவு பெரிதாகியது.”

“குக்குரர்களில் ஒரு சாராரிடம் சால்வநாட்டரசர் மந்தணப்பேச்சு நடத்தியிருக்கிறார். ஹேகயர்களும் உடனிணைந்துள்ளனர். அவர் துவாரகையின் எல்லைகளுக்கு மேல் படைகொண்டுசென்றார் என்றால் அவர்கள் போரில் கலந்துகொள்ளமாட்டார்கள் என்று உறுதிபெற்று அவர் துவாரகையின் வடக்கு எல்லைகளை தாக்கியிருக்கிறார். மலைப்பொருட்கள் கொள்ளும் சந்தைகளிலும் சிந்துவின் படகுகளிலும் சுங்கம் கொள்ளும்பொருட்டு துவாரகை அமைத்திருந்த பன்னிரு சாவடிகளை சால்வர்ன் தாக்கியிருக்கிறார். எதிர்ப்படை கொண்டுசென்ற சாத்யகியை சால்வரின் படைகள் வென்றன.”

அர்ஜுனன் “ம்” என்றான். “துவாரகையில் அப்போது இளைய யாதவர் இல்லை. நடந்தது ஒரு சிறு கொள்ளை என எண்ணி பலராமர் சிறிய படையைத்தான் சாத்யகிக்கு அளித்திருக்கிறார். சாத்யகி படைகொண்டு செல்லும் வழியிலேயே அந்தகர்களும் விருஷ்ணிகளும் தவிர பிறர் நின்றுவிட்டனர். எல்லைக்குச் சென்றபோதே சால்வருடன் சைந்தவரின் படைகளும் பால்ஹிகரின் படைகளும் துணைநிற்பதை சாத்யகி கண்டார். அவர் படை முழுமையாக அழிந்தது. புண்பட்டு அவர் களத்திலிருந்து மீண்டார்.”

“செய்தியறிந்து இளைய யாதவர் திரும்பிவந்தார். சால்வரை வெல்லாவிட்டால் துவாரகைக்கு அது பேரிழிவு. மேலும் துவாரகை ஆற்றலற்றது என்ற சொல்லும் எஞ்சும். ஆனால் எல்லைகளைத் தாக்கியதென்பது சால்வர் துவாரகையின் படைகளை தனக்கு உகந்த இமயமலையடிவாரத்திற்கு இழுக்கும்பொருட்டு செய்த சூழ்ச்சியே. அங்கே அவர் தோழர்கள் அவரை துணைக்கிறார்கள். சைந்தவரும் பால்ஹிகரும் படைகொடுக்கிறார்கள். திரிகர்த்தர்களும் உடன்நிற்பதாக சொல்லப்படுகிறது. அஸ்வத்தாமரும் கூர்ஜரரும் அறியாது படைத்துணை அளிப்பார்கள்.”

“ஆகவே படைகொண்டு சென்றால் வென்றாகவேண்டும். யாதவர் ஒன்றாகத் திரண்டு நிற்காமல் படைவெல்லல் அரிது. இந்திரப்பிரஸ்தத்தின் உதவியும் இல்லை என்பதனால் இளைய யாதவர் தயங்கிக்கொண்டிருக்கிறார். பாரதவர்ஷத்தில் துவாரகை இன்று முற்றிலும் தனித்துவிடப்பட்டுள்ளது” என்று காலன் சொன்னான். “ஆம், இத்தருணத்தைப் பயன்படுத்தி அதை முற்றழிப்பதே அரசுசூழ்தலில் சிறந்த முடிவாக இருக்கமுடியும்” என்று அர்ஜுனன் சொன்னான். “இவையனைத்துக்கும் பின்னால் அங்கன் இருக்கிறான் என்பதில் ஐயமில்லை.”

“பேரரசி அவ்வாறு சொல்லவில்லை” என்றான் காலன். “அன்னை சொல்லமாட்டார்கள்” என்றான் அர்ஜுனன். உடனே “அவர்களுக்கு அது தெரிந்திருக்காது” என்று சேர்த்துக்கொண்டான். “இப்போரிலுள்ள சூழ்ச்சி எண்ணுந்தோறும் விரிகிறது, மூத்தவரே” என தருமனிடம் சொன்னான். “படைகொண்டு செல்ல சால்வர் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார்? பால்ஹிகனும் திரிகர்த்தனும் தூயஷத்ரியர் அல்ல. சைந்தவனும் அஸ்வத்தாமனும் அஸ்தினபுரிக்கு உறவினர். ஆகவே சால்வர். அவரை யாதவர் தாக்கினால் ஷத்ரியர் அணிதிரள்வார்கள். அஸ்தினபுரியின் படைகளும்கூட வெவ்வேறு பெயர்களில் கலந்துகொள்ளக்கூடும்.”

“இளைய யாதவரை எவரும் வெல்லமுடியாது” என்றார் தருமன். “ஆம், ஆனால் இது தனிப்போர் அல்ல. படைப்போர். இங்கு ஒன்றுதிரண்ட படை வேண்டும். என்ன நிகழ்கிறது துவாரகையில் என்றே தெரியவில்லை” என்றான் அர்ஜுனன். “அங்கே யாதவர்களை ஒன்றெனத் திரட்ட முயற்சிகள் நிகழ்கின்றன என்கின்றது செய்தி. நாளும் இளைய யாதவர் யாதவச் சிற்றூர்கள்தோறும் சென்று தன் குடியினரிடம் பேசுகிறார். அவர்கள் அவரை இன்னும் முழுதேற்கவில்லை” என்றான் காலன்.

“அது மானுட அறியாமை” என்றார் தருமன். “யாதவர் இப்போது இளைய யாதவருக்கு முன்னால் அவர்கள் கன்றோட்டும் சிறுகுடியாகச் சிதறி பெருமையழிந்து கிடந்ததை முழுமையாக மறந்திருப்பார்கள். ஒவ்வொருவரும் இன்று பழம்பெருமை மிக்கவர்கள் என சொல்லி அதை உண்மையிலேயே நம்பத்தலைப்பட்டிருப்பார்கள். இளைய யாதவருக்கு மேல் தங்கள் குலம் கொள்ளும் வெற்றியைத்தான் அவர்கள் இன்று எண்ணிக்கொண்டிருப்பார்கள்.”

காலன் “யாதவகுடிகள் எப்போதுமே பூசலிடுவதில் பெருவிருப்புள்ளவர்கள்” என்றான். “இன்று அத்தனைபேருமே கார்த்தவீரியனின் கொடிவழியினர் என்கிறார்கள். பெருமைமிக்க அக்குலத்திற்கு இளைய யாதவர் சிறுமை கொண்டுவந்துவிட்டார் என்று பேசிய ஒரு முதியவனை நான் ஒருமுறை துவாரகையில் கண்டேன்.” சற்றுநேரம் அமைதி நிலவியது. “எதிரிகள் சூழும்போதேனும் அவர்கள் ஒன்றுபடலாம்” என்றார் தருமன்.

“ஆம், அது பொதுவாக நிகழ்கிறது. ஆனால் அவர்களில் ஒருவர் மறுதரப்பில் இருக்கும்போது அவ்வாறல்ல. அஸ்வத்தாமனின் தோழனாகிய யாதவ குடித்தலைவன் கிருதவர்மன் இன்று இளைய யாதவர் மேல் நிகரற்ற பெருஞ்சினத்துடன் இருக்கிறான். அவன் ஒருகாலத்தில் இளைய யாதவருக்கு நிகரான வீரன் என அறியப்பட்டவன்” என்றான் அர்ஜுனன். “அவரை ஆதரித்தால் விருஷ்ணிகளும் அந்தகர்களும் வீழ்ச்சியடைவார்கள் என்று சொன்னால் போதும்… அவ்வாறுதான் நடந்திருக்கும்.”

“ஆம், இப்படி ஏதோ நிகழ்கிறது என நான் உணர்ந்திருந்தேன். இல்லையேல் இளைய யாதவர் நம் உதவிக்கு வந்திருப்பார்” என்றார் தருமன். “அதை திரௌபதி நன்றாகவே உணர்ந்திருக்கிறாள்” என்று அவர் சொன்னபோது பிறர் முகங்கள் மாறின. “நாம் செய்வதற்கொன்றுமில்லை. நன்று நிகழ்க என்று நம் மூதாதையரை வேண்டிக்கொள்வோம். இளைய யாதவரின் சொல்வன்மையையும் சூழ்ச்சித்திறனையும் நம்புவோம்” என்றார் தருமன்.

“அன்னைக்கு இதையே என் செய்தியாக அனுப்பிவிடுங்கள், காலரே” என்றபடி தருமன் திரும்பினார். “மூத்தவரே, இன்று இளைய யாதவர் இக்கட்டில் இருக்கிறார். நம் உதவியை அவர் நாடக்கூடும். இளையவன் வில்லுடன் சென்றால் அவரை வெல்ல இவர்களால் முடியாது. இது நம் கடமை” என்றான் பீமன். “நாம் இன்று கானேகிவிட்டவர்கள்” என்றார் தருமன். “கான்விட்டு மீள்வோம்!” என தன் தொடையில் அறைந்து ஒலியெழுப்பியபடி பீமன் கூவினான்.

“நம்மை சொல்மீறச் செய்து காட்டிலிருந்து கொண்டுவந்து போர் வென்றால் அது இளைய யாதவருக்கு பெருமை அல்ல, மூத்தவரே” என்றான் அர்ஜுனன். “இது அவரது களம். அவருக்கு உருவாகும் முதன்மை எதிர்விசை. அதை அவரே வென்று மீளட்டும்.” பீமன் சினத்துடன் தலையசைத்தான். “நற்செய்தி சின்னாட்களில் வரும்” என்றான் அர்ஜுனன். “நான் அறிவேன் அவரை. அவர் வெல்லற்கென வந்தவர்.”

முந்தைய கட்டுரைதகழி சிவசங்கரப்பிள்ளையின் ஏணிப்படிகள்
அடுத்த கட்டுரைபனிமனிதன் -கடிதங்கள்