குஜராத் தலித் எழுச்சி

gujarat-dalit-protest

மத்தியில் பாரதிய ஜனதா அரசு அமைந்ததை இந்தியா முழுக்க உள்ள இந்துத்துவ உதிரிக்கும்பல்கள் தங்களுக்குக் கிடைத்த கட்டற்ற அனுமதியாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஊரிலும் தங்கள் பழைமைவாத வெறியை முன்னெடுக்கிறார்கள். ஒவ்வொரு ஊரிலும் அடிப்படைவாத நோக்கில் அறிஞர்கள்மேல் தாக்குதல்களும், மதக்காழ்ப்புச் செயல்பாடுகளும், சாதிவெறிச் செயல்பாடுகளும் இவர்களால் ஆற்றப்படுகின்றன

நானறிந்தவரை பாரதிய ஜனதாவிலேயே இந்தக் குறுங்குழுக்களின் வெறுப்பரசியலை நிராகரிப்பவர்கள்தான் அதிகம். ஆனால் இவர்களை ‘அடித்தளம்’ என அவர்களில் பலர் எண்ணுகிறார்கள். தேர்தலரசியலில் இவர்களை நம்பியே செயல்படவேண்டுமென நம்புகிறார்கள். உண்மையில் குஜராத்திலேயே கூட இக்குழுக்கள் பாரதிய ஜனதாவுக்கு எதிராகவே தேர்தலில் செயல்பட்டார்கள் என்பதே உண்மை. இவர்களில் அறியப்பட்ட முகங்களாக இருந்த வினய் கட்டியார் போன்ற பலர் ஆர்.எஸ்.எஸ் தலைமையாலேயே ஒதுக்கப்பட்டு அமைதியாக்கப்பட்டுள்ளன

ஆனால் ஊடகங்களுக்கு மட்டும் அல்ல, பாரதிய ஜனதா அபிமானிகளில் கூட பலருக்கு இந்தக் குறுங்குழுக்களே இன்றைய அரசின் முகமாக, இந்துத்துவத்தின் பிரதிநிதியாகத் தெரிகிறது. உண்மையில் இவர்களுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு ஆதரவும், இவர்களின் அத்துமீறல்களைக் கண்டு கண்மூடி அமர்ந்திருக்கும் ஒவ்வொரு தருணமும் இந்தியாவில் பாரதிய ஜனதாவுக்கு குழிபறிக்கிறது என இவர்கள் அறிவதில்லை.

நான்காண்டுகளுக்கு முன்பு நான் எழுதினேன், பாரதிய ஜனதா அரசமைக்கும் என்றால் கூட என்னைப் போன்றவர்கள் அதற்கு வெளியே அதன் கடும் விமர்சகர்களாகவே நிலைகொள்வோம் என. அதையே இன்று என் கடமையாக எண்ணுகிறேன். ஆனால் பலரைபோல வெறும் கட்சியரசியல் நோக்கில் அகப்பட்ட அனைத்தாலும் அரசையும் பாரதிய ஜனதாவையும் தாக்குவது என் வழி அல்ல. நான் அரசியல்வாதியும் அல்ல. இது பண்பாட்டுத்தளம் என்பதனால் மட்டுமே என் பதிவு.

மாட்டை உரித்தார்கள் என்பதற்காக குஜராத்தில் தலித்துக்கள் தாக்கப்பட்டமையும் சரி, அதை பொதுமேடைகளில் ஆதரித்துப்பேசிய இந்துத்துவக் குழுக்களின் வெறுப்புப் பிரச்சாரமும் சரி, இந்தியாவையும் இந்து மதத்தையும் அழிப்பதற்கு மட்டுமே உதவுபவை. இந்தியாவின் ஒருமைச்சமூகத்தில் ஆழ்ந்த பரஸ்பர வெறுப்பை விதைக்கும் இவர்கள் இங்கு குண்டுகளை வைக்கும் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு நிகரான அழிவுச்சக்திகள். வேறு எதற்காகவும் இல்லை என்றாலும் தங்களுக்காகவாவது பாரதிய ஜனதா இந்தக் கும்பலைக் களையெடுத்தாகவேண்டும். வெறும் அறிக்கைகளால் அல்ல, திட்டவட்டமான செயல்களால் தனக்கு இந்தத்தேசமக்களின் ஒற்றுமைமேல், அனைவருக்கும் நிகரான வாழ்வுரிமை அளிக்கவேண்டும் என்னும் கொள்கைமேல் கொண்டுள்ள நம்பிக்கையை நிலைநாட்டியாகவேண்டும்.

