பண்பாட்டுக்கு மேலிருக்கும் பருந்துகள்

1

வணக்கம்.

உங்களின் டி எம் கிருஷ்ணா பதிவு மிகவும் ஏற்புடையதாகப்பட்டது எனக்கு.  எதிர்பார்த்தபடியே அநேக பேர் புரிந்துகொள்ளவில்லை. என்னுடைய சிந்தனைக்கு ஒத்திசைவாக இருந்தது உங்கள் எழுத்து. நானும் என் கருத்தை வேறொரு கோணத்தில் பதிவு செய்தேன், நாலைந்து பேர் தவிர ஒருவரும் வாசிக்கவில்லை. ஏதோ ஒரு Tabooவைத் தகர்த்தெறிந்த சாதனை மாதிரி கொண்டாடுகிறார்கள். ஒரு மரக்கதவை உடைத்தெறிந்தால் போதுமா? இதுக்குப் பின்னால், பதினாறாயிரம் இரும்புக்கதவுகள் இருக்கின்றன. ஹ்ம்ம்ம்ம்ம்

நேரம் கிடைத்தால் என்னுடைய பதிவைப் படிக்கவும்.

நன்றி

ஸ்ரீனிவாசன்

என்னுடைய பதிவு கீழே

Nothing Can Bind Us Together Quite Like Music – Part 2

டி எம் கிருஷ்ணா எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிக்கு தாராளமாக ஆதரவு கொடுத்திருப்பேன். ஆனால் ஹிண்டுவில் அவர் எழுதுவது எல்லாமே சின்ன சின்ன ஆசைகள் மாதிரி தான். சரி, அப்படி ஆசைப்படறதுக்குக் கூட ஆட்கள் இல்லை. அதனால் முழுவதும் ஏற்றுக்கொள்ள முடியுமா? எனக்கும் கூட 12 பார் ப்ளூஸ் எல்லாருக்கும் கற்றுக்கொடுக்க ஆசை தான். ((சேரியில் போய் என்று அடையாளப்படுத்திக்க விரும்பவில்லை, ஆர்வமுள்ள எல்லோருக்கும் பொதுவானது இசை)) என்னோட எதிர்கால திட்டங்கள்ல ஒன்று அது. ஸோ, இதுக்கு அப்புறமாவது, அவருக்கு ஆதரவு பெருகி நிறைய மாற்றங்கள் நடந்தால் நல்லதே.

அப்புறம் டி எம் கிருஷ்ணா என்னை விட பல மடங்கு உயர்ந்தவர் என்பதில் சந்தேகமே கிடையாது. பேசிக்கொண்டிருப்பவர்களை விட ஒரு விஷயத்தை சிறிய அளவிலாவது செய்பவர்களே சாதனையாளர்கள். இந்தக் கோட்பாட்டின்படி ஹிப் ஹாப் தமிழாவை ஆதரிக்க முடியுமா?

கர்னாடக சங்கீதத்தில் எனக்கு கேள்வி ஞானம் மட்டும் தான்.

Fundamental Research என்று ஒரு வகை இருக்குறது. James Clark Maxwell செய்த ஆராய்ச்சிகள் இன்னிக்கு அளப்பரிய வளர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. அவரின் பங்களிப்பில்லாமல் கம்ப்யூட்டர்ஸ், இன்டர்நெட், பேஸ்புக் என்று எதுவுமே இருந்திருக்க வாய்ப்பில்லை என்று Mark zuckerberg சொல்கிறார். எனக்கு இந்த ஏரியா மீது ஒரு ஈர்ப்பு எப்போதுமே உண்டு. அப்புறம் Applied Science. டி எம் கே பண்ணுவது இதைத் தான். அந்த இடத்துக்கு வருவதற்கு ஏகப்பட்ட Fundamental Research தேவைப்படுகிறது, நாம் அவையெல்லாம் செய்துவிட்டோமா ?

எல்லோரையும் போல் என்னாலும் கர்னாடக சங்கீத்தை இலகுவாக ரசிக்க முடியவில்லை. இதே போல் வெஸ்டர்ன் க்ளாசிக்ஸ். நேர்மையாகச் சொன்னால். பாக், பீத்தோவன் அவ்வளவு சுலபமாக ரசிக்க முடியவில்லை. ஆனால் கற்றுக் கொள்வது எளிமையாக இருக்கிறது, ஏன்? கர்னாடக சங்கீதம் ஒரு குறிப்பிட்ட வகையினரிடமிருந்து வெளியே வரவேண்டும், அது ஏற்புடைய கருத்து தான். அதையும் மீறி ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.

