‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 13

மூன்றாம்காடு : துவைதம்

 [ 1 ]

காலையிளவெயில் எழுவது வரை துவைதவனத்தின் எல்லையில் இருந்த தாபதம் என்னும் சிறிய குகைக்குள் தருமனும் இளையவர்களும் திரௌபதியும் தங்கியிருந்தனர். அவர்களுக்குத் துணையாக வந்த ஏழு சௌனக வேதமாணவர்கள் இரவில் துயிலாமல் காவல்காக்க வழிநடைக் களைப்பால் அவர்கள் ஆழ்ந்து உறங்கினர். அத்துயிலில் தருமன் அம்பு பட்டு அலறும் தனித்த மான் ஒன்றை கனவு கண்டார். பீமன் பிடிகளுடன் முயங்கி நின்றிருக்கும் மதகளிற்றை. அர்ஜுனன் வானில் பறக்கும் வெண்நாரையை. திரௌபதி குகைக்குள் எழும் சிம்ம ஒலியை. அவர்கள் அனைவரும் கேட்டது ஒற்றை ஒலியை. மலைப்பாறை பிளந்து மெல்லச்சரிந்து மண்ணை நோக்கி இழிந்த ஒலி அது.

முதற்கதிர் எழக்கண்டதும் தலைமாணவன் அஸ்வகன் தன் இடையிலிருந்த சங்கை ஊத அந்த ஓங்கார ஒலிகேட்டு தருமன் எழுந்து அமர்ந்து தன் உள்ளங்கைகளை விரித்து நோக்கி “ஓம்” என்று உரைத்தார். பாண்டுவின் பாதங்களை நினைவில் நிறுத்தி தலைவணங்கி கிழக்கு நோக்கி எழுந்தார். தான் கண்ட கனவை நினைவுகூர்ந்தபோது அந்த மானின் நகைப்பொலியாக அது ஏன் நினைவில் எழுகிறது என வியந்தார். நீண்டவழிநடைக் களைப்பை ஆழ்துயில் போக்கியிருந்தமையால் அவர் விழிகளும் ஒளிகொண்டிருந்தன.

அஸ்வகன் “அரசே, இன்னும் அரைநாழிகைத் தொலைவில் உள்ளது துவைதக் காடு. நாம் கிளம்புவோம்” என்றான். தருமன் அழைப்பதற்குள்ளாகவே இளையவர் எழுந்துவிட்டனர். தோள்களை விரித்து கைதூக்கி சோம்பல் முறித்தபடி வெளியே சென்ற பீமன் இலைகளூடாக இறங்கிய பொற்கதிரிழைகளை நோக்கி முகம் மலர்ந்து நின்றான். அர்ஜுனன் அவனருகே சென்று நின்று தன் விரல்களை நெட்டிமுறித்தான். நகுலனும் சகதேவனும் அருகே இருந்த கமுகிலிருந்து உதிர்ந்த பாளைகளை எடுத்து தேர்ச்சியுடன் தொன்னைகளாகக் கோட்டி முள்கொண்டு தைத்தனர்.

தருமன் அவர்களை அறியாது நோக்கி நின்றார். அவர்கள் காட்டுவாழ்க்கைக்கு முழுமையாக பழகிவிட்டிருந்தனர். “ஒவ்வொருநாள் காலையையும் ஒவ்வொரு வடிவில் திரைவிலக்கிக் காட்டும் காட்டிலேயே மானுடன் நிறைவுடன் வாழமுடியும், மூத்தவரே” என்று அர்ஜுனன் ஒருமுறை சொன்னான். “அடுத்தவேளை உணவுக்காக முடிவிலியை நோக்கி அமர்ந்திருக்கும் காட்டுவிலங்கு ஒவ்வொரு நாளும் பிரம்மத்தை அறிகிறது. அந்த முடிவிலியை அஞ்சிய மானுடரால் உருவாக்கப்பட்டவை நகரமும் ஊர்களும். அரசும் படையும் கோட்டையும் கொடியும் எல்லாமே மானுட அச்சத்தின் விளைவுகள். அச்சத்தை வெல்லும் பொருட்டு மானுடன் தவிர்த்தது அறிதலையும்கூடத்தான்.”

காட்டில் அவர்களின் முகங்கள் கொண்ட மலர்வை ஒருபோதும் வேறெங்கும் அவர்கள் அடைந்து தருமன் பார்த்ததில்லை. அரசை, உறவை, கொடிவழியை விட்டுவிட்டு நெடுந்தொலைவு வந்துவிட்டோம் என்பதையே அவர்கள் முற்றிலும் மறந்துவிட்டிருந்தனர். தான் ஒருவன் மட்டுமே அவற்றை நாளும் நினைவுகூர்கிறோம் என்பதை ஒருநாள் தனிமையில் உள்ளுணர்ந்தபோது தருமன் கூசினார். அவ்வாறெனில் தான் மட்டுமே விழைவுடனிருக்கிறோமா? தன்னால் மட்டுமே துறக்கவும் கானேகவும் முடியாமலிருக்கிறதா?

