ஐரோம் ஷர்மிளாவின் மனமாற்றம்

Sharmila1

மணிப்பூரில் ஐரோம் ஷர்மிளா ‘உண்ணாவிரதத்தை’ முடித்துக்கொண்டு ’உயிர்வாழ’ முடிவுசெய்திருப்பது பற்றி பலவகையான கருத்துக்கள் வந்துகொண்டிருக்கின்றன. உண்ணாவிரதம் என்னும் போராட்டமே வேடிக்கையாக மாறியதுதான் ஐரோம் ஷர்மிளாவின் சாதனை. சின்னக்குழந்தைகள் கூட ஒரு பெண்மணி பல ஆண்டுகளாக ‘உண்ணாவிரதம்’ இருக்கிறார் என்று சொல்லிக்கேட்டால் ‘அதெப்படி?” என்றுதான் கேட்கும்.

ஒரு ‘தீவிர சாரார்’ ஐரோம் ஷர்மிளா உண்ணாவிரதத்தை முடிக்கக்கூடாது என நினைக்கிறார்கள். அந்த அம்மணிக்கு பெரிய கட்டாயம் உள்ளது என தெரிகிறது. ஏனென்றால் ஒரு ‘தொன்மம்’ கரைவதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவர்கள் அவரைப்பற்றி எழுதிக்குவித்த உணர்ச்சிக்காவியங்களுக்கெல்லாம் என்னதான் பொருள்?

ஐரோம் ஷர்மிளா மணிப்பூரில் ஒரு இனக்குழுவின் பிரதிநிதி. அக்குழுவுக்குள்ளே கூட அவருக்கு பெரிய ஆதரவு இல்லை, வரும்காலத்தில் அது தெரியவரும். இப்போது மணிப்பூரின் அரசியல்சூழல் முழுமையாகவே மாறிவிட்டது. சந்தேகமிருந்தால் உங்கள் பக்கத்து ஓட்டலில் வேலைசெய்யும் மணிப்பூர் பையனிடம் கேட்டுப்பாருங்கள்

மணிப்பூர் மெல்லமெல்ல மீண்டு வரவேண்டும். மீய்ட்டிகள் ஜனநாயகத்தை புரிந்துகொள்ள வேண்டும். புரிந்துகொள்ளும்தோறும்தான் அவர்களுக்கே விடுதலை.

நான் தினமலரில் எழுதிய கட்டுரை இது

*

அணைக்கமுடியாத நெருப்பு

சென்ற ஆண்டு வடகிழக்கு மாநிலங்களில் மிகச் சிறிய ஊர்கள் வழியாகப் பயணம் செய்து கொண்டிருந்தேன். வடகிழக்கில், சீரான வளர்ச்சி இப்போது உருவாகத் தொடங்கியிருக்கிறது.

சிலிகுரி என்னும் இடமே, வடகிழக்கில் நுழைவதற்கான வாசல். கிழக்கு வங்காளத்திற்கும், நேபாளத்திற்கும் நடுவே இருக்கும் மிகச் சிறிய நிலப்பகுதி, ஒரு தசைத்தொடர்பு போல, வடகிழக்கை இந்தியாவின் மைய நிலத்துடன் இணைத்துள்ளது.

சிலிகுரியிலிருந்து அருணாச்சலப் பிரதேசத்திற்கோ, மணிப்பூருக்கோ செல்வதென்பது மிகக்கடுமையான ஒரு பயணம். பிரிட்டிஷார் போட்ட, வசதி குறைவான, பழமையான சாலை. சமீபகாலம் வரை, மீட்டர்கேஜ் ரயில் பாதைகள் தான். இப்போது தான் முதல் முறையாக, மொத்த வடகிழக்கையும் சிலிகுரி வழியாக வடஇந்தியாவுடன் இணைக்கும், மிகப்பெரிய ரயில் திட்டம் நிறைவேறியிருக்கிறது.மேலும், பிரம்மாண்டமான ஒரு திட்டம் தொடங்க இருக்கிறது. டெல்லியில் தொடங்கி அஸாம், மணிப்பூர் வழியாக பர்மா சென்று தாய்லாந்தை அடைந்து, பாங்காக் வரை செல்லும் ஒரு பலதேச நெடுஞ்சாலைத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி:அது நிறைவேறினால் வடகிழக்கின் முகம், முற்றிலும் மாறிவிடும். நாங்கள் செல்லும்போது, சிலிகுரி முதல் அருணாச்சல பிரதேசம் இதாநகர் வரை செல்லும் சாலைத் திட்டம், முழு வேகத்தில் நடந்து கொண்டிருந்தது.பயணங்களில் நாங்கள் பார்த்த வடகிழக்கில் மேகாலயாவும், நாகாலாந்தும் ஓரளவு பொருளாதார வளர்ச்சி அடைந்தவை. திரிபுரா தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இருக்கிறது. ஆனால், மணிப்பூர் அனேகமாக எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. காரணம், மணிப்பூர், பர்மாவின் எல்லையை ஒட்டி இருக்கிறது. பர்மாவின் வடகிழக்குப் பகுதியில் எந்த வகையான அரசுக் கட்டுப்பாடும் இல்லை. பழங்குடிகளின் சுதந்திரமான சமூக அரசுகள் அங்குள்ளன. மணிப்பூரிலிருந்து அங்கு சென்று, உடனே மீண்டு வரமுடியும். ஆகவே, மணிப்பூர் இன்னமும் கூட தீவிரவாதிகளின் மறைமுகக் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

