தஞ்சை:கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்

நார்த்தாமலையின் படங்களை இங்கு http://picasaweb.google.com/strajan123/NORTHAMALAI#5151128734378499282 காணலாம். நார்த்தா மலைக்கு நாங்கள் 2005ம் ஆண்டு சென்றிருந்தோம். மதுரை மேலூர் தாண்டியதில் இருந்தே தொடர்ந்து குன்றுகள் குண்டுகள் வைக்கப் பட்டுப் பிளக்கப் பட்டுக் கொண்டேயிருந்தன. வரிசையாக பெரிய கரிய யானைகள் போல படுத்திருந்த குன்றுகள் எல்லாமே இடைவெளியின்றி வெட்டி எடுக்கப் பட்டுக் கொண்டிருந்தன. அதே வேகத்தில் அந்தக் குன்றுகள் வெடி வைக்கப் பட்டு பிளக்கப் பட்டிருக்குமானால் இன்று அனேகமாக வழியில் இருந்த எந்த குன்றுகளுமே காணமல் தரை மட்டமாகவே ஆகியிருக்க வேண்டும்.

அதிலும் நார்த்தா மலைப் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாதிருந்தபடியால் குன்று திருட்டுகள் கடுமையான அளவில் இருந்தன. அனேகமாக அந்தப் பகுதிகளில் மக்கள் நடமாட்டமே இருப்பதில்லை. புழுதியும், சீமைக் கருவேல முற் காடுகளும், இடைவிடாது வெட்டி எடுக்கப் பட்ட கரும் பாறைகளுமே அவை ஏற்படுத்தும் பள்ளங்களுமே அந்தப் பகுதி முழுக்க நிறைந்திருந்தன. நார்த்தாமலையைக் கண்டடைவதே மிகச் சிரமமான காரியமாக இருந்தது. ஊருக்குள் வந்த பின்னாலும் கூட யாரும் உருப்படியான வழியை காண்பிக்கவில்லை. தட்டுத் தடுமாறித்தான் அந்தக் குன்றையே அடைந்தோம். முறையான வழி ஏதும் இருந்திருக்கவில்லை. படுத்திருந்த யானையின் முதுகு வழியாக ஏறியது போல ஏறிச் சென்றோம். வழியெங்கும் ஏராளமான மஞ்சள் நிற பெரும் டிரக்குகள் தொடர்ந்து புழுதியை எழுப்பிய வண்ணம் வெட்டி எடுக்கப் பட்ட மலைகளைக் கடத்தியவாறு சென்று கொண்டேயிருந்தன. என் புகைப் பட ஆல்பத்தில் நார்த்தா மலையின் பின்புறம் பெயர்த்து எடுக்கப் படும் படங்களை அந்த மஞ்சள் நிற லாரிகளுடன் காணலாம். அனேகமாக குன்றிருக்கும் இடமெல்லாம் இன்று குழிகள் மட்டுமே மிச்சம் இருக்கும் என்று நம்புகிறேன்.

நீங்கள் உள்ளே சென்று காண முடிந்த விஷ்ணுவின் சிலைகளை நாங்கள் கம்பிக் கிராதி வழியாகவே காண முடிந்தது. அந்தப் பகுதியிலேயே மொத்தம் 5 மாடுகளும் ஒரு வயதான மாடு மேய்ப்பவரும் மட்டுமே தென் பட்டனர். முன்பே சொல்லி வைத்தால் மட்டுமே ஊழியர்கள் வருவார்கள் என்று சொன்னார் அந்த முதியவர். அவருக்கும் அந்தக் கோவில்கள் குறித்தோ ஊர் குறித்தோ எதுவும் தெரியவில்லை. அப்படி பட்ட அழகிய கோவில்கள் நிர்மாணிக்கப் பட்டிருந்த ஊர் ஏன் இப்படி பாழடைந்து போனது என்று தெரியவில்லை. ஒரு காலத்தில் சீரும் சிறப்புமாக விளங்கிய ஊர் என்கிறார்கள். காற்று விர் விர் ரென அடித்து வெப்பத்தைக் குறைத்துக் கொண்டிருந்தது. ஏகாந்தமான தனிமையான அந்த இடத்தை விட்டு கிளம்பவே மனம் இல்லாமல் மாலை வரை அங்கேயே இருந்தோம். மலைகளின் வைக்கப் படும் வெடிகளால் தொடர்ந்து எங்கள் கால்களுக்குக் கீழே அதிர்வுகள் ஏற்பட்டுக் கொண்டேயிருந்தன.

