அழிமுகம்:கடிதங்கள்

அன்புள்ள சகோதரருக்கு

நமஸ்தே.

அழிமுகம் படித்து மிகவும் மனநெகிழ்ச்சி அடைந்தேன். அது நாம் அறியாத அவர்களின் வாழ்க்கையின் பல்வேறு தளங்களை அவர்களுக்கு இருக்கும் கட்டாயங்களை அவர்கள் அந்த தொழிலில் அடையும் கஷ்டங்களை எல்லாம்  உணர்த்தியது. அனைத்துக்கும் மேலாக அவர்களின் சுய கௌரவத்தையும் அவர்கள் தங்கள் வாரிசுகள் அந்தத் அபாயகரமான தொழிலுக்கு வரக்கூடாது என்பதில் காட்டும் கவனத்தையும் சித்தரித்தது.

மகிழ்ச்சியும் துக்கமும் கலந்த ஒரு வினோத மனநகர்வுக்கு ஆளானேன்

ஆர்.ராதாகிருஷ்ணன்
[மொழியாக்கம்]
 

**

 

அன்புள்ள ஜெ,
நலமா?
அழிமுகம் மனதை பிழிந்தது.  அழிமுகம் என்றால் என்ன?

நன்றி,
மகேஷ்
அன்புள்ள மகேஷ்,

அழிமுகம் என்றால் நதி அல்லது ஆறு கடலைச் சேரும் இடம். பெரும்பாலும் சேறாக இருக்கும். துறைமுகம் என்றால் அங்கே தோணிகள் வரும். பழங்காலத்தில் அழிமுகங்களே துறைமுகங்களாகவும் இருந்தன
ஜெ

 

***

அழிமுகம் கட்டுரை ஒரு சிறந்த சிறுகதைபோல இருந்தது. மிக நுட்பமான காட்சிகள். அந்த ரயில், இரவில் அங்கே பெண்கள் வந்துகூடும் விதம், அப்புறம் அந்த கடற்கரை ஓரத்துச் சேரி எல்லாம் கண்முன்னால் ஒரு நல்ல சினிமா மாதிரி தெரிந்தது. அந்த மணப்பெண்ணின் சிரிப்பை நீங்கள் சொல்லும் இடத்தில் என் மனம் விம்மிவிட்டது. அந்த குடிசை வாசலில் அமர்ந்து நாலைந்துபேர் சூழ்ந்திருந்து ஊட்ட நீங்கள் சாப்பிடும் காட்சி மனதில் அபப்டியே நிற்கிறது. அருமையான சித்தரிப்பு. நன்றி ஜெ

சாதனா சுகுமார்
டெல்லி

**

ஜெயமோகன்,

அழிமுகம் கட்டுரையில்  நீங்கள் முஸ்லீம்கள் எச்சிலை பொருட்படுத்தாமல் உணவு உண்ண்டும் பழக்கத்தைப்பற்றி எழுதியிருந்தீர்கள். நான் குஜராத்துக்குச் சென்ற ஆரம்ப நாட்களில் ஒரு நண்பரின் கல்யாணத்துக்குப் போனபோது இதே அனுபவம் எனக்குக் கிடைத்தது. அப்போது மிகவும் அசூசைப்பட்டதுண்டு. ஆனால் பிறகு அதெல்லாம் போயே போயிற்று. இம்மாதிரி விஷயங்கள் எல்லாமே நம்முடைய வளர்ப்பில் இருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடியவைதானே. நாம் இலையில் இருந்து சாம்பார் சாதத்தை வழித்து வாயில் போடுவதை வெள்ளைக்காரன் கண்டால் வாந்தி எடுப்பான். நாகரீகம் என்பது இந்தமாதிரி பழக்கவழக்கங்களில் இல்லை. அதை நாம் மனநிலைகளில்தானே தேடவேண்டும். அப்படி பார்க்கப்போனால் குஜராத் முஸ்லீம்கள் அளவுக்கு மனம் நிறைந்த விருந்தோம்பும் பண்பு கொண்டவர்களை நாம் வேறு எங்குமே காணமுடியாது. நம் அருகே இருந்து நாம் சாப்பிட்டு திருப்தி அடைந்த பின்னரே அவர்களால் சாப்பிட முடியும். அந்த நினைவுகளை அதேபோன்ற உணர்வுடன் நீங்களும் எழுதியிருந்தது மனதுக்கு நிறைவு அளித்தது.பல பழைய நண்பர்களை நினைத்து மனம் நெகிழ்ந்தேன்