“நகரிலிருக்கையில் எப்போதும் காட்டை எண்ணிக்கொண்டிருந்தவன் நான். இன்று நகரின் எச்சம் கொண்டிருப்பவனும் நான் மட்டுமே” என தருமன் தௌம்யரிடம் சொன்னார். “நீங்கள் அரசர். அவர்கள் வீரர்கள். வீரம் செழிக்குமிடமெல்லாம் அவர்களின் மண். கோல் தழைக்கும் மண் மட்டுமே உங்களுடையது” என்று அவர் மறுமொழி சொன்னார். “அரசே, உங்கள் கைகளால் நீங்கள் அளிக்கவேண்டிய அவிப்பொருட்கள் முன்னரே மண்ணில் பிறந்து விளைந்துவிட்டன. நீங்கள் கொடுக்கவேண்டிய கொடைப்பொருள் எங்கோ திரண்டுவிட்டது. உங்கள் கால்கள் எங்கு வேண்டுமென்றாலும் செல்லலாம். கைகள் அவற்றையே நெருங்கிக் கொண்டிருக்கின்றன.”

அவர்கள் சௌனகக்காடு விட்டு பன்னிரு நாட்களுக்கு முன் கிளம்பினர். சௌனகக்காட்டில் மழைக்காலம் முழுக்க தங்கியிருந்தனர். தருமன் முதன்மைச் சௌனகரிடமிருந்து அவர்களின் வேதப்பயில்முறையை கற்றார். நால்வகை சொல்வைப்புகளைக் கற்கும் முறைக்கு மேல் ஒலியொப்புமுறை ஒன்றை சௌனக மரபு வளர்த்தெடுத்திருந்தது. சொல்லிணைவுகளின் ஒலியொழுங்கை வகுத்து அதன் அடிப்படையில் வேதத்தை இசைவடிவாக ஆக்கிய அம்முறைக்கு சந்தஸ் என்று பெயரிட்டிருந்தனர் அவர்களின் முன்னோர்.

சந்தத்துடன் வேதம்பயில நான்குதிசைக் காடுகளிலிருந்தும் சௌனகத்திற்கு இளமாணாக்கர் அவர்களின் ஆசிரியர்களால் அனுப்பப்பட்டனர். பறவைக் குரல்களிலிருந்தும், விலங்குகளின் நாவுகளிலிருந்தும், நீரின் ஓசைகளிலிருந்தும், காற்று முழக்கங்களிலிருந்தும், இடிக் குமுறல்களிலிருந்தும் அவ்வொலிகள் செவிப்புலனே சித்தமென்றான வேதப்படிவர்களால் மலர்களிலிருந்து தேனீ என துளித்துளியாக திரட்டப்பட்டிருந்தன. அவற்றை முறைவகுத்து இலக்கணப்படுத்தி நெறிகளென்றாக்கியது சௌனக மரபு. காயத்ரி, பிருஹதி, உஷ்ணிக், ஜகதி, திருஷ்டுப்பு, அனுஷ்டுப்பு, பங்தி என்னும் சந்தங்கள் வேதங்களுக்குச் சிறகுகளாயின.

“நதிநீரில் மிதந்துவரும் விதைகள் முளைத்து மரவரிசைகளாகி நதிக்கு கரைவகுப்பதுபோல” என்று அச்செயலை காத்யாயனர் சொன்னார். கரைகொண்ட பெருக்கு விரைவுமிக்கதாகியது. அதன் கிளைகள் பெருகின. அதன் கைவழிகளினூடாக காடு தழைத்தது. சௌனக வேதநிலையில் முப்பொழுதும் சந்தவேதம் ஒலித்துக்கொண்டிருந்தது. அங்கே வாழ்ந்த கிளிகளும் மைனாக்களும் அந்த சந்தத்தில் குரலெழுப்பக் கற்றிருந்தமையால் கேட்கும் ஒலிகளெல்லாம் வேதமென்றாகி செவிநிறைத்தன.

சௌனகம் விட்டுச் செல்ல விருப்பம் என்று ஒருநாள் தருமன் சொன்னபோது காத்யாயனர் புன்னகையுடன் “வேதம் சலித்துவிட்டதா?” என்றார். “இல்லை, ஆசிரியரே. இங்கே நான் நாளும் பொழுதும், சித்தமுணரும்போதும், மயங்கி சின்மயமே எஞ்சும்போதும் வேதத்தில் மூழ்கிக் கிடக்கிறேன். இனிமையில் பிறந்து இனிமையை உண்டு இனிமையில் திளைத்து சிறகு கொள்ளும் தேனீ தேனிலிருந்து விடுபடுவதே இல்லை. தேன் உண்டு தேன் நாடிச் சேர்த்து தேனில் அது மடியும். நான் இதன் மறுபக்கத்தையும் காணவிழைகிறேன்” என்றார்.

