தலித்துக்களும் பாரதியஜனதாவும்

CpUvz7WWAAArcq7

 

ஜெ,

குஜராத் தலித் எழுச்சி கட்டுரை வாசித்தேன். மீண்டும் மீண்டும் நீங்கள் ஒன்றையே சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். அதாவது பாரதிய ஜனதா கட்சியின் ‘தலைமை’ மோசம் அல்ல. அதன் அடித்தளம்தான் மோசம். இது எந்தவகையான புரிதல் என்றே எனக்குப்புரியவில்லை.

சிவகுமார்

***

அன்புள்ள சிவக்குமார்,

இங்கே அரசியல் பேசுபவர்கள் ஒரே வகையான வார்ப்பு கொண்டவர்கள், எந்த அரசியல் ஆனாலும். ஒரு கட்சியை ஆதரிப்பதோ எதிர்ப்பதாகவோ ஒருநிலைபாடு எடுத்தபின் பார்வை முழுக்க முழுக்க ஒற்றைப்படையானதுதான். தன் தரப்பு அப்பழுக்கற்றது, எதிர்த்தரப்பு கீழினும் கீழ். இருட்டினும் இருட்டு. அழித்தொழிப்புக்கு மட்டுமே தகுதியானது. அதன்பின் உணர்ச்சிவேகங்கள், பொங்கல்கள். ஒருபோதும் ஒருவகை விவாதமும் அதற்குள் சாத்தியமல்ல.

ஆக, இங்கே ஒருவர் எதிர்க்கட்சியாக இருந்தால் அவருக்கு பாரதிய ஜனதாக்கட்சி தீமையின் மொத்த வடிவம். அதிலிருந்து நன்மை என்றோ ஏற்புக்குரியது என்றோ ஏதும் வரமுடியாது. அப்படித்தான் பாரதிய ஜனதாக்காரர்களும். நான் இடதுசாரிகளைப்பற்றி பாராட்டி ஒரு வரி எழுதினால் அவர்களின் வசைகள் எனக்கு வந்து குவியும்.

பொதுவாக அரசியல்கட்சிகள் உருவாகிவருவதை, செயல்படுவதைப்பற்றி ஒரு எளிய புரிதல் இருந்தால் இந்த வினா எழாது. குறுங்குழுக் கட்சிகள், குடும்பக்கட்சிகள் வேறு. அவை தலைமைவழிபாட்டால் ஆனவை. ஒருவகை பெரிய கும்பல் என்று அதைச் சொல்லலாம். அதன் விதிகளே வேறு. விசுவாசம் மட்டுமே அளவுகோல்

ஆனால் காங்கிரஸ், கம்யூனிஸ்டுக் கட்சி,பாரதிய ஜனதா போன்ற பரந்துபட்ட அடித்தளம் கொண்ட கட்சிகள் ஒருபெரிய உரையாடலின் விளைவாக உருவாகி வருபவை. அவற்றின் ஊற்றுமுகமாக ஒரு வரலாற்றுத்தருணம் இருக்கும். அவற்றுக்கென ஒரு கொள்கையும் கோட்பாடும் இருக்கும். அக்கொள்கையை முன்வைத்தே அவை அரசியலில் எழுகின்றன

ஆனால் அவற்றின் வளர்ச்சிப்போக்கில் அவை பல்வேறு தரப்புகளுடன் உரையாடி தங்களை மாற்றிக்கொண்டே செல்கின்றன. பல்வேறு தரப்புகளை உள்ளிணைத்துக்கொண்டு விரிகின்றன. ஒருகட்டத்தில் அவை உள்விவாதங்களின் பெரும் களமாக ஆகிவிடுகின்றன. அப்படி ஒரு கட்சி ஆகும்போதே அது இந்தியாவை ஆளும் தகுதிகொண்டது. காங்கிரஸும் பாரதிய ஜனதாவும் அப்படிப்பட்டவை.

பாரதிய ஜனதா  முதலாளித்துவப் பொருளியல் கொண்ட, இந்துத்துவம் எனப்படும் பண்பாட்டுஅடிப்படைவாத நோக்கு கொண்ட ஒரு கட்சி. அது அவர்களின் அறிவித்துக்கொண்ட கொள்கை.

