இசை, டி எம் கிருஷ்ணா -கடிதங்கள்

1

 

அன்புள்ள ஜெ,

நலமாக இருப்பீர்கள் என்று ஆசைப்படுகிறேன்.

தங்களின் காடு நாவலை ஒருவழியாக பெற்று வாசித்துக்கொண்டு இருக்கிறேன். அதை வாசித்த பின்பு எழுத வேண்டும் என்று இருந்தேன். இருப்பினும் இப்பொழுது எழுத தோன்றியது

இரு நாட்கள் முன்பு தமிழ் இந்து இணையத்தில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது என்று கண்டவுடன் எனக்கு வருத்தமே ஏற்பட்டது. அந்த விருதின் மேல் இருந்த மதிப்பே போய்விட்டது என்று சொல்வேன். கிரண் பேடிக்கு இந்த விருது கொடுக்கப்பட்டதாக எனக்கு ஞாபகம். அதுவும் திஹார் சிறையில் மாற்றம் கொண்டு வந்ததற்காக. அங்கே கிரண் பேடி மாற்றம் செய்தார் என்றே இன்றளவும் நம்பினேன் (இன்று கிரண் பேடியின் அரசியில் மேல் எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை) . அதே போல் எம்.எஸ்.சுப்புலக்‌ஷ்மிக்கும் கொடுக்கப்பட்டதாக ஞாபகம். ஆனால் எம்.எஸ்.சுப்புலக்‌ஷ்மி சுதந்திர போராட்ட காலம் முதலே தன்னுடைய பல கச்சேரிகளை நிவாரணங்களுக்கு செய்து கொடுத்து உள்ளார்கள். இருந்தாலும் அவருக்கு அந்த விருது கிடைக்க டில்லி காங்கிரஸ் அரசியல் தலையீட்டு அதிகம் இருந்திருக்கும் என்பதில் சிறு ஐயமில்லை.

ஆனால் கிருஷ்ணாவுக்கு இந்த விருது கொடுத்த உடன் எனக்கு அந்த விருதின் மேலே நம்பிக்கை குறைந்துவிட்டது. கிரண் பேடி உண்மையிலியே அங்கு ஏதாவது செய்தாரா என்று தோன்றியது. ஆனால் இப்பொழுது யோசிக்கையில் நான் தில்லியில் திஹாரின் மிக அருகாமையில் ஜனக் பூரியில் வசித்துவந்த காலங்களில் செய்தித்தாள்களில் கைதியினருக்கு கொடுக்கப்படும் பயிற்சிகள் பற்றியும், சில கண்காட்சிகளில் திஹாரின் கடைகளை பார்த்து இருக்கிறேன். ஆதலால் கிரண் பேடியின் பங்களிப்பு இருக்க அதிகம் வாய்ப்புள்ளது என்று நினைக்கிறேன்.

ஆனால் கிருஷ்ணா என்ன செய்தார் என்பதே எனது இந்நாள் வரையில் ஆன கேள்வி. தி ஹிண்டுவில் அவரின் கட்டுரைகளை துவக்கதில் வாசித்தேன். அதிகம் காழ்ப்பே இருப்பதனால் அதனை வாசிப்பதை நிறுத்திவிட்டேன். என் மேலாளர் எனக்கு கிருஷ்ணாவின் சதர்ன் ம்யூசிக் புத்தகத்தை கொடுத்தார். அதிலும் மைய சரடு காழ்ப்பே. ஒரு தடவை அவருடைய கச்சேரியில் கோபாலகிருஷ்ண காந்தி, கிரிஷ் கர்னாட் ஆகியோர் அந்த புத்தகத்தில் உள்ள காழ்ப்பையே சுட்டிக்காட்டினர்/பாராட்டினர்.