காத்யாயனர் அவரை கூர்ந்து நோக்கி “வேதமறுப்பாளர்களை காணவிழைகிறீரா?” என்றார். “ஆம்” என்றார் தருமன். “இதன் மறுபக்கம் என்ன என நான் கற்றாகவேண்டும்.” காத்யாயனர் “அரசே, எங்கள் தரப்பின் எதிர்த்தரப்புகள் இரண்டு. எங்கள் தரப்பின் பெரும்பகுதியை ஏற்று எங்கள் மையத்தை மட்டும் மறுப்பவர்கள் சாந்தீபனி மற்றும் சாந்தோக்ய மரபினர். கௌஷீதகக்காட்டில் அவர்களை நீங்கள் காணலாம். அயலாருக்கு அவர்களும் நாங்களும் ஒன்றே எனத் தோன்றும். ஆனால் ஒற்றைப்புள்ளியிலிருந்து பிரிந்துபிரிந்து வளர்ந்து செல்பவர்கள் என்பதனால் சொல்லச்சொல்ல இடைவெளி மிகுவது அவர்களுடன்தான். ஒருநிலையிலும் நாங்கள் இணைய வாய்ப்பில்லை” என்றார்.

“எங்கள் ஒவ்வொரு சொல்லையும் மறுப்பவர்கள் சார்வாகர்கள். அவர்களை துவைதப்பெருங்காட்டில் நீங்கள் சந்திக்கலாம். ஆனால் நூற்றாண்டுகளாக பேசிப்பேசி அவர்களும் எங்களைப்போலவே ஆகிவிட்டிருக்கின்றனர். உருவிலும் உள்ளிலும் நாங்கள் ஒருவரை ஒருவர் கண்டுகொண்டே இருக்கிறோம். என்றோ எங்கள் பாதைகள் ஒன்றையொன்று தழுவிக்கொள்ளவும் கூடும்” என்றார் காத்யாயனர்.

“யுதிஷ்டிரரே, வேதம் அனைத்தையும் தழுவிச்சூழ்ந்த சொல்வெளி. எனவே வேதமறுப்பும் வேதமே. வேதமறுப்பை வேதமேயென்றாக்கியவர் பிரஹஸ்பதி முனிவர். கணாதர், பரமேஷ்டி, அஜித கேசகம்பளர் என அவர்களின் குருநிரை இன்றும் வல்லமையுடன் இருக்கிறது. சார்வாகம் என்றழைக்கப்படும் பிரஹஸ்பதியின் மெய்மரபைச் சென்று கற்றறியுங்கள். வேதத்தேன் ஊறிய மரத்தின் வேர்ச்செறிவையும் அது நின்றிருக்கும் சேற்றுப்பரப்பையும் உணர்ந்தவர் ஆவீர்” என்றார். “ஆம், நான் விழைவது அதுவே” என்றார் தருமன்.

“இங்கிருந்து இருநூற்றைம்பது காதம் அப்பால் உள்ளது துவைதவனம்” என்றார் காத்யாயனர். “அங்கே இன்று சூரியனின் மைந்தர் பிரஹஸ்பதியால் அமைக்கப்பட்ட தொன்மையான கல்விநிலை உள்ளது. அதன் முதன்மையாசிரியராக பன்னிரண்டாவது கணாதர் அமர்ந்திருக்கிறார். அவரது சொற்கள் உங்கள் எரிக்கு அவியாகுக! எரி எதையும் உண்டு தான் மட்டுமே எஞ்சுவது. சந்தனமும் வேம்பும் அதற்கு நிகரே. எரி திகழ்க!”

அவர்கள் நீராடி உணவுண்டு கிளம்பி துவைதக்காட்டுக்குள் நுழைந்தனர். பிறகாடுகளைப்போலன்றி அங்கே முட்புதர்கள் செறிந்திருந்தன. பசுந்தழைகளுக்கு நடுவே அவை கரந்து கூர்ந்திருந்தன. மரத்தண்டுகளில் சினத்துடன் எழுந்திருந்தன. தளிரிலைவிளிம்புகளில்கூட ஐயத்துடன் சிலிர்த்து நின்றிருந்தன. “நோக்கி நடக்கவேண்டும், அரசே. இங்கே முள்ளில்லாத செடிகளே குறைவு” என்றான் அஸ்வகன். அவனுடன் வந்த சௌனகனாகிய பிங்கலன் “முள்ளில்லாச் செடிகள் கம்பளிப்புழுபோல நச்சுமயிர் கொண்டவை. அவற்றைத் தீண்டிவிடாது நடக்கவேண்டும்” என்றான். குனிந்து ஒரு செடியை சுட்டிக்காட்டி “இச்செடியை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள். செடிகளில் இது நாகம்” என்றான்.