தொம், தொம் என்று இடையறாத அதிர்வுகள். அந்த வேகத்தில் மலைகள் நொறுக்கப் பட்டால் அழகிய விஜயாலய சோழீச்வரம் என்ற அற்புத கோவில்கள் அதிக காலம் தாக்குப் பிடிக்காது என்று தோன்றியது. மாலை நேரங்களில் மயக்கத்தைத் தரக் கூடிய ஒரு சூழல் அந்த குன்றுகளும் இளம் செந்நிறத்தில் மிளிரும் அந்தக் கோவில்களும். நீங்கள் சென்று பார்க்கும் வரை இடியாமல் இருந்ததே பெரிய விஷயம் தான். ஏற்கனவே இடிந்து சிதலமான கோவில்களை மீண்டும் எடுத்துத்தான் கட்டியிருக்கிறார்கள். சித்தன்னவாசலில் இருக்கும் ஊழியர் சொல்லித்தான் நாங்கள் நார்த்தா மலையை விசாரித்து விசாரித்து கஷ்டப் பட்டு கண்டு பிடித்து வந்தோம். எந்தவொரு அறிவிப்புப் பலகைகளும் விவரங்களும் எங்கும் கிடையாது. பொதுவாகவே தொல்பொருள் துறையின் கீழ் வரும் இடங்களை இப்படி ரகசியமாகவே வைத்திருந்து பாதுகாக்கிறார்கள். யாருக்கும் தெரிந்து விட்டால் வழிகாட்டி எல்லாம் வைத்திருந்து அனைவருக்கும் தெரிவித்தால் திருடிக் கொண்டு போய் விடுவார்கள் அல்லவா? ஆகவே இந்த பரம ரகசியம்.

சமணர்கள் தவம் இருந்த சோழ, பல்லவ, முத்தரைய குறுநில மன்னர்கள் ஆண்ட,கலை ரசனையுடன் கட்டிய கோவில்கள், சிற்பங்களை எல்லாம் இன்று பாமியான் சிலை உடைத்த தாலிபான்களுக்குப் போட்டியாக நம் குவாரி முதலாளிகள்/அரசியல்வாதிகள் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். கேட்க்க நாதியில்லை. இருக்கும் குடை வரைக் கோவில்களையும் சிற்பங்களையும் பாதுகாத்து போற்ற வக்கில்லாத இவர்கள் சிற்பக் கூடம் கட்டுகிறேன் என்று மதுரை ஆனை மலையைக் குடைய முயற்சி செய்தார்கள். நார்த்தா மலையைப் போன்ற ஒரு அற்புதமான கலை நயம் மிகுந்த குடை வரைக் கோவில் உலகின் நாகரீகமான பிற பகுதியில் இருந்திருந்தால் அதை எப்படிப் போற்றியிருப்பார்கள் என்று கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். இன்று நார்த்தா மலைக்குப் போய் பார்ப்பதே ஒரு சாகச அனுபவமாக இருக்கிறது.

 

யையும் குண்டு வைத்து எடுத்துக் கொண்டிருந்தார்கள் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு கொஞ்சம் நிறுத்தப் பட்டிருக்கிறது. தமிழர்களுக்கு இருக்கும் ரசனைக்கு இவையெல்லாம் தேவையில்லாத லக்சுரி என்று குவாரி முதலாளிகள் முடிவெடுத்து விட்டார்கள் போலிருக்கிறது. தமிழர்களுக்கு இலவச கலர் டி வியும், சீரியல்களுமே போதுமானது, நார்த்தா மலை கோவில் எல்லாம் அதிகம் என்று முடிவெடுத்தது போல வெடித்துப் பிளக்கிறார்கள். ஆற்று மண், மலை, மரம்,காடு, குன்று, கடல் மண், ஆறு, குளம், நிலம்,மிருகம், பறவை என்று எதையுமே விட்டு வைக்காமல் எல்லாவிதமான இயற்கை வளங்களையும் கொள்ளையடித்துக் கூறு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவை அனைத்துமே கடந்த பத்து பதினைந்து வருடங்களுக்குள் மட்டுமே கடும் வேகத்தில் போர்க்கால அடிப்படையில் கொள்ளை போய்க் கொண்டிருக்கின்றன.

சித்தன்ன வாசலில் குகை ஓவியம் இருக்கும் குடைவரை மண்டபத்தையும் பூட்டியே வைத்திருக்கிறார்கள். அங்கிருக்கும் ஊழியர் யாராவது நிஜமான அக்கறை கொண்டவர்கள் வந்தால் மட்டுமே திறந்து காட்டுகிறார். இல்லாவிட்டால் இலவச லாட்ஜ் ஆகி விடுகிறது. அங்கு பெரும்பாலும் தள்ளிக் கொண்டு வரும் ஜோடிகளே அதிகம் வருகிறார்கள். மலையில் ஏறி பாண்டவர் படுகையை நாங்கள் அடைந்த பொழுது அடித்துப் பிடித்துக் கொண்டு ஒரு ஜோடி அவசரமாக ஆடையைத் திருத்திக் கொண்டு பரபரத்துப் போய் எழுந்து ஓடினார்கள். அங்கு ஒரு தானியங்கி உறை வழங்கும் இயந்திரம் வைத்தால் அரசுக்கு நல்ல வருமானம் கிட்டும். சமணர்கள் சரியாகத்தானே பெயர் வைத்திருக்கிறார்கள் பள்ளிக் கூடம் என்று? அக்கம் பக்கத்து காதலர்களுக்கு எல்லாம் சமணர் படுகைகளே இலவச படுக்கைகளாகவும் செயல் படுகின்றன. அங்கு நவீன மன்மதர்கள் தங்கள் கை வண்ணத்திலேயே வழு வழுப்பான சமணப் படுகைகளில் இதயங்களைச் செதுக்கி ஐ லவ் யூ லேடீஸ் சொல்லியிருப்பதையும் ஆல்பத்தில் கண்டு இன்புறுங்கள். சங்கத் தமிழர்கள்.

