‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 21

[ 8 ]

“அரசே, புழு பறப்பதைப் பார். நெளியும் சிறுவெண்புழுவுக்குள் சிறகு எவ்வடிவில் உள்ளது? அதன் கனவாக. அக்கனவு அதற்குள் பசியென்று ஆகிறது. பசி அதை கணம் ஓயாது நெளியச்செய்கிறது. நெளிந்து நெளிந்து அது இறகுகளை கருக்கொண்டபின் கூட்டுக்குள் சுருண்டு தவமியற்றுகிறது. உடைத்தெழுந்து வண்ணச்சிறகுகளுடன் வெளிவந்து காற்றிலேறிக்கொள்கிறது. மண்ணுடன் மண்ணென்றாகிய புழுவில் விண்ணகம் குடிகொள்ளும் விந்தை இது என்று அறிக!” ஐதரேயக்காட்டின் முதன்மை ஆசிரியர் திவாகரர் சொன்னார்.

“சிறகென்பது பறக்கத் துடிக்கும் விழைவு ஒரு பருப்பொருளானது என்று அறிந்தவன் இப்பருவுடலே அது கொண்ட விழைவுகளால் ஆனதென்று அறிவான். கைகள் எவ்விழைவுகள்? அரசே, கால்களின் உள்ளடக்கம் என்ன? விழிகள் விழைவதென்ன? செவிகள் தேடுவதென்ன? சுவையாக மணமாக உடல் அறிவது எந்த விருப்பை? மானுடர்களாக இங்கு வந்து நிகழ்ந்து மீள்வதுதான் என்ன? ஒவ்வொரு மனிதனும் ஒரு விழைவென்றால் அவ்விழைவுகள் பின்னி விரிந்து இங்கு உருவாவது என்ன? அது ஒருபெரும் விழைவென்றால் அவ்விழைவு எய்துவது எதை?”

“துணி தைப்பவனைப் பார்க்காமல், அத்துணியையும் காணாமல், அவன் கையிலிருந்து ஓடும் ஊசியை மட்டும் பார்த்தால் அதன் ஓயாச்செயல்பாடு திகைப்பூட்டும் பொருளின்மை அல்லவா? இங்கு நாம் ஆற்றுவது நாமறியாப் பெருஞ்செயலை என்று அறிந்தவனே அத்திகைப்பிலிருந்து விடுபடமுடியும். துணியை நாம் காண இயலாது. அதை ஊழ் என்கின்றார்கள். தைப்பவனை நாம் அறியமுடியாது. அதை அது என்று மட்டுமே சொல்லிக்கொள்ளமுடியும். ஆனால் ஊசியைக்கொண்டு துணியையும் தைப்பவனையும் உய்த்துணர்பவன் விடுபடுகிறான். அதுவே ஐதரேய மெய்யறிதல்.”

“ஊழ் என்பது நம்மனைவரையும் பின்னிப்பிணைத்திருக்கும் பெருவலை மட்டுமே. இவ்வலையில் பிறந்திறந்து சென்றுகொண்டிருக்கிறோம். ஏனென்றால் இப்பிறவிக்கு முன்பு ஏதுமில்லை என்றால் இங்கு நான் கொண்டுவருபவை எங்கிருந்து வருகின்றன? இப்பிறவிக்கு அப்பால் ஏதுமில்லை என்றால் நான் இங்கு ஈட்டியவை எங்கு செல்கின்றன? புழுவென ஒரு பிறப்பு. விழைவை உடலாக்கி கூண்டுக்குள் செய்யும் தவம் என்பது பிறிதொரு இறப்பும் மறுபிறப்பும். சிறகுகள் ஓய விழுந்து இறுதியென ஒரு இறப்பு. தந்தை இட்ட பெயருடன் மடிபவன் ஒருபிறப்பாளன். தான் ஈட்டியபெயர் சூடியவன் மறுபிறப்பாளன்.”

“வேதத்தில் எழுந்த முனிவராகிய வாமதேவரை வணங்குக! கோதம குருமரபினராகிய அவரது நாவிலெழுந்த வேதத்தை வாழ்த்துக!” என்று திவாகரர் சொன்னார். “கருவிலிருந்த கனவில் அவர் தேவர்களின் பிறப்புண்மைகளை முற்றறிந்துகொண்டார். மண்ணுக்கு வந்து அவர் கற்றது மொழியை மட்டுமே. நூறு இரும்புக்கோட்டைகளென கருவறைச்சுவர்களால் காக்கப்பட்டார். பருந்தென அவற்றைக் கிழித்து மண்ணுக்கு எழுந்தார். பின்பு அக்கருவறையை நோக்கி அவர் சொன்னார், இதோ நீ அளித்த சிறகுகளுடன் நீ தேக்கிய விழைவுகளின் வடிவாக எழுந்துள்ளேன். அரசே கேள், அக்கோட்டைகளை கட்டியது அப்புழுவே. அச்சிறையை உடைப்பதும் அதுவே.”