பிரிவினை கோரும் பழங்குடித் தீவிரவாதிகள், அவர்களின் அரசியலின் ஒரு பகுதியாக உறுதியாகச் சொல்லும் விஷயம் என்னவென்றால், இந்தியப் பெருநிலத்திலிருந்து எந்த வணிகர்களும் அங்கு வரக்கூடாது என்பதே. இந்தி சினிமாப் படங்கள் அங்கே ஓடக்கூடாது. நாங்கள் அங்கு

செல்லும்போது தமிழ்ப் படங்கள் ஓடிக் கொண்டிருப்பதைப் பார்த்தோம்.

மணிப்பூருக்கு பிற நிலங்களுடனான வணிகம் நிறுத்தப்பட்டால் மட்டுமே, அந்நிலத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும் என நினைக்கிறார்கள்.

ஆகவே லாரிகள் தாக்கப்படுகின்றன. இந்தியாவின் மிக அதிக மழை பெய்யக்கூடிய பகுதிகளில் ஒன்றான மணிப்பூரில் விளைச்சல் எப்போதும் நிறைவாக இருந்தும்கூட அங்குள்ள பொருட்களை எந்த வகையிலும் விற்க முடியவில்லை. எந்த வகையிலும் அங்கு பொருளாதார செயல்பாடுகள் நடைபெறவில்லை. வெளிக்காற்று உள்ளே வராமல் உள்காற்று வெளியே செல்லாமல் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது மணிப்பூர்.

வேலை கிடைக்காத மணிப்பூரின் இளைஞர்கள் அங்கிருந்து இரு வகையில் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். மணிப்பூர் முழுக்க பெங்களூரிலும், சென்னையிலும் உள்ள பொறியியல் மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் மிகப்பெரிய விளம்பரப் பலகைகளை பார்த்தோம்.

அங்குள்ள செல்வாக்கு மிக்கவர்கள் தங்கள் பிள்ளைகளை இங்கே அனுப்பி படிக்க வைத்து இங்கேயே தங்கியிருந்து இங்கேயே வேலை செய்ய வைத்து விடுகிறார்கள். அங்குள்ள ஏழைகள் அங்கிருந்து ஓட்டலிலும் ஆலைகளிலும் வேலை செய்வதற்காக இங்கே வருகிறார்கள். தமிழகத்தின் நடுத்தர ஓட்டல்களில் கூட மணிப்பூர் இளைஞர்கள் வேலை செய்வதைப் பார்க்கலாம்.

அவர்களுக்கு இங்குள்ளவர்களைவிட குறைவான சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஆனால் செலவு போக ஐந்தாயிரம் ரூபாய் மணிப்பூருக்கு அனுப்ப முடிந்தால், அது அவர்களுக்கு மிகப்பெரிய தொகை. ஏனென்றால், அந்த ஐந்தாயிரம் ரூபாயை அங்குள்ள தீவிரவாதிகளால் கட்டுப்படுத்தப்படும் பொருளாதாரத்தில் சாதாரணமாக ஈட்ட முடியாது.

மணிப்பூரின் தீவிரவாதிகளை ஆதரித்து இங்கு தொடர்ந்து எழுதும் உள்நோக்கம் கொண்ட பல அரசியல் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். மணிப்பூரின் பிரிவினைவாதியான ஐரோம் ஷர்மிளாவை ஒரு பெண் காந்தி என்று சொல்லும் அளவுக்கு எழுதி தள்ளியிருக்கிறார்கள். இவர்களிடம், ”சரி, ஐரோம் ஷர்மிளாவின் அரசியல் என்ன? அது முற்போக்கானதா?” என்று ஒரு எளிமையான கேள்வியைக் கேட்க முடியாது.

