தஞ்சை தரிசனம் – 6

அக்டோபர் இருபத்தொன்றாம் தேதி காலையில் திருவாரூருக்கு கிளம்பினோம். திருவாரூர் என் மாமனார் இபோது வசிக்கும் ஊர் என்பதனால் எங்கள் வீட்டில் அடிக்கடி பாடல்பெற்ற தலம். மாமனார் வீட்டுக்குச்சென்றால் மகளும் பெற்றோரும் குலாவுவதற்கு வசதியாக நான் வெளிநடப்பு செய்து திருவாரூர் ரதவீதையை சுற்றிவருவேன்.

எந்த ஒரு நகருக்கும் இப்படிப்பட்ட மாபெரும் ரதவீதியும் குளமும் ஒரு பெரும்கொடையாகவே இருக்கமுடியும். மேலைநாடுகளில் பெரும்பணச்செலவில் இம்மாதிரி அமைப்புகளை உருவாக்குகிறார்கள். ஒருநகரத்தின் மையத்தில் அகன்ற அழகிய திறந்தவெளியும் பொதுவான கலைக்கூடமும் இருப்பதென்பது மக்களின் அகவாழ்க்கைக்கு மிகமிக அவசியமானது.நம் ஆலயங்கள் பல சென்றகால மன்னர்கள் நமக்கு உருவாக்கித்தந்த செல்வங்கள். ஆனால் வழக்கம்போல திருவாரூரின் ரதவீதிகள் எந்த வகையான கட்டுப்பாடும் இல்லாமல் ஆக்ரமிக்கப்பட்டு குப்பைகொட்டப்பட்டு சீரழிந்து கிடக்கினன

திருவாரூருக்குள் நுழைகையிலேயே கமலாலயம் என்ற குளம் கண்ணில் பட்டது. மேகமற்ற நீலவானத்தின் கீழே அதன் துண்டு போல கிடந்தது. கமலாலயம் குளம் ஐந்துவேலி அகலம் கொண்டது என்கிறார்கள். எத்தனை ஏக்கர் என கணக்கிட தெரியவில்லை. சுற்றிலும் மிகப் பெரிய இரும்பு வேலிகட்டியிருக்கிறார்கள். ஆனாலும் தண்ணீர் பச்சைத்தைலமாக இருக்கிறது

காரைக்கண்டுவிட்டு அப்பகுதியில்குடியிருக்கும் ஒரு பெரியவர் வந்து பேச்சுக்கொடுத்தார். நாங்கள் இதழாளர்கள் என அவர் நினைத்தது தெரியவந்தது. குளத்த்துக்கு காவேரியில் இருந்து நீர் வந்து மறுபக்கம் வழிந்து மீண்டும் காவேரிக்கே சென்றுவிடும் என்றார். நெடுங்காலம் குளத்தின் நீர் மிகச்சுத்தமானதாகவே இருந்தது. ஆனால் சமீபமாக கெட ஆரம்பித்தது. இருமுறை மொத்த நீரையும் வடியச்செய்து சுத்தம் செய்திருக்கிறார்கள். பயனில்லை. குப்பைகளை இரவோடிரவாக வந்து குளத்து நீரில் கொட்டிவிட்டுச் செல்கிறார்கள். அத்துடன் மீன் வளர்க்க நகரநிர்வாகம் அனுமதி கொடுத்தது. அவர்கள் மீனுக்கு உணவாக இறைச்சிக்கழிவுகளை கொண்டுவந்து கொட்டுகிறார்கள்.

நமது நீர்நிலைகளின் அழிவைப்பற்றி ஏங்காமல் தமிழகத்தை என்னால் சுற்றிப்பார்க்கவே முடிவதில்லை. அதிலும் நீர்நிலைகளைப் பேணும் கர்நாடகத்தைப் பார்த்துவிட்டு திரும்பும்போது ஏக்கம் அதிகரிக்கிறது. வரண்ட தமிழகத்தில் இந்த நீர்நிலைகள் பெரும் சொத்து. ஈராயிரம் வருடங்களில் நம் மன்னர்கள் அளித்த செல்வம் இவை. இன்றும் கூட நீர் கெட்டு நாறும்போதுகூட மக்கள் வேறுவழியில்லாமல் இவற்றில்தான் குளிக்கிறார்கள். ஆனால் இவற்றை பாதுகாக்க போராடவேண்டும் என்ற எண்ணமும், சுத்தமாக வைக்கவேண்டுமென்ற குடிமையுணர்ச்சியும் எவருக்கும் இல்லை.