“இப்பருவெளிப்பெருக்கு ஒரு நெசவு. ஊடுசரடென செல்வது அறிபொருள். பாவுசரடென ஓடுவது பிரக்ஞை. பிரக்ஞை உறையாத ஒரு பருமணலைக்கூட இங்கு நீங்கள் தொட்டெடுக்க முடியாதென்றறிக!” அவர் பேசிக்கொண்டிருக்கையிலேயே ஒரு மாணவன் கைதூக்கியபடி எழுந்து நின்றான். அலைபாய்ந்த குழல்கற்றைகளும் தெளிந்த விழிகளும் கொண்டிருந்தான். “ஆசிரியரே, அறிபடுபொருளும் அறிவுமாகி நின்றிருப்பது முதற்பெரும்பொருள் என்கிறது ஐதரேயம். வானம் குடத்தில் என மானுடனில் அடைபடுவதே பிரக்ஞை என்கிறது. நான் அதைப்பற்றி ஒரு வினாவை எழுப்ப விழைகிறேன்.”

“இது சொல்லாடுவதற்குரிய இடமல்ல, இளையோனே. இங்கு நான் அரசருக்கு ஐதரேயப் பெருமரபை உரைத்துக்கொண்டிருக்கிறேன்” என்றார் திவாகரர். “சொல்லாடல்களன்களில் பலமுறை இதை பேசியிருக்கிறோம்.” அவன் “ஆம்” என்றான். “ஆனால் அது நெறிகளுக்குட்பட்டு சொல்முறைகள்கொண்டு களமாடுதல். எனக்கு அது உவப்பல்ல. நான் பயிற்சியை வேண்டவில்லை. நான் கோருவது போரை.” திவாகரர் “அதற்கான இடமல்ல இது” என்றார். “அதை நான் முடிவுசெய்துகொள்கிறேன். நான் பிழைபுரிந்தேன் என்றால் என்னை தீச்சொல்லிட்டு அழியுங்கள்” என்றான் அவன்.

திவாகரர் பொறுமையை காத்தபடி “சொல்!” என்றார். “எங்கு எவ்வாறு முழுமுதல்பிரக்ஞை தனிப்பிரக்ஞை என ஆயிற்று என்றறியாமல் இவ்வறிதல்களால் என்ன பயன்?” என்றான் அவன். “நதி தேங்கி குளமாகிறது. ஏன் என்றால் அங்கு ஒரு பள்ளமிருந்தது என்பதொன்றே மறுமொழி. அவ்வாறு ஆவது நதியின் இயல்பென்பதற்கு அப்பால் விளக்கமில்லை” என்றார் திவாகரர். “அகாலத்தின் ஒரு தருணத்தில் முழுமுதன்மையின் சித்தப்பெருக்கு காலக்குவையில் தேங்கியது. படைப்புவிசையென்றாகியது. அதை பிரம்மன் என்கிறார்கள். பிரம்மனின் வாயிலிருந்து சொல் எழுந்தது. அலகிலா சித்தம் பொருளுக்குக் கட்டுப்பட்ட சொல்லென்ற கணம் படைப்பு நிகழ்ந்தது.”

“சொல்லில் எழுந்தது நெருப்பு. பிரம்மனின் மூக்கில் தோன்றியது உயிர். உயிர்ப்பே காற்று. விழிகளிலிருந்து நோக்கு. நோக்கிலிருந்து ஒளி. ஒளியிலிருந்து சூரியர்கள். செவிகள் தன்னுணர்வை படைத்தன. தன்னிருப்பைக்கொண்டு நான்கு திசைகள் வகுக்கப்பட்டன. தன்னுள் கனிந்தபோது உள்ளம் பிறந்தது. உள்ளத்திலிருந்து சித்தம் உருவாகியது. சித்தம் சந்திரன் எனக் குளிர்ந்து வானிலெழுந்தது. மைந்தா, பிரம்மனின் தோல் முளைத்து பருப்பொருள் வெளி பிறந்தது. பிரம்மனைப் படைத்து ஊட்டிய தொப்புள் கொடி அப்போது அறுந்து விலகியது. புண்ணெனத் திறந்த தொப்புளில் இருந்து ஒவ்வொன்றுக்கும் எதிர்விசையாக அமையும் இருள் எழுந்தது. உயிர்கள் அதை இறப்பு என்றன. ஆதலழிதலின் பின்னலென இங்கே அனைத்தும் அமைந்தன” என்றார் திவாகரர்.

“தூயது இந்தக் குடம் என்று அறிக!” என்றார் திவாகரர். “அனல் சொல்லென வாயில் அமைந்தவன். காற்று மூச்சென மூக்கில் ஆடுபவன். கதிரோன் ஒளியென விழியானவன். திசைத்தேவர்கள் செவிகளென குடிகொள்பவன். மண்ணின் உயிர் தோலென ஆனவன். சந்திரன் உள்ளமென்றும் விண்ணகமே சித்தமென்றும் அமைந்தவன். இறப்பு இருளென குடிகொண்ட உடல் கொண்டவன். நீரை விந்துவென்றும் குருதியென்றும் ஏந்தியவன். மானுடன் பெருவெளியின் துளி. அங்கு அவ்வாறு அமைந்தது இங்கு இவ்வாறு அமைகிறது. குடத்தில் அடங்கக்கூடியதே விண் என்பதனால் மட்டுமே அறிவு பயனுள்ளதாகிறது.”

“ஒவ்வொருமுறையும் இதுவே நிகழ்கிறது” என்று அவன் பொறுமையிழந்து கூவினான். “ஆயிரம் சொற்களைக் கடந்து வினா சென்று நிற்குமிடம் ஒன்றே. அருவென அமைந்தது உருவென ஆனது எப்படி? அலகிலி எல்லைகொண்டது ஏன்? பிரக்ஞையென அமைவது பொருளென ஆனது எப்போது? அத்தனைச் சொற்களும் அங்கு சென்றதுமே தயங்கி நின்றுவிடுகின்றன. பின்பு ஒரு சொல்மயக்கம். ஒரு கனவு. ஒரு கூடுபாய்தல். நான் தேடுவது மறுமொழியை, மயக்கத்தை அல்ல.”

“மறுமொழி என்று ஒன்றில்லை. நான் சொல்வது ஒரு எண்ணத்தை. அது உன் சித்தத்தில் எதிரொலிக்கிறது. நீ கேட்பது உன் எதிரொலியை மட்டுமே. அது உன் உள்ளக்குகைகளால் பெருக்கப்படுகிறது” என்றார் திவாகரர். “பிரக்ஞை என நம்முள் நிறைந்திருப்பதன் புறவடிவமே மொழி. மொழியின் முதல் ஒலி அ. அது மூச்சுக்குத் திறந்த வாய். திகைத்து அமைந்த நா. பொருளை அள்ள துணிந்த உயிர். மொழியின் அனைத்து ஒலிகளுடனும் அது இணைந்துள்ளது.”

“மைந்தா, அ என்பது அது என்னும் சுட்டு. அல்ல என்னும் மறுப்பும்கூட. அலகிலி என்னும் விரிவு. அகம் என்னும் கூர்மை. மொழியை பின்னோக்கி இழுத்தால் அது சென்றடையும் புள்ளி அ என்பதே. அதுவே முழுமுதன்மையின் வரிவடிவம்” திவாகரர் சொன்னார். “திறந்த வாய் மூடக்குவிவது உ. மூடியமைவது ம். அகர உகர மகாரமாகி நின்றது அதுவே. அதையே ஓம் என்கிறோம். அச்சொல்லிணைவை ஊழ்கத்தில் அமைந்து உள்ளுணர்பவன் அந்த மாயக்கணத்தை அறியக்கூடும். பொருள் பிரக்ஞையென்றாவதும் பிரக்ஞை பொருளென்றாவதுமான நடனத்தை. இம்மிலிருந்து அவுக்கும் அவிலிருந்து இம்முக்குமான தொலைவையே அலகிலாப்பெருவெளி என அறிகின்றனர் யோகியர்.”

“இவை சொற்கள்” என்றான் அவன். “வெறும் சொற்கள்… சொற்களில் சொல்லப்படத்தக்கதல்ல அதன் மையம் என்றால் அதை ஏன் சொல்லப்புகுந்தீர்கள்? சொல்லப்பட்டவை சொல்லால் மட்டுமே அளக்கப்படவேண்டும்.” திரும்பி மாணவர்களை நோக்கி “கேளுங்கள், எத்தனை காலமாக இந்தக் கழையாட்டத்தை பாத்துக்கொண்டிருக்கிறோம்? இங்கே தன் வினா அடங்கி வாழ்பவன் எவன்? இத்தனைக்கும் அப்பால் என ஒன்றை நோக்கி தாவாத நெஞ்சுடன் இங்கு முழுதமைந்தவன் யார்?” என்றான். அவர்கள் விழிகள் மட்டுமென அமர்ந்திருந்தனர்.