SOLVALAR_KAADU_EPI_13

குனிந்து அதை உற்றுநோக்கிய தருமன் நிமிர்ந்து அஸ்வகனை நோக்கி புன்னகை செய்து “இத்தனை வஞ்சமும் சினமும் செடிகளுக்கு எப்படி வந்தன?” என்றார். “இந்தக் காட்டைப் பாருங்கள், அரசே. இது கஜமஸ்தகம் என்னும் மலைக்குமேல் அமைந்துள்ளது. யானையின் தலைமேல் முடிகள் என ஓரிரு மரங்களே இங்குள்ளன. அவையும் முள்நிறைந்த வேலமரங்கள். பிற மரங்கள் ஆள்மறையும் உயரம் மட்டுமே கொண்டவை. செடிகள் தாள் அளவே தாழ்ந்தவை. இலைகளோ எளியவை. இங்கு இவை உயிர்கொண்டு எழுந்து இலைவிரித்து நிற்பதே ஒரு பெரும் வாழ்க்கைப்போரின் வெற்றி.”

“ஆகவே அவை எதிரிகளை எதிர்நோக்கி எக்கணமும் நின்றுள்ளன. முள்ளையும் நஞ்சையும் இழிமணத்தையும் ஏந்தியிருக்கின்றன” என்று அஸ்வகன் சொன்னான். “மலையுச்சிகளிலேயே இத்தனை கசப்புள்ள இலைகளை காணமுடியும். வேர்முதல் மலர்வரை கசக்கும் செடிகள் இங்குள்ளவை.” பிங்கலன் “நஞ்சும் கசப்பும் கொண்ட அத்தனை செடிகளும் எவ்வகையிலோ மருந்துதான் என்பர் மருத்துவர். எந்நோய்க்கு எப்படி மருந்தாகும் என்று கண்டறிவதே மருத்துவனின் பணி” என்றான்.

“ஆம், இங்குள்ள செடிகளில் பல அருமருந்துகள். நாளும் மூலிகைதேடி இங்கு மருத்துவர் வந்துகொண்டிருக்கிறார்கள். துவைதவனம் தொல்காலத்திலேயே மருந்துமலை என அழைக்கப்பட்டது. முதற்குருவான பிரஹஸ்பதி இங்கே தன் கல்விநிலையை அமைத்ததே இங்கு கிடைக்கும் மருந்துகளுக்காகத்தான். அறிந்திருப்பீர்கள், வேதாங்கமான ஆயுர்வேதத்தை அதன் முதல்குருவான சூரியதேவர் மூவருக்கு கற்பித்தார். மருந்துக்கலையை ஆத்ரேயருக்கும் இடர்நீக்குக்கலையை தன்வந்திரிக்கும் அளித்தபின் இரண்டுக்கும் உரிய நலவாழ்வுக்கலையை தன் மானுடமைந்தனும் அங்கிரீசரின் குருதியில் பிறந்தவருமாகிய பிரஹஸ்பதிக்கு அளித்தார். பிரஹஸ்பதியின் சொல்மரபு மருத்துவத்துடன் இணைந்தே இன்றும் கற்பிக்கப்படுகிறது. அதன் அனைத்துக் கொள்கைகளுக்கும் ஒப்புமையாக மருத்துவமே முன்வைக்கப்படுகிறது.”

தொலைவில் துவைதவனத்தின் மையமாக அமைந்த மகிஷசீர்ஷம் என்னும் பெரும்பாறை தெரியத்தொடங்கியது. அதன் சரிவிலிருந்து ஒழுகியிறங்கிய சிறிய ஓடையின் நீர் உருளைப்பாறைகளில் மோதி உடைந்து ஓசையிட்டு ஓடியது. அதனருகே தறிகளில் கட்டப்பட்டிருந்த பசுக்கள் நீண்ட கயிற்றில் பெரியவட்டங்களாக சுற்றிச்சுற்றிவந்து மேய்ந்தன. அவர்களைக் கண்டதும் ஒரு பசு மூக்கு தூக்கி செவிகோட்டி விழியுருட்டி நோக்கி குரல்கொடுத்தது. உடனே மற்ற பசுக்கள் அனைத்தும் திரும்பி நோக்கின. கன்றுகள் துள்ளி அவர்களை நோக்கி ஓடிவரமுயன்று கயிறு இழுக்க பின்னால் சென்றன.

மரப்பட்டைக் கூரையிடப்பட்ட நூற்றெட்டு சிறிய குடில்களால் ஆனதாக இருந்தது துவைதவனம். அதன் நடுவே கல்விச்சாலையாக பெரிய கொட்டகை அமைந்திருந்தது. அவ்வேளையில் அங்கே மாணவர்கள் எவரும் இருக்கவில்லை. காயும் கனியும் கிழங்கும் தேனும் ஊனும் தேடி அவர்கள் காட்டுக்குள் சென்றிருந்தார்கள். நான்கு மாணவர்கள் விறகைக் கொண்டுவந்து குவித்துவிட்டு திரும்பி அவர்களைப் பார்த்தனர். அஸ்வகன் கைகளைத் தூக்கி அவர்களின் மந்தணச்சொல்லைக் கூவியதும் அவர்களில் ஒருவர் சென்று அங்கிருந்த மணியை முழக்கினார்.

