சார் நலமா? உங்களுக்கு கடிதம் எழுதி வெகுநாட்கள் ஆகிற்று. ஆனாலும் தினம் என் ஆழ் மனதுடன் பேசாமலில்லை. ஒவ்வொரு நாளும் இணையத்தளத்தை வாசித்துவிடுகிறேன். கொஞ்ச நாட்களாக சிலயோசனைகளும் அதைத் தொடர்ந்து மனஅழுத்தமும் ஏற்பட்டுவிடுகிறது. அப்போதெல்லாம் கணினியைத் திறந்து இத்தளத்தின் பழைய கட்டுரைகளை வாசிக்கத் தொடங்கிவிடுவேன். ஈரோடு சந்திப்பின் தருணங்களை நினைத்துக்கொள்கிறேன். தற்போது அபிலாஷ்க்கு எழுதிய ‘எழுத்தும் உடலும்’ கடிதம் என்னை மறுபடியும் மீட்டெடுக்கச் செய்தது. தாங்கள் ஊருக்கு திரும்பியபின் நேரில் சந்திக்க வரலாமென நினைத்திருந்தேன். அதற்குள் சிங்கப்பூர் பயணம். அளவற்ற மகிழ்ச்சி.
முதன் முறையாக வெளிநாட்டின் அரசு சார்ந்த பணி என்று குறிப்பிட்டிருந்தீர்கள். நம்முடைய கல்விமுறை அத்தகைய உயரத்தை என்றைக்கு எட்டிப்பிடிக்கப் போகிறது?… எப்போதுமே எழுத்தாளருடனான சந்திப்பு வாசகர்களுக்கும் மாணவர்களுக்கும் ஒரு புதிய திறப்பைத் தரவல்லது அதுவே அவர்களுக்கு வாழ்வின் பயணம் குறித்த தடங்களை சரியாக புலப்படுத்திக் காட்டும் என்று நம்புகிறேன். பெருமையாக இருக்கிறது.
2014 ம் ஆண்டில் விஷ்ணுபுரம் விழாவில் ஞானக்கூத்தனை சந்திக்கின்ற வாய்ப்பு நல்கியது. அதன் பிறகே அவரின் கவிதைகளை வாசிக்கத் தொடங்கினேன். இசை அவரின் கவிதைகளிலிருக்கும் பகடிகளைப் பற்றி பேசினார். இன்றும் அக்கவிதைக்கு மூக்கைப் பிடிக்க முடிகிறது. ஞானக்கூத்தன் வயதின் காரணமாக மிகவும் சிரமத்துடனே பேசிமுடித்தார். விழாவின் முடியும்வரை உணர்ச்சி தழும்பியேக் காணப்பட்டதை கவனிக்க முடிந்தது. விளக்கு விருதுக்கு பிறகு அவருக்கு கிடைத்த உரிய அங்கிகாரமாக அது இருந்திருக்கும். புதிய தலைமுறை வாசகர்கள் பலர் அதன்பிறகே அவரை அறிந்திருப்பார்கள் என்று என்னால் ஸ்திரமாகச் சொல்ல முடியும். விஷ்ணுபுரம் விழா அவருக்கு ஒரு ஆவணம்.
கடந்த புதன்கிழமை அன்று அவர் காலமானார். எப்போது போலவே பல பத்திரிக்கைகளில் அவர் பெட்டி செய்தியாக்கப் பட்டிருப்பாரென்றே நினைத்திருந்தேன் மாறாக இன்றைய தமிழ் இந்துவில் இரண்டு பக்கங்களுக்கு ஞானக்கூத்தனைப் பற்றிய கட்டுரை வந்திருந்தது. விக்ரமாதித்யனின்ää க்ரியா ராமகிருஷ்ணனின் கட்டுரையும்ää சங்கரராமசுப்ரமணியனின் பழைய பேட்டியொன்றும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஒரு புதிய மாற்றம் பரிணமித்திருக்கிறதாகவே இதை உணர்கிறேன்.
என்றும் அன்புடன்
மு. தூயன்
***
அன்புள்ள தூயன்
நான் இணையத்தில் தமிழ் ஹிந்து ஞானக்கூத்தனுக்கு அளித்த கௌரவத்தைப் பார்த்தேன். மிக முக்கியமான தொடக்கம். பண்பாட்டு தளத்தில் செயல்படுபவர்களின் இடமென்ன என இனிமேலாவது தமிழ்ச்சமூகம் உணரக்கூடும்
ஜெ