அந்த புத்தகமும் வந்து இரண்டரை ஆண்டுகள் மேல் ஆயிற்று, ஊருர் ஆள்காட் திருவிழாவும் இரண்டு மூன்று நடந்துவிட்டது. அதில் யாருக்கு என்ன பயன் (அவர்களுக்கு விளம்பரத்தை தவிர)] ஆயிற்று என்றே யோசிக்கிறேன். அவருடன் நேற்று நடந்த பேட்டியில் இதுவரை என்னிடம் ஒரு தலித் மாணவரும் இல்லை என்கிறார் [ I do not until now have a Dalit student, but Sangeetha Sivakumar and I have begun a project of teaching Carnatic music in Chennai’s corporation schools and I do hope that through that we can tap some talent] . இந்த புத்தகம் வந்து இரண்டரை ஆண்டு ஆயிற்று. இன்னும் ஒருவர் கூட இவரிடம் பயில வரவில்லை போலும். இந்த காலத்தில் கற்பதற்கு ஒருவர் கூட இல்லையா? “சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்” என்றே நினைத்துக்கொண்டேன்!

சரி தமிழிசைக்கு வருவோம். அதிலும் அவர் ஒன்றும் செய்யவில்லை என்றே உறுதியாக சொல்லுவேன். அவர் பாடும் தமிழ்ப்பாடல்கள் இன்றைய சூழ்நிலையில் பாடப்படும் சம்பர்தயமாக பாரதி பாரதிதாசன் பாபநாசம் சிவன் பாடல்கள். ஒரு சில திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார் அதுவும் பிறர் மெட்டிசைத்ததை. அதை தாண்டி சொந்தமாக மெட்டிசைத்து ஒரு திருக்குறள் கூட பதிவில் கிடையாது. ஏன் பாரதி கூட கிடையாது. [சஞ்சயின் கச்சேரியில் குறைந்தது ஒரு பாடலாவது இருக்கும் (உதாரணமாக நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி). சொல்லப்போனால் அவரின் ஒழுக்கமுடைமை கேட்டு நான் திருக்குறள் வாசிக்கும் ஆர்வம் பெற்று நாளும் ஒரு குறளுக்கு உரை எழுதி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பயில்கிறேன்] .

இந்த அந்நியாத்தை யாரும் பேசக்கூட மாட்டார்கள் என்றே நினைத்தேன். ஆனால் உங்களின் பதிவு கண்டு சற்று ஆறுதல் அடைந்தேன். நன்றி.

அன்புடன்

ராஜேஷ்

***

அன்புள்ள ஜெ

நீங்கள் எழுதிய விரிவான குறிப்பை வாசிக்கும் வரை நீங்களும் ஓர் எரிச்சலில் எழுதிவிட்டீர்கள் என்றே எண்ணியிருந்தேன். ஏனென்றால் இசையில் இருக்கும் சாதியம், குறுங்குழுத்தன்மை பற்றி நீங்கள் மிக விரிவாக எழுதியிருக்கிறீர்கள்.

ஆனால் உங்கள் கட்டுரை மிகுந்த தெளிவை அளித்தது. இங்கே ஒரு பெரிய பண்பாட்டு செயல்பாடு நடந்திருக்கிறது, நடந்துகொண்டே இருக்கிறது. அது இந்த கிருஷ்ணாக்களுக்கு சற்றும் தெரியாது. அக்கறை இல்லை. ஏனென்றால் மதிப்பும் இல்லை. ஆனால் சுயமுன்னேற்றத்துக்காக, இமேஜ் உருவாக்குவதற்காக மக்கள் பாடகர் என படம் காட்டவேண்டியிருக்கிறது. அதற்காக ஆல்காட்குப்பத்தில் போய் கச்சேரி செய்து செய்தியாக்குகிறார்கள் . அதையே தகுதியாகக் காட்டி விருதும் பெறுகிறார்கள்.

நீங்கள் சொல்வது உண்மை. இந்தவகையான குறைகுடங்களால்தான் உண்மையான நிறைகுடங்களின் பணி கேவலப்படுத்தப்படுகிறது

ராம்சந்தர்

***

அன்புள்ள ஜெ,

பாரதி இலக்கியத்தில் உருவாக்கியதைப்போல மரபிசையை நாட்டார் இசையுடன் இணைக்க அல்லது நாட்டாரிசையில் இருந்து புதிய உத்வேகத்தை எடுத்து மரபிசையுடன் சேர்க்க பலரும் பலவகையிலும் முயன்றிருக்கிறார்கள்.