அத்துடன் அழுக்குநீக்கி [டிடெர்ஜெண்ட்]கள் இங்கே நீர்நிலைகளை அழிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. அவை ஆக்ஸிஜன் மிக்கவை. அந்த செயற்கையான ஆக்ஸிஜனேற்றம் பாசிகளை நீரில் பெருகச்செய்கிறது. மொத்த தமிழ்நாட்டிலும் அதிகமாக கண்ணுக்குப்படும் பசுமை என்பது பாசிகள் மற்றும் ஆகாயத்தாமரையின் பச்சைதான். அத்துடன் பாலிதீன் உறைகள். நாங்கள் சென்ற ஊர்களில் எல்லாம் குளங்களில் பிளாஸ்டிக் பைகள் குவிந்துகிடந்தன. தஞ்சை ஜனநெருக்கம் மிக்க இடம். இங்கே குப்பை அள்ளும் அமைப்புகளே இல்லை. எல்லா ஊருக்குள்ளும் மலைமலையாக குப்பைகள்.

ஆனாலும் கமலாலயத்தின் கரையில் நின்று பார்க்கையில் உற்சாகமாகவே இருந்தது. நீரின் வெளி உருவாக்கும் கண்நிறைதல் ஒரு அபாரமான ஆன்மீக அனுபவம்தான். இந்த குளம் தஞ்சை நாயக்கர் காலத்தில் வெட்டப்பட்டது. இப்போதும் இந்த குளத்தின் நில உரிமை மன்னர்களின் வம்சாவளியினரிடமே உள்ளது என்றார் பெரியவர். திருவாரூர் குளமும் கோயிலும் ஒரே அளவானவை என்ற நம்பிக்கை உள்ளது.

திருவாரூர் தேர் தமிழ்நாட்டிலேயே பெரியது. அதற்கடுத்து பெரிய தேர் மன்னார்குடித்தேர் என்றார்கள். முன்பெல்லாம் தேர் நகர்ந்து ரதவீதிகளைச் சுற்றிவர ஒருமாதம்கூட ஆகுமாம். மொத்த ஊர்களும் கலந்துகொண்டால்தான் தேர் நகரமுடியும். இப்போது தேர் இழுக்க ஊர்க்கூட்டங்கள் வருவதில்லை. ஆகவே இரும்புச்சட்டகமிட்ட சக்கரங்கள் பொருத்தி டிராக்டர்களைக்கொண்டு இரண்டுமணிநேரத்தில் இழுத்து சேர்த்துவிடுகிறாகள். காற்றறழுத்த விரைவுத்தடைகள் பொருத்தப்பட்டுள்ளன. ரதவீதி கான்கிரீட் போடப்பட்டுள்ளது.

திருவாரூர் கோயில் ஒரு பெரும் வளாகம். இக்கோயிலுக்குள் நாம் சுற்றிவந்து இதன் அமைப்பை புரிந்துகொள்ளவே முடியாது. பல நூற்றாண்டுகளில் பலவேறு கோயில்கள் உள்ளே கட்டப்பட்டிருக்கின்றன. அள்ளி வீசியது போல சிறியசிறிய கோயில்கள். அவற்றை ஆராய்பவர் சென்ற ஆயிரம் வருடங்களில் இங்கேவந்த பல்வேறு உப மதமரபுகளை புரிந்துகொள்ள முடியும்.