மணியோசை குடில்களின் மேலிருந்த மலையிலிருந்து எழுவதுபோல் தோன்றியது. மலைமடிப்புகளில் இருந்தெல்லாம் பல மாணவர்கள் எட்டிப்பார்த்தனர். மையக்குடிலில் இருந்து பன்னிரு மாணவர்கள் இறங்கி கைகளைக் கூப்பியபடி அவர்களை வரவேற்கும்பொருட்டு அணுகிவந்தனர்.

 

[ 2 ]

துவைதத்தின் இருண்ட காட்டுக்குள் பறவைகள் கூடணைவதில்லை. அவை அங்கு வந்து இரைதேடிவிட்டு மீண்டு சூழ்ந்திருந்த அடிவாரக்காட்டுக்குச் சென்றுவிடுவது வழக்கம். அக்காட்டில் விலங்குகளுமில்லை. ஆகவே அங்கே இரவு ஆழ்ந்த அமைதியுடனிருந்தது. பயில்வறையில் அமர்ந்திருந்த மாணவர்கள் கைகளை கட்டிக்கொண்டு எதிரே நெய்விளக்குகளுக்கு நடுவே மரப்பீடத்தில் அமர்ந்திருந்த கணாதரின் சொற்களை கேட்டுக்கொண்டிருந்தனர். நீண்ட புரிசடைகள் தோளில் தொங்க நுதல்விழி எழுதிய நெற்றியும் வெண்சாம்பல் அணிந்த கரிய சிற்றுடலும் கொண்டிருந்தார் கணாதர். முதுமையில் வற்றி, சுள்ளிகளென்றான கைகள் மடிமேல் கோக்கப்பட்டிருந்தன.

“எங்கள் மெய்மரபின் முதலாசிரியரான பிரஹஸ்பதி முனிவர் அங்கிரீசருக்கு மைந்தராக உதத்யரின் இளையோனாகப் பிறந்தார். சூரியனின் அருளே மைந்தனென வந்தது என்பது அவரைப் பற்றிய நூல்குறிப்பு. இளமையில் அவர் தந்தையிடம் வேதச்சொல் கற்றுத்தேர்ந்தார். பிருகுமுனிவருக்கு கியாதியில் பிறந்த மைந்தர் சுக்ரர் அவருடன் இணைமாணாக்கராக இருந்தார் என்று அவரது வாழ்க்கையைச் சொல்லும் பிரஹஸ்பத்யம் என்னும் நூல் சொல்கிறது.”

“பிரஹஸ்பதி இறவாக்கலையையும் சுக்ரர் இறந்தோரை உயிர்ப்பிக்கும் கலையையும் கற்றுத்தேர்ந்தனர். பிரஹஸ்பதியை தேவர்களின் ஆசிரியர் என்றும் சுக்ரரை அசுரர்களின் ஆசிரியர் என்றும் சொல்கின்றன நூல்கள். மண்வாழ்ந்து நிறைந்தபின் விண்ணேகி வியாழனென்று அமைந்தார் எங்கள் முதலாசிரியர்” என்றார் கணாதர். “வேதம்கற்று வேதம்கடந்து மெய்மையை தொட்டடைந்தார். அவரது சொற்கள் தொல்வேதப்பெருந்தொகையில் எட்டாயிரம் பாடல்களாக இடம்பெற்றிருந்தன. தொகுக்கப்பட்ட நால்வேதங்களில் நூறுபாடல்கள் இன்றுள்ளன.”

“எது முடிவற்ற பொருள்கொண்டதோ, எது எங்கும் பொருள் அளிப்பதோ அதுவே வேதம் என்றார் எங்கள் முதலாசிரியர். அவரது மெய்ச்சொல் அவரது மாணவர் நிரையின் இருபத்தாறாவது பிரஹஸ்பதியால் உலகியலாக விளக்கப்பட்டது. அது பிரஹஸ்பதி சூத்திரங்கள் என்னும் நூல்வடிவில் இன்றுள்ளது. அச்சொல் இருபத்தெட்டாவது பிரஹஸ்பதியால் மெய்யியலாக விளக்கப்பட்டது. அது பிரஹஸ்பதி ரகசியம் என்னும் நூலாக மறைபொருள் நாடுநரால் மட்டும் பயிலப்படுகிறது.”