சினந்த விழிகளுடன் கரிய உருக்கொண்ட ஒருவன் எழுந்தான். “ஆம், இங்கு நாம் கற்பது வினாக்களை மட்டுமே. விடைகளென அளிக்கப்படுவது சமித்தும் நெய்க்கரண்டியும் பொருளறியாத் தொல்சொற்களும்தான்” என்றான். அவன் சொற்கள் முன்னரே மாணவர்களால் கேட்கப்பட்டவை என விழிகள் காட்டின.

அவன் திவாகரரிடம் “உள்ளத்துள் உறைகிறது பிரக்ஞை என்றால் விலங்குகளுக்குள் உறைவது என்ன? அதுவும் பிரக்ஞையே என்றால் அதைவிட பெரியதா இதோ என்னுள் இருந்து எரியும் பிரக்ஞை? ஈயும் கொசுவும் கொண்டுள்ள பிரக்ஞை மேலும் சிறியதா?” என்றான். திவாகரர் “ஆம், மானுடனில் எரியும் பிரக்ஞை அவன் பிறவிகள் தோறும் திரட்டி எடுத்து இங்கு கொண்டுவந்து சேர்த்தது. இங்கிருந்து பிறிதொரு இடத்திற்குச் செல்வது” என்றார். அவன் கைகளைத் தூக்கி “அவ்வண்ணமென்றால் மானுடரின் பிரக்ஞையிலும் வேறுபாடுண்டு அல்லவா?” என்றான்.

“ஆம், என்ன ஐயம்? உனது பிரக்ஞை அல்ல அங்கே கன்றோட்டுபவனுடையது. அப்பால் ஊர்ப்பாதையில் சுமைதூக்கிச் செல்பவனுடையது மேலும் குறைந்ததே. பிறவிகள் அமைக்கின்றன படிநிலைகளை” என்றார் திவாகரர். “ஆசிரியரே, உங்கள் மெய்யறிதல் இறுதியில் மானுடரைப் பகுத்து மேல்கீழென அடுக்குவதற்கே உதவுகிறது. இங்கு அரசர்கள் அளிக்கும் நெய்யும் உணவும் உடையும் ஏன் வந்து குவிகின்றன என்பதற்குப் பொருள் இதுவே. இது நான் கொண்ட பிரக்ஞை. இது மேலானது என்பதற்கு நானன்றி சான்று ஏதுமில்லை. ஆனால் இதை அடைந்தமையால் பிறவிஏணியில் முதலில் நிற்பவன் என நான் என்னை கருதிக்கொள்கிறேன் என்றால் மூடன் நான்.”

“நீ பேசுவது தத்துவம் அல்ல” என்றார் திவாகரர் சலிப்புடன். “இருக்கலாம். இது எளிய அறம் என்றே நானும் எண்ணுகிறேன். ஆசிரியரே, என்ன செய்துகொண்டிருக்கிறது நமது வேதமெய்யறிவு? இதோ சொல்கொண்டு பொருள்தேடி எழுந்துவந்துகொண்டிருக்கின்றன பாரதப்பெருநிலத்தின் தொல்குலங்கள். வேதமறிந்தமையால் அவர்களைவிட அந்தணர் மேலோர் என்று அவர்களிடம் சொல்கிறோம். அந்தணர் வாழ்த்துவதனால் அரசர்கள் ஆளத்தக்கவர்கள் என்கிறோம். ஆசிரியரே, வேதத்தால் அவர்களை வெல்கிறோம். வேதம் இன்று ஒரு படைக்கருவி அன்றி வேறில்லை” என்றான் கரியவன்.