திருவாரூர் திருமூலட்டானம் என்றும் திருவாரூர் பூங்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. திருவாரூரின் சிவனுக்கு வான்மீகிநாதர் என்று பெயர். பாம்புப்புற்றில் எழுந்தருளிய சிவலிங்கம். தியாகராஜர் என்று மங்கலப்பெயர் உள்ளது. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பெயர்களில் ஒன்று அது. திருமறைக்காடு , திருநள்ளாறு, திருக்குவளை, திருநாகைக்காரோணம் திருக்காரவாசல் திருவாய்மூர் ஆகிய ஊர்களிலும் தியாகராஜர் மூலவராக இருக்கிறார். .

திருவாரூர் கோவிலின் ராஜகோபுரம் சுமார் 120 அடி உயரமுள்ளது. தெற்கு வடக்காக 656 அடி அகலமும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவர் இக்கோயிலின் மிகப்பெரிய அழகு. மதிலை ஒட்டியே நடைசெல்வது ஒரு நல்ல அனுபவம். உள்ளே சிறு கோபுரங்கள் கொண்ட உட்பிராகாரங்கள் பல்வேறு மண்டபங்கள். அலைந்து திரிந்து வழிதவறி மீண்டு வரும் அனுபவத்தை நான் பலமுறை இக்கோயிலில் அடைந்திருக்கிறேன். கண்டராதித்ய சோழனின் மனைவியான செம்பியன் மாதேவி இக்கோவிலை கற்றளிக் கோவிலாக மாற்றியதாகவும், பின்னர் குலோத்துங்க மன்னர்கள் காலத்தில் பெரியதாக விரிவாக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.

இன்று அதிகமானவர்கள் திருவாரூர் கோயிலுக்கு துர்க்கையை வணங்கவே வருகிறார்கள். திருவாரூர் ஆலயத்தில் எட்டு துர்க்கை பிரதிஷ்டைகள் உள்ளன. முதல் பிரகாரத்திலுள்ள மகிஷாசுரமர்த்தினி பிரதான துர்க்கையாகும். மேலும் 2 துர்க்கை சந்நிதி முதல் பிரகாரத்தில் உள்ளன. இரண்டாம் பிரகாரத்தில் நான்கும், கமலாம்பாள் சந்நிதியில் ஒன்றும் ஆக மொத்தம் எட்டு துர்க்கை சந்நிதிகள். நாங்கள் செல்லும்போது ஆயுதபூஜையை ஒட்டி செய்யபப்ட்ட துர்க்கை வழிபாட்டு விழாவின் மரச்சட்டங்களை அகற்றிக்கொண்டிருந்தார்கள்

திருவாரூரில் இருந்து மன்னார்குடி சென்றோம். மன்னார்குடியும் ஆஅசியன் பெயிண்டால் திருப்பணி செய்து சீரழிக்கப்பட்ட கோயில் நல்லவேளையாக கோபுரங்களுடன் விட்டார்கள். உள்ளே பிரம்மாண்டமான ரங்க மண்டபம் உள்ளது. அரங்கில் இருந்து இரு கைகளும் ஓர் உடலும் பிரியும் தன்மை கொண்டது- கிறித்தவ தேவாலயங்களைப்போல. ஆனால் தமிழகத்தின் எந்த தேவாலயத்தையும் விடப்பெரிய அரங்கு இது. கருங்கல் தூண்கள் கல்மலர்களுமாக நிற்கும் ஒஉ பெரும் காடு.

மன்னார்குடி பெருமாளுக்கு வாசுதேவப்பெருமாள் என்று பெயர். உற்சவர்தான் ராஜகோபாலர் என அழைக்கப்படுகிறார். தாயார் பெயர் செங்கமலத்தாயார். இங்கே பெருமாள் இடையனாக காட்சியளிக்கிறார். இதன் கோயில்மரம் செண்பகம். பிரம்மாண்டமான கோயில். ஓங்கி உயர்ந்த மதில்கள் ஒன்றுள் ஒன்று என சென்றபடியே இருக்கின்றன. கோட்டைகல் நடுவே மலர்கள் பூத்த நந்தவனத்தில் ஓயாத கிளிப்பூசல். தனிமையில் லயித்துநடக்க மிகச்சிறந்த இடம்.