“இது மெய்மையின் சொல்வடிவம். அதோ அந்தப் பாறைகளைப்போல பருவடிவம் கொண்டது. இந்த ஒளியைப்போல அனைத்தையும் துலங்கச்செய்வது. காற்றைப்போல மூச்சாவது. நீரைப்போல அமுதாவது. அரசே, மொழியிலமைந்த அறிவுகளில் பொய்கள் உண்டு. பிழைகள் உண்டு. குறைகளும் உண்டு. நிறைமெய்யை அவற்றிலிருந்து பிரித்தறிவது எப்படி? நூறு சொற்கோள் முறைகளைக் கற்றாலும் தெளிவு கிடைப்பதில்லை. ஆயிரம் ஆசிரியர்களை அணுகினாலும் மாறாவிடையை அடையமுடிவதில்லை.”

“வழி ஒன்றே. விடாயே நீர் தேடிச்செல்வதற்கு சிறந்த வழிகாட்டி. பிற அனைத்தும் நீரிலிருந்து நம்மை விலக்குபவையே. அவை அழகிய சொற்களாக இருக்கலாம். தெளிவான சொல்முறைகளாக இருக்கலாம். நீரை அடையவைக்கும் வழியே உண்மையானது. நீரே வழியை மதிப்புக்குரியதாக்குகிறது. அரசே, ஐம்புலன்களுக்கும் உள்ளத்திற்கும் அறிவுக்கும் அகப்படுவதே முதன்மை மெய்மை எனப்படும். பிற அனைத்தும் அந்த மெய்மைக்குமேல் ஏறி நின்றிருப்பவை. முதல் மெய்மை நிலம் போன்றது. வானில் பறக்கும் ஒன்றைக்கூட மண்ணில் எம்பிச்சென்றே பற்ற முடியும். பற்றியபின் மண்ணுக்கே மீள்தலும் வேண்டும். மண்ணில் நின்றிருக்கும் அறிவையே பிரஹஸ்பத்யம் என்கிறோம். அதை எங்கள் மறுப்பாளர்கள் சார்வாகம் என்பதுண்டு.”

தருமன் வணங்கி “அறிவரே, நான் முன்பிருந்த சௌனக குருகுலத்தில் என்னிடம் வேதநெறிப்படி நான் ஆற்றவேண்டியதென்ன என்று சொல்லப்பட்டது. என் தோழர்களைத் திரட்டி இறுதிப்படைக்கலத்தையும் ஏந்தி படைகொண்டுசென்று எதிரிகளை வென்று எனக்குரிய மண்ணை வென்று ஆளவேண்டும் என்றும், வேதச்சொல் வாழ ஆளவேண்டும் என்றும், என் முடியறத்தை நான் பேணினால் என் தனியறத்தை தெய்வங்கள் ஏற்கும் என்றும் கூறினர். உங்கள் நெறி என்ன சொல்கிறது என்று அறிய விழைகிறேன்” என்றார்.

“அரசே, நீ நெறிதேடி இங்கு வந்திருப்பதே உன்னால் இப்போது போர்புரிய முடியாதென்பதனால்தான். உன்னிடம் படைவல்லமை இருந்திருந்தால் நெறியென்ன என்று உசாவமாட்டாய், நெறியமைத்து உன்னைக் காக்கும் அறிஞர்களை சூழ வைத்திருப்பாய். மண்ணில் மானுடர் உருக்கொண்ட நாள்முதல் இன்றுவரை இங்கே வென்றது வல்லமை. வென்றதனாலேயே அது வெல்லத்தக்கது. வெல்லத்தக்கது வெல்லும் என்ற நெறியினாலேயே பிறிதொன்று எண்ணத்தேவையில்லை. சிம்மம் உகிர்களால், கழுகு சிறகுகளால், நாகம் நச்சால், அரசன் படையால், அறிவன் சொல்லால் வெல்கிறான். துலாவின் தட்டு எடையுள்ள பக்கம் தாழ்கிறது, அதை முடிவுசெய்யும் ஆற்றல் துலாமுள்ளுக்கில்லை என்றுணர்க!”

“அரசை வென்று நீ அறம்காக்கவேண்டும் என்றில்லை. புறவயமானதே இருப்பு எனப்படும். அகவயமானது உருவகமே. அறம் என்பது நீ உணர்வது, அறிவர் வகுத்தது, சொல்லில் இருப்பது, அமைச்சர்களால் விளக்கப்படுவது. நெறியோ புறவயமானது. அது அத்தருணத்தில் அங்குள்ள துலாத்தட்டுகளுக்கு நடுவே நிகர்நிலை என உருவாகி எழுந்து வருவது. நெறியைப் பேணுக! அது உன்னைப் பேணும். அரசன் பெறும் வரிக்கும் அவன் அளிக்கும் கொடைக்கும் நடுவே நின்றுள்ளது துலாமுள். உன் அமைச்சர்களுக்கும் உனக்கும் நடுவே, உன் குடிகளுக்கும் கோலுக்கும் நடுவே, உன் உறவுகளுக்கும் அரசக்கடமைகளுக்கும் நடுவே, உன் படைவல்லமைக்கும் வணிகவல்லமைக்கும் நடுவே, உன் எதிரிகளுக்கு நடுவே என்றும் நின்றுகொண்டிருக்கும் துலாமுள்ளைப் பேணுக! அதுவே உன்னை நிலைநிறுத்தும் விசை.”

