தடம்-பெயர்கள்

index

மதிப்பிற்குரிய ஜெயமோகனுக்கு,

தடம் இதழில் வெளியான தங்களுடைய பேட்டியைப்படித்தேன். விகடன் தடம்’ முதல் இதழில் சிறுகதைவெளி குறித்த கட்டுரை எழுதியிருந்தீர்கள். அதில் பல சிறுகதை எழுத்தாளர்களின் பெயர் விடுபட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. பிரபஞ்சன், ஜி.முருகன், யூமா வாசுகி போன்றவர்களின் பெயர்கள். அதேபோல் குறிப்பாக ச.தமிழ்செல்வன், ஆதவன் தீட்சண்யா என இடதுசாரி முகாம்களில் உள்ளவர்களின் பெயர்கள் விடுபட்டிருந்தனவே?’’ என்ற கேள்விக்கு ”இலக்கியத்துக்கு இந்த கறார்த்தன்மை வேண்டும்.” என்று பதில் அளித்திருந்தீர்கள்.

ஆனால் தடம் முதல் இதழில் வெளியாகியிருந்த சிறுகதைவெளி குறித்த கட்டுரையில் “அராத்து” அவர்களின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.(நீங்கள் எந்த விதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள் என்பதைப்பற்றி நான் சொல்லவில்லை, குறிப்பிட்டுள்ளதை மட்டுமே கூறுகிறேன்.) அராத்தை விடவா ஆதவன் தீட்சண்யா மற்றும் ரமேஷ்-பிரேம் மேலும் கேள்வியில் இடம்பெற்ற எழுத்தாளர்கள் குறிப்பிடத்தகுந்தவர்கள் இல்லை என்று கருதுகிறீர்கள்? அராத்து அவர்கள் எத்தனை குறிப்பிடத்தகுந்த சிறுகதைகளை எழுதியுள்ளார் – ஒன்றாவது? அவை எந்த இலக்கிய இதழ்களில் வெளிவந்துள்ளன?

ஆதவன் தீட்சண்யாவை பற்றி அதே கேள்விக்கு பதிலளிக்கையில் ”அப்புறம் ஆதவன் தீட்சண்யா பெயரைச் சொன்னீர்கள். பத்திரிகைகளில் பிரசுரிக்கும் தகுதியுடைய கதைகளைக்கூட அவர் இன்னும் எழுதவில்லை.” என்று குறிப்பிட்டுளீர்கள். ஆனால், தடம் முதல் இதழிலேயே அவருடைய கதை வந்துள்ளது. அப்படியென்றால் விகடன் தடம் தகுதியில்லாத படைப்புகளை வெளியிடுகிறதென்று அவர்களிடம் குறிப்பிடுகிறீர்களா?

தாங்கள் ரமேஷுக்கு அவருடைய பேரிடர் காலத்தில் துணை நின்றதை/நிற்பதை அறிந்தவள் தான் நான் இருந்தாலும் இந்தக்கேள்வி என் மனதை அறித்துக்கொண்டே இருக்கிறது.

என் அஞ்சல் முகவரியில் writer என்று இருப்பதால் குறிப்பிடுகிறேன், நான் சமீபத்தில் தான் எழுதத்துவங்கியுள்ளேன்.

அன்புடன்.

லைலா எக்ஸ்.

***

அன்புள்ள லைலா,

அப்பேட்டியிலேயே சொல்லியிருந்தேன், அது பட்டியல் அல்ல. நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் என்னும் நூல் பட்டியல். அதில் அனைத்துப்பெயர்களையும் நீங்கள் காணலாம். அது, சாதனையாளர்களை மட்டுமே சொல்கிறது. அத்துடன் ஒரு குறிப்பிட்ட எழுதுமுறையை முன்னெடுத்தவர்கள், அதை வளர்த்தவர்கள் ஆகியோரையும் சொல்கிறது.

அராத்து சாதனையாளர் என நான் சொல்லவில்லை. ஆனால் ஒரு புதியவகையை முயற்சிசெய்கிறார் என்றே சொல்கிறேன். அந்த சலுகையை பத்தாண்டுக்காலம் எழுதி சிலநூல்களை வெளியிட்ட ஒருவருக்கு அளிக்கமுடியாது. அவர் என்ன செய்தார் என்பதே முக்கியமானது.

ரமேஷ் பிரேம் முக்கியமான ஓரிரு சிறுகதைகளை எழுதியவர்கள், முக்கியமான கவிஞர்கள், மிகமுக்கியமான கோட்பாட்டாளர்கள். அவ்வகையில் அவர்களை நான் மதிப்பிடுகிறேன். அவர்களின் சிறந்த சிறுகதை, கட்டுரைகளை நான் என் இதழில் கேட்டுவாங்கி பிரசுரித்தேன்.

முற்போக்கு முகாமில் எனக்குக் கந்தர்வன் முக்கியமானவர். அவர் நான் பாராட்டும் கதைகளை அவரது இறுதிக்காலத்தில் குமுதம் போன்ற இதழ்களில் எழுதியபோது அவரது முற்போக்குத்தோழர்கள் எவருமே பொருட்படுத்தவில்லை. ஒவ்வொரு கதைக்கும் நான் அவருக்கு வாசகர்கடிதம் எழுதினேன். பல கடிதங்கள் பிரசுரமாகின. அவர் அத்தளத்தில் ஒரு திருப்புமுனை. அதைப்பின்பற்றி எழுதியவர்கள் பலர் ஊக்கத்துடன் தொடரவில்லை.

என் விமர்சன நோக்கில் என் தரப்பைச் சொல்கிறேன். அது தீர்ப்பு அல்ல, ஒரு அழகியல்நோக்கு, அவ்வளவே. அது விவாதங்களை உருவாக்குவதே அவற்றை வெவ்வேறு கோணங்களில் பார்க்கும் வாய்ப்பை உருவாக்குகிறது. அதுவே அதன் பயன்பாடு

ஜெ

பிகு:மின்னஞ்சல் பெயரை பொருளுள்ளதாக ஆக்க வாழ்த்துக்கள்

பிகு: ஒரு புறாவுக்கு இவ்வளவு அக்கப்போரா என்று ஒரு குறளி ஒலிக்கிறது

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 21
அடுத்த கட்டுரைவா.மணிகண்டனின் நிசப்தம் அறக்கட்டளை