ஆனால் அதற்குள் தத்தோபந்த் டெங்கடி போல இடதுசாரிக்கருத்துக்களுக்கு ஆதரவுமனநிலைகொண்ட வலுவான தரப்புகள் உருவாகி வந்தன. கோவிந்தாச்சாரியா, நானாஜி தேஷ்முக் போன்ற காந்திய வாதிகள் செயல்பட்டனர். ஒருகட்டத்தில் அது காந்தியப்பொருளியலை தன் கொள்கையாக அறிவித்திருக்கிறது.

இன்றும் அப்படிப்பட்ட பல தளங்கள் ,பல பார்வைகள் அதற்குள் உள்ளன. சாதிய விசைகள், பொருளியல்நோக்கங்கள் ஒன்றையொன்று சந்தித்து உரையாடித்தான் அதன் தலைமையைக் கட்டுப்படுத்துகின்றன.

இந்த உரையாடலில் உயர்சாதிவெறி கொண்டவர்கள், வெறுப்பரசியல்வாதிகளின், முச்சந்திக் கூச்சலிடுபவர்களின் குரல் மேலோங்கிவிடக்கூடாது என்பதையே நான் சொல்கிறேன். அதற்குள் நவீனப்பொருளியல் வளர்ச்சியை இலக்காகக் கொண்டவர்களின் குரல் விஞ்சவேண்டும் என்றே வாதிடுகிறேன். காந்தியவாதிகள் சிலர் இன்னமும் உள்ளனர், அவர்கள் ஓங்கவேண்டும் என விழைகிறேன்.

நாளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அந்தந்த பகுதிகளின் ‘நவாபுகளின்’  அதிகாரம் மேலோங்கலாகாது, போலி சோஷலிசக்குரல் ஓங்கலாகாது என வாதிடுவேன். நரசிம்மராவ் தொடங்கிவைத்த நவீனப்பொருளியல் நோக்கு ஓங்கவெண்டும் என விரும்புவேன். ஜனநாயகம் அப்படித்தான் செயல்படும். சாதகமான விசைகள் மேலோங்கவேண்டும் என முயல்வதே அதிலுள்ள இயல்பான செயல்பாடு.

எல்லா கட்சிகளுக்குள்ளும் தலித்துக்களின் வலுவான தரப்பு உருவாகவேண்டும், பாரதிய ஜனதாவிலும். வெளியே இருந்து எதிர்ப்பு மூலம் அதன் சாதியடிப்படைவாதிகளைக் கட்டுப்படுத்துவது போலவே உள்ளே நுழைந்து அதனுள் வலுவான விசையாகச் செயல்படவேண்டுன். பொருளியல்கொள்கைகளைக் கைப்பற்ற முயலவேண்டும்

இங்கே நான்குபேர் ஃபேஸ்புக்கில் கூடிக் கும்மியடிப்பதனால் அக்கட்சி இல்லாமலாவதில்லை. அது அதிகாரத்தைக் கையாளும் அமைப்பாகவே என்றுமிருக்கும். ஆட்சி மாறிமாறி வரும். அக்கட்சியை இங்கு சில்லறை வெறுப்பன்றி ஏதுமறியா ‘சித்தாந்திகள்’ சொல்வதுபோல பேய்பூதம் என ஒதுக்கினால் அதன் இழப்பு தலித்துக்களுக்கே.

கட்சியரசியலின் காழ்ப்புகளுக்குள் சென்று வசைபாடுவதை அரசியல் என நினைப்பவர்கள் பேசும் மொழி வேறு. அவர்களிடம் விவாதிக்கவே முடியாது. ஒரு எளிய குடிமகனாக அரசியலைப் பேசுபவர் எவராக இருந்தாலும் அவர்களின் வழி இதுவே. இதை ஒரு டீக்கடையில் நின்று அரைமணிநேரம் அரசியலைக் கவனித்தால் அறியலாம்.

ஜெ

முந்தைய கட்டுரைஐரோம் ஷர்மிளாவின் மனமாற்றம்
அடுத்த கட்டுரைகடிதங்கள்