திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
நான் என்னுடைய குழந்தைகளுக்கு (7 மற்றும் 4 வயது முறையே) இந்து மதம், அறம் மற்றும் தத்துவம் குறித்த எளிய அறிமுகம் செய்ய நினைக்கிறேன் (எளிய அறிமுகம் எனக்கும் சேர்த்து தான்). உங்களுடைய இந்து மதம் குறித்த நூல்கள் குழந்தைகளுக்கு படித்து காண்பித்து அவர்கள் புரிந்து கொள்ள உகந்ததாக இருக்குமா? அல்லது தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கு நீங்கள் வேறு ஏதாவது நூலை பரிந்துரைக்க விரும்புகிறீர்களா?
நன்றி
அருண்குமார்
***
அன்புள்ள அருண்
என் நூல்கள் எவையும் குழந்தைகள் வாசித்துப் புரிந்து கொள்ளக் கூடியவை அல்ல. அப்படி எழுதவேண்டும் என எண்ணம் உள்ளது, பார்ப்போம்.
குழந்தைகளுக்கு மகாபாரதம் ராமாயணம் ஆகியவையும் அடிப்படையான புராணக்கதைகளும் வாசிக்கத்தரலாம். அமர்சித்ரகதா வரிசை அவ்வகையில் முக்கியமானது. ராமகிருஷ்ணமடம் வெளியிட்டுள்ள நூல்களும் உதவிகரமானவை
குழந்தைகளுக்கு தீவிரமான பக்தியை முன்வைக்கும் கதைகளை அளிக்கலாகாது என்பது என் எண்ணம். ஏனென்றால் அவை அந்த உணர்வுநிலையைப் புரிந்து கொள்ள முடியாது. மட்டுமல்ல, அவை சீக்கிரத்திலேயே அவநம்பிக்கை கொள்ளவும் கூடும்.
அதேபோல உக்கிரமான தியாகத்தை முன்னிறுத்தும் கதைகளும் உதவிகரமானவை அல்ல என்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன். உதாரணம், கண்ணப்பநாயனர் கதை, இயற்பகை நாயனார் கதை
அதேபோல மதப்போர்களை உள்ளடக்கமாகக் கொண்ட கதைகளையும் இளமையில் தவிர்க்கலாம். உதாரணம், நாவுக்கரசரை சமணர் தீயில் இட்டதுபோன்ற கதைகள்.
இவை பெரும்பாலும் கற்பனைகள். பக்தியை பேரியக்கமாகக் கட்டும்பொருட்டு உருவாக்கப்பட்டவை. இவற்றில் கிறிஸ்தவத்தின் தாக்கம் மிகவும் உண்டு. அவர்கள் புனிதர்களைக் கட்டமைத்த அதே பாணியில் இவை அமைந்துள்ளன. இன்றைய வாழ்க்கைக்கு இவை உகந்தவை அல்ல. இன்றைய குழந்தைகளுக்கும் அன்னியமானவை
மிகைக்கற்பனைக் கதைகளை அப்படிச் சொல்லியே குழந்தைகளுக்கு கற்பிக்கலாம். அனுமார் வானில் பறந்தார் என்றால் எப்படிப் பறக்கமுடியும் என இன்றைய குழந்தை கேட்காது, ஹாரிபாட்டர் பறக்கிறான் அல்லவா?
நூல்களை அளிக்கும்போது இதையெல்லாம் ஒருபார்வை பார்த்துவிடலாம். கதையிலிருந்து சாரமான விழுமியத்தை எடுக்கும் முறையை மட்டும் கண்டிப்பாக அறிமுகம் செய்தாகவேண்டும். வெறும் கதையாகச் சொல்லிவிட்டுச் செல்லக்கூடாது.
ஜெ