சங்கர் சிவராம்

 

88

ஜெ,

அழிமுகம் படித்து நெடுநேரம் அதையே நினைத்துக் கொண்டிருந்தேன். கொல்கொத்தாவில் இருந்து கிராமங்களுக்குச் செல்லும் அதிகாலை ரயில்களில் இதேபோல விபச்சாரத்தொழில் செய்பவர்களின் பெரிய கூட்டங்களைக் காணமுடியும். அவர்கள் தங்களுக்குள் ஒரு சமூகம் போல இருப்பார்கள், தற்காப்புக்காக அவர்கள் எப்போதுமே அடிதடிக்கான மனநிலை கோண்டிருப்பார்கள் . பயணிகள் அனைவருமே அவர்களை விட்டு விலகித்தான் இருப்பார்கள். பெரும்பாலானவர்கள் வங்கதேச முஸ்லீம்கள் ஆனால் இந்திராகாந்தி கொல்லபப்ட்ட அன்று காலை அவர்கள் எல்லாரும் கதறி அழுவதைக் கண்டேன். அவர்களின் மனதுக்குள் இந்திரா காந்திக்கு அவ்வளவுபெரிய இடம் இருந்திருக்கிறது. அதைப்பற்றி நான் நிறைய சிந்தனைசெய்திருக்கிறேன். அவர்கள் எல்லாரும் ஒடுக்கபப்ட்ட பெண்கள். கேவலமான அவமானங்களை அடைந்துகொண்டிருப்பவர்கள். அவர்களுக்கு ஏன் இந்திரா காந்தி அத்தனை முக்கியமான ஒருவராக இருந்தாரென்றால் இந்திரா காந்தி  ஒரு பெண்ணாக இருந்து கொண்டு நாட்டையே ஆண்டார்கள் என்பதனால்தான். அப்படியானால் அவர்கள் அனைவருடைய மனதுக்குள்ளும் ஓர் இந்திரா காந்தி இருந்திருக்கிறார். அதை நான் அப்போது ஒரு கவிதையாக எழுதினேன்.

இந்திராகாந்திகள்
இரவுகளில் துகிலுரியப்படும்
மார்பில் சிகரெட்டால் சுடப்படும்
முகத்தின்மீது சாராய வாந்தி உமிழப்படும்
அடித்து உதைத்து வசைபாடப்பட்டு
மிருகம்போலப் புணரப்படும்
காவலர்களால் அடித்து இழுத்துச்செல்லப்படும்
நீதிமன்றங்களில் அபராதம் போடப்படும்
சிறையிலடைக்கப்படும்
குழந்தைகளை வளர்க்கும்
கணவனைக் காக்கும்
சமைக்கும்
துணி துவைக்கும்
வீடு பெருக்கும்
தன் துயரங்களை எண்ணி
தனித்திருந்து அழும்
இருப்பினும் கடவுளை நம்பி
ஓயாது வேண்டுதல்செய்யும்
நம்பிக்கை இழக்காத காரணத்தாலேயே
தற்கொலை செய்யாதிருக்கும்
இந்திராகாந்திகளைக் கொல்ல
காவலர்களின் துப்பாக்கிகளால் முடியாது.
அவர்களை புதைக்க
சக்தி ஸ்தலங்கள் போதாது
அவர்களை எழுத
சரித்திரங்கள்
இன்னும் பல வேண்டும்
ராம் அருண்
[தமிழாக்கம்]

முந்தைய கட்டுரைஅஞ்சுவண்ணம் தெரு: தோப்பில் முகமது மீரானின் புதிய நாவல்
அடுத்த கட்டுரைகனல்:கடிதங்கள்