திரு. ஜெ,
தங்களின் அயல்தேசம் பதிவை, திரைப்பதிவு செய்து, எங்களின் குடும்ப வாட்ஸ்அப் குழுமத்தில் பகிர்ந்திருந்தேன். அதைப்படித்த என் சகோதரி, அங்கு தங்களுடம் உரையாடியவர் என்ன காரணத்திற்காக கடைசியில் அழுகிறார் என்று கேட்டிருந்தார். அவருக்கு நான் கீழ்கண்டவாறு பதில் எழுதியிருந்தேன்:
“தன் வாழ்க்கை இப்படியாக மாறிப் போனதை உள்ளுணர்ந்த துக்கம், வெளியே பொருட்படுத்தாமல் மனதைப் பழக்கியிருந்தாலும் அது ஆழ்மனதில் ஏற்படுத்தியிருந்த காயம். தன் செயலைப் பழிக்காமல் இயல்பாக ஏற்றுக் கொண்ட மற்றும் மனதில் வேறுபாடு ஏற்படாமல் பேசிப் பழகும் உயர்ந்த இடத்தில இருக்கும் ஒருவரின் அருகாமை ஆகியவையே கண்ணீரின் காரணமாக இருக்கலாம்.
மற்றும் அந்த கண்ணீர் வந்த தருணம். அனைவரும் இறங்கிச் சென்ற பின் தடை கடந்து வழியும் கண்ணீர். கோயிலில் கடவுளின் முன் பெருகும் பக்தனின் கண்ணீருக்கு நிகரானது. தன் துக்கத்தைக் காட்டக் கூடிய அளவு மன நெருக்கத்தின் உணர்வு.”
அதை அனுப்பியபின், மேலும் காரணங்கள் பலவாறாக மனதிற்குள் இன்னும் இன்னுமென விரிந்துகொண்டே செல்கின்றன. மனிதமனம் என்பது மிகச் சிக்கலான இயந்திரம் என்பது உண்மையே அல்லவா.
கணபதி கண்ணன்
அன்புள்ள ஜெயமோகன்,
நான் சமீபத்தில் பார்த்து உறைந்துபோன ஒரு திரைப்படம் The Passion of Joan of Arc. கருப்பு-வெள்ளையில் ஒரு மௌன காவியம் என்று இத்திரைப்படத்தைச் சொல்லலாம். இத்திரைப்படத்தைப் பார்த்தபோதே வார்த்தைகள் எத்தனை பயனற்றவை என்பதை உணர்ந்தேன்.
ஜோனுக்கும் நீதிபதிகளுக்கும் நடைபெற்ற உரையாடல்கள் வரலாற்றின் பக்கங்களில் துல்லியமாக பதியப்பட்டுள்ளன. அவற்றை இத்திரைப்படத்தின் வாயிலாக அறிகையில் நம் உள்ளம் கொதிக்கிறது; இரத்தம் சூடாகிறது. நிர்க்கதியாக நிற்கும் 19 வயதுப் பெண்ணின் முன்னே கிழட்டுப் பூனைகள் தங்கள் சமார்த்தியத்தையும், விகாரத்தையும் காட்டுவது நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. பார்வை, சொல், செயல் என்ற மூன்றினாலும் ஜோனை அவர்கள் ஏளனப்படுத்துவதைக் காண்கையில், கௌரவர்கள் அவையில் பாஞ்சாலிக்கு ஏற்பட்ட நிலையே நினைவில் எழுகிறது. பாஞ்சாலியைக் காப்பற்ற கண்ணன் வந்தான் ஆனால் ஜோனைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை என்பது நம்மை தாங்கவொண்ணா துயரத்தில் ஆழ்த்துகிறது.
http://kesavamanitp.blogspot.in/2016/08/the-passion-of-joan-of-arc-1928.html
அன்புடன்,
கேசவமணி
அன்புள்ள ஜெ.
உங்களுக்கு எழுதக்கூடாது என்று நினைத்துக் கொள்வதும் பின் கொஞ்சம் தளர்த்தி இதோடு என்று கடைசியாக எழுதிவிடுவதும் நடந்துவிடுகிறது. நமது விருந்தோம்பலை படித்ததும் அதையும் உடனே எழுத நினைத்துவிட்டேன். தமிழகத்தை தாண்டி சில மாநிலங்களில் இருந்த அனுபவத்தில் சொல்ல நிறைய இருக்கிறது. நீங்கள் கேரளத்தையும் அதன் ‘விருந்தோம்பலை’யும் சொல்வது சொந்த ஊரின் மேலிருக்கும் பாசத்தால் இருக்கலாம். கேரளத்தைவிட மோசம் தமிழகம்தான் என நினைக்கிறேன். மாமல்லபுரத்தைவிட பழநி, மதுரை, திருச்சி போன்ற வழிப்பாட்டு தலங்களை அதிகம் கொண்ட ஊர்களில் இது மிக அதிகம். ஏன் இங்கு வந்தோம் என நினைக்கும் அளவிற்கு செய்துவிடுவார்கள்.
ஒரு குடும்பத்தை கட்டாயப்படுத்தி சவாரி அழைத்து செல்வதாக கூறி குதிரை வண்டியில் ஏற்றி இருபதடி தூரம் போனதும் 100 ரூபாயை கேட்டு அவமானபடுத்தியது உண்டு. திருச்சி அருகில் இருக்கும் ஒரு கோயிலில் நானும் என் நண்பரும் சென்றபோது பூசை பொருட்களை அங்கிருந்தவர்கள் கட்டாயப்படுத்தி அதிக விலைக்கு வாங்க வைத்தார்கள்.
தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில்தான் இது அதிகம் இருப்பதாக நினைக்கிறேன். மக்களை அவமானபடுத்துவது தான் அவர்களின் முதல் செய்கையாக இருக்கும். அதில் அவர்கள் எப்படி வினையாற்றுகிறார்கள் என்பதைக் கொண்டு அவர்களிடம் அதிகம் பிடுங்கமுடியுமா என பார்க்கிறார்கள். பொதுவாக திருச்சிக்கு வந்து வண்டி மாறும் வடக்கத்தியர்களை மட்டுமே ஒரு பெரிய கும்பல் சுற்றி வளைப்பதை தொழிலாகவே வைத்திருக்கிறார்கள். ராமேஸ்வரத்திலும் இதே கதைதான்.
இதற்கு மாறாக மிகப்பெரிய நகரங்களான தில்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் வெளிமாநிலத்தவர்களை எந்த வகையிலும் ஏமாற்ற நினைப்பதில்லை. ஆனால் சென்னையில் முற்றிலும் வேறு மாதிரியானது. ஆட்டோ ஓட்டுனர்களின் லீலைகள் நமக்கு தெரிந்ததுதான்.
ஆனால் சராசரி தமிழர்கள் இம்மாதிரியான செய்கைகளை அவர்களின் வயித்துப்பாட்டுக்கு செய்வதால் விட்டுவிடலாம் என்று கூறுவதுதான் வேடிக்கை. அப்படி செய்பவர்களை மிக நல்லவர்களாகவும், சந்தர்ப்பமே காரணம் என்றும் கூறுவார்கள்.
மொழி தெரியாமல் வடமாநிலங்களில் தனியே எங்கும் சென்றுவிட முடியும். மொழி தெரிந்தும்கூட தமிழகத்தில் தனியாக உலவகூடாது.
கே.ஜே.அசோக்குமார்.