ஜெ,
உங்களுக்கு விருது அளிக்கப்பட்ட கோவை சந்திப்பில் இசை, ‘என்னுடைய அடுத்த கவிதை தொகுப்பை நீங்கள்தான் வெளியிடப் போகிறீர்கள் மணி’ என்று சொன்னார். முதலில் விளையாட்டாக சொல்கிறார் என்று எண்ணி இருந்தேன். சில நாட்களுக்கு முன் அழைத்து மீண்டும் அதையே சொன்ன போது குழப்பமாக இருந்தது. ஆள்மாறாட்டக் கதையில் நுழைந்தது போலவே அரங்கில் உட்கார்ந்திருந்தேன். கூட்டத்தை பார்த்தால் பேச வராது, கவிதைக்கும் எனக்கும் எந்த பந்தமுமில்லை என்றெல்லாம் சொல்லியும் செவிமெடுக்க மறுத்து விட்டார். ஆகவே இதை எழுதி வைத்து பேசினேன். இப்பொழுதும் கூட கூச்சமாகவே இருக்கிறது. இதை உங்களுக்கு அனுப்பி வைப்பது கூட சற்று அதிகப்பிரசங்கித்தனம்தான்.
இசையுடனும், கே. என், செந்திலுடனும் சற்று நெருங்கி உரையாட கிடைத்த பொழுது நன்றாக இருந்தது. இசை தன்னுடைய கவி மொழியை எப்படி வந்து சேர்ந்தார் என்றும் அதிலுள்ள தடுமாற்றங்கள் மற்றும் தயக்கங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டார். முக்கியமான கவிஞர் என்ற கனமே இல்லாமல் அவ்வளவு இலகுவாக இருந்தார். அவரிடமும் கே.என். செந்திலிடமும் இன்னமும் கேட்கவும் தெரிந்து கொள்ளவும் வேண்டும் என்று இருந்தது. ஓரிரு நாட்கள் அவர்களுடன் செலவிட கிடைத்தால் நன்றாக இருக்கும்.
முதல் நாள் விஜய ராகவன், கிருஷ்ணன் மற்றும் ஈஸ்வர மூர்த்தியுடன் இசையின் கவிதைகள் குறித்து பேசிய மாலை நடை இசையின் கவிதையை இன்னும் அணுக்கமாக புரிந்து கொள்ள உதவியது. இரண்டு நாட்கள் நீங்களும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் பேச வந்திருக்காது.
7 X 24 கவிஞனின் கவிதைகள்
நண்பர்களுக்கு வணக்கம்.
தமிழின் முதன்மையான இளங்கவிஞர் ஒருவரின் நூல், தமிழின் முக்கியமான பதிப்பகமான காலச்சுவடின் அரங்கில் வெளியிடப்படும் பொழுது, கவிதை குறித்து பேச என்னை அழைத்த காரணம் இப்பொழுதும் விளங்கவில்லை. இசையின் தனிப்பட்ட அன்பின் காரணமாக அழைத்ததாகவே புரிந்து கொள்கிறேன். இது எனக்கு பெரிய கௌரவம். அதற்கு இசைக்கு எனது நன்றிகள்.
நீங்கள் பேசவும் வேண்டும் என்ற பொழுது இன்னும் குழப்பமானது. சரி, நான் பேசி எல்லாம் தமிழ்க் கவிதைக்கு ஏதும் நிகழ்ந்து விடும் அளவுக்கு தமிழின் கவிதை பலவீனமான நிலையில் இல்லை என்பதால் இங்கே இரண்டு விஷயங்களை பற்றி பேச விரும்புகிறேன். ஓன்று கவிதை வாசகனாக இசையின் கவிதை குறித்த எனது பார்வை. இரண்டாவதாக ஒரு கலை ரசிகனாக, இசையின் கவிதை கால் ஊன்றி நிற்கும் தரிசனமும் அதன் வரலாற்று பின்புலமும் குறித்த என் பார்வை.