“நான் இங்கிருந்து எங்கு செல்வது? இதோ தீட்டப்பட்ட பிரக்ஞை கொண்டிருக்கிறேன் என்று கூவியபடி என்னை அரசவைகளில் விற்பனைக்கு வைக்கவேண்டும் அல்லவா? தொல்குடிகள் வாழும் காடுகளுக்குச் சென்று அரும்பொருள் என்னைப் பார் என்று சொல்லி பொருள்கொடை பெறவேண்டும் அல்லவா? கூரிய அம்பு என என்னை கூவி முன்வைக்கவேண்டும். கூரிய அம்பெனில் குறியை எய்தியிருக்குமே என ஒருவன் கேட்டால் கூசி விழிதாழ்த்தவேண்டும். சொல்லெண்ணி வேதம் கற்று, பொருள்தேர்ந்து நுண்மைபெறுவதெல்லாம் அந்த இழிவுக்காகத்தானா?” அவன் மூச்சு ஏறியிறங்கியது. “நான் என் அன்னையையும் தந்தையையும் உதறி காட்டுக்கு வந்தது இதற்காகத்தானா? இங்கு அறிவை பிச்சையிடுங்கள் என்று கையேந்தி நின்று செய்த தவத்தின் பொருள் இதுதானா?”

முதலில் எழுந்தவன் சொன்னான் “ஆசிரியரே, இங்குள்ள அத்தனை கல்விநிலைகளிலும் வினாக்கள் எழுந்துகொண்டிருக்கின்றன. குருமரபுகள் முரண்பட்டுப் பிரியும் செய்திகளே நாளும் வந்து செவிசேர்கின்றன. கானகங்கள் கொந்தளிக்கின்றன. இனி, சமித்துக்களாலும் நெய்யாலும் மட்டும் வேள்விக்குளம் எரியாது. வேதப்பொருள் பெய்யப்பட்டாகவேண்டும். இங்கு பொழியப்படும் நெய் சென்றுசேருமிடம் எது? ஆத்மன் என நின்றிருக்கும் நான் எதற்காக என் பிரக்ஞையின் முழுமையென நின்றிருக்கும் பரமாத்மனுக்கு அவியளிக்கவேண்டும்? தானே தனக்கு அவியளிக்கச் செய்து அமர்ந்திருப்பதா அது?”

“நம் முதலாசிரியரின் சொற்கள் இவை. உச்சிப்புள்ளியின் வாசலைப் பிளந்து உள்ளே நுழைந்தது அது. அதற்கு உறைவிடங்கள் மூன்று, கனவுகள் மூன்று. அது ஆனந்தமயமானது. அது ஆர்ப்பரிக்கிறது, இது என் உறைவிடம், இது என் உறைவிடம், இது என் உறைவிடம். அது இங்கு வந்து உறைந்தபின்னர் வேதமாவது ஏது? வேள்விதான் ஏது?” என்றான் கரியவன். “நான் கேட்பவை நூலிலிருந்து எழும் சொற்கள் அல்ல. விடாய்கொண்டவன் எதிரே வருபவனிடம் கேட்பதுபோன்றவை இச்சொற்கள். நீர் இருக்கும் வழியன்றி பிறிது எதுவும் பயனற்ற மொழியே.”

“மைந்தா, இது நசிகேதன் கேட்ட வினா” என்றார் திவாகரர். “இங்குள்ளது அறிவு. அறிவின் எல்லையைச் சென்று முட்டிக்கொண்டவன் தேடவேண்டியது ஊழ்கத்தின் பாதை. அங்கு செல்க!” திரும்பி கரியவனிடம் “உன் பாதை பயனுறுமெய்யை உசாவுவது. அதை நீ தேர்க!” என்றார். அவன் “அப்படியென்றல் இங்கு நான் கற்றவை பொருளற்றவையா?” என்றான். “இல்லை. அவை நீ ஏறிச்சென்ற படிகளாக அமையலாம். இங்கிருந்து நீ பெற்ற ஒற்றைச் சொல்லில் இருந்து நீ எழலாம்” என்றார் திவாகரர்.

அவர்கள் உடலை அசைத்தபடி நின்றனர். திவாகரர் கைகூப்பி “நன்று, உனக்கு என் அருள் உடனிருக்கும். நீ விழைவது எதுவோ அது நீ என ஆகுக! ஓம், அவ்வாறே ஆகுக!” என்றபடி எழுந்தார். அவரது மாணவர்கள் ஆசிரிய வணக்கத்தைப் பாடினர்.

 

[ 9 ]

அர்ஜுனன் முன்னரே சென்றுவிட்டான். நகுலனும் சகதேவனும் பெருங்குடிலில் பிற மாணவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தனர். தருமன் எழுந்து வெளியே வந்தபோது கரிய இளைஞனை பார்த்தார். அவனிடம் பேசாமல் பிற மாணவர்கள் விலகிச் சென்றுகொண்டிருந்தனர். தருமன் அவனை நோக்கி புன்னகைத்து “உத்தமரே, தங்கள் பெயரை அறிய விழைகிறேன்” என்றார். “என்னை பாவகன் என்கிறார்கள்” என்று அவன் சொன்னான். “அது இக்குருகுலத்திற்காக நான் சூடிக்கொண்ட பெயர். எரிவடிவோனாக எழவேண்டும் என அன்று நான் கனவு கண்டேன்.” தருமன் புன்னகைத்து “அக்கனவு இன்னமும் நீடிக்கிறது என நினைக்கிறேன்” என்றார்.

