ஐந்தாம் காடு : தைத்ரியம்
[ 1 ]
பின்மழைச் சாரலில் நனைந்தவர்களாக அவர்கள் தைத்ரியக்காட்டுக்குள் சென்றார்கள். தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்தது. இரவில் பல இடங்களில் மரங்களுக்கு அடியிலும் குகைகளிலும் தங்கினர். பின்னர் பீமன் இலைகளைக்கோட்டி மழைகாக்கும் தழையாடை ஒன்றை அமைத்தான். கமுகுப்பாளைகளை கொண்டுவந்து வெட்டிப்பின்னி குடைகளை செய்தான்.
மழைக்குள் ஒடுங்கியபடி தழையாடையும் குடையுமாக அவர்கள் சென்றபோது குளிரில் மகிழ்ந்து நின்றிருந்த யானைநிரைகள் திரும்பி நோக்கி துதிநீட்டி மெல்ல பிளிறின. விழிகளுக்குத் தென்படாத மானுடரை மணம்பெற்ற பெருங்களிறு ஒன்று காதுகளை முன்கோட்டி விரைந்த அடி எடுத்து வைத்து பெருவயிறு அதிர முன்னால் ஓடிவந்தது. பீமன் அதற்கு எதிர்க்குரலெடுத்ததும் பின்வாங்கி துதிதாழ்த்தி ஐயத்துடன் நின்றது.
தைத்ரியக்காட்டின் நுழைவெல்லையாக அமைந்த பாதைமுகப்பில் இருந்த கரிய உருளைப்பாறையில் வழித்துணைத்தெய்வமான பூஷன் நான்கு முகங்களும் நான்கு கைகளும் கைகளில் வேலும் மதுக்குடுவையும் கயிறும் அருளும் விரல்களுமாக செதுக்கப்பட்டிருந்தான். அதற்குக் கீழிருந்த தொன்மையான குறிகளை நோக்கிய தருமன் “இங்கிருந்து எட்டுகல் தொலைவில் இரு குன்றுகளுக்கு நடுவில்” என்றார். “தொன்மையான கல்விநிலை. இங்கு வேதங்களுக்கு நான்கு வைப்புமுறைகளை முனிவர்கள் உருவாக்கினர் என்பார்கள். குருகுலத்திற்கு அருகே ஓர் ஆறு ஓடுகிறது. அதற்கு வாஜி என்று பெயர்.”
காட்டுக்குள் அவர்கள் நுழைந்தபோது மழை நின்று காற்று சுழன்றடிக்கத் தொடங்கியது. அவர்களின் தழையாடையும் பாளைக்குடையும் பறந்து அகன்றன. பின்னர் இலைகளிலிருந்து தெறித்த நீரால் முழுக்க நனைந்தார்கள். தைத்ரியக்கல்விநிலை தொலைவிலேயே தேன்மெழுகுபூசப்பட்ட மரப்பட்டைக்கூரையிடப்பட்ட குடில்களின் தொகையாக தெரியத் தொடங்கியது. தொலைவிலிருந்து அதை காண்பதற்காக நான்கு உயர்ந்த தூண்களின்மேல் பரணமைத்து அங்கே நான்குதிசைகளுக்கும் தெரியும்படி பெரிய நெய்யகல் விளக்கை எரியவைத்திருந்தனர். அதைப் புரக்கும் காவலர்களாக இருமாணவர் அங்கே அமர்ந்திருந்தனர். செந்நிற ஒளி சூழப்பொழிந்த மென்மழைச்சாரலுக்குள் கசிந்து பரவியிருந்தது. கூரைகள் நீர்வழிய கருமைகொண்டு கூம்புவடிவப்பாறைக் கூட்டங்கள்போல் தெரிந்தன.
அவர்களை எதிர்கொண்டழைத்த முதியமாணவர்கள் மூவர் முகமனுரைத்து விருந்தினர்குடில்களுக்கு கொண்டுசென்றனர். இரும்புக்குடுவைகளில் கனலிட்டு வைத்திருந்தமையால் மென்வெம்மையுடன் அறைகள் அவர்களை அணைத்துக்கொண்டன. வெம்மையை உணர்ந்ததுமே பசிக்கத் தொடங்கியது. அவர்கள் அருகே இருந்த வாஜி ஆற்றின் வளைவில் இருந்த மரத்தாலான படித்துறையில் இறங்கி நீராடினர். மீண்டுவந்து புதிய மரவுரியாடைகள் அணிந்து சூடான பால்கஞ்சியும் சுட்டு தேன்சேர்த்த பழங்களும் உண்டனர். “தங்களை இன்று மாலை ஆசிரியர் சொல்லவையில் சந்திப்பார், அரசே” என்றான் மாணவன்.
“இங்கு எங்கள் அமைச்சரும் ஆசிரியரும் சிறியதந்தையுமான விதுரர் இருப்பதாக சொல்லப்பட்டோம். முடிந்தவிரைவில் அவரைச் சென்றுபார்க்க விழைகிறோம்” என்றார் தருமன். “அவர் இங்கு வந்து இரண்டு மாதங்களாகின்றன. அவர் வருகையை எவருக்கும் அறிவிக்கலாகாதென்று சொன்னார். வந்தநாள் முதல் அங்கே வாஜியின் கரையிலிருக்கும் மரச்செறிவில் கட்டப்பட்டுள்ள பழைய குடிலில் தனித்து வாழ்கிறார். இங்கு வேதநிலைக்கோ சொற்களத்திற்கோ வருவதில்லை. உணவு மட்டும் இங்கிருந்து செல்கிறது. அவரை பிறர் பார்ப்பதே அரிதாகிவிட்டது. அவர் உடல்நிலை சீராக உள்ளதா என்பதற்கு உணவு கொண்டுசெல்பவன் வந்து சொல்வதே ஆதாரமாக கொள்ளப்படுகிறது” என்றான் மாணவன்.
“உணவுண்கிறாரா?” என்று தருமன் கேட்டார். “ஆம், மிகக்குறைவாக. நாளில் ஒருபொழுதுக்கு மட்டும்” என்றான் மாணவன். “நான் அவரைப் பார்க்க விழைவதை சென்று சொல்க! அவருக்காக இங்கு காத்திருக்கிறோம். அவரை சந்தித்தபின்னரே மீள்வோம்” என்றார் தருமன். “ஆம்” என்று தலைவணங்கி மாணவன் மீண்டான்.
தருமன் பெருமூச்சுடன் தன் குடிலுக்குள் சென்று அங்கிருந்த மரப்பீடத்தில் அமர்ந்தார். மழை மீண்டும் தொடங்கிய ஓசை கேட்டது. தொலைவில் ஏதோ கன்று ஓசையிட்டது. மணிகள் ஓசையிட பசுக்கள் நீர்ப்படலத்துக்கு அப்பால் நிரையாக சென்றன. அடுமனைப் புகையை நீர்ச்சரடுகள் அறைந்து நிலம்நோக்கி பரப்பின. வேகும் கிழங்கின் மணம். மாவு அப்பமாக உருக்கொள்வதன் மணம்.
நகுலன் ஈச்ச ஓலையால் செய்யப்பட்டு தேன்மெழுகு பூசப்பட்ட தலைக்குடையைச் சூடி சற்று முன்குனிந்து வந்தான். அதைக் கழற்றி அருகே வைத்துவிட்டு வந்து “இரு இளையமாணவர்களுடன் சென்று தொலைவில் நின்று அமைச்சரைப் பார்த்தேன், மூத்தவரே. மிக மெலிந்திருக்கிறார். தாடியிலும் குழலிலும் முடி பெருமளவுக்கு உதிர்ந்திருக்கிறது. ஆனால் நடமாடுகிறார். வெளியே சென்றபோது அவர் உடல் மெல்ல நடுங்கிக்கொண்டிருப்பதை கண்டேன்” என்றான். “நூலாய்கிறாரா?” என்றார் தருமன். “இல்லை. அவரிடம் நூலேதுமில்லை என்றனர்” என்றான் நகுலன். “அவரிடம் அந்த அருமணி உள்ளது. அதை ஊழ்கப்பொருளென கொண்டிருக்கிறார் என்கிறான் உணவளிப்பவன்.” தருமன் தலையசைத்து விழிதிருப்பிக்கொண்டார். “மூத்தவர் வழக்கம்போல காட்டுக்குள் புகுந்துவிட்டார்” என்றான் நகுலன். தருமன் மறுமொழி சொல்லவில்லை.
விதுரரிடம் சென்ற மூத்தமாணவன் வந்து “அவர் எவரையும் பார்க்கும்நிலையில் இல்லை என்று சொல்லச்சொன்னார், அரசே” என்றான். தருமன் “நான் அவரைப் பார்க்காமல் இங்கிருந்து செல்லப்போவதில்லை என்று அறிவித்தீரா?” என்றார். “ஆம்” என்று அவன் சொன்னான். “அவரை வணங்கி வாழ்த்துபெற்றுச் செல்லவே வந்தோம். ஒருமுறை நோக்கி மீளமட்டுமே ஒப்புதல் கோருகிறோம் என்று சொல்லி வருக!” என்றர் தருமன். அதற்கும் விதுரர் மறுத்துவிட்டதாக செய்தி வந்தது. “அவர் இருக்கும் நிலையை புரிந்துகொள்ளும்படி கோரியிருக்கிறார், அரசே” என்றான் மாணவன்.
“காத்திருப்போம், நாம் இதற்கென்றே வந்தோம்” என்றார் தருமன். நகுலன் “அன்னை நம்மை அனுப்பினார்கள் என்று சொல்லச் சொன்னால் என்ன?” என்றான். “ஆம், அப்படி செய்வோம்” என தருமன் மாணவனை அழைக்க எழுந்தார். சகதேவன் “மூத்தவரே, அவர் சந்திக்க மறுக்க முடியாத ஒருவர் திரௌபதிதான்” என்றான். தருமன் கூர்ந்துநோக்க “அவர் அதன்பின் அவளை சந்திக்கவேயில்லை. அவள் பார்க்க விழைவதாக சொல்லி அனுப்புவோம்” என்றான். தருமன் “ஆம்” என்று தளர்ந்த குரலில் சொன்னார்.
திரௌபதியை சந்திக்க விதுரர் உடனே ஒப்புக்கொண்டார். திரௌபதியிடம் விதுரரை சந்திக்க வரும்படி நகுலன் சென்று சொன்னபோது முகத்தில் எந்த உணர்வும் தெரியாமல் அவள் கிளம்பினாள். அவர்கள் இளமழையில் குடைகளுடன் செடிகள் எல்லைமீறி மறைத்த காட்டுப்பாதையில் ஒருவர் பின் ஒருவராக முற்றிலும் தனித்து சென்றனர். விதுரரின் குடிலைக் கண்டதும் தருமன் தயங்கி நின்றார். திரும்பி திரௌபதியிடம் அவள் முதலில் செல்லும்படி கைகாட்டினார். அவள் அதே பாவைமுகத்துடன் முன்னால் சென்று கதவை மெல்ல தட்டினாள். மரப்பட்டை மென்கதவு குடுமியில் திருகி ஒலிக்க திறந்தது.
வாயிலில் நின்ற விதுரர் அவளை எதிர்பார்த்திருந்தாலும் அதிர்ந்தார். அவர் கண்களுக்குக் கீழே பட்டுத் திரைச்சுருக்கவளைவுகள் போல தொங்கிய மென்சதைகளில் ஒன்று அதிர்ந்தது. உதடுகள் ஓசையின்றி மெல்ல திறந்தன. பின்னர் நீர்ப்பாவை என கலைந்து “வருக, அரசி!” என்றார். அவள் உள்ளே நுழைந்ததும் தருமனை நோக்கி உள்ளே வரும்படி தலையசைத்தார். நால்வரும் உள்ளே சென்றனர். திரௌபதி தலைதாழ்த்தி விதுரரை வணங்கினாள். விதுரர் “உள்ளம் அமைதியுறுக! விழைவது பெறுக!” என அவளை வாழ்த்தினார். அவள் முகம் மாறுதலில்லாமல் இருந்தது. அவர் தொண்டைதான் சற்று இடறியது.
தருமன் அவரை குனிந்து கால்தொட்டு சென்னிசூடினார். “வெற்றி சூழ்க!” என அவர் தருமனை வாழ்த்தினார். அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் அவ்வாறே வாழ்த்துபெற்றபின் விரித்திட்ட ஈச்சைப்பாயில் அமர்ந்தனர். ஆடைகளின் ஓசைகள் மட்டும் கேட்டன. வெளியே மழை பெய்யும் ஒலி. நெடுந்தொலைவில் ஒரு பசுவின் அழைப்பு.
அமைதியை கலைப்பதற்காக தருமன் “அன்னையின் ஆணைபெற்று வந்தோம், தந்தையே” என்றார். விதுரர் அதை கேட்டதாக தெரியவில்லை. அவர் திரும்பி திரௌபதியிடம் “நான் ஒரு சொல்லும் உரைக்கத் தகுதிகொண்டவன் அல்லன்” என்றார். “உங்கள் கால்களில் தலை வைத்து மைந்தன் என நின்று பொறுத்தருளக் கோருவதன்றி நான் செய்யக்கூடுவதொன்றுமில்லை.” அவள் ஒன்றும் சொல்லாமல் விழிசாய்த்து அமர்ந்திருந்தாள். ஒருகணம் சினம்கொண்டு தருமனின் குருதி தலைக்குள் ஏறியது. அவர் பார்வையை திருப்பிக்கொண்டு இதழ்களை இறுக்கினார்.
“அறவுணர்வென்பது ஒருவனின் தன்னியல்பாக உள்ளிருந்து எழவேண்டும் என்பதை அறிந்தேன், அரசி. அது விழைவுபோல, அச்சம்போல, சினம்போல ஒன்றாக அவன் உள்ளமென்றான நெசவில் இருக்கவேண்டும். நூல்கள் அறமறிந்தோனுக்கு நம்பிக்கையையும் அறம்பிழைப்பவனுக்கு அதற்குரிய வழிகளையும் மட்டுமே அளிக்கின்றன. நடுவில் நின்றிருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு அவை ஐயங்களை மட்டுமே பெருக்குகின்றன. எவராக இருப்பினும் தன்னைப் பெருக்கி நேர்நின்று நோக்கும் தருணம் ஓர் இறப்பு. நான் இன்னமும் மீண்டுபிறக்கவில்லை” என்றார் விதுரர். கைகூப்பி “நான் கற்ற நூல்களெல்லாம் உண்ணப்படாது அழுகிய உணவுபோல என் அறைக்குள் நிறைந்திருப்பதாக உணர்கிறேன். அவற்றை மறப்பதே என் தவம் என்று இங்கு வந்தேன்” என்றார்.
அதற்கும் திரௌபதி மறுமொழி சொல்லப்போவதில்லை என தருமன் அறிந்தார். ஆனால் அவள் சொல்வதற்காக அவர் செவிகள் கூர்ந்தன. கணங்கள் எடைகொண்டு சரிந்தபின் அவள் மெல்ல தளர்ந்து மூச்செறிந்தாள். அவளுடைய சொல்லின்மையை உணரமுடிந்தது. பிற அனைத்தையும்விட அந்த அமைதியே கொடிய படைக்கலம் என அறிந்திருக்கிறாள். இளம் வெள்ளாட்டை கால்களில் இடுக்கிக்கொண்டு காதுகளைப்பற்றி கழுத்தைத் தூக்கி மூச்சுக்குழாயை மெல்ல அறுக்கும் அடுமனைக்கொலைவலன் போல அவள் அதை செய்கிறாள். உள்ளே ஏதோ ஒன்று மகிழ்கிறது. ஆம், ஐயமே இல்லை. அவளுக்குள் குடிகொள்ளும் அந்த அறியாத்தெய்வம் குருதிபலிகொள்ளும் தருணம் இது.
“அனைத்தையும் ஒரே கணத்தில் ஆடைகளின்றி நோக்கிவிட்டேன். இங்கு நிகழ்பவை ஆற்றலின் மோதல்கள் மட்டுமே. ஆற்றலென்பதோ மானுடரில் குடிகொள்ளும் குருதிப்பற்றும் விழைவுகளும் வஞ்சங்களும்தான். அந்த யானைப்போரில் முயல்களுக்கு பங்கேதுமில்லை. அதில் ஓர் இடம் பெறும்பொருட்டு உரைக்கும் வீண்சொற்களே அறநூல்கள்” என்றார். கசந்த நகைப்புடன் “அறத்தின்பொருட்டு எதையேனும் அடைந்தவன் அறிவுள்ளவன், இழந்தவன் பெருமூடன்” என்றார்.
தருமன் மெல்ல அசைந்து “துயர்கொண்டிருக்கிறீர்கள், தந்தையே. அஸ்தினபுரியில் நிகழ்ந்தவை அனைத்தையும் நானும் அறிவேன். பெரியதந்தைமேல் தாங்கள் எவ்வகையிலும் சினம் கொள்ளவேண்டியதில்லை” என்றார். “சிலநாட்களுக்கு முன் ஒரு செய்தி என என்னை புலரியில் எழுப்பியதுமே என் உள்ளத்தில் எழுந்த முதல் எண்ணம் என் முதல் மைந்தன் பிரதிவிந்தியனைப் பற்றியதே. அடுத்து தேவிகையின் மைந்தன் யௌதேயன். பின்னரே அனைத்தும். அது உயிரின் இயல்பு. மூத்ததந்தையார் தன் மைந்தரை நெஞ்சுசேர்க்கிறார் என்றால் அது இங்கு தந்தையென்றும் மைந்தர் என்றும் நிகழ்த்தும் வல்லமைகளின் விருப்பம் மட்டுமே.”
விதுரர் “ஆம், நான் அதையெல்லாம் எண்ணாமலில்லை” என்றார். “துறந்து இங்கு வருகையில் என் மைந்தரைப்பற்றியே நானும் எண்ணிக்கொண்டிருந்தேன். மைந்தரிலிருந்து தந்தையருக்கு விடுதலை இல்லை” என்றார். தலையை அசைத்தபடி “நான் எண்ணிக்கொண்டது என்னைப்பற்றி. இந்த விழிமுன் உண்மைகளுக்கு மேல் அமர்ந்து எதை இத்தனைநாள் பயின்றேன்? எதை நம்பி சொல்லாடினேன்? என் அடித்தளம் அசைந்துவிட்டது, மைந்தா. அதன்பின் நான் அங்கிருக்க முடியவில்லை.”
தருமன் இயல்பாக அஸ்வதந்தம் குறித்து கேட்க எண்ணி சொற்களை அடக்கிக்கொண்டார். விதுரர் அங்கிலாது எங்கோ சித்தத்தால் அலைந்துகொண்டிருந்தார். அவரிடம் தருமன் பேசவேண்டியதை முன்வைப்பதற்கான தருணமா அது என குழம்பி சகதேவனை பார்த்தார். சகதேவன் அதை உணர்ந்து “அமைச்சரே, கனியாது உதிர்வது வலிமிக்கது. நீங்கள் இன்னமும் அஸ்தினபுரியிலிருந்து விடுபடவில்லை” என்றான். விதுரர் திடுக்கிட்டு நிமிர்ந்து நோக்க “அங்கிருந்து அஸ்வதந்தத்தை கொண்டுவந்திருக்கிறீர்கள். அது அந்நகரும் மணிமுடியும் அனைத்தும்தான்” என்றான். விதுரர் மெல்ல நடுங்கத் தொடங்கினார். அவர் வாய் சற்று திறந்தது.
“நேராகச் சொல்வதனால் என் மேல் சினம்கொள்ளலாகாது தாங்கள்” என சகதேவன் சொன்னான். “அனைத்து நடிப்புகளுக்கும் அடியில் இருந்த உண்மையைக் கண்டுகொண்டு உளமழிந்து இங்கு வந்திருப்பதாக சொன்னீர்கள். அதுவும் ஒரு நடிப்பென்று அறியாமலா இருக்கிறீர்கள்? எத்தனை நடிப்புகளினூடாக நாம் சென்றுகொண்டிருக்கிறோம்! அறிந்தவர் என்று. ஏதுமறியாதவர் என்று. துயரமானவர், தனித்துவிடப்பட்டவர், புரிந்துகொள்ளப்படாதவர் என எத்தனை தோற்றங்கள்! அமைச்சரே, எவரும் எவ்வுண்மையையும் முற்றிலும் புதிதெனக் காண்பதில்லை.” தருமன் திகைப்புடன் கைநீட்டி ஏதோ சொல்ல முயல அவன் சொல்லட்டும் என விதுரர் கைகாட்டினார்.
“நீங்கள் அமைச்சர். நதி தேர்ந்த பாதை. அது சுழித்த இடம். அது தடம் மாறவேண்டுமென்றால் வானும் மண்ணும் கருதவேண்டும். நீங்கள் அமைச்சர், பிறிதொருவரும் அல்ல. நெறிநூலர் அல்ல, முனிவரும் அல்ல. எது உங்கள் இடமோ அங்கு திரும்பிச் செல்லுங்கள். எங்கு பிறர் எவருமே அறியாமலிருந்தாலும் முற்றுமுழுதாக அமைவீர்களோ அங்கு சென்று அமர்க! அங்கே உங்கள் அகச்சான்று காட்டும் வழியில் செல்க! விழைவோ ஆணவமோ அச்சமோ வஞ்சமோ திசைதிருப்பாமலிருந்தால் நீங்கள் இப்பிறவியில் சென்றடையக்கூடிய அனைத்தையும் அடைவீர்கள்.” என்றான் நகுலன்.
“நான் நடிக்கிறேன் என்கிறாயா, மைந்தா?” என்று விதுரர் கேட்டார். அவர் குரலில் இருந்த தளர்வு தருமனை உளமுருகச் செய்தது. அவர் திரும்பி சகதேவனின் விழிகளுக்குள் நோக்கினார். அவன் ஐயமற்ற குரலில் “இங்கிருக்கையில் நீங்கள் உங்களை எப்படி பார்த்துக்கொண்டீர்கள்? இங்கிருந்து வெளியே நோக்கும் கோணத்திலா அன்றி வெளியே இருந்து இங்கிருக்கும் உங்களை நீங்களே நோக்கும் கோணத்திலா?” என்றான். விதுரர் மறுமொழி சொல்லாமல் மெல்ல நடுங்கும் தலையுடன் அவனையே நோக்கினார்.
“அங்கிருந்து நோக்கிக்கொண்டிருந்தீர்கள், அமைச்சரே. அதை இங்கு வரும்வழியிலேயே நான் உணர்ந்தேன். இங்கு ஒவ்வொரு பொருளும் அக்கோணத்தில் நோக்கி அமைக்கப்பட்டிருந்தன. உங்கள் கைகளுக்கு உள்ளம் சொன்னது அது. அமைச்சரே, உலகுமுன் நடிக்கும் உருக்கள் ஏதும் நமக்குரியவை அல்ல. அவை எதிர்மறை இன்பங்களை அன்றி எதையும் அளிப்பதில்லை” என்றான் சகதேவன். “ஆகவே, கிளம்பிச்செல்லுங்கள். அஸ்தினபுரிக்கன்றி எங்கு சென்றாலும் நீங்கள் அயலவர். அமைச்சறை பீடத்திலன்றி எங்கமர்ந்தாலும் நீங்கள் நிலைகொள்ளப் போவதில்லை.”
அவர்களின் மூச்சுக்கள் மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்தன. முதலில் விதுரர் கலைந்தார். “நன்று, மைந்தா. என்றும் நிலைமாறாத சொல்கொண்டவன் நீ. உன் சொற்கள் என் உள்ளத்தில் வளரட்டும்” என்றார். சகதேவன் எழுந்து தலைவணங்கினான். பிறரும் எழுந்துகொண்டனர். தருமன் விதுரரிடம் விடைபெறுமுகமாக ஏதேனும் சொல்ல விழைந்தார். ஆனால் ஒரு சொல்லும் எழவில்லை. பெருமூச்சுடன் மீண்டுமொருமுறை தலைவணங்கி குடையை எடுத்துக்கொண்டு இளமழை நின்றிருந்த சரள்கல்முற்றத்தை நோக்கி இறங்கிச்சென்றார்.