முதலில் கர்னாடக இசை நம்முடைய கல்ச்சுரல் சிஸ்டத்திலிருந்து வெளியே வந்து Curriculum ஆக அமைய வேண்டும். தொன்மையான பாரம்பரிய இசை இந்த இசை. எவ்வளவு பேர் ஒரு கர்னாடக இசை பாடலைப் பொறுமையாகக் கேட்கிறோம். நாம் எப்போது கடைசியாக ஒரு கர்னாடக இசைப் பாடலைக் கேட்டோம் என்று யோசித்துப் பாருங்கள். விடை கிடைக்கும், இப்போது நடந்திருக்கும் டி எம் கேவைத் தாண்டி யோசிக்க வேண்டும், பொதுவாக நாம் எப்படி கர்னாடக இசையை பார்க்கிறோம், ரசிக்கிறோம், ஏன் ரசிக்க முடிவதில்லை, ரசனை பரவலாக உருவாக யார் முனைகிறார்களோ அவர்கள் தான் எனக்கு முக்கியமாகத் தெரிகிறார்கள்.

சஞ்சய் சுப்பிரமணியன் ஒரு பேட்டியில் இவ்வாறு சொல்கிறார்

“கர்னாடக இசைத் துறை என்பது ஆர்கனைஸ்டு செக்டார் கிடையாது.ஏதோ சில சபாக்கள் சேர்ந்து சில காரியங்களைச் செய்துவருகின்றன. அவ்வளவுதான். இதற்குப் போய் உள்ளே வரலாமா, வரக் கூடாதா, கோர்ட்டில் கேஸ் போடலாமா என்றெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை.”

அவ்வளவு தான், லாபி, கூஜா என்று எல்லா இடத்திலும் தான் இருக்கிறது.

ரமேஷ் விநாயகம் உருவாக்கிய கமகா பாக்ஸ் பற்றி கேள்விப்பட்டிருக்கீர்களா? அவருடைய இருபத்தைந்து வருட ஆராய்ச்சியின் பலன். இது என்ன என்று தெரிந்துகொள்ள

http://www.rameshvinayakam.com/research/

http://timesofindia.indiatimes.com/…/articleshow/8814474.cms

இது தான் என்னைப்பொருத்தவரை ஒரு முக்கியமான Breakthrough.

“Isn’t it a bit unfair that Western music is able to pen down every note on paper while Carnatic music can’t?”

வாய்ப்பாட்டு வடிவமாகத் தான் இருக்கிறது. எல்லோரும் இந்த இசை வடிவத்தை புரிந்து கொள்வதற்கு ஒரு டூல் வேண்டும், திருக்குறளுக்கு எழுதிய பல்வேறு உரைகள் மாதிரி. இன்னும் இன்னும் இன்னும் இன்னும் இன்னும் இன்னும் இன்னும் எவ்வளவு எளிமைப் படுத்த முடியும், இப்படி யோசித்தால் தான் அனைவருக்கும் ஒரு நன்னாளில் சென்று சேரும், வெறும் கனவு தேறாது. குழந்தைகளுக்கு ரைம்ஸ் எல்லாம் புத்தகத்திலிருந்து பென் ட்ரைவுக்கு போய் விட்ட சூழலில் ஒரு விஷயம் சென்று சேரும் கேப்ஸ்யூல் வடிவம் ரொம்ப ரொம்ப முக்கியம். இந்த முயற்சியால் வெளிநாட்டவர்களும் நம்முடைய இசையை எளிதில் புரிந்து கொள்ளலாம். கமகம் தான் நம்முடைய இசையை தனித்துக் காட்டுகிறது, அதே சமயத்தில் கடினமாக்குகிறது. இது இன்னும் எளிமைப் படுத்தப்பட்டு பள்ளிகளில் ஹிந்தி, சமஸ்கிருதம் மாதிரி ஆப்ஷனல் கோர்ஸாக முதலில் வைத்து ……………………நடக்கவேண்டிய விஷயங்களை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது .

கடைசியாக, இந்த இசை வடிவம் வளர்வதற்கு Musicologists பங்கேற்பு வேண்டும். ஏகப்பட்ட விஷயங்கள் தோண்டி எடுக்கப் படவேண்டும். எங்க, இங்கே Ph.d வாங்குவது ஒரு ஜெராக்ஸ் எடுப்பது மாதிரி, என்னவொன்று கொஞ்சம் காஸ்டலியான ஜெராக்ஸ்.”மாப்ள , ஒரு வருஷத்துல Ph.d முடிச்சிருவாப்ல, சம்பள ஸ்கேல் உயர்ந்துவிடும்” என்று உறுதியளித்து கல்யாணம் முடிப்பது, 5L 10L என்று பேரம் பேசுவது என்று Ph.d பற்றி நிறைய கதைகள் இருக்கின்றன.

இந்த வீடியோ பார்த்தீர்களானால் எவ்வளவு ஒரு உயர்வான இசையை நாம் இழக்கிறோம் என்று தெரியும். நான் கஷ்டப்பட்டு ஜாஸ் கற்றுக்கொண்டு வருகிறேன். ஏன்,எனக்கு கர்னாடிக் கற்றுக்கொள்ள தயக்கம் இருக்கிறது? சிறு வயது முதல் கர்னாடக சங்கீதம் கேட்டு வளர்ந்த ஐயங்கார் தான் நான்.

இன்னும் கேள்விகள் எவ்வளவோ இருக்கின்றன.

விடை தேடும் முன்

நாம் தான் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு விடுகிறோமே, நானும் இதில் அடக்கம்

https://www.youtube.com/watch?v=gFxSOS1p3IE
https://www.facebook.com/srinivasan.rengarajan.9/posts/1249892451688151

 

அன்புள்ள ஸ்ரீனிவாசன்

 

முக்கியமான பதிவு. மிக்க நன்றி.

 

நான் சொல்லவருவது மிக எளியது. சமூகப்பணியின் தளத்தில் ஏதாவது ஒன்றைச் செய்து காட்டுவது என்பது மிகக்கடினம். ஏனென்றால் நாம் செய்யவிழைவதற்கு எதிர்விசை அங்கே இருக்கும். அதை நாம் எப்படி வெல்கிறோம் என்பதே முக்கியம். களப்பணி செய்யும் ஒவ்வொருவரிடமும் அதைப்பற்றிச் சொல்ல ஏராளமாக இருக்கும். சோர்வுறும், நம்பிக்கை இழக்கும் தருணங்கள். அதையெல்லாம் வென்று எழுபவர்கள் சாதனையாளர்கள். அவர்கள் நம் வழிபாட்டுக்குரியவர்கள்

 

பண்பாட்டுச்செயல்பாடுகளிலும் அப்படியே. அங்கே ஒரு தூலமான மாற்றத்தை உருவாக்குவது மிகமிகக் கடினம். ஒரு முழுவாழ்நாளும் பணியாற்றியபின்னரே மிகச்சிறிய ஒரு வெற்றி நாலுபேர் கண்ணுக்குத்தெரியும். விருதுகள் என்பவை அவற்றை அடையாளப்படுத்தி, சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவருவதற்காக நிபுணர்களால் செய்யப்படுபவை.முகநூலில் பேசிக்கொண்டிருப்பதையே சமூகப்பணியாக, பண்பாட்டு நடவடிக்கையாக எண்ணிக்கொண்டிருப்பவர்களுக்கு நான் சொல்வது புரியாது.

 

இச்சூழலில் பணி என எதையுமே செய்யாமல், உண்மையில் என்ன சிக்கல் இருக்கிறதென்றே அறியாமல். வரலாறோ பின்புலமோ புரியாமல் வெறும்  கருத்துக்களை மட்டும் ஊடகங்களில் அரைகுறையாகச் சொல்லிவிட்டு, அதையே பணியெனக் காட்டி விருதுகளை ஒருவர் பெற்றுச்செல்வதென்பது ஒரு பண்பாட்டுச்சூழலை மாசுபடுத்துவது. உண்மையான பங்களிப்பை அவமதிப்பது.

 

நான் டி.எம்.கிருஷ்ணா பற்றி எழுதிய மனநிலை வேறு. ஞானக்கூத்தன் இறந்த செய்தி வந்தது. அவர் ஒரு கவிஞர் என்பதற்குமேலாக தமிழ் நவீனத்துவத்தின் சிற்பி. தொல்மரபு கொண்ட ஒரு சமூகத்தை நோக்கி நவீனத்துவ நோக்கை முன்வைத்தவர். அதற்காக அவர்கள் ஒரு காலகட்டத்தில் ஒரு சிறு குழுவாகச் செயல்பட்டனர். கசடதபற, ழ, மையம் என அவர்களின் சிற்றிதழ்கள் பல. அவர்கள் பிடிவாதமாக கூட்டங்கள் நடத்தினர்.