“தெய்வங்கள் அல்ல, கண்காணா அறமும் அல்ல, மூதாதையர் சொல் அல்ல, சூதர் சொல்லும் புகழுரைகளும் அல்ல, துலாதேரும் தெளிவே அரசனை வெல்லச்செய்கிறது. அந்தத் தெளிவை அடைந்த மன்னனே ஐயமின்றி நாடாள்பவன். அதைத்தான் எங்கள் மெய்மரபைச் சேர்ந்த மாமுனிவர் ஜாபாலி தசரதராமனின் அவையில் நின்று உரைத்தார். அரசமுனிவராகிய ஜனகர் மன்னர்கள் கற்கவேண்டிய மெய்நூல்களில் முதன்மையானது சார்வாகமே என்று உரைத்ததும் அதனால்தான். மண்ணாள்பவன் மண்ணில் காலூன்றி நின்றாகவேண்டும்” என்றார் கணாதர். “அரசே, எளிய சொல் இதுவே. நீ மக்களை வருத்தினால் உன்னை மக்கள் வருத்துவர். நீ எதிரியிடம் பொறுத்தருளினால் உன்னிடம் எதிரி பொறுத்தருள்வான். நீ அளிப்பதே திரும்பி வரும். சிறந்த விதைகளுடன் நிலமிறங்கும் உழவன் கதிர்க்குலை சுமந்து இல்லம் திரும்புவான்.”

தருமன் “தங்கள் சொல்லுக்கும் நால்வேதச் சொல்லுக்கும் வேறுபாடு பெரிதில்லை என்று எண்ணுகிறேன்” என்றார். “ஆம், எங்கள் சொல்லே தொல்வேதம். நால்வேதமென எழுந்தது எங்கள் விழுதுகளில் ஒன்றே” என்றார் கணாதர். “ஒரு தொல்கதை உள்ளது. எங்கள் முதல்குரு பிரஹஸ்பதி தன் தமையன் உதத்யருடன் ஒற்றைக்குடிலில் வாழ்ந்தபோது தமையனின் துணைவி மமதை கருவுற்றாள். அக்குழவி கருவிலேயே வேதச்சொல் கற்றுத்தேர்ந்தது. ஒருநாள் தனியறைக்குள் மமதை துயின்றுகொண்டிருப்பதை பிரஹஸ்பதி கண்டார். ஆனால் மெல்லியகுரலில் வேதச்சொல் ஒலித்துகொண்டிருந்தது. அவர் உள்ளே சென்று அதை செவிமடுத்தார். அது கருவிலிருக்கும் குழவியின் சொல் என்று கண்டார். குனிந்து அவள் வயிற்றில் செவிவைத்து அதன் குரலை கேட்டார்.

“குழவி பாடிய வரிகள் இன்றும் வேதத்தில் உள்ளவை” என்றார் கணாதர். அவர் கண்காட்ட ஒரு மாணவன் அவ்வரிகளை பாடினான்

“நாளின் சுழற்சி என்னை சோர்வுறச் செய்யாதிருக்கட்டும்.
நெருப்பு என்னை எரிக்கலாகாது.
என் வேள்விக்குளம் மண்மூடிப்போகலாகாது.
நீர் என்னை விழுங்காமலாகுக!
ஆம், அவ்வாறே ஆகுக!”

“அம்மைந்தன் தன் சிறிய கைகளால் கருவறைக்குருதியை அள்ளி தன் தொப்புளுக்குக் கீழே எரிந்த மூலாதாரக்கனலில் விட்டு அவியாக்கி வேள்வியை செய்துகொண்டிருந்தான். மமதையின் உள்ளத்தில் குடிகொண்டு அமரமருத்துவர்களான அஸ்வினிதேவர்கள் அதை கேட்டுக்கொண்டிருந்தனர்” என்றார் கணாதர். “அது உயிரின் பெருவிழைவு என்று உணர்ந்த பிரஹஸ்பதி உரத்தகுரலில் மைந்தா, நில்! அழிவின்மை மானுடர் எவருக்கும் உரியதல்ல என்றார். அக்குழவி விலகுங்கள், தந்தையே! நான் வென்று செல்ல, தடையின்றி பெருக, என்றுமிருக்க விழைகிறேன். விழைவே வேதம் என்றது.”

“விழியற்ற விழைவு அது. மறுதுலாவால் நிகர்செய்யப்படாத எதுவும் அழிவே என்று பிரஹஸ்பதி சொன்னார். அதை நான் அறியவேண்டியதில்லை, வேதம் என் கையின் வெல்லமுடியாத படைக்கலம் என்றது குழந்தை. விழைவுமட்டுமேயான வேதமும் விழியற்றதே என்று பிரஹஸ்பதி சினத்துடன் சொன்னார். அவ்விழியின்மையே உன் மறுதுலாத்தட்டாக ஆகுக! என்றார். அம்மைந்தன் விழியிழந்தவனாகப் பிறந்தான். அவனை தீர்க்கதமஸ் என்றனர்.”

“அங்கம் வங்கம் கலிங்கம் சுங்கம் புண்டரம் என்னும் ஐந்து நாடுகளின் முதலரசர்களை ஈன்றவர். கோதமரின் தந்தை என அவரை நூல்கள் சொல்கின்றன” என்றார் தருமன். “அவை பின்னாளில் சூதர்கள் புனைந்த கதைகளாக இருக்கலாம். தீர்க்கதமஸ் வேதமுனிவர். கட்டற்ற மூலாதாரப் பேராற்றலின் மானுடவடிவம். ஆகவே அவரை பெருந்தந்தை என்று வழிபடுகின்றன ஆரண்யகங்கள்” என்று கணாதர் சொன்னார். “கட்டில்லா பெருவிழைவையே தொல்வேதம் என்றனர். தீர்க்கதமஸ் அவ்வேதத்தின் ஆசிரியர்களில் ஒருவர்.”

“அரசே, அன்னம் செயலற்றது. ஏனென்றால் அது விழைவற்றது. அன்னத்தில் விழைவென எழுந்ததே முதல் உயிர். அன்னத்தில் ஏறி அதை ஆட்டுவிக்கிறது அது. வளர்க்கிறது, வாழச்செய்கிறது, கொல்கிறது, உண்கிறது. அவ்வுயிர் விழைவை மட்டும் வழுத்துவதே வேதம். அவ்வுயிர் ஏறிய அன்னத்தையும் வழுத்துவதே சார்வாகம்” என கணாதர் சொன்னார். “அன்னம் தன்னளவில் முழுமையானது. நிலநீர்வளியொளிவிசும்பெனும் ஐந்து பெரும்பருக்களாக தன்னை நமக்குக் காட்டுகிறது. நிகரெதிர்நேர் நிலைகள் எனும் மூன்று இயல்புகளாக இங்கு திகழ்கிறது. என்றும் அழியாதது. தன்னுள் காலத்தை நிகழ்த்திக்கொண்ட பின்னரும் காலத்துக்கு அப்பால் என்றுமென இருப்பது.”

“அன்னத்தை செயல்படச் செய்கிறது உயிர். அன்னமே உயிரைப் பேணுகிறது. அன்னமில்லாத உயிருக்கு இருப்பில்லை. சொல்லின்றி பொருள் நிலைகொள்ள முடியாது. அன்னத்தின் இயல்பென்றே உயிரையும் மானுடர் அறியமுடியும். ஆகவே, அன்னமே முதன்மையானது. எங்கள் நிலைபாட்டை அன்னவாதம் என்றே அறிஞர் அழைக்கிறார்கள்” என்றார் கணாதர். “சௌனக நெறியின் தொல்குரு தீர்க்கதமஸ். நாங்கள் அவர்களுடன் வேறுபடும் இடம் இதுவே.”

“அவர்கள் சொல்வதும் நாங்கள் ஆற்றுப்படுத்துவதும் ஒரே வழியைத்தான். ஏனென்றால் எங்களிடையே இருப்பது மிகச்சிறிய வேறுபாடு மட்டுமே” என்று கணாதர் தொடர்ந்தார். “அவர்கள் பருப்பொருளாக நிறைந்துள்ள இவ்வுலகை, இயக்கவிசைகளை முற்றிலும் தவிர்த்து உள்ளமைந்த அறமென்னும் அருவை மட்டுமே பேசுகிறார்கள். நாங்கள் இப்பருவுலகை, இதன் முறைமையை முன்வைக்கிறோம். உலகியல் வல்லமையை அடைக! உலக நலன்களைப் பேணுக! உலகம் உன்னைப் பேணும்.”

தருமன் பெருமூச்சுடன் கைகூப்பினார். “அரசே, அவர்களின் வேதநெறி அனலை வழிபடுகிறது. அனலை விண்ணிறங்கிய தெய்வமென்று காட்டுகிறது. அனலை ஓம்ப உனக்கு ஆணையிடுகிறது. சார்வாகம் அனலென்பது விறகின் ஒரு நிலையே என உனக்குச் சொல்கிறது. விறகை வளர்க்கவும் பேணவும் ஆற்றுப்படுத்துகிறது. நலம் சூழ்க!” கணாதர் கைகூப்ப அவரது மாணவர்கள் ஓங்கார ஒலி எழுப்பினர்.

முந்தைய கட்டுரைஇசை,டி.எம்.கிருஷ்ணா – கார்த்திக்
அடுத்த கட்டுரைகபாலியும் தலித் அரசியலும்