ராஜகோபாலசாமி கோயிலில் 16 கோபுரங்கள் உள்ளன. ஏழு பிரகாரங்கள், ஏழு மாபெரும் மண்டபங்கள், ஒன்பது தீர்த்தங்கள் உள்ளன. பொதுவாக ராஜகோபுரத்தில், எல்லா நிலைகளிலும் சுதை சிற்பங்கள் இருக்கும். ஆனால், இங்குள்ள 11 நிலை ராஜகோபுரத்தில், கீழிருந்து மேலாக முதல் ஆறு நிலைகளில் சுதை, சிற்பங்கள் எதுவும் இல்லை. ஏழாவது நிலையில் இருந்தே சுவாமி சிலைகள் வடிக்கப்பட்டிருக்கின்றன. ’திருவாரூர் தேரழகு மன்னார்குடி மதிலழகு’ என்பது தஞ்சையில் பிரபலமான வாசகம்.

அங்கிருந்து கருக்காவூர் என்ற கோயிலுக்குச் சென்றோம். மதியமாகிவிட்டிருந்தது. ஊருக்கு நடுவே சோழர்காலத்துக் கோயில். குறிப்பிடும்படி சிற்பங்கல் ஏதுமில்லை என்றாலும் அழகானது. முல்லைவனநாதர் என்பது சிவபெருமானின்பெயர். தாயாருக்கு கல்பரட்சாம்பிகை என்று பெயர். கல்பம் என்பது யுகங்களின் தொகுதி. கல்பரட்சாம்பிகை என்றே கல்வெட்டுகளில் உள்ளது. அதை தமிழில் கற்பரட்சாம்பிகை என்று எப்போதோ யாரோ மாற்றி அதற்கேற்ப ஒரு புராணத்தையும் உருவாக்கிவிட்டார்கள். நிருத்துவ என்ற முனிவரின் மனைவி வேதிகையை அம்பாள் கருச்சிதைவில் இருந்து காப்பாற்றியதாக.

ஆகவே இப்போது கருவுற்ற பெண்கள் இங்கே பெருங்கூட்டமாக திரள்கிறார்கள். நாங்கள் சென்றபோதுகூட ஏழெட்டு குடுமப்ங்கள் வளைக்காப்பு நடத்திக்கொண்டிருந்தன. சந்தனம்பூசிய கர்ப்பிணிகள் சோர்ந்து முகம் மலர்ந்து அமர்ந்திருந்தார்கள். அவர்களின் உறவினர்கள் சத்தம்போட்டுப் பேசிக்கொண்டிருந்தனர்.

மதம் என்பதே நம்பிக்கைகலின் தொகுப்புதான். ஆனாலும் சமீபகாலமாக இந்து மதத்தில் ஓங்கியிருக்கும் ஒரு போக்கு கவலைக்குரியது. அரைநூற்றாண்டுக்கால அரைவேக்காட்டு நாத்திகவாதமும், அவற்றை ஏற்ற அரசுகளும் சுயநலநோக்குள்ள ஆலயநிர்வாகமும் இந்துமதத்தின் கருத்துக்களை பிரச்சாரம் செய்யும் அமைப்புக்களை செயலிழக்கச்செய்துவிட்டன. சராசரி தமிழ் இளைஞன் தடாலடி நாத்திகவாதத்துக்குத்தான் கருத்தியல்ரீதியாக அறிமுகமாகிறான். அதை பேசித்திரிகிறான். வாழ்க்கையை நேருக்கு நேராகச் சந்திக்கும்போது அதைக் கைவிட்டு மதத்துக்கு திரும்புகிறான்.

அந்த மதம் என்பது மரபார்ந்த நம்பிக்கைகளாலும் வாழ்க்கைபற்றிய பயத்தாலும் மட்டும் ஆனது. தத்துவமும் கலைகளும் இல்லாதது. ஆகவே நேற்று மதப்பிரச்சாரகர்களும் துறவிகளு ஞானிகளும் எடுத்துக்கொண்ட இடத்தை இன்று சோதிடர்களும் குறிசொல்பவர்களும் எடுத்துக்கொள்கிறார்கள். இன்று இந்துமதம் என்பது முழுக்கமுழுக்க சோதிடர்களின் கைகளில் உள்ளது என்பது உண்மை. அவர்கள் எந்தவிதமான வரலாற்றறிவும் தத்துவ ஞானமும் இன்றி எடுத்துவிடும் கதைகளும் நம்பிக்கைகளும் நவீன புராணங்களாக ஆகி இந்துமதத்தை ஆள்கின்றன.

இன்று புதிதாக உருவாகி வரும் வழிபாடு என்பது முழுக்கமுழுக்க லௌகீக சுயநல நோக்குடன், எந்த வித ஆன்மீக அம்சமும் இல்லாமல், இந்த சோதிடர்களால் உருவாக்கியளிக்கப்படுவதாகும். சக்கரை வியாதிக்கு இந்த கோயில் கருச்சிதைவுக்கு இந்த கோயில் மூளைச்சிதைவுக்கு இன்னொரு கோயில் என மருத்துவர்களைப்போல சாமிகளிலும் ‘ஸ்பெஷலிஸ்ட்’ சாமிகள் உருவாகின்றன.

தத்துவமறியாத கலையறியாத இந்த புதிய இந்துமதத்தின் ஆர்வலர்களினால் செய்யப்படும் திருப்பணிகளால்தான் நம் கோயில்கள் அழிந்துகொண்டிருக்கின்றன. அதை திருபுவனம் கோயிலில் கண்டோம். கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் சோழர்காலத்தைய மாபெரும் ஆலயங்களில் ஒன்று. முப்பெரும் சோழ ஆலயங்களின் அதே அமைப்பில் பல்வேறு பிரகாரங்கள் மண்டபங்கள் கோபுரங்களுடன் விரிந்து கிடக்கிறது

திருபுவனத்தின் பழைய பெயர் திருபுவனவீரபுரம். மூன்றாம் குலோத்துங்க சோழனின் அடைமொழி இது. அவனால் கி.பி.1178-1218 வாக்கில் கட்டப்பட்ட பேராலயம். இறைவன் பெயர் கம்பஹரேஸ்வரர். நடுக்கம்தீர்த்த பெருமான் என தமிழ். அறம்வளர்த்த நாயகி என்ற தர்ம்ம சம்வர்த்தினி தேவியாக அமர்ந்திருக்கிறாள். குலோத்துங்கனின் ஞானகுருவாகிய சித்தாந்த இரத்தினாகர நூலாசிரியர் ஸ்ரீ ஸ்கந்தசம்புவினுடைய மகன் ஈஸ்வர சிவாச்சாரியாரால் இக்கோயில் மூர்த்தி நிறுவப்பட்டது என்று கல்வெட்டில் காணப்படுகிறது.

அர்ச்சகர் இந்த கோயில் நடுக்கம் தீர்ப்பது, ஆகவே நரம்புநோய்களுக்கு ‘ஸ்பெஷல்’ என்றார். ஆனால் இந்தக்கோயில் இன்று பிரபலமாக இருப்பது வெளியே உள்ள சரபேஸ்வரமூர்த்தி கோயிலால்தான்.சரபர் என்பது பெருமாளுக்கு நரசிம்மம் போல சிவனுடைய ஒரு மிருக-மனித-இறைவன் கலவைத்தோற்றம். கொஞ்சம் அபூர்வமானது இந்த மூர்த்தி. அரகேசரி என்றும் சொல்வார்கள். எட்டுக் கால்களையும், இரு தலைகளையும் கொண்ட மிருகப் பறவை உருவம். பல இடங்களில் இதற்கு இரண்டு சிங்க முகங்களும் இரண்டு பக்கச் சிறகுகளும் உண்டு. சிங்கத்தின் உடலுடனும் எட்டுக் கால்களுடனும் கூடிய பறவை என்று காஞ்சிப் புராணம் கூறுகிறது. சிவனின் சிம்மத்தோற்றம் இது

திருபுவனம் கோயிலில் உள்ள சரபமூர்த்தி சன்னிதிக்கு ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். அவர்களின் வசதிக்காக கோயிலை திருப்பணி செய்து சீரழிக்கிறார்கள். கான்கிரீட்டில் பல மண்டபங்களை கட்டியிருக்கிறார்கள். மேலும் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். கட்டும்போதே கான்கிரீட் ஆங்காங்கே பிய்ந்து விழுமளவுக்கு தரமான கட்டுமானம். கோயில் முகப்பில் இப்போது கட்டியிருக்கும் மண்டபத்தை நூல்பிடித்து பார்த்துத்தான் கட்டினார்களா என்றே சந்தேகம் வருகிறது. காமாசோமாவென்று கோணலான அளவுகளுடன் கட்டி நிறுத்தியிருக்கிறார்கள்

கோயிலுக்குள் எங்கும் கீழ்த்தரமான பாத்ரூம் டைல்ஸ் ஒட்டப்பட்டிருக்கின்றன. அவற்றில் நன்கொடையாளர் பெயர் வேறு. கோயில்கள் பல ஆயிரம் வருடம் நீடிப்பவை. கருங்கல்லுக்கு அழிவில்லை. ஆனால் கான்கிரீட்டும் டைல்ஸும் ஐம்பதாண்டுகள் கூட நீடிக்காதவை. கோயில்திருப்பணிகள் உரிய சிற்ப முறைகளின்படி கருங்கல்லால் மட்டுமே செய்யப்படவேண்டும். முறையான சிற்பிகள் மட்டுமே செய்யவேண்டும். இன்றும் கோயில்கட்டும் சிற்பக்கலை இங்கே உயிப்புடன் வாழ்கிறது. திருப்பணி என்றபேரில் கொள்ளையடித்து ஆபாசமான கான்கிரீட் கட்டிடங்களைக் கட்டுவதென்பது மாபெரும் இறைத்துரோகம். ஒரு இந்துவாக இவற்றைக் கட்டுபவர்களையும் இவற்றுக்கு நிதியளிப்பவர்களையும் இறைவனே தண்டிக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

எல்லா கோயில்களிலும் நிதியளியுங்கள் என்ற பிலாக்காணம். பணம் பறிக்க ரசீதுகளுடன் பின்னால் வருகிறார்கள். அந்த நிதிகளுக்கு எந்த முறையான கணக்கும் கிடையாது. திருவையாறு முதல் தஞ்சையின் பெரும்பாலான கோயில்களில் எந்த சிறப ஒருமையும் இல்லாமல் கட்டப்பட்டுள்ள கான்கிரீட் மண்டபங்கள் அக்கோயில்களை சீர்கெடுக்கின்றன. அவற்றின் எடையாலும் இழுவிசையாலும் பல இடங்களில் கோயில் மண்டபங்கள் விரிசல் விட்டிருக்கின்றன. முன்னர் கட்டிய இடங்கள் பாழடைந்து கிடக்கின்றன.

திருபுவனத்தில் இருந்து திருப்புடைமருதூர் அல்லது திருவிடைமருதூர். மகாலிங்கேஸ்வரர் கோயில். அம்பாளின் பெயர் பிருஹத் சுந்தர குசாம்பிகை. தமிழில் நன்முலைநாயகி. பிரம்மாண்டமான ஆலயம். வழக்கமாக உள்ளே புகும் வழியில் துர்க்கையம்மனின் கோயில் வருகிறது. துர்க்கைக்கு இத்தனை பெரிய தனிச்சன்னிதி இங்குதான் உள்ளது என்று நினைக்கிறேன். இங்குள்ள தேரு ரதவீதியும் மிகப்பெரியவை. சோழர்காலத்தின் முக்கியமானநகரங்களில் ஒன்றாக இருந்திருக்கிறது. கோயிலுக்குள் அத்தனை குளங்கள் இருப்பது ஆச்சரியமாக இருந்தது.

முந்தைய கட்டுரைசமணம்,பிரமிள்: கடிதங்கள்
அடுத்த கட்டுரைசோர்வு,ஒருகடிதம்