சாதி, சங்கீதம், டி.எம்.கிருஷ்ணா

images (1)

 

 

ஜெ,

வணக்கம். இன்று டி எம் கிருஷ்ணா விருது பற்றி நீங்கள் எழுதிய கட்டுரையைப் படித்தேன். ஈரோடு புதியவர்கள் சந்திப்பில் கிருஷ்ணா பற்றி பேச்சு எழுந்த போதும் ஒரு காட்டமான பதிலையே அளித்தீர்கள். என் கேள்வி இந்த விருது பற்றியோ, கிருஷ்ணாவின் இசை பாண்டித்தியம் பற்றியோ அவர் இந்துவில் எழுதும் கட்டுரைகள் பற்றியோ அல்ல. கேள்வி இதன் அடி ஆழத்தில் இருக்கும் பிரச்சனை மீது.

கிருஷ்ணா ஏன் இப்படிச் செய்கிறார்? இன்று தமிழகத்தில் கர்நாடக சங்கீதம் முழுவதும் மெட்ராஸ் பிராமணர்கள் கையிலேயே உள்ளது. பிராமணர் அல்லாத பிறர் திறமை இருப்பினும் ஒரு கச்சேரி ஸ்லாட்டையோ ஒரு குறைந்த பட்ச அங்கீகாரத்தைப் பெறுவது மிக மிகக் கடினம். இது அனைவரும் அறிந்ததே. இதையே தான் கிருஷ்ணாவும் சொல்கிறார். இதைக் களைய அவர் கையெடுக்கும் முறைகளைப் பற்றி எனக்கும் விமர்சனங்கள் உண்டு. ஊரூர் ஆள்காட் குப்பத்தில் நடு ரோட்டில் அமர்ந்து கச்சேரி செய்வது எந்த அளவுக்கு அந்த மக்களுக்கு கர்நாடக சங்கீதத்தின் மேல் ஆர்வத்தை உண்டு செய்யும் என்பது எனக்கும் புரியவில்லை. பாட்டைக் கேட்பவர்களை விட வேடிக்கை பார்ப்பவர்கள் தான் அதிகம் இருப்பர்.

ஆனால் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதையே பலர் ஓரிரண்டு பிராமணர் அல்லாதவர்களை உதாரணம் காட்டி வசதியாக மறைத்துவிடுவார்கள். இந்தப் பிரச்னையை தெரியச்செய்ய எதாவது செய்யவேண்டும். முதலில் கூச்சல் போட வேண்டும்; கேள்வி கேட்க்க வேண்டும். குறைந்த பட்சம் கிருஷ்ணா அதைச் செய்கிறார். பல பாடகர்களுக்கு இந்தப் பிரச்சனை பற்றிய புரிதல் உள்ளது. சஞ்சய் சுப்ரமணியமும், தான் இரண்டு ஓதுவார் மாணவர்களுக்கு சங்கீதம் சொல்லித் தருவதாக ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

கேரளத்தில் கர்நாடக சங்கீதம் பிற பல சாதியினருக்கும், கிருத்துவர்களுக்கும் கூடப் போய்ச் சேர்ந்திருக்கிறதே. ஒரு கலை எல்லா வகுப்பினருக்கும் போய்ச் சேர்ந்தால் தானே அதற்குரிய அர்த்தத்தைப் பெறும். தமிழகத்தில் இந்த நிலை வர இது எங்கிருந்தாவது தொடங்கியாக வேண்டும். அப்படித் தொடங்கினால் அது பிராமணர்களிடத்திலிருந்து தான் தொடங்க வேண்டும். இன்றும் பிடிவாதமாக பிராமணர் அல்லாதவர்களுக்கு மட்டுமே இசை கற்பிக்கும் பல பிராமணர்கள் உள்ளனர்.

கிருஷ்ணா போன்றவர்கள் இதைச் செய்கையில் பிறர் கவனம் குவிவது ஒரு வகையில் நல்லது தானே? என்ன சொல்கிறீர்கள்.

நன்றி

கிஷோர்

***

அன்புள்ள கிஷோர்,

நான் என் குறிப்பிலேயே சொல்லியிருந்தேன். அது ஆழமான எரிச்சல் மட்டுமே. அது விமர்சனம் அல்ல. அது ஒரு மோசடி. அதைப்பற்றிய எரிச்சலை மட்டுமே பதிவுசெய்யவேண்டும் என எண்ணினேன்

அத்துடன் இது ஓர்அன்றாடக்குறிப்பு அல்ல. இது என் நூல்களில் பதிவாகும். இன்னும் ஒருநூறாண்டுக்காலம் வாசிப்பிலும் இருக்கும். டி.எம்.கிருஷ்ணா எவரென்று தெரியாத காலத்தில் அடிக்குறிப்புடன் வாசிக்கப்படும். புதுமைப்பித்தன் அன்றைய இசைக்கலைஞர் பற்றி ஒரு வரி எழுதியிருந்தால் புதுமைப்பித்தனாலேயே அவர் இன்று நினைவுகூரப்படுவார், அதுபோல. எழுத்து என்றுமிருப்பது. இப்படி ஒரு கடும் எரிச்சல் இந்த மோசடி நிகழ்ந்தபோதே பதிவாகியது என தலைமுறைகள் அறியவும் வேண்டும். ஆகவேதான் அப்படி எழுதினேன்

இந்தக்குறிப்பின் வன்மையோ, இதன் வாசிப்புவட்டமோ, டி.எம்.கிருஷ்ணாவுக்குத் தெரியப்போவதில்லை என எனக்குத்தெரியும். அவருக்கு இங்கே தமிழ் என்னும் மொழியில் ஏதாவது எழுதப்படுகிறதா என்றே தெரிந்திருக்க நியாயமில்லை. அவர் எழுத்தில் அதற்கான தடயம் இல்லை. ஆகவே இது முழுக்கமுழுக்க நான் எதிர்நோக்கும் வாசகச் சூழலுக்காக, எதிர்காலத்துக்காக. புதுமைப்பித்தனோ சுந்தர ராமசாமியோ எழுதாத கடுமை ஒன்றும் அல்ல இது. பொதுப்பத்திரிகை வாசகர்களுக்குப் புதிதாக இருக்கலாம்.

எந்த ஒரு பண்பாட்டு விருதுக்கும் peer review எனப்படும் பிறபண்பாட்டு செயல்பாட்டாளர்களின் கண்காணிப்பும் விமர்சனமும் முக்கியம். அந்த அழுத்தமே தரத்தை நிலைநாட்டுகிறது. உலகம் முழுக்க அப்படித்தான். இங்கு ‘ஏதோ ஒருத்தனுக்கு ஒரு பரிசு கெடைச்சிருக்கு. வாழ்த்திட்டு போய்ட்டே இருப்போம்” என்றும் அதை எதிர்ப்பவர்களை “இவனுக்கு கிடைக்கலை போல” என்றும் மொண்ணையாகப்புரிந்துகொள்ளும் பொதுப்புத்திக்கு அப்பால் எவரும் சிந்திப்பதில்லை. ஆனால் என் தரப்பு எனக்கு முக்கியம், வேறு எவருக்கு இல்லை என்றாலும். அதைநான் பதிவிட்டே ஆகவேண்டும்

இந்த எதிர்ப்பு இங்கே இணையத்தில் மட்டுமே எழ முடியும். எந்தப் பெரிய இதழிலும் அச்சாக முடