ஞானக்கூத்தனின் ‘அடித்தளம்’

DSC_35011

ஞானக்கூத்தனைப் பொறுத்தவரை அவர் கவிஞராக ஒருவகையான  ‘அடித்தளமில்லா’ நிலைகொண்டவர். எதையும் அவரால் எள்ளலாகவே பார்க்கமுடிகிறது. தத்துவார்த்தமாகத் தொகுத்துக்கொள்ளவோ, நிலைபாடுகள் எடுக்கவோ அவர் முயல்வதில்லை. ஆகவே அவர் ‘விமர்சனம்’ முன்வைப்பதில்லை. ‘கேலி’ தான் செய்கிறார். கலைக்கிறார், திரும்ப அடுக்குவதில்லை

ஜெ,

ஞானக்கூத்தனைப்பற்றிய உங்கள் இந்த வரி ஏமாற்றம் அளித்தது. அவரை மிக விரிவாகவே பாராட்டி எழுதியிருக்கிறீர்கள். இப்போது அவரை அடித்தளமில்லா படைப்பாளி என்கிறீர்கள்

மகேஷ்

DSC_34921

அன்புள்ள மகேஷ்,

இதெல்லாம் எண்பதுகள் முதல் பேசிப்பேசி ஓய்ந்துவிட்ட சமாச்சாரங்கள் என நினைத்தேன். வாசகர்கள், குறிப்பாக கவிதை வாசகர்கள், இதை எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடும் என. அடித்தளமில்லா என்பதில் உள்ள அந்த மேற்கோள்குறி அதையே சொல்கிறது.

நீங்கள் அடுத்த தலைமுறை வாசகர் என ஊகிக்கிறேன். ஆகவே மீண்டும் சுருக்கமாக. இலக்கியத்தை பொதுவாக பண்டைய இலக்கியம் ,நவீன இலக்கியம் என பிரிக்கிறோம். தமிழில் பாரதிவரைக்குமானது பண்டைய இலக்கியம். அதன் வாசிப்பு, எழுத்துமுறை வேறு.

நவீன இலக்கியம் என்பதை ஜனநாயகத்தின் விளைவு என்று சொல்லலாம். அனைவராலும் வாசிக்கப்படுவது என்னும் அம்சமே அதன் பல இயல்புகளைத் தீர்மானிக்கிறது.அது ஓர் அழகியல்செயல்பாடு என்பதிலிருந்து மேலெழுந்து மக்கள்நலச் செயல்பாடும்கூட.அதை அடையாளம் கண்டுகொண்டு பாரதி எழுதியிருக்கிறான்.

நவீன இலக்கியத்திற்குள் அழகியல் மற்றும் கருத்தியல் சார்ந்து ஒரு பிரிவினை உள்ளது. அதை நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்கிறோம். இவை பொதுப்போக்குகள்.  சில கூறுகளைக் கொண்டு நாம் அ டையாளம் கண்டுகொள்ளத்தக்கவை.

நவீனத்துவம் ஐம்பதுகளில் வலுவாக உருவான ஒரு மனப்போக்கு. அதன் அடிப்படைகள் என சிலவற்றைச் சொல்லலாம். உலகளாவியநோக்கு, அறிவியல்சார்ந்த தருக்கம், தத்துவார்த்தமான மையத்தை அல்லது அடித்தளத்தை உருவாக்கிக்க்கொள்ளுதல், அனைத்தையும் ஒற்றைப்பெருவடிவாகத் தொகுத்தல்.

நவீனத்துவம் அதன் உச்சத்தை அடைந்து தன்னைத்தானே சிதறடித்துக்கொண்டதுதான் பின்நவீனத்துவம். அதற்கு இன்றும் பொதுவான இலக்கணங்கள் ஏதுமில்லை. ஆனால் அது எழுத்து அதிகாரமாக மாறுவதற்கு எதிரானது என ஒற்றைவரியில் சுருக்கலாம்.

மேலே சொன்ன நவீனத்துவக்கூறுகள் அனைத்தையும் நேர்தலைகீழாக ஆக்கிக்கொண்டால் பின்நவீனத்துவம் வந்துவிடுகிறது. வட்டாரக்கூறுகள் மற்றும் விளிம்புநிலைக்கூறுகளை முன்வைத்தல், அறிவியல்தர்க்கத்தை புறக்கணித்தல், தத்துவார்த்தமாக மையம் அல்லது அடித்தளம் உருவாகாதிருத்தல், ஒற்றைப்பெருவடிவங்களை அதிகாரங்களாக காணுதல்.

ஞானக்கூத்தன் பின்நவீனத்துவர் அல்ல. ஆனால் நவீனத்துவத்தின் உச்சப்புள்ளியில் நின்றபடி  பின்நவீனத்துவத்துக்குரிய கூறுகளை வெளிப்படுத்தியவர். மேலே சொன்ன பின்நவீனத்துவக் கூறுகள் அவரிடமிருப்பது அவரது இயல்பான வாழ்க்கைநோக்கும்கூட.

அவர் தெளிவான அரசியல்கருத்துக்களுடன் எழுதவந்தவர் . அதில் ஏமாற்றமுற்றவர். அந்த அரசியல்கருத்துக்களை முழுமையாக நிராகரித்துவிட்டுத்தான் கவிதைக்குள் வந்தார். அந்த எதிர்நிலையே கவிஞராக அவரை உருவாக்கியது.அனைத்தையும் நோக்கிச் சிரிக்கும் ஞானக்கூத்தனின் கசப்பு நவீனத்துவத்தின் ஓர் உச்சம். அதிலிருந்துதான் அவரது பின்நவீனத்துவ மனநிலை உருவாகியது.

அடித்தளமில்லாமை, நிலைபாடின்மை, அரசியலின்மை ஆகியவை ‘குறைகள்’ அல்ல. அவை இன்றைய கவிதையின் ஆதார இயல்புகள். ஆகவேதான் விமர்சனமின்மை உருவாகிறது. அவரைப்புரிந்துகொள்ள மிக அவசியமான ஒரு பின்புல அறிவு இது

தமிழ் நவீனக்கவிதை ந.பிச்சமூர்த்தி முதல் நவீனத்துவக்கவிதையாகவே இருந்தது. அதில் பின்நவீனத்துவ காலகட்டத்தில் விரிந்து எழச்சாத்தியமானவை ஒன்று ஞானக்கூத்தனின் நிலைபாடுகளில்லாத கேலி. இன்னொன்று பிரமிளின் கட்டற்ற பித்து. இரண்டும் நவீனத்துவத்திற்குள் நிற்பவை அல்ல, வளரக்கூடியவை.நான் அந்தப்பித்துநிலை மேலெழும் என எதிர்பார்த்தேன். 1999l நான் எழுதிய ‘நவீனத்துவத்திற்குப் பின் தமிழ்க் கவிதை- தேவதேவனை முன்வைத்து’ எனும் நுலில் அதை எழுதினேன்.

ஆனால் இன்றைய கவிஞர்களில் இசை, முகுந்த் நாகராஜன், லிபி ஆரண்யா, யவனிகா ஸ்ரீராம் என கணிசமானவர்கள் ஞானக்கூத்தனின் மரபையே தொடர்கிறார்கள். அன்னியர்களின் சிரிப்பும் கசப்பும் என அவர்களின் உலகை ஒட்டுமொத்தமாகச் சொல்லிவிடமுடியுமென நினைக்கிறேன். அதற்கு விதிவிலக்காக ஒரு பித்துநிலை இருந்தமையால்தான் நான் குமரகுருபரனை முக்கியமான கவிஞன் என நினைத்தேன்.

ஞானக்கூத்தன் விருதுபெற்ற அரங்கில் இசை பேசிய உன்னதங்களின் பொந்திற்குள் புகுந்துவிளையாடும் எலிக்குஞ்சு என்னும் கட்டுரை மிக முக்கியமான ஒன்று. அந்தத்தலைப்பிலேயே மிக அழகிய வரையறை உள்ளது. ‘ஞானக்கூத்தனின் கலைப்பார்வை’ என்றோ ‘ஞானக்கூத்தனின் அழகியல்’ என்றோ ‘ஞானக்கூத்தனின் வாழ்க்கைநோக்கு’ என்றோ அல்ல, புகுந்துவிளையாடும் எலி என்றே இசை அவரது முன்னோடியை வகுக்கிறார். “நமக்கு வாய்த்ததெல்லாம் இப்படி பத்து.. பத்து வரிகளைத் தவிர வேறென்ன சார் ?” என்னும் வரியில் நிலைகொள்கிறது அந்த உரை.

[நல்லவேளை அதை அதிகம்பேர் படிக்கவில்லை. எப்படி ஒரு கவிஞனை எலி என்று சொல்லலாம் என எவரும் கிளம்பவில்லை. அதிலும் முழு எலிகூட இல்லை, குஞ்சு எலி]

இந்த ‘அடித்தளமில்லா’ தன்மை வெங்கட் சாமிநாதன் போன்ற நவீனத்துவர்களால் ஞானக்கூத்தன் எழுதவந்த ஆரம்பகாலத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ’தரிசனமற்ற பயணத்தின் அழியும் சுவடுகள்’ என வெ.சாமிநாதன் சுட்டுவது இதைத்தான்.  ஆரம்பத்தில் நவீனத்துவத் தரப்பாக நின்று ஞானக்கூத்தனை முழுமையாக நிராகரித்த தமிழவன் பின்னர் பின்நவீனத்துவ நோக்கில் அவரை ஏற்பதை இருவேறு கட்டுரைகளில் காணலாம்.

இதெல்லாம் அவர் கவிதைகளை ரசிக்கத் தேவையான அறிதல்களா? இல்லை, கவிதையை ரசிக்க இவை தேவையில்லை. ஆனால் இயல்பாகவே நம்மிடம் ஒரு விமர்சனம் உருவாகும். ‘ஞானக்கூத்தன் சொல்வது என்ன?’ என்று ஒரு மையத்துக்காகத் தேட ஆரம்பிப்போம். அபிலாஷ் செய்வது அது. அப்போது இந்தப்புரிதல் தேவையாகிறது.

 கடைசியாக ஒன்று. ஏனென்றால் உடனே இப்படிப்பட்ட கேள்விகள் வரும். இதுதான் இன்றைய கவிதையா? இப்படித்தான் எழுதவேண்டுமா?

அதெல்லாம் ஒன்றுமில்லை, இப்படி இருக்கிறார்கள், அவ்வளவுதான். நாளையே வலுவான தத்துவ அடித்தளமும், உறுதியான அறநிலைபாடும் கொண்ட ஓர் இளங்கவிஞன் எழுந்து உலகுடன் பேசத்தொடங்கலாம்.எப்போதும் இப்படித்தான் நிகழ்கிறது. எண்பதுகளில் பிரமிள் பெரியமுன்னுதாரணம். ஆனால் ஞானக்கூத்தனுக்குத்தான் அடுத்ததலைமுறையில் தொடர்ச்சி உருவாகியது.

கவிஞர்களின் இந்த மனநிலைகளுக்கும் பார்வைகளுக்கும் இங்குள்ள வாழ்க்கைக்கும் இடையே எளிதில் வகுத்துவிட முடியாத ஒரு காரணகாரிய உறவு உள்ளது. ஆனால் அதை முன்னரே சொல்லமுடியாது. எவராவது வந்தபின்னர் அதை ஆராயலாம்.

ஜெ

முந்தைய கட்டுரைகுழந்தைகளுக்கு மதம்
அடுத்த கட்டுரைஅஞ்சலி : டி கே வி தேசிகாச்சார்