 

பலர் கவிஞர்கள்.   ஒருவர் நாடகம் பக்கமாகச் சென்றார். ஒருவர் விமர்சகர் ஆனார். பலர் இதழியலில் புகுந்தனர். அவர்கள் ஆழமான செல்வாக்கை நம் மொழியில் செலுத்தினர். உண்மையில் நாம் புழங்கும் இன்றைய செய்திமொழியில், முகநூல் மொழியில்கூட அவர்களின் பங்களிப்பு உண்டு.

 

அவரது இறுதிநாளில் அஞ்சலிக்கு மிகச்சிறிய கூட்டமாக அமைந்துவிடக்கூடாதே என்னும் பதற்றம் எனக்கிருந்தது. இங்கே அன்று இணையம் வேலைசெய்யவில்லை. தொலைபேசியில் நண்பரை அழைத்து அஞ்சலிக்குறிப்பைச் சொல்லி அதை பதிவேற்றினேன். ஒரு பத்துபேராவது அஞ்சலிக்குச் செல்லவேண்டுமென கோரினேன்.ஆனால் கணிசமானவர்கள் அலுவலகம் சென்றுவிட்டனர். சென்னையில் இன்று அலுவலகங்கள் பெரும்பாலும் புறநகரில் உள்ளன

 

ஒவ்வொருவருக்காக தொலைபேசி அழைப்பு செய்து அஞ்சலிக்குச் செல்லும்படி கோரினேன். ஒருவழியாக ஏழுபேர் சென்றனர். மொத்தம் அங்கே வந்தவர்களே முப்பதுக்குள் என அறிந்தேன். நடுவே இந்த விருதுச்செய்தியைப் பார்த்தேன். இங்கே உண்மையான பண்பாட்டுச்செயல்பாடு எப்படி எந்தத் தளத்தில் நிகழ்கிறது, பணம் ஊடகவல்லமை ஆகியவற்றினூடாக போலிக்கூச்சல் எந்த இடம்வரைச் சென்று நின்றிருக்கமுடிகிறது என்ற காட்சி ஆங்காரத்தை எழுப்பியது.

 

இங்கு ஒரு பெரும் பண்பாட்டியக்கம் நிகழ்ந்துள்ளது, நிகழ்கிறது. எதையுமே அறியாமல் நம் தலைக்குமேல் தேவர்களைப்போல ஒரு கூட்டம் அமர்ந்திருக்கிறது. சேரிக்குச் சென்று இருபதுபேரை கூட்டி நான்கு நிகழ்ச்சி, ஒரு அசட்டு ஆங்கிலப் புத்தகம், போதும் – மகஸேஸே என்ன, அதற்கும் மேலே செல்லமுடியும். எதிர்க்கவேண்டிய ஒரு தரப்பு அல்ல இது. அருவருக்கவேண்டிய ஒர் உலகம். சுரணையுள்ளவர்களுக்கு நான் சொல்வது புரியும்.

 

மரபிசையை  ‘முதல்முறையாக’ மக்களிடையே கொண்டுசென்ற சாதனைக்ககா சர்வதேசப்புகழ் பெற்ற விருதை வாங்கி டி எம் கிருஷ்ணா நின்ற அதே நாளில் நான் நினைவுகூர்ந்த ஞானக்கூத்தன் தமிழரசு இயக்கத்திலும், தமிழிசை இயக்கத்திலும் தீவிரமாகச் செயல்பட்ட ஒரு முன்னோடி. அந்த முரண்பாடே என்னை எழுதவைத்தது

 

பல ஆண்டுகளுக்கு முன்னால் ஞானக்கூத்தன் கசடதபற முதல் இதழில் எழுதினார்

 

“வாசன் மகனுக்கென்றால் அச்சுப்பொறிகள் அடிக்குமோ?

முத்துசாமி முதலியோர் சொன்னால் மாட்டென் என்று மறுக்குமோ” .

 

தமிழை எங்கே நிறுத்தலாம் என்னும் அந்தப்புகழ்பெற்ற கவிதையின் மனநிலையே நான் எழுதியது. கண்ணுக்குத்தெரியாமல் நடக்கும் உண்மையான பண்பாட்டுப்பணியின் எதிர்வினை இது.

 

ஜெ

முந்தைய கட்டுரைஇசையை அறிதல்
அடுத்த கட்டுரைஇசை, டி எம் கிருஷ்ணா -கடிதங்கள்