*
இது என்னுடைய முதல் உரை. இங்கே ஜெயமோகனை எண்ணிக் கொள்கிறேன். இந்த அரங்கில் அவர் இல்லை என்பது பெரிய ஆசுவாசம். அவர் நடத்திய ஏற்காடு கவிதை முகாமில்தான் இசையின் கவிதையை, நண்பர் சாம்ராஜ் வழியாக அறிய நேரிட்டது. முதல் வாசிப்பில் அது கவிதையைப் போலவே தெரியவில்லை. கவிதை குறித்து நமக்கு சில அடையாளங்கள் இருக்கின்றன. அது எதுவுமற்ற ஓன்று குறுக்கிடும்பொழுது நாம் அதன் தலைக்கு மேலே எட்டி எட்டி பார்த்து அதற்கும் பின்னால் எங்கோ அதை தேடிக் கொண்டிருக்கின்றோம். பின்பு சட்டென்று அடையாளம் கண்டு கொண்ட பின்பு, சரிதானே, வேறு எப்படி இருந்திருக்க முடியும் என்று மீண்டும் மீண்டும் எண்ணிக் கொள்கிறோம். ஒரு குட்டையான கவிதை வருமிடத்தில் உயரமான ஒன்றையோ, கட்டையான குரலில் பேசும் கவிதையிடம் கீச்சு குரலில் பேசும் கவிதையையோ எதிர்பார்க்கும் முன்முடிவு கவிதை வாசகனுக்கு எப்படி வந்தது?
நவீன தமிழ் கவிதை அது வரை சென்று சேர்ந்த இடத்தை வைத்து நாம் சில முடிவுகளை அடைகிறோம். கவிதை தீவிரமானது, தனிமையானது, அகவயமானது, ஆன்மீகமானது என. மேலாக இவை அனைத்தையும் அது எந்த மொழியில் வெளிப்படுத்த வேண்டும் என்பது பற்றி கூட நமக்கு சில எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அது வரை சொல்லப்பட்டு வந்த மொழியிலிருந்து விலக்கி புதிய, வழங்கு மொழியின் பாவனையை கையாளும்பொழுது சமவெளிகளுக்கு மேலே பறந்து கொண்டிருந்த, இருண்ட அறைகளின் தனித்த நிழல்களுக்கு நடுவே நடுங்கிக் கொண்டிருந்த நவீனக் கவிதையை, கீழே இழுத்து வந்து, இருகூரின் ரயில் நிலையத்தின் சிமெண்ட் பெஞ்சில் உட்கார வைத்து, மாநகர பேருந்து நெரிசலில் பயணிக்க வைத்து, டீக்கடையில் நிறுத்தி வைத்து பேச வைக்கிற பொழுது, சற்று திடுக்கிடுகிறது நமக்கு. சகஜமான பின்பு உக்கடத்தில் வைத்து நம்மிடம் கைகுலுக்கும் கவிதை போல நெருக்கமானது எதுவும் இல்லை.
இசைக்கு முன்னான தமிழின் நவீன கவிதை ஒரு தனித்த மொழியையும், கவிதைக்கென்றேயான சில பேசு பொருட்களையும் கொண்டிருந்தது. முக்கியமான தமிழ்க் கவிஞர்கள் அனைவரையும் ஓரளவுக்கு இப்படி வகுத்து விடலாம். ஆத்மாநாமில் அலைக்கழிப்பு, பசுவய்யாவில் துடிப்பு, தேவதேவனின் ஆழ்நிலை, பிரமிளின் உக்கிரம், ஞானக்கூத்தனின் அங்கதம், விக்ரமாதித்யனின் பெருமூச்சு, சுகுமாரனின் கண்ணீர் என்று. இந்த தரிசனங்கள் அனைத்துமே நம்முடைய வாழ்வில் குறுக்கிடும் சில தருணங்கள் உண்டு. இந்த அனுபவத்தைக் கொண்டே நாம் அந்தக் கவிதைகளை புரிந்து கொள்கிறோம். இந்த அனுபவத்தையே கவிதைக்கான அடையாளமாக மாற்றி வைத்துக் கொள்கிறோம். அந்த அடையாளத்தைக் கொண்டே புதிய கவிதைகளை கண்டு கொள்ள முயற்சிக்கிறோம். அதே நேரம், இந்த தரிசனங்களின் விளிம்புக்கு அப்பால், வாழ்வில் இருக்கும் மற்ற அனுபவங்கள் குறித்து நாம் எதையேனும் தேடினால் அங்கே விடைகள் ஏதுமில்லை.