எப்படி இவ்வளவு கேவலமாக சீர் கெட்டுப் போனோம்? திருமையம் தவிர இந்த இடங்கள் அனைத்துமே காலத்தால் உறைந்து போயுள்ளன. வேறு எந்த நாகரீகமும் தீண்டாமல் இருப்பது மட்டுமே ஒரே ஆறுதல். அனேகமாக நான் சென்றிருந்த அனைத்து சமணர் கல்வெட்டுக் குகைகள், படுகைகள் இருக்கும் இடங்களுமே இப்படியாகப் பட்ட ஆளரவமற்ற ஏகாந்தமான தனிமையான இடங்களாகவே இருந்தன. .குடுமியான் மலை புகைப்பட ஆல்பத்தைக் காணவில்லை மீண்டும் வலையேற்ற வேண்டும். சித்தன்ன வாசலை இங்கு http://picasaweb.google.com/strajan123/SITHANNNA# காணலாம். நீங்கள் சொல்லியிருக்கும் ராட்சச தேனடைகளையும், சித்தன்ன வாசலின் தேய்ந்து போன ஓவியஙக்ளையும் இங்கு காணலாம். குன்றின் சரிவுகளில் உயரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் கருத்துப் பெருத்த தேனடைகள் குடுமியான்மலை கல்வெட்டிலும் இருந்திருக்குமே? சித்தன்ன வாசலின் வண்ண ஓவியங்களை படம் எடுக்க அனுமதிப்பதில்லை. சித்தன்னவாசலின் பார்சுவ நாதர் சாந்தம் தவழும் ஒரு துறவி. ஓவியங்களின் படங்களை நான் இன்னொரு தளத்தில் இருந்து எடுத்து இங்கு ஏற்றியிருக்கிறேன்.

நாங்கள் மூவர் கோவிலுக்குச் சென்றிருந்த பொழுது நல்ல பொளர்ணமி நாள் முழு நிலவு. வேறு வெளிச்சம் இல்லாமல் முழு நிலவொளியில் அந்த இடிபாடான கோவில்களின் சிற்பங்களைக் கண்டோம். அங்கு 900 கோவில்களுக்கும் மேலாக இருந்ததாகச் சொன்னார்கள். சோகையான அடிக்கடி மயங்கி விழும் வானதியின் நினைவு வந்தது. அங்கு முழு நிலவொளியில் குளித்துக் கொண்டிருந்த அர்த்தநாரீஸ்வரர் சிற்பத்தை மறக்கவே முடியாது. மொத்தத்தில் புதுக் கோட்டை மாவட்டம் தமிழ் நாட்டின் கலைப் பொக்கிஷம். நம் ஆட்களுக்குத்தான் அவற்றின் அருமையும் தெரியவில்லை அவற்றை பேணவும் தெரியவில்லை. இந்தக் குடைவரைக் கோவில்கள் எல்லாமே தமிழ் நாட்டுத் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. மத்திய தொல் துறையும் இவை போலவேதான் செயல் படுகின்றன. இவர்கள் இந்த இடங்களையெல்லாம் இருளடைய விட்டு பாழடைந்த நிலையில் பாதுகாப்பில்லாத சூழலில்தான் வைத்திருக்கிறார்கள்.

ஏஷியன் பெயிண்ட் அடித்து அழகு பார்க்காமல் இந்த மட்டோடு பாழைடைந்த நிலையில் வைத்திருக்கிறார்களே என்று நாம் சந்தோஷப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான். நார்த்தா மலை போன்ற இடங்களை பாதுகாக்க ஊழியர்கள் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் எவருமே வருவதில்லை. அழைத்தால் வருவார்கள் போலும். நாங்கள் சென்றிருந்த மற்றொரு குடைவரைக் கோவிலில் இருந்திருக்க வேண்டிய ஊழியர் சின்னப் பையன் ஒருவனை தனது பினாமியாக நிறுத்தி வைத்து விட்டுப் போயிருந்தார். குண்டு வைத்து எல்லாமே தகர்க்கப் படும் முன்னால் மீண்டும் ஒரு முறையாவது சென்று காண வேண்டும். உங்கள் பதிவைப் படித்து விட்டு நார்த்தா மலை செல்ல நினைக்கும் வாசகர்கள் சீக்கிரம் போய் பார்த்து விடுவது நல்லது. தாலிபான்களாவது சொல்லி விட்டு தகர்த்தார்கள் நம்மாட்கள் சொல்லாமலேயே காலி செய்து விடுகிறார்கள்

அன்புடன்
ராஜன்

முந்தைய கட்டுரைபிரிவு
அடுத்த கட்டுரைகோதையின் மடியில் 3