ஐரோம் ஷர்மிளா போராட்டம்:ஐரோம் ஷர்மிளா, மீய்ட்டி என்ற பழங்குடி இனத்தை சார்ந்தவர். மொத்த மணிப்புரி நிலமும், மீய்ட்டிகளின் நாடாக மாற வேண்டும் என்று அவ்வினம் சொல்கிறது. அதன்பொருட்டு ஐம்பதுகள் முதல் தொடர்ச்சியாக அங்கே பழங்குடி கலவரங்கள் நடந்து பல்லாயிரம் பேர் இறந்துள்ளனர்.

அங்கு இருக்கும் மற்ற சிறுபான்மைப் பழங்குடிகளான குக்கிகள், அங்கமிகள், நாகர்கள் தங்களுக்கென்று வேறு பழங்குடி ராணுவங்களை உருவாக்கிக் கொண்டு மணிப்பூர் முழுமையும் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று கோருகிறார்கள்.

இந்த ராணுவங்கள் மோதிக்கொண்டே இருக்கின்றன. அச்சிறிய மாநிலத்தில், 1992 முதல் 1997 வரையிலான இனக்குழுச் சண்டைகளில் ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு லட்சம் பேர் வீடிழந்தனர். இன்றும் தொடர்ந்து வருகிறது இப்பூசல். ஒரு இனக்குழு இன்னொரு இனக்குழு வாழும் நிலத்துக்குள் செல்லவே முடியாது.

ஐரோம் ஷர்மிளாவுக்கு இந்தக் கொலைகள் மானுட உரிமை மீறல்களாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு கலவரத்தை அடக்க ராணுவம் சுட்டு இருவர் கொலையுண்டால் அதை ‘மணிப்பூர் மக்களுக்கு எதிராக இந்தியாவின் தாக்குதல்’ என்று அவர் சொல்கிறார். உலக ஊடகங்களும் இந்தியாவின் கூலி அறிவுஜீவிகளும் அதை மேலும் மேலும் கூவுகின்றன. நாம்

கேட்பது அவர்களின் குரலை மட்டுமே.

இப்போது கூட எங்கெல்லாம் ராணுவம் தளர்வுறுகிறதோ அங்கெல்லாம், பெரும்பான்மைப் பழங்குடியினர், சிறுபான்மை பழங்குடியினரை தாக்குகிறார்கள். தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில், குறிப்பிட்ட சாதியினர் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள். அவர்கள் அந்தப்பகுதி தங்களுக்கு தனி நாடாக கிடைக்க வேண்டும் என்று போராடினால், அதை இந்திய அரசால் ஏற்றுக்கொள்ள முடியுமா? அங்குள்ள சிறுபான்மைச் சாதியினரின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி எழுகிறதல்லவா?அந்த அத்தனை சாதிகளும் சேர்ந்து, ‘இந்திய அரசு எங்களை விட்டுவிடட்டும், நாங்களே தீர்த்துக் கொள்கிறோம்’ என்றால் அனுமதிக்கலாமா? வடகிழக்குப் பிரச்சினை என்பது உண்மையில் இதுதான். 

இந்தத் தீவிரவாத ராணுவங்களுக்கு பர்மாவின் ராணுவ சர்வாதிகார அரசும், சீனாவும் அனைத்து உதவிகளையும் செய்கின்றன. 1995ல், நரசிம்ம ராவ், பர்மிய அரசுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டார். அதன் அடிப்படையில் தங்கள் நிலத்தில் அமைந்திருந்த தீவிரவாத முகாம்களை பர்மிய ராணுவம் குண்டுவீசி அழித்தது. வடகிழக்கில் அமைதி திரும்பத் தொடங்கியது.

ஆனால், அரசு கட்டுப்பாட்டில் இல்லாத பர்மியப் பழங்குடிப் பகுதியுடன் தொடர்பில் இருப்பதனால் மணிப்பூர் தீவிரவாதம் ஒழியவில்லை. சென்ற ஆண்டு மணிப்பூரில் வன்முறையை நிகழ்த்திவிட்டு பர்மாவுக்குள் ஓடிப் பதுங்கிய தீவிரவாதிகளை, பர்மிய எல்லைக்குள் சென்று இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. அது ஒரு மீறல். ஆனால் ஒரு தொடக்கம். நாகாலாந்து, மேகாலயா போல, மணிப்பூர் மீண்டு வரக்கூடும்.

