மனுஷ்யபுத்திரன் -கடிதம்

அன்புள்ள ஜெ,

உயிர்மையில் உங்களைப் பற்றி மனுஷ்யபுத்திரன் ஏளனம் பண்ணி எழுதியிருந்த கட்டுரை என்னை வருத்தத்துக்கு உள்ளாக்கியது. நீங்கள் உயிர்மை என்ற பத்திரிக்கை உருவாகவும் நடக்கவும் என்ன பங்களிப்பு செய்திருக்கிறீகள் என்று உங்கள் வாசகர்களுக்கெல்லாமே தெரியும். பல வருடம் நீங்கள் அதிலே எழுதியிருக்கிறீர்கள். மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறீர்கள். எதற்குமே உங்களுக்கு பணம் ஏதும் வந்திருக்காது. சிறுபத்திரிக்கை வளரட்டும் என்று எழுதியிருக்கிறீர்கள். இப்படி எழுத்தாளர்களை பயன்படுத்தி வளர்ந்த பின்னர் அவர்கள் மேலேயே அவதூறு செய்யவும் வசை பாடவும் அதே இதழைப் பயன்படுத்துவதை என்னவென்று சொல்வது? மனதை மிகவும் பாதித்தது.

சண்முகம்

அன்புள்ள சண்முகம்,

இது பெரும்பாலும் இப்படித்தான் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. பரவாயில்லை. பதினெட்டாண்டுகள் நண்பராகவும் இன்றும் பிரியத்துக்குரிய கவிஞராகவும் இருக்கும் ஒருவருக்கு இப்படி ஒரு கட்டுரை எழுதும் சுதந்திரம்கூட இல்லையா என்ன?

அடிப்பொடிச் சில்லறைகளைக் கொண்டு எழுத வைக்கையிலேயே எரிச்சல் வந்தது. கவிஞனின் வசைதானே. அதுவும் ஒரு கௌரவம் என்றே நம் மரபு சொல்கிறது

அத்துடன் எப்போதும் மன இறுக்கத்தில் இருக்கும் அவருக்கு[ இந்தக் கட்டுரையைக்கூட அந்த மன இறுக்கத்துடனேயே எழுதியிருக்கிறார், அங்கதம் கைகூடவில்லை] இம்மாதிரி சில விஷயங்கள் இளைப்பாறல் அளித்தால் நல்லதுதானே.

அந்த இணைப்பை நீங்கள் அளித்திருக்கலாம். நண்பர்கள் பலர் வாசிக்க ஆசைப்பட்டார்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைசிலம்பு ஒருகடிதம்
அடுத்த கட்டுரைகோதையின் மடியில்…