[ 2 ]
அரசே கேள், இக்ஷுவாகு குலத்தில் பிறந்த ஹரிச்சந்திரன் என்னும் அரசன் இருந்தான். நூறு மனைவியரையும் ஆயிரம் களஞ்சியங்களையும் லட்சம் ஆநிலைகளையும் கொண்டு அவன் செழிப்புற்றிருந்தான் என்கின்றன நூல்கள். நூறு மனைவியரும் கருவுறாமைகண்டு உளம் வருந்தினான். தொல்புகழ் இக்ஷுவாகு குலம் வேருடன் அழியுமோ என கண்ணீர்விட்டான். அவன் அவைக்கு நாரத முனிவர் வந்தபோது அவர் தாள்பணிந்து தனக்கு ஒரு வழி உரைக்கும்படி கோரினான். “வருணனை போற்று. அனைவருக்கும் கனியும் அரசமைந்தனை அவன் அளிப்பான்” என்று நாரதர் சொன்னார்.
வருணனுக்குரிய ஏழு வேள்விகளை ஹரிச்சந்திரன் செய்தான். முகில்கள் கூடி கருமைகொண்டு அவன் வேள்விச்சாலை நனைந்தது. அவன் வேள்விச்சாலையின் கூரைவழியாக இறங்கிய நீர்ச்சரடு ஒரு வெள்ளித்தூண் என நின்றது. அதில் எழுந்த வருணன் அங்கிருந்த அந்தணருக்கு காட்சியளித்தான். “அரசே, இப்பிறவியில் உனக்கு மைந்தனுக்கு ஊழளி இல்லை. அந்நினைப்பு ஒழிக!” என்றான். “இல்லை, மைந்தனில்லாமல் இப்புவி விட்டு நீங்கமாட்டேன். என் மூத்தோருக்கு நீர் அளிக்க மைந்தன் இல்லையேல் என் வாழ்வுக்கே பொருளில்லை” என்று ஹரிச்சந்திரன் அழுதான்.
“அரசே, நீர் அள்ளி அளிக்க குருதிமைந்தன் வேண்டுமென்பதில்லை. மைந்தன் என ஏற்கப்பட்ட எவருக்கும் அவ்வுரிமை உண்டு. மைந்தரில்லை என்பவர் குருதிமுளைக்காதவர் அல்ல, உள்ளம் விரியாதவர் மட்டுமே. வெளியே எத்தனை இளமைந்தர். எத்தனை ஒளிரும் விழிகள். எத்தனை பாற்புன்னகைகள். உளமிருந்தால் நீ பல்லாயிரம் மைந்தருக்குத் தந்தையாகலாம். நூறு பிறவிகளில் அவர்கள் இறைக்கும் நீரால் அங்கொரு கங்கையை ஓடச்செய்யலாம்” என்றான் வருணன். “நான் விழைவது எனக்கென்றொரு மைந்தனை மட்டுமே. என் குருதியே நான். நானாகி எஞ்சவேண்டும் என் மகன்” என்றான் ஹரிச்சந்திரன்.
“அரசே, இது புடவியை அமைத்து ஆளும் நெறி. நீ மட்டுமல்ல, நானும் அதை மீறமுடியாது. இந்நதிக்கரையின் ஒரு மணற்பருவை கூட்டவும் குறைக்கவும் எவருக்கும் உரிமை இல்லை” என்றான் வருணன். “என் வேள்விப்பயன் என நீ இங்கு வந்தாய். வேதத்திற்கு கடமைப்பட்டவர்கள் தேவர்கள். வேண்டியதை நீ அளித்தாகவேண்டும்” என்று உரைத்த ஹரிச்சந்திரன் திரும்பி அந்தணரிடம் “மைந்தனைக் கோரி அவியிடுக! மறுத்து இத்தெய்வம் விண்புகுமென்றால் வேதத்தை மீறிய பழி அதைச் சூழ்க!” என்றான். அந்தணர் அவியிட்டு வேதம் ஓதினர்.
“ஆம், நீ சொல்வது உண்மை. வேதம் வேட்பதை தேவர் மீறமுடியாது” என்றான் வருணன். “ஆனால் விண்பரப்பில் உன் மைந்தன் இன்றில்லை. அன்னத்தை மண்ணிலிருந்து எடுக்கலாம். ஆத்மனை எங்கிருந்து அள்ளுவது?” என்றான். “நான் அதை அறியேன். நான் வேட்பது வந்தாகவேண்டும்… ஊற்றுக சோமம்! பொழிக சுரா! பெய்க நெய்!” என்று அரசன் கூவினான். வருணன் கைகூப்பி “ஒரு வழி உள்ளது, என் மைந்தன் தக்ஷசவர்ணியை உனக்கு மைந்தனாக அளிக்கிறேன். உன் மைந்தனுடலில் அவன் இரு வியாழவட்டகாலம் வாழ்வான். அதன்பின் அவன் மீண்டு வந்தாகவேண்டும்” என்றான். ஹரிச்சந்திரன் “ஆம், ஒப்புகிறேன்” என்றான்.
“அரசே, பெறுபவன் கொடுத்தாகவேண்டும் என்பது வேதநெறி. நூறுமேனி கொய்பவன் மூன்று வேள்விக்கு கடன்பட்டவன் என்கின்றது பிராமணம். நீ பெறப்போவதோ ஒரே மைந்தனை. அவனையே நீ வேள்விக்கு அவியாக அளித்தாகவேண்டியிருக்கும்” என்றான் வருணன். “ஆம், ஆணை!” என்றான் ஹரிச்சந்திரன். வருணன் அருளியபின் மறைந்தான். மழைநின்று இளவெயில் எழுந்ததும் நிகழ்ந்ததெல்லாம் மறையும் கனவென்று ஹரிச்சந்திரன் உள்ளத்தில் எஞ்சியது. மைந்தன் பிறக்கவிருக்கிறான் என்னும் உவகை மட்டுமே எஞ்சியது.
