அன்புள்ள ஜெயமோகன்,
சமீபத்தில் நான் படித்த ஒரு படக்கதை புத்தகம்தான் ரஸவாதி. பௌலோ கொய்லோவின் உலகப் பிரசித்திபெற்ற இந்தப் புத்தகத்தை ஹாப்பர் காலின்ஸ் பதிப்பகம் படக்கதை வடிவத்தில் மிக அற்புதமாகக் கொண்டு வந்துள்ளது. தற்போது காமிக்ஸ் உலகம் எப்படியிருக்கிறது என்று நான் அறியேன். ஆனால் இந்தப் புத்தகத்தின் மூலம் அதை அறிய நேர்ந்தபோது வியந்து போனேன். தற்போதைய காலகட்டம் சிறுவர்களின் வாசிப்புக்கு எத்தகைய பெரும்பங்கை ஆற்றுகிறது என்பதை நினைக்கும்போது அதைச் சிலாகிக்காமல் இருக்க முடியவில்லை. சிறுவர்களின் முன்னே வாசிப்பிற்கு அற்புதமான உலகம் விரிந்திருக்கிறது. ஆனால் அவர்கள் அதை எத்தனை தூரம் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் கேள்வி.
இப்புத்தகத்தை வாசிக்கையிலும், வாசித்து முடித்ததும் என் மனதில் கிளர்ந்த ஆசை தங்களின் பனிமனிதனை கிராபிக்ஸ் நாவலாக கொண்டுவர வேண்டும் என்பதுதான். அதை யாராவது சாத்தியமாக்கினால் நான் பெருமகிழ்ச்சி அடைவேன். நம் சிறுவர்கள் இன்னும் அயல்மொழிக் கதைகளையே படக்கதையாக வாசித்து வருவது வருத்தத்திற்குரியது.
http://kesavamanitp.blogspot.in/2016/08/the-alchemist-graphic-novel.html
அன்புடன்,
கேசவமணி
***
அன்புள்ள ஜெ.,
எல்லாவற்றிற்கும் உங்களிடம் விடை இருக்கிறது.. உதாரணமாகக் கண்ணப்ப நாயனார் கதையை எப்படி என் 4 வயது மகளுக்கு சொல்வது என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.. சொல்லாமல் இருப்பதே நலம் என்று புரிந்துகொண்டேன்.. மிகைக் கற்பனைகளைக் குழந்தைகள் அழகாகப் புரிந்துகொள்கின்றன. நடைமுறை உண்மையோடு குழப்பிக்கொள்வதில்லை..
குழந்தைகளுக்குக் கதை சொல்லும் ஒவ்வொரு தருணத்திலும் மனித மூளையை வியக்காமல் நான் இருந்ததில்லை..
ரத்தன்
பிகு: பேசும் கரடி, பேய், சிங்கராஜா என்பதையெல்லாம் கற்பனை என்று என் மகள் தெளிவாகப் புரிந்துகொள்கிறாள்.. ஆனால், பிள்ளையாரும் (பிற கடவுள்களும்) ஒரு கற்பனையாக இருக்கக்கூடும் என்பதை என் மகள் வன்மையாக மறுத்துவிட்டாள்.. அதிகப்பிரசங்கித்தனம் செய்கிறேனோ என்று எனக்கே பயம் வந்துவிட்டது.