வா.மணிகண்டன் அவரது இணையதளத்தில் எழுதியிருந்த கட்டுரை இது. களப்பணியாளர்களுக்கே உரிய தளராத ஆர்வத்துடனும் மங்காத அறவுணர்சியுடனும் பணியாற்றிவருகிறார். அவரது நிசப்தம் அறக்கட்டளை ஆதரவற்றவர்களுக்கான மருத்துவ உதவிக்கும், எளியோரின் கல்விக்கும் பெரும்பணிகளை ஆற்றிக்கொண்டிருக்கிறது. தனிப்பட்ட முறையில் அவர்முன் இதற்காக தலைவணங்குகிறேன்
மணிகண்டன் இக்கட்டுரையில் அவரிடம் உதவிபெற்றவர்கள் நடந்துகொள்ளும் முறையை அவருக்கே உரிய யதார்த்தக்குரலில் சொல்கிறார். பெரிய மனக்குறை ஏதுமில்லை, இப்படித்தான் இது இருக்கும் என்னும் நிதானம் தெரிகிறது. அதுவும் களப்பணியாளர்களின் இயல்பே.
நானறிந்த அத்தனை களப்பணியாளர்களும் இதை ஏதோ ஒருவகையில் சொல்லியிருக்கிறார்கள். அவர்களிடம் உதவிபெற்றவர்கள் அவ்வுதவியைப் பெறும் வரை நன்றியுடன் கண்ணீர்விட்டுக் கசிவார்கள். பெற்றதுமே முழுமையாக விலகிவிடுவார்கள். அது ஒரு வகை ‘சம்பாத்தியம்’ என்னும் உணர்வுதான் அவர்களிடம் மேலோங்கும்
அவர்களுக்குள் உதவிபெற்றமை குறித்த ஏதோ ஒரு தாழ்வுணர்வு இருக்கும். அதைவெல்ல பலவகையான பாவனைகளை மேற்கொள்வார்கள். “சும்மா குடுப்பானா? எங்கியாம் காசு வரவு இருக்கும்’ என்பார்கள். ”நம்ம பேரைச்சொல்லி பாதிய சாப்பிடுவான்” என்பார்கள். அந்தவசைகளின் வழியாக அந்த இழிவுணர்வைக் கடந்துசெல்வார்கள்
ஆகவேதான் இங்கே எந்தச் சமூகசேவையாளரைப்பற்றிக் கேட்டாலும் எதிர்மறை விமர்சனம்தான் அதிகமாக வரும். கூர்ந்துபார்த்தால் அவரால் உதவிபெற்றவர் பலர் அதில் இருப்பார்கள். அதை நம்பவிழையும் பலர் உடனிருப்பார்கள்.நான் வணங்கும் பல சேவையாளர்களைப்பற்றி இப்படி என்னிடமே சொல்லியிருக்கிறார்கள்.
உதவிபெறாத பொதுமக்களும்கூட அதே மனநிலையில்தான் இருக்கிறார்க்ள். அவர்களுக்கு தங்களில் ஒருவர் தங்களைவிட மேலானவர்களாக இருக்கக்கூடாது. அது தங்கள் மீதான ஒரு தீர்ப்பு போல. அந்தச் சேவையாளர்கள் மேல் மிகச்சிறிய குற்றச்சாட்டு வந்தால்கூட, மக்கள் உடனே பொங்கி எழுந்து வசைமழை பொழிய ஆரம்பிப்பார்கள். ஊழலில் வன்முறையில் திளைப்பவர்களைக் கொண்டாடுபவர்களே சேவையாளர்களிடம் இண்டுஇடுக்குகள் தோறும் தேடி குறைகளை அடுக்குவார்கள். திகைப்பாக இருக்கும்
ஆனால் மணிகண்டன் போன்றவர்கள் சேவைசெய்வது அவர்களுக்கு அது உள்ளூர அளிக்கும் ஒரு நிறைவுக்காக, விடுதலைக்காக. என்னைப்போன்றவர்களால் அதை ஒருபோதும் செய்யமுடியாது. மணிகண்டன் போன்றவர்களை முன்வைத்தே ‘எல்லாருக்கும் பெய்யும் மழை’