ஹரிச்சந்திரனின் முதல் மனைவி கருவுற்று அழகிய மைந்தனை ஈன்றாள். அவனுக்கு ரோஹிதாஸ்வன் என பெயரிட்டார்கள். அவனை தன் தோளிலிருந்து இறக்காமல் வளர்த்தான். அரசே, தன் வாழ்வும், புகழும், வீடுபேறும் மைந்தனே என ஆகிறவன் அருள்பெற்றவன். அவன் இம்மண்ணில் மானுடருக்கு அளிக்கப்பட்டுள்ள பேரின்பங்களில் ஒன்றை அடைகிறான். அவன் பழிகொண்டவனும் கூட. தேனன்றி பிறிதுண்ணாத கரடிபோல அவன் மெலிந்து அழிவான்.
மைந்தனுக்கு இருபத்துநான்கு அகவை நிறைந்ததும் ஒருநாள் கனவில் பாசமும் அலைபடையுமாக முதலைமேல் ஏறிவந்த வருணன் “உன் சொல் நிறைவேறும் நாள் வந்துவிட்டது. உன் மைந்தனை வேள்விப்பலியாக அளி” என்று கோரியபோதுதான் தன் வாக்குறுதியை ஹரிச்சந்திரன் நினைவுகூர்ந்தான். திகைத்து “என் மைந்தனையா? நான் அவனை இந்நாட்டை ஆள்வதற்காகவே ஈன்றேன். நான் இறந்தபின் அவன் வாழ்வதைக் காணவே உயிர் வாழ்கிறேன்” என்றான். “அவன் என் வேள்விக்கு பலியாக வந்தாகவேண்டும். அது உன் சொல்” என்றான் வருணன். “மாட்டேன். ஒப்பமாட்டேன்” என்று கதறியபடி ஹரிச்சந்திரன் கண்விழித்தான்.
ஆனால் அத்தனை அந்தணர்களின் கனவிலும் வருணன் தோன்றி வாக்குறுதியைப் பேணும்படி கேட்டான். “அந்தணரே, சொல்லுங்கள். என் மைந்தனை நான் மீட்டுக்கொள்வது எப்படி?” என்றான் ஹரிச்சந்திரன். “அரசே, வேள்விப்பலி என்பது கொலை அல்ல. பலியாகும் மானுடன் அவனே விரும்பி வந்து வேள்விச்சாலையின் பலித்தூணருகே நிற்கவேண்டும். உங்கள் மைந்தன் ஒப்பாவிட்டால் அவனை பலியிட வேதநெறி இல்லை” என்றார்கள் அந்தணர்கள்.
ஹரிச்சந்திரன் தன் மைந்தனிடம் “மைந்தா, நீ பலியாவதற்கு ஒப்புக்கொள்ளவேண்டியதில்லை. இங்கு நீ இருக்கவேண்டியதுமில்லை. இங்கிருந்து செல். எங்காவது கரந்து வாழ். உனக்காக நான் பழிகொள்கிறேன்” என்றான். ரோஹிதாஸ்வன் பலியாவதற்கு அஞ்சி தப்பி ஓடினான். காடுகளில் வேதப்பள்ளிகளில் சேர்ந்து தாடியும் முடியும் வளர்த்து பிறபெயரில் வாழ்ந்தான். அவனைத் தேடி அரசரின் படைகள் வீணே அலைந்தன.
ஆறாண்டுகாலம் காட்டில் வாழ்ந்த ரோஹிதாஸ்வன் ஒருநாள் பிராமணங்களில் தேர்ந்த ஓர் அந்தணரைக் கண்டு தன் கதையை சொன்னான். “நான் உயிர்பிழைத்திருக்க பிராமணங்கள் சொல்லும் வழி ஏதேனும் உண்டா?” என்று கேட்டான். “தைத்ரிய பிராமணங்களில் ஒன்றில் ஒரு வழி சுட்டப்பட்டுள்ளது. உனக்கு மாற்றாக வேதம்கற்ற அந்தண இளைஞன் ஒருவன் விரும்பி வந்து வேள்விப்பலியாக ஆவான் என்றால் நீ உயிர்பிழைக்கலாம்” என்றார் அந்தணர். அப்படிப்பட்ட அந்தணரைத் தேடி ரோஹிதாஸ்வன் பயணமானான்.
ஓராண்டுகாலம் காட்டில் அந்தணர்களைத் தேடியலைந்தான் ரோஹிதாஸ்வன். அவனுக்காக உயிரளிக்க எவரும் சித்தமாகவில்லை. அகத்தியகூட மலையடிவாரத்தில் அவன் ஒரு முனிவரைப்பற்றி கேள்விப்பட்டான். ஆங்கிரீச குலத்தில் பிறந்த வைதிகரான அஜிகர்த்த சௌவ்யவாசி அவரை விண்ணவனாக நிறுத்தும் பெருவேள்வி ஒன்றைச் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் அதற்காக ஒவ்வொருநாளும் காட்டில் அரக்கும் தேனும் கோரோசனையும் புனுகும் சேர்த்து ஊர்கள் தோறும் விற்று பொருள் சேர்ப்பதாகவும் சொன்னார்கள்.
அரசே, எந்த வேள்வியையும் மானுடர் முழுமையாக செய்துவிடமுடியாது என்பதே நூல்கள் கூறுவது. அனைத்து வேள்விகளும் ஒருசில குறைகளுடன் முடிவடைகையில் அக்குறைகளுக்காக தேவர்களிடம் பொறுத்தருளக் கோரும் வேதச்சொற்களை சொல்லியே அவற்றை நிறைவடையச் செய்வர். தொல்வேதங்கள் கூறும் அனைத்து அவிகளையும் அளித்து, பன்னிரண்டாயிரம் வைதிகரை அமரச்செய்து, தொல்வேதச் சொல் பன்னிரண்டு லட்சத்தையும் முழுமையாக ஓதி தன் வேள்வியை நிறைவுறச்செய்யவேண்டும் என அஜிகர்த்தர் விரும்பினார். அவரது பிதாமகர் ஆங்கிரீசரும் விழைந்து முடிக்காத பெருஞ்செயல் அது.