உள்ளிருந்து முதலில் எழுந்த மாணவன் வெளிவந்தான். தருமன் “அவரும் தாங்களும் சொல்லாடுவதுண்டு என்று எண்ணுகிறேன்” என்றார். “ஆம், அவர் பெயர் பவமானன். எங்கள் பெயர்களே முதலில் எங்களை அணுக்கமாக்கியது” என்றான் பாவகன். பவமானன் அணுகிவந்து வணங்கினான். “நீங்கள் சொல்வது உண்மை பவமானரே, பாரதவர்ஷத்தின் அனைத்துக் காடுகளும் எரிந்துகொண்டிருக்கின்றன” என்றார் தருமன்.

“ஏனென்றால் இது வளரும் மரம். உலக்கைக்கு பூண்கட்டலாம், மரத்திற்கு கட்டப்படும் பூண் உடைந்து தெறிக்கும்” என்று அவன் சொன்னான். அவர்கள் பெருமுற்றத்தில் இறங்கி குடில்களை நோக்கி சென்றனர். இரவு குளிருடன் சூழ்ந்திருந்தது. இலைத்தழைப்பின் இடைவெளிகளில் ஓரிரு விண்மீன்கள் தெரிந்தன. “உங்களிடம் பேச விழைகிறேன், உத்தமர்களே. நானும் உங்களைப்போல் ஐயம் கொண்டு அலைக்கழியும் மாணவனே” என்றார் தருமன்.

அவர்கள் மேற்காக நடந்தனர். குடில்களிலிருந்த வெளிச்சம் கண்களைவிட்டு மறைந்தபோது சூழல் தெளிவாகத் தொடங்கியது. மரங்களுக்கு அடியிலிருந்த பாறைகள் உள்ளொளி கொண்டு துலங்குபவை போல் தெரிந்தன. ஒரு பாறைமேல் தருமன் அமர்ந்ததும் அவர்கள் அருகே அமர்ந்தனர். “நசிகேதனின் கதையை நான் அறிந்திருக்கிறேன். இன்று ஆசிரியர் அதை எப்பொருளில் உரைத்தார் என்று விளங்கவில்லை” என்றார் தருமன். பவமானன் “அந்தத் தொன்மையான கதை ஒவ்வொரு வேதமரபிலும் ஒவ்வொருவகையாக விளக்கமளிக்கப்படுகிறது, அரசே” என்றான். “எங்கள் குருமரபில் அது வேதச்சடங்குகளின் உண்மைநாடும் கதையென்றே கொள்ளப்படுகிறது.”

முன்பு வாஜசிரவஸ் என்னும் ஒரு முனிவர் இருந்தார். அவர் கடம் என அழைக்கப்பட்ட யஜூர்வேதமரபின் முதன்மை ஆசிரியர். கடமென வழங்கப்பட்ட நிலப்பகுதியின் அரசரும்கூட. அவர் நூறு பெருவேள்விகளை இயற்றியவர் என்கின்றன நூல்கள். நூறாவது வேள்வியில் ஆயிரம் பசுக்களை அவர் அந்தணர்களுக்கு அளித்தார். மரக்குடுவையிலிருந்த நீரை ஊற்றி அவர் பசுக்களை கையளிப்பதைக் கண்டு அவர் மைந்தனும் மாணவனுமாகிய நசிகேதன் அருகே வந்தான். தந்தையே, நாம் கொடுப்பது எதற்காக என்றான்.

“கொடுப்பதன் மூலம் பசியாற்றமுடியும் என்றால் பசியென அமைந்த நெறியுடன் போரிடுகிறோமா? துயரைக் களைய முடியும் என்றால் அதை யாத்த படைப்புத்தெய்வத்தை அறைகூவுகிறோமா?” என்று நசிகேதன் கேட்டான். “இல்லை மைந்தா, கொடுப்பதன்மூலம் இப்புடவிநெசவில் எதுவும் மாறுவதில்லை. இடக்கையிலிருந்து வலக்கைக்கு செல்கிறது பொருள். ஆனால் அச்செயல்வழியாக நாம் விடுதலை கொள்கிறோம்” என்று தந்தை சொன்னார். “ஏற்க எழுந்த கைகளும் எரிந்து எழுந்த தழலும் ஒன்றே. ஒன்று இப்புவியின் தழல். இன்னொன்று அவ்விண்ணின் கை. அளிப்பதும் அவியிடுவதும் வேள்விதான்.”