பன்மைத்தன்மையே இந்தியாவும் இந்துமதமும். வேதமரபும் வேதமறுப்பு மரபும் நிகரெனக் கலந்ததாகவே இதன் பண்பாடு இருந்தது. மாட்டிறைச்சி உண்ணாதவர்களுக்கு மட்டும் உரியதல்ல இந்த மதம் அல்லது இந்த நாடு. வெவ்வேறு வடிவங்களில் தங்கள் தெய்வங்களை வழிபடும், வெவ்வேறு ஆசாரங்களைக்கொண்ட பலகோடி மக்களின் பெருந்தொகுப்பு இது. வரலாற்றின் ஒரு தருணத்தில் தங்கள் கைகளுக்கு அதிகாரம் வந்துவிட்டதென எண்ணி இதன் தலைமேல் ஏறி அமர்ந்து கீழிருப்பவர்களை மிதித்து வெளியேற்ற முயலும் கும்பல்கள்தான் இன்று அதன் முதன்மை எதிரிகள்.

குஜராத்தில் தலித்துக்களின் எதிர்ப்பு உருவாக்கிய பெரும்எழுச்சி ஒரு சான்று. இனி எங்கும் எளிய ஒற்றைப்படையாக்கல்கள் நிலைகொள்ளாது. ஜனநாயகம் அனைவரையும் அதிகாரம் கொள்ளச் செய்கிறது. அதை கடந்தகாலத்தில் வாழும் சாதி, மதவெறியர்களுக்கு உரைப்பதாக குஜராத்தில் நிகழ்ந்த எதிர்ப்பு மாநாட்டைப்பார்க்கிறேன்

தலித்துக்கள் செத்த மாடுகளை இனிமேல் அகற்றப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்கள். அது முக்கியமான ஒரு போராட்டமுறை என நினைக்கிறேன். ஒத்துழையாமை என காந்தி சொன்னதன் இன்றைய வடிவம். முழுமையாகவே அவர்கள் துப்புரவுப்பணிகளிலிருந்து விலகிச்செல்லவேண்டும் என்றே சொல்லத் துணிவேன். இன்று உடலுழைப்புக்கு நூறு பிற வாய்ப்புகள் உள்ளன. அதுவே அவர்களின் விடுதலைக்கு இன்று முக்கியமானது.

துப்புரவுப்பணிகளைச் செய்ய மனிதர் வேண்டும் ஆனால் அதைச்செய்வதனால் அவர்களை இழிவும்செய்வோம் என்று எண்ணும் கும்பல் தங்கள் கழிவுகளை தாங்களே சுத்தம்செய்யட்டும்.

பிகு

இக்குறிப்பு 3-8-2016 அன்று எழுதப்பட்டது. இன்று 6-8-2016 அன்று வெளிவந்திருக்கும் பிரதமர் மோடியின் இக்குறிப்பை இதனுடன் இணைத்து வாசிக்க்கிறேன்

http://www.msn.com/en-in/news/newsindia/pm-modi-hits-out-at-cow-vigilantes-says-most-cows-die-after-eating-plastic/ar-BBvjO5F?li=AAggbRN&ocid=SK2MDHP

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 19
அடுத்த கட்டுரைஇலங்கை ‘இனப்படுகொலை’ பற்றி…