இளமையில் அதை கேட்டநாள் முதல் பிறிதொரு எண்ணமில்லாதவராக வாழ்ந்தார். ஒரு சொல் பிழையாது, ஒரு அசைவு மாறாது, ஒரு சந்தம் திரியாது முழுவேதத்தையும் கற்று நினைவில் நிறுத்தினார். ஒவ்வொருநாளும் வேள்வித்தீ வளர்த்து அவியிட்டு வேததேவனை தன்னுடன் நிறுத்தினார். வேதமென்பது வேட்கை. அரசே, வேதத்தின் உச்சியோ பெருவேட்கை. அஜிகர்த்தர் வைதிகரில் முதல்வர் என்று போற்றப்பட்டார். நிகரற்ற அவரது வேட்கையால் பிற வைதிகரால் அஞ்சப்பட்டார்.
அவரது மூன்று மைந்தர்களும் அவருக்கு அடிமையென அமைந்து அப்பணியை செய்துவந்தனர். மைந்தர்கள் பிறிதொரு உலகில்லாது தனக்கு முற்றிலும் அடிமையாக இருக்கவேண்டுமென விரும்பிய அஜிகர்த்தர் அவர்களுக்கு நாய்வால், நாய்குறி, நாய்குதம் என்று பெயரிட்டிருந்தார். அரசே, ஒருவனுக்கு இடும் பெயர்கள் அவன் உள்ளத்தை வகுத்துவிடுகின்றன. சுனபுச்சன் ஒவ்வொருநாளும் தந்தைக்கு புகழ்மொழி உரைத்து பாராட்டி அவருடன் இருந்தான். சுனக்ஷேபன் அவர் சொன்ன வேலையை ஓடிஓடி செய்தான். சுனலாங்குலன் அடுமனை ஓரத்திலேயே அமர்ந்திருந்தான். அவர்களின் பெயர்களால் அவர்கள் சந்தைகளில் பழிக்கப்பட்டனர். பெண்களால் வெறுக்கப்பட்டனர். அதை அவர்கள் அறியவேயில்லை. விலங்குகளைப்போல அவர்கள் மானுட உலகில் வாழ்ந்தனர்.
ஒவ்வொருநாளும் தான் ஆற்றிவந்த மகாபூதவேள்விக்கு துணையமரவேண்டும் என்பதனால் அவர்களுக்கு வேதங்களை சொல்மாறாது கற்பித்திருந்தார் அஜிகர்த்தர். ரோஹிதாஸ்வன் அவரிடம் வந்து வணங்கி அவரது விருப்பத்தை மிக எளிதில் நிறைவேற்றும் வழி ஒன்று தன்னிடமிருக்கிறது என்றான். அவர் மைந்தர்களில் ஒருவன் தனக்காக வேள்விப்பலியாக நிற்பான் என்றால் ஆயிரம் பசுக்களை கொடையளிப்பதாகவும் அவற்றின் நெய்ப்பயனால் பத்தாண்டுகளில் போதிய செல்வத்தை சேர்த்து அவர் விண்புகும் வேள்வியைச் செய்யலாம் என்றும் சொன்னான். அவர் தன் வேட்கை நிறைவேறும் வாழ்க்கை என்றே அதை கண்டார். அரசே, அழிவின்மையை வேட்பவன் பிற எதையும் பொருட்படுத்துவதில்லை.
முதல்மைந்தன் தனக்கு இனியவை சொல்லி அருகிருப்பவன் என்பதனால் அஜிகர்த்தர் அவனை அளிக்க விரும்பவில்லை. அடுமனைக்காவலன் என்பதனால் இளையவனை அளிக்க அன்னையும் ஏற்கவில்லை. ஆகவே நடுவமைந்த மைந்தன் சுனக்ஷேபன் தந்தையால் நீரூற்றி ரோஹிதாஸ்வனுக்கு கொடையளிக்கப்பட்டான். “இனி உன்னுடையவன் அவன்” என அஜிகர்த்தர் சொல்லளித்தார். பின்னர் மைந்தனிடம் திரும்பி “நீ இவருடன் செல்க! இவர் காட்டும் வேள்விப்பந்தலில் உன் உயிரை உகந்து பலியாக அளி. இது உன் தந்தையின் ஆணை” என்றார். “அவ்வாறே” என்று சுனக்ஷேபன் தலைவணங்கினான்.
சுனக்ஷேபனுடன் தன் நகர்மீண்ட ரோஹிதாஸ்வன் தந்தையிடம் வந்து வேள்விநெறிகளின்படி அந்தண இளைஞனே தனக்கு மாற்றாக நிற்கலாகும் என்றும், பிராமணங்கள் கூறும் நெறி அது என்பதனால் தேவர்கள் அதை மறுக்கலாகாது என்றும் சொன்னான். அந்தணரை அழைத்து வருணனை பன்னிருகளத்தில் வரவழைத்து சொல்கேட்டபோது அவனும் அதை ஏற்றான். எனவே வேள்விக்கு நாள் குறிக்கப்பட்டது. வேள்விப்பந்தல் எழுப்பப்பட்டது. நூறு வைதிகர் வந்து பந்தலில் அமர்ந்தனர்.
அப்பந்தலில் நான்கு பெருவைதிக மரபிலிருந்தும் முதன்மை ஆசிரியர்கள் வந்திருந்தனர். உத்கர்த்தராக அயஸ்ய முனிவரும் அத்வர்யுவாக ஜமதக்னியும் பிராமணராக வசிஷ்டரும் ஹோதாவாக விஸ்வாமித்திரரும் வந்தனர். மஞ்சள் ஆடை அணிந்து மலர்மாலை சூட்டப்பட்டு அழைத்துவரப்பட்ட சுனக்ஷேபன் பலிவிலங்கென வேள்வித்தூணில் கட்டப்பட்டபோது நான்கு முனிவர்களுமே சினந்து எழுந்தனர். “மானுடனை பலிகொடுப்பது தொல்வேத நெறி. ஆயிரம் சல்லடைகளால் சலித்து மீட்ட நால்வேதம் அதை ஒப்புவதில்லை” என்று உரைத்து அவர்கள் எழுந்து வெளியேறினர்.