“கொடுப்பதனூடாகவும் படைப்பதனூடாகவும் நாம் பெறுவதுதான் என்ன?” என்றான் நசிகேதன். “இங்கு நாம் அடைந்த ஒவ்வொரு பொருளும் நம்முள் ஓர் இடத்தை எடுத்துக்கொள்கின்றன. அப்பொருளை அளிக்கையில் அவ்விடத்தில் அதுவாக ஆன பிரக்ஞை மட்டுமே எஞ்சுகிறது. கொடுத்து ஒழிந்தவன் பிரக்ஞையால் நிறைகிறான்” என்று தந்தை சொன்னார். “இன்று நான் செய்யும் வேள்வி மகாபூதம் எனப்படுகிறது. என் பொருட்கள் அனைத்தையும் இரவலர்க்கு அளிப்பேன். என் எண்ணங்கள் அனைத்தையும் எரிதழலில் இடுவேன். எனக்குரிய அனைத்தையும் அளித்தபின் எஞ்சுவதிலிருந்து என்னை அறிவேன்.”

“தந்தையே, உங்களுக்குள் மைந்தன் என பேருருக்கொண்டு அமர்ந்திருக்கும் என்னை அளிக்காமல் எப்படி விடுதலை பெறுவீர்கள்?” என்று நசிகேதன் கேட்டான். “நானென்று அங்கே இருப்பது அகலாது உங்களுள் தூயபிரக்ஞை எப்படி பெருகிநிறைய முடியும்?” தந்தை “உன்னை கொடையளிக்க இயலாது, மைந்தா. எங்கிருந்தாலும் நீ என் மைந்தனென்றே இருப்பாய்” என்றார். “இல்லை தந்தையே. இறப்புக்குப்பின் எவரும் மைந்தரென்றும் தந்தை என்றும் எஞ்சுவதில்லை. அவை இம்மண்ணிலிருந்து ஊறி ஆத்மாமேல் படியும் அடையாளங்கள் மட்டுமே. என்னை யமனுக்குக் கொடையளித்தால் நீங்கள் என்னை முழுமையாக அளித்தவராவீர்கள்.”

தந்தை திகைத்து விழிநீருடன் மைந்தனை பார்த்தார். “ஒற்றை ஒருகணம் என்னை அளிப்பதாக எண்ணிவிட்டீர்கள், தந்தையே” என்றான் நசிகேதன். “கையில் கொடைநீருடன் நின்று என்னை இறப்புக்கு அளிப்பதாக எண்ணியமையால் அக்கொடை நிகழ்ந்தது என்றே ஆயிற்று. நான் என் இறப்பை தேடிச்செல்கிறேன்.” கண்ணீருடன் மைந்தனை நோக்கி கைநீட்டி “மைந்தா” என்று அழைத்தார் தந்தை. “துயர் களைக, தந்தையே! என்னை அளித்துவிட்டீர்கள். உங்கள் உள்ளம் விடுதலைகொள்ளட்டும்” என்றபின் அவன் தன் இடையாடையை களைந்தான். “அணையாதவன் என எனக்கு நீங்கள் இட்டபெயரை பொருளாக்குகிறேன், தந்தையே” என்றபின் நசிகேதன் தன் அடையாளங்கள் அனைத்தையும் துறந்து அரண்மனைவிட்டு இறங்கிச்சென்றான்.

“அங்கு முடியவில்லை அக்கதை” என்றான் பாவகன். “தளர்ந்து வேள்விப்பந்தலில் விழுந்த தந்தை எரிந்தெழுந்தாடிய தழலையே நோக்கிக்கொண்டிருந்தார். கொடுப்பது எத்தனை அரியதென்று அப்போது அறிந்தார். கொடுப்பவற்றில் இருந்து முற்றிலும் விலகாதவனால் அதற்கு நிகரானதைப் பெறமுடியாதென்று பின்னர் உணர்ந்துகொண்டார். அவருக்கு இழந்த மைந்தனிலிருந்து ஒரு கணமும் விடுதலை கிடைக்கவில்லை. அவன் அவருள் வளர்ந்தான். தளிரென ஊடுருவிப் பிளந்த பாறையை கிளையில் ஏந்தி நின்றிருக்கும் மரம் என் அவன் தந்தையை ஏந்தியிருந்தான்.

