இசையை அறிதல்

images (1)

ஜெ,

நீங்கள் அடிக்கடி இசையைப்பற்றி பெரிய அறிதல் இல்லாதவர் என உங்களைச் சொல்லிக்கொள்கிறீர்கள். பெரும்பாலான கட்டுரைகளில் இந்த டிஸ்கிளெய்மர் உள்ளது. ஆனால் இப்போது டி.எம்.கிருஷ்ணாவைப்பற்றி இப்படி கடுமையான ஒரு மதிப்பீட்டை முன்வைத்திருக்கிறீர்கள். இதைப்பற்றி இன்று ஒருசாரார் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். உங்கள் நண்பர் ஜடாயு கடுமையாக எழுதியிருக்கிறார்

உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.

அருண்

***

அன்புள்ள அருண்,

பெரும்பாலான இசைவிவாதங்கள் இங்கே ராக நுட்பங்களை, அதாவது அதில் போடப்படும் சங்கதிகளையும் பிடிகளையும், சார்ந்தே நிகழ்கின்றன. சொல்லப்போனால் ராகங்களைக் கண்டுபிடிப்பதும் விரல்விட்டு சுவரங்களை எண்ணிப்பார்ப்பதுமே ரசனை என்று சொல்லப்படுகிறது. அந்த உலகில் நான் இல்லை என்பதற்கான அறிவிப்பு அது. இக்காரணத்தாலேயே நான் இசைபற்றிய எந்த நுட்ப விவாதங்களிலும் பங்கெடுப்பதில்லை.

ஆனால் தமிழின் இசைமரபு, வரலாறு பற்றி இருபதாண்டுக்காலமாக வாசித்து வருகிறேன் .விவாதித்தும் எழுதியும் வருகிறேன். அத்துறை முன்னோடிகளை பேட்டி எடுத்திருக்கிறேன். அது நான் பொதுவாக ஈடுபாடுகொண்டுள்ள பண்பாட்டு விவாதத்தின் ஒரு பகுதி.

இசைகேட்பதற்குண்டான ஆரம்பப் பயிற்சிகளுக்குப்பின் இசைகேட்க ஆரம்பித்த காலகட்டத்தில் ராகங்களை முழுமையாக அறிந்துகொள்ளவேண்டுமென விரும்பியதுண்டு. என் மகன் வெறும் ஒரே வாரத்தில் அடிப்படையான ராகங்களை தாளில் படம் வரைந்து புரிந்துகொண்டதைக் கண்டேன். அது பெரிய சவாலும் அல்ல. ஆனால் நிதிய சைதன்ய யதி என்னிடம் ஒருபோதும் அதைச்செய்யலாகாது என ஆணையிட்டார்.

ஓர் உரையாடலில் “நீ எப்படி இசை கேட்கிறாய்?” என்று கேட்டார். “எனக்கு இசை செவிப்படிமங்கள் அல்ல. அவற்றை சுவரங்களாக நினைவில் நிறுத்தவே முடிவதில்லை. அவை எனக்குக் காட்சிப்படிமங்கள். பெரும்பெருக்காக காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கும். உணர்வுநிலைகள். என்னால் அதிலிருந்து மீள்வதே இயலாதது” என்றேன்.

“இதுவே எழுத்தாளனின் இசைகேட்கும் முறை. ஓவியன் இன்னொருவகையில் இசை கேட்கலாம். இசைக்கலைஞர்கள் , இசை நிபுணர்கள் கேட்பதற்கும் இதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. இப்படி நீ கேட்பதை ஒரு இசைக்கலைஞரிடம் சொல்லிப்புரியவைக்கக்கூட முடியாது. இது மிக அந்தரங்கமான ஓர் உலகம். கணக்குவழக்குக்குள் கால்வைத்தால் அதை இழந்துவிடுவாய்” என்றார். அதை நான் பற்றிக்கொண்டேன்.

பின்னர் ஜெயகாந்தனும் இளையராஜாவும் என்னிடம் அதையே சொன்னார்கள். இளையராஜா மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார். ‘நீயே பாடுவதாக இருந்தாலொழிய கணக்குகளுக்குள் போகாதே. நீ பாட்டை வேறு ஒன்றாக மாற்றிக்கொண்டிருக்கிறாய். அது பாட்டுக்கேட்பதன் ஒரு முறை. அதை இழந்துவிடாதே”. அதை இசையை ஒருவகை அல்ஜிப்ராவாக எண்ணும் ரசிகர்களிடம் என்னால் பகிரமுடியாது.

இவர்கள் எவரைவிடவும் இசைகேட்பவன் நான். அது என்னை அறிந்தவர்களுக்குத்தெரியும். அதுவும் இவர்களைப்போல தொட்டுத்தொட்டு அல்ல. அது எனக்கு ஒரு பைத்தியவெளி. பற்பல மணிநேரம். ஒருபோதும் ஆறுமணிநேரத்துக்கு குறையாது. முழு இரவும் மறுநாள் பகலும் கேட்ட நாட்கள் உண்டு. முப்பத்த்தாறுமணிநேரம் வரை. அது கவிதையும் ஓவியமும் எல்லாம் கலந்த ஒரு பெரும்பித்துநிலை. எத்தனையோ முறை என் குழுமநண்பர்களுடன் அந்தநிலையைப்பகிர்ந்துகொண்டதுமுண்டு. நேற்றுமுன்தினம்கூட முழு இரவும் பண்டிட் பௌல்ஸ்கருடன் கழிந்தது.

நான் இசைக்கலைஞர்களை மதிப்பிடுவது எனக்கு அவர்கள் அளிக்கும் அந்தப்பித்துநிலையை வைத்தே. ஆகவே பொதுவாகவே என் மனம் இன்று இந்துஸ்தானி இசைக்கலைஞர்களையே நாடுகிறது. அவர்கள் மட்டுமே அந்த பித்துநிலைக்குச் செல்கிறார்கள். ஒரு ராகத்தை விரித்துவிரித்து முடிவிலி வரை இன்மைவரை கொண்டுசெல்கிறார்கள். கணக்குகளும் வழக்குகளும் இல்லாத ஒரு மோகநிலைவரை. [உடனே ராகங்கள் தெரியுமா என்று கேட்காதீர்கள். வேறுவழியே இல்லை. ஆனால் தெரியாது என்னும் நிலைபாட்டையே உறுதியாக எடுப்பேன். தெரிந்துகொள்ள மாட்டேன்]

தமிழில் இன்றுபாடுபவர்களில் சஞ்சய் சுப்ரமணியம் ஏதோ ஒரு கட்டத்தில் கணக்குவழக்குகளின், மூளையறிந்த நுட்பங்களின் தளத்திலிருந்து மேலேறிக்கொள்கிறார். அவருடன் என்னால் நெடுந்தூரம் செல்லமுடிகிறது. நான் குறைந்தது இருபது டி.எம்.கிருஷ்ணா ஆல்பங்களையாவது கேட்டிருப்பேன். நான்கு முழுக்கச்சேரிகள். அவருக்கு அளித்தாகவேண்டிய ஆரம்பகட்ட நம்பிக்கையை முழுமையாகவே அளித்தேன். அவர் கணக்குகளில் வல்லவர். ஜடாயுவுக்குப் பிடிக்கும்

ஜடாயுவுக்கு என் பதில், அவர் கேட்கும் இசையல்ல நான் கேட்பது.

ஜெ

முந்தைய கட்டுரைசாதி, சங்கீதம், டி.எம்.கிருஷ்ணா
அடுத்த கட்டுரைபண்பாட்டுக்கு மேலிருக்கும் பருந்துகள்