திகைத்து நின்ற அரசனிடம் “அரசே, தொல்வேதமுறைப்படி மானுடனை பலிகொடுப்பவர்கள் இன்றுமுள்ளனர். அவர்களை கொண்டுவருக!” என்றார் அந்தணர் ஒருவர். தொல்வேத வேள்வி இயற்றுபவர்களை தேடிச்சென்ற ரோஹிதாஸ்வன் எங்கும் காணாமல் இறுதியில் மீண்டும் அஜிகர்த்தரிடமே வந்துசேர்ந்தான். “முனிவரே, இன்று தொல்வேதத்தை முழுதாற்றுபவர் நீங்கள் மட்டுமே. மேலும் ஆயிரம் பசுக்களை பெற்றுக்கொண்டு எங்கள் வேள்விப்பலியை நிறைவேற்றி அருள்க!” என்றான்.
அதை ஏற்று தன் பிற இரு மைந்தருடன் வேள்விச்சாலைக்கு வந்த அஜிகர்த்தர் சுனக்ஷேபனை தூயநீராட்டி காப்புகட்டி கொண்டுசென்று வேள்விக்காலில் கைகள் பிணைத்துக்கட்டி வேள்விப்பலியாக அறிவித்தார். அவன் நாளும் கோளும் குலமும் பெயரும் கூவி அறிவித்து விண்ணவர்க்கு இனிய பலி அவன் என தெரிவித்தார். தானே உத்கர்த்தராகவும் அத்வர்யுவாகவும் பிராமணராகவும் அமர்ந்து வேள்வியை முழுமைசெய்தார்.
ஆனால் இளமைந்தனைக் கொல்ல அந்தணர் ஒப்புக்கொள்ளவில்லை. “இளங்கன்றைக் கொன்று பலியிடுவதே வேதநெறி. வேதமோதும் நாகொண்டவனை பலியிட நாங்கள் சித்தமல்ல” என்று விலகினார்கள். எரியில் எழுந்த வருணன் நாநீட்டி அவி தேடி துள்ளிக்கொண்டிருந்தான். அவன் சினம் கொள்வதைக்கண்ட ஹரிச்சந்திரன் அஜிகர்த்தரின் கால்களில் விழுந்து “முனிவரே, தாங்களே ஹோதாவாகவும் அமர்ந்து வேள்வி நிறைவுசெய்யவேண்டும்” என்றான். “பத்தாயிரம் பசுக்கள் தேவை எனக்கு. இவ்வேள்வி முடிந்ததும் இப்புவியில் மானுடர் எவரும் இயற்றாத வேள்வியை நான் தொடங்குவேன்” என்றார் அஜிகர்த்தர். “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான் அரசன்.
தந்தை தன் கையில் கூரிய கத்தியுடன் அணுகி வருவதை மைந்தன் கண்டான். அப்போது விஸ்வாமித்திரர் வேள்விச்சாலைக்குள் நுழைந்தார். “மைந்தா, உன் விழிகளை மறந்து என்னால் துயிலமுடியவில்லை. இவ்வேள்விப்பலியை நான் தடுக்கிறேன்” என்று கூவினார். “வேள்விக்கென நிறுத்தப்பட்ட விலங்கை விடுவிப்பவன் வேள்வியைத் தடுத்த பழியை சுமக்கவேண்டும். முனிவரே, நீர் நீங்கா இருளுலகுகளுக்குள் தள்ளப்படுவீர்” என்று அஜிகர்த்தர் சினத்துடன் கூவினார்.
“நான் இவனை இப்போதே என் மைந்தனாக ஏற்கிறேன்” என்று விஸ்வாமித்திரர் சொன்னார். குனிந்து அங்கிருந்த கங்கைநீர்க் குடத்தையும் தர்ப்பையையும் கையில் எடுத்து மைந்தனை ஏற்பதற்கான வேதமந்திரங்களைச் சொல்லி “வேதச்சொல் சான்றாக இக்கணம் முதல் இவன் என் மைந்தன்” என அறிவித்தார். “மைந்தா, ரிக்வேதத்தை முழுதும் கற்று நிறைந்தவன் நான். பத்தாயிரம்முறை ரிக்வேதத்தை நான் முழுமையாக சொல்லியிருக்கிறேன். என் வாழ்நாள் தவம் அது. அந்தப் பயன் முழுக்க உனக்கே அமையட்டும். ரிக்வேதத்தின் இறுதிப்பாடலை மட்டும் சொல்லி அதை நீ உன் தந்தையின் கொடை எனக் கொள்க!” என்றார். “நீ வேள்விப்பலியாகக்கூடாது. வைதிகனாகி சொல்நிறையவேண்டும். இது உன் தந்தையின் ஆணை” என கூவினார்.
சுனக்ஷேபன் அவர் சொன்ன வேதமந்திரத்தைச் சொன்னதும் வானில் இடி எழுந்தது. அனல் விழுந்து வேள்விச்சாலை எரியத் தொடங்கியது. மின்னுருவாக மண்ணில் வந்திறங்கிய இந்திரன் வருணனை வென்று துரத்தினான். அவன் இடிச்சொல் முழங்கியது. “நீ வாழ்த்தப்பட்டாய்” என மும்முறை ஒலித்தது வானம். வேள்விச்சாலை எரிந்தணைந்தது. விஸ்வாமித்திரர் சுனக்ஷேபனை கைபற்றி நெஞ்சோடு சேர்த்து அழைத்துச்சென்றார்.
“தொல்வேதங்களிலேயே உள்ளது இக்கதை” என்றார் கோபாயனர். “சுனக்ஷேபமுனிவரை சௌனகம், ஐதரேயம், தைத்ரியம் என்னும் மூன்று வேதநிலைகளும் தங்கள் முன்னோடி என கொள்கின்றன. வேதவேள்விகளின் முறைமையை வகுத்தவர் அவர். எங்கள் தொல்கதைகளின்படி தித்திரிப்பறவைகளின் வடிவில் சென்ற முனிவர்களுக்கு சுனக்ஷேபர் அருளிய வேதமெய்ப்பொருளை கற்பதனால் இம்மரபு தைத்திரியம் எனப்படுகிறது.” அவர் முன் தருமனும் தம்பியர் மூவரும் அமர்ந்திருந்தனர். கோபாயனர் கைகாட்ட இரவுக்கல்வி முடிந்ததை அறிவித்தபடி மணியோசை எழுந்தது.