பவமானன் புன்னகையுடன் “நசிகேதன் யமனிடம் சென்று மெய்யறிவை கேட்டுணர்ந்ததாக சொல்கிறார்கள். அவன் ஏன் யமனிடம் சென்றான் என்பதற்கான விளக்கங்கள் பல. எங்கள் முதலாசிரியர், உயிர்கள் அனைத்தும் யமனுக்கு உயிர்க்கொடையளிப்பவையே என்பதனால் அவனிடம் சென்றான் என்பார். உயிரை யமனுக்கு அளித்து அவை பெற்றுக்கொள்பவைதான் என்ன என்று அவன் அவரிடம் கேட்டான். அழிவின்மையை என்று அதற்கு யமன் மறுமொழி சொன்னான்” என்றான் பவமானன்.

“யமன் நசிகேதனிடம் கேட்ட மூன்று வினாக்கள் விடைகள் ஊழ்கத்தில் எண்ணி ஒளிர வைக்கவேண்டியவை. வேள்விக்குரிய தூயஎரி எது? எப்போதும் அணையாத சுடர் எது? அனைத்தையும் சமைக்கும் தீ எது? மூன்றுக்கும் விடை ஒன்றே, ஆத்மா எனும் தழல். அதிலிருந்து உசாவியும் சொல்லாடியும் முன்செல்லும் பாதைகள் பல உள்ளன. எங்கு அனைத்தும் இணைந்து ஒற்றைவினாவாக ஆகின்றனவோ அங்கு சொல் திகைத்து நின்றுவிடுகிறது” என்றபின் பவமானன் பெருமூச்சுடன் அமைதியானான்.

21

இருளின் ஓசையைக் கேட்டபடி அவர்கள் அமர்ந்திருந்தனர். நெடுநேரத்திற்குப்பின் பாவகன் “நான் நாளை கருக்கிருட்டில் கிளம்புகிறேன். சார்வாகர்களின் துவைதக்காட்டுக்குச் செல்வதாக இருக்கிறேன். இவர்களின் வீண்வேதச் சடங்குகளும் விளக்கென எரியாத சொற்களும் என்னை சலிப்பிலாழ்த்தத் தொடங்கி நெடுநாட்களாகின்றன” என்றான். பவமானன் “எனக்கும் அதே சலிப்புதான். நானும் நாளை காலை கிளம்புகிறேன். ஆனால் எங்கு செல்வேன் என்று தெரியவில்லை” என்றான்.

ஆடை திருத்தி எழுந்துகொண்ட தருமன் “பாவகரே, நீர் செல்லும் வழியை நான் நன்கறிவேன். அதை உமக்கு விளக்குகிறேன்” என்றார். நிமிர்ந்த பாவகனிடம் “ஏனென்றால் அங்கிருந்துதான் நான் இங்கு வந்தேன்” என்று சொல்லி புன்னகைத்தார். ஒருகணம் திகைத்தபின் பாவகன் வெடித்துச் சிரித்தான். பவமானன் “நான் இங்கிருந்து சாந்தீபனி குருநிலைக்குச் செல்லலாம் என எண்ணுகிறேன், அரசே” என்றான். “அங்கு அவர்கள் வேதமோதுதலை முழுமையாக தவிர்க்கிறார்கள். சொல் என்பது அறிவென்பதால் முற்றறியாத சொல் பயனற்றது என்கிறார்கள். அறிதலின் வழி ஒன்று அங்கே திறக்கமுடியும்” என்றான்.

பாவகன் “அவர் இக்குருநிலையின் விக்ருதிப்பிளவினூடாக வெளியேறுகிறார். நான் இதன் அபானவழியினூடாக வெளியே செல்கிறேன்” என்றான். பவமானன் நகைத்தபடி “நான் செல்லும் வழி சாந்தீபனி குருநிலையின் அபானமாக இல்லாதவரை நன்று” என்றான். சிரிப்பினூடாக அவர்கள் அந்தக் கடந்துசெல்லலை எளிதாக்கிக் கொள்கிறார்கள் என தருமன் உணர்ந்தார். அவர் உணர்ந்ததை அறிந்த பாவகன் “உதறுவது போல் துயர்மிக்கது பிறிதில்லை, அரசே. இந்த மரங்கள் ஒவ்வொன்றிலும் இந்தப் பாறைகள் அனைத்திலும் என் அகம் படிந்துள்ளது. நான் விட்டுச்செல்வது அதையும்தான்” என்றான். தருமன் “நன்று சூழ்க!” என வாழ்த்தினார்.

முந்தைய கட்டுரைஇலங்கை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைதடம்-பெயர்கள்