தண்டபாணி தேசிகர் முதலிய தமிழிசைவாணர்களுக்கு இந்த கர்நாடக சங்கீத கலைஞர்களுக்கு இருப்பதைவிடவும் நாட்டார் இசைமேல் ஆழமான வெறுப்பு இருந்தது. ஆகவே அவர்கள் அதை முயற்சி செய்யவில்லை

ஆனால் இளையராஜா அதில் ஒரு முன்னோடி என்றே சொல்லலாம். உங்கள் பேட்டியில் நா மம்முதுகூட அதைச் சொல்கிறார். ஆனால் இங்கே அந்த முயர்சி வெற்றிபெறவே இல்லை. அது ஏன் என்பது பெரிய கேள்வி

ரகுநாதன்

***

ஜெ

நானும் டி எம் கிருஷ்ணா பற்றிய உங்கள் கோபம் சற்று கூடுதல் என்றே நினைத்திருந்தேன். அவருக்கு விருது கிடைத்ததுதான் உங்கள் கோபத்துக்கான காரணம் என்றும் நினைத்தேன்

ஆனால் வாசகர்கடிதத்தில் நீங்கள் இதே கோபத்துடன் பேசியதை ஒருவர் பதிவுசெய்திருந்தார். இந்தக் கட்டுரையில் அந்தக்கோபத்திற்கான காரணம் கிடைத்தது

திடீரென ஒருவர் தமிழில் நவீன இலக்கியமே இல்லை, நான் எழுதப்போகிறேன் என்று அறிவித்து ஒரு புத்தகத்தை எழுதி நோபல் பரிசு பெற்றால் வரும் எரிச்சல் அது. அது அந்தப் பரிசைக் கண்டு வரும் எரிச்சல் அல்ல. அதிலுள்ள அறியாமையும் ஆணவமும் தரும் எரிச்சல்

புரிந்துகொள்ளமுடிகிறது ஜெ

ப்ரியா

***

அன்புள்ள ஜெ

இந்த இணையதளத்திலேயே நீங்கள் முருகசாமி, ஆதவ் சகோதரிகள், பீயுஷ் மனுஷ், காட்சன் சாமுவேல் என்று உண்மையான சமூகப்பணியாளர்கள் எத்தனைபேரை அடையாளம் காட்டியிருக்கிறீர்கல் என்று பார்த்தேன். அத்தனைபேரைப்பற்றியும் மிகப்பெரிய மதிப்புடன் முற்றிலும் அகங்காரத்தை கழற்றிவைத்துவிட்டு கால்தொட்டுத்தான் பாராட்டியிருக்கிறீர்கள். நானேகூட நம் ஆதர்ச எழுத்தாளர் இப்படி பணியவேண்டுமா என்றெல்லாம் சிந்தனை செய்திருக்கிறேன்

அதை வாசித்தவர்களுக்கு இப்போது டி எம் கிருஷ்ணா மீத் வந்துள்ள கோபம் ஏன் என்பது புரியும்

செல்வா

 

 

அன்புள்ள ஜெ

 

டி எம் கிருஷ்ணா விவகாரத்தில் சுவாரசியமான ஒன்றை கவனித்தேன். வழக்கமான ‘பார்ப்பன எதிர்ப்பாளர்கள்’ உங்களைக் கரித்துக்கொட்டினார்கள். மனுஷ்யபுத்திரன், யுவகிருஷ்ணா போல. காரணம் டி.எம்.கிருஷ்ணா பார்ப்பன எதிர்ப்பு பேசுகிறார்

 

பிராமணர்கள், உங்கள் பழைய நண்பர்கள் உட்பட, உங்களை விமர்சித்தார்கள். காரணம் என்ன இருந்தாலும் டி.எம்.கிருஷ்ணா ஒரு பிராமணர். அவரை பிராமணரல்லாதவர் விமர்சிப்பதை அனுமதிக்கமுடியாது

 

இனி உங்களை எவரிடமிருந்து காப்பாற்றுவதென்றே தெரியவில்லை

 

S.R,Ramakrishnan

முந்தைய கட்டுரைபண்பாட்டுக்கு மேலிருக்கும் பருந்துகள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12