300 ஆண்டு அடிமைத்தனம்:கடந்த முன்னுாறு ஆண்டுகளாக பஞ்சத்தாலும், அடிமைத்தனத்தாலும் மக்கள் வாடி செத்தனர்; பெரும் பஞ்சங்களில் கோடிக்கணக்கானவர்கள் செத்துப்போன வரலாறுக்கு நுாறு ஆண்டுகள் கூட ஆகவில்லை. நமது ரத்த சொந்தங்கள் மூன்றில் ஒரு பகுதியினர், நியூசிலாந்தில் இருந்து கரீபியன் தீவுகள் வரைக்கும் பிழைப்பு தேடிச்சென்று, அங்கு நோய்களிலும் அடிமைத்தனத்திலும் சிக்கி அழிந்தனர்.

சென்ற ஐம்பது ஆண்டுகளில் தான் நாம் குடிசைகளில் இருந்து வீடுகளுக்கு மாற ஆரம்பித்திருக்கிறோம். நமது பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்கு செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். மூன்று வேளை உணவு உண்ண ஆரம்பித்திருக்கிறோம். காரணம் நாம் நமக்கு பழங்காலத்தில் இருந்த பல்வேறு சாதிக் கசப்புகளையும், இன வெறுப்புகளையும் மறந்து நவீன சமூகமாக ஒன்று திரண்டோம்.

இன்று நம் அரசியல் என்பது, இன்னும் பொருளியல் வளர்ச்சி மட்டும்தான். நாகரீக சமுதாயங்களுக்கு நிகரான வாழ்க்கையை நமது பிள்ளைகளுக்கு அமைத்துக் கொடுப்பது மட்டும் தான்.

நாங்கள் சென்ற பகுதிகளில் எல்லாம் வணிகர்களும், வண்டி ஓட்டுனர்களும், சக பயணிகளும் திரும்பத் திரும்ப தீவிரவாத அரசியலைப்பற்றி சலிப்புடன் பேசினர். வளமான நிலத்தை வேளாண்மை செய்யாமல் விட்டுவிட்டு மகள்களை பெங்களூரில் வீட்டு வேலைக்கு அனுப்ப நேர்ந்த ஒரு தந்தை கண்ணீர் மல்கி குமுறியதை நினைவுகூர்கிறேன்.

ஆனால் அந்தத் தீவிரவாதிகளை குறுகிய இனவெறிக்காக ஆதரித்தவர்கள் அவர்கள்தான். மற்ற இனக்குழுக்களுக்கு எதிராக பலநுாற்றாண்டுகளாக இருந்துவந்த வெறுப்புதான் அதற்குக் காரணம். மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் மிகப்பெரிய படிப்பினையை அளிக்கின்றன. வெறுப்பரசியல் சிறுதுளி நெருப்பு. கொளுத்துவது மிக எளிது. அதை வளர்த்துவிட்டு ஆதாயம்தேட பல சக்திகள் காத்துள்ளன. அணைப்பது மிகக் கடினம். எரித்துச் சாம்பலாக்கிவிட்டு அதுவே அடங்கவேண்டும்

*

மணிப்பூர் ஜனநாயகத்தை, வளர்ச்சியை விரும்புகிறது. தீவிரவாத அரசியலின் பெயரால் இன்னமும் பட்டினி கிடக்க அம்மக்கள் தயாராக இல்லை. இந்தியப்பெருநிலத்தில் வேலைக்குவரும் பல்லாயிரம் மணிப்புர் இளைஞர்கள் அம்மண்ணின் பொருளியலை மட்டும் அல்ல அரசியலையும் தீர்மானிக்கிறார்கள்

ஆகவே ஐரோம் ஷர்மிளா மனம்திரும்பியே ஆகவேண்டும். ஒரு கோமாளியாக எஞ்சாமலிருக்கவேண்டும் என்றால். ஆனால் இனி அவர் செய்யப்போகும் அரசியல் மீய்ட்டிப் பழங்குடிவெறி என்றால் அது வருந்தத்தக்கது. அவர் மணிப்பூரின் இன ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்குமான அரசியலை முன்னெடுத்தால் அவ்வப்போது காந்தி என்னும் சொல்லை அவர் சொல்வதற்குப்பொருள் இருக்கும்

[ஜனநாயகச் சோதனைச்சாலையில், மே, 2016]

 

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் 1

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் 2

 

ஐரோம் ஷர்மிளா கடிதம்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 24
அடுத்த கட்டுரைதலித்துக்களும் பாரதியஜனதாவும்