ரிமோட் கண்ட்ரோல்களுக்கு முந்தைய கால கட்டத்தில், தேவதேவனுக்கு மனைவியோடு சண்டை வந்தால் கோபத்தை எதில் காட்டுவார்? பசுவய்யாவுக்கு BSA சைக்கிளில் சென்று லேடிபார்ட் சைக்கிளை துரத்துவது பற்றி ஏதும் கனவுகள் இருந்ததா? மயிலாப்பூரின் குளத்தில் உறு மீனுக்காக காத்திருக்கும் கொக்கிடம் சொல்ல ஞானக்கூத்தனுக்கு ஏதாவது இருந்ததா? பிரமிளுக்கு லூஸ் ஹேர் பிடிக்குமா? என்று நமக்கு தெரியவில்லை. அவர்களுடைய கவிதைகள் அவர்களே நமக்கு முன் வைக்கும் தேர்வுகள் மட்டுமே. ஒரு நாளின் சில மணி நேரங்களை, ஒரு வாழ்வின் ஆன்மீகமான சில பகுதிகளை மட்டுமே அவர்கள் நமக்கு முன்வைக்கின்றனர். அந்தவகையில் இசை தமிழின் முதன்மையான 24×7 கவிஞர். பொத்தான்களை கழற்றி விட்டு, உள்ளே நுழைத்த சட்டையை வெளியே எடுத்து விட்டு, இழுத்து வைத்திருந்த தொப்பையை தொங்க விட்டு, பிறகு பேசத் துவங்குவதை போல கவிதையிலிருந்து இருந்து “கவிதையை” கழற்றி வைத்து விட்டு பேச துவங்குபவை. அதனால் தான் நான் முதல் முறை பார்த்த பொழுது கவிதையை அதன் தலைக்கு மேலே தேடிக் கொண்டிருந்திருக்கின்றேன்.
எமக்குத் தொழில் கவிதை என்று இருக்க முடியாத தமிழ் கவிஞனுக்கு ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரத்தில், உப்பு புளி தேடுவது முதல் இருட்டு கடை அல்வாவில் இளைப்பாறுவது வரை அத்தனையையும் செய்து தீர வேண்டி இருக்கிறது. ஆனால் ஓட்டு மொத்தமாக இலக்கியத்திற்கே ஓரிரு மணி நேரம் மட்டுமே வாய்த்த வாழ்க்கையில், அந்த சில மணி நேரங்களை நம்பியே நம்முடைய துடிப்பும், அலைக்கழிப்பும், ஆழ்நிலைகளும், உக்கிரங்களும் இன்ன பிறவும் போட்டி போட்டுக் கொண்டு வரிசையில் நிற்கின்றன. அழுது ஆற்ற முடியாத அந்த கோலத்தைக் கண்டு சிரித்து சிரித்து கழிகின்றது இசையின் எஞ்சிய நேரம். நூறு நூறு வருடங்கள் ஆகியும் தமிழ் கவிஞனுக்கு உப்பு புளி சண்டை முடியவில்லை. கவி மனமோ, உள்ளொளி உள்ளொளி என்று குதிக்காமல் இருப்பதில்லை. மரபிலோ, உறுமீன்களை பற்றிய உபதேசங்களுக்கு ஒன்றும் குறைச்சலுமில்லை. இந்த மூன்று புள்ளிகளுக்கு நடுவே இருக்கும் இடைவெளியின் அபத்தமே இசையின் களம். அகமும் புறமும் அழிந்த, பின் நவீனத்துவ தமிழ் கவிதையின், முதன்மையான இளங்கவிஞராக இசையை நான் எண்ணுவது இந்த அம்சத்தினால்தான்.
இரண்டாயிரம் வருடமாக சேமித்து வைத்ததன் இன்றைய மதிப்பை எடை போட்டு சிரிக்கின்றன அவை. இசையின் கவிதைகள், தமிழ் மரபின் அற உணர்ச்சிகளையும், தரிசனங்களையும் பின் தொடர்வதை விட்டு விட்டு, அவற்றின் காதை திருகி மேலே ஏறி டங்காமாரி ஊதாரியாக ஆடக் காரணம் இதுதான். அத்தனை தரிசனங்களை உடைத்து தீர்த்தாலும் ஆகாது அதற்கு. மேலே ஏறி ஆடித் தீர்க்க வேண்டும். கவிஞன் சற்றே களைத்திருக்கும் நேரம், அற உணர்ச்சியும், குற்ற உணர்ச்சியும் கவிஞனின் மீதேறி ஆடுகின்றன. எப்படி இருப்பினும் இரண்டாயிரம் வருடத்து சகவாசம் இல்லையா? அவைகளும்தான் வேறு எங்கும் போகும் கவிஞனை விட்டு விட்டு? இருவருக்கும் மாறி மாறி தழுவி அழவும் வேறு எதுதான் இருக்கிறது? அதனால்தான் அவரின் குறையொன்றுமில்லை அடிக்குரலில் தேம்புகிறது, அதே நேரம் ஆட்டத்திற்கு நடுவே சுந்தர மூர்த்தியின் சந்தோஷத்திற்கு காரணம் கேட்டால் அவரெங்கு போவார் எம்மானே என்று தலையை சொறிகிறது.
எந்தக் கலையும் அதன் உச்சத்தை அடைந்த பிறகு வரும் காலம் என்பது அது வரையிலான அதன் ஓட்டத்தை நிறுத்தி, தான் ஓடி வந்த தூரத்தை திரும்பி பார்க்கும் காலம். இழந்ததை, அடைந்ததை கணக்கிட்டு தன்னைத் தானே வருத்திக் கொள்ளவும், சிரித்துக் கொள்ளவுமான காலம். அந்த வகையில் இசையின் சிரிப்பு நவீன தமிழ்ச்சூழலின், தமிழ்க் கவிதையின் மீதான சிரிப்பு. இசையின் முன்னோடியான ஞானக்கூத்தனிடம் இருக்கும் கூரிய அங்கதம் சற்று அவநம்பிக்கை கொண்டது, விரக்தி கொண்டது. ஓட்டம் அதன் உச்சத்தில் இருக்கும் பொழுதே அதன் போக்கை வெளியிலிருந்து பார்க்கும் ஒற்றை செங்கலின் சிரிப்பு. இசையின் காலம், அதற்கு பிறகு தமிழ்ச்சமூகம் இன்னும் தூரம் கடந்து ஓட்டம் நின்று மூச்சிளைக்க திரும்பி பார்க்கும் காலம். இங்கே ஒற்றைக்கல் சூளைக்கல் அனைத்தும் ஒன்றுதானா என்று இன்னமும் தீர்மானிக்க முடியாத காலம். எனவே இசையின் இந்த சிரிப்பு தன்னையும் உள்ளடக்கிக் கொண்டது, எனவே கசப்பில் வருவது இல்லை, நெகிழ்வில் வருவது. சமரசம் செய்து கொள்ள வேண்டி கொக்கிடம் கெஞ்சுவது. கடவுள் என்று முன்னாடியும் கிடவுள் என்று பின்னாடியும் அல்லாடுவது.
1970 களில் லியோடார்ட், தனது “பின் நவீனத்துவ சூழல்” என்ற நூலில், பெருங்கதையாடல்கள் அனைத்தும் தரிசனங்களை முன் வைப்பதன் வழியாக, வாழ்க்கையை முழு முற்றாக வகுத்து விட முயல்கின்றன, மேலும் பெரிய தரிசனங்களை நிறுவும் பொருட்டு அவை கேட்கும் பெரும் பலிகளை தர இனியும் மானுடத்தால் ஆகாது என்ற அடிப்படையில் பெருங்கதையாடல்களை மறுத்தார். நம்முடைய அறிதலுக்குட்பட்ட எல்லையில் நின்று நம் அவதானிப்புகளை முன் வைக்க சரியான வடிவமாக குறுஞ்சித்தரிப்புகளையே சிறந்த வடிவமாக முன் வைக்கிறார். லியோடார்ட் முன் வைத்த இந்த குறுஞ்சித்தரிப்புகள் அனைத்தும் ஒரு கண நேரத்தில் ஒன்றை ஓன்று வெட்டிக்கொள்ளும் தருணங்களும், அதன் நிகழ்ச்சிகளும், நம்முடைய இருப்பும் நமக்கு எவ்வளவை பார்க்க தருகின்றனவோ அவ்வளவை மட்டும் முன் வைப்பவை. ஒரு முடிச்சை விரித்தெடுத்து விரித்தெடுத்து பிரபஞ்ச அளவில் ஒரு வலையை பின்னுவதற்கு நேர் எதிர் செயல்பாடு. என் கண்ணுக்கு தென்படும் இந்த முடிச்சு பெரிய வலையின் பகுதியா என்று அத்தனை உறுதியாக என்னால் எப்படி சொல்ல முடியும்? எனக்கு தெரிந்த தொலைவை மட்டுமே என்னால் சொல்ல முடியும் என்பதன் வெளிப்பாடு.
சரி, இத்தனை ஆயிரம் வருடங்களாக இந்த பெரிய பிரபஞ்ச வலையை பின்னியவர்கள் எல்லோரும் அப்படி முழுமையாக பார்த்து, உறுதியாக தெரிந்தவற்றை மட்டுமே வைத்து அதை பிண்ணினார்களா என்றால், இல்லை. நம்முடைய எல்லா வெளிப்பாடுகளும் எப்பொழுதும் எதோ ஒரு புள்ளியில் நின்று விடுபவை. அதற்கு மேலே வெகு தொலைவில்தான் நம்முடைய அனைத்து அனுபவங்களும் மிதந்து கொண்டிருக்கின்றன. அந்தக் கடைசி படியில் நின்று தாவாமல், ஒரு முடிச்சை கொண்டு பெரிய ஒன்றை பின்னிக் கொள்ளாமல் எந்த அறிதலும் சாத்தியமில்லை. அறிய முடியாத ஒன்றின் கீழ் நாம் எப்படி நிம்மதியாக உறங்க முடியும்? ஆகவேதான் நம் அறிதலுக்கெட்டிய தொலைவில் நின்று கற்பனையின் வழியாக பெரிய ஒன்றை அளக்கவும், அறியவும் முயலுவதே கலையாக இருந்து வந்திருக்கிறது. அந்த ஒரே காரணத்தினால்தான் கலை மனிதனுக்கு ஆதூரமான ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. கவிதை மட்டுமே நம்மை காப்பாற்ற முடியும் என்று ரிச்ர்ட்ஸ் சொன்னது அதனால்தான். அந்த வகையில், இசையின் இந்த கவிதைகள் நேர் எதிராக, பதற்றத்தையே உருவாக்குகின்றன.
இந்த சிரிப்பு மிதக்கும் கவிதைகளில் எங்கிருந்து அந்த பதற்றம் வருகிறது? அதை நான் இப்படி புரிந்து கொள்கிறேன். அவசரத்திற்கு நாம் நாடும் நண்பன், சட்டைப் பையின் உள்புறத்தை வெளியே எடுத்துக் காட்டி சிரிக்கும் சிரிப்பு, இந்தக் கவிதைகளில் காணக் கிடைப்பது. அவன் இல்லை என்று கூட சொல்லவில்லை. அதுதான் வேறு எங்கு செல்வது என்று தெரியாமல் நம்மை தவிக்க வைக்கின்றன.
ஒரே ஆறுதல் கவிஞனின் சிரிப்புதான். அதுவும் கூட, இதுவரை நிறுவப்பட்டிருக்கும் அனைத்தும் இனி நகைப்புக்கு உள்ளாவது மட்டுமே நம்முடைய விதியா என்று தவிக்க வைக்கின்றன. எதிர் கேள்வி கேட்டு, எதிர் வினை மட்டுமே புரிந்து எப்படி இந்த வாழ்க்கையை வாழ்வது என்று திகைக்க வைக்கின்றன. வேறு வழியில்லை, நாம் வாழ்வது இலட்சியவாத மரங்கள் சரிந்த பின்பு, வெளியேறிய குருவிகள் இன்னும் தவித்தலையும் காலம். இலட்சியவாதம் இல்லாத காலம் மனித வரலாற்றில் இருந்ததே இல்லை, இது ஒரு சிறிய இடைவெளிதான் என்கிறார் ஜெயமோகன். அது வரை இந்த குருவிகள் கிளை தேடி அலையத்தான் வேண்டும் போல.
மொழியின் வழியாக சமூகத்தின் நாடியை பிடித்து, விட்டத்தை பார்த்து எதையோ கணித்துக் கொண்டிருப்பவன் கவிஞன். நாம் சற்று தள்ளி நின்று அவன் முகத்தின் வழியாக நாடியைக் கணிக்க முயல்கிறோம். ஒன்றும் புரியாத பொழுது அவனிடம், என்ன ஆச்சு டாக்டர், எல்லாம் சரி ஆகிடுமா டாக்டர் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறோம். டாக்டர் கண்ணாடியைக் கழட்டி விட்டு மேலே பார்த்து என்ன சொல்வார் என்று நமக்கு தெரியும். நமக்கு தெரிய வேண்டியது அந்த இருபத்து நாலு மணி நேரத்திற்கு இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது என்று மட்டுமே. அதை ஒரு நாளின் இரண்டு மணி நேர கவிஞனிடம் கேட்டு ஏதும் ஆகப்போவதில்லை. 24×7 கவிஞனிடம்தான் கேட்க வேண்டும். இங்கே இசையிடம் நான் கேட்க விரும்பும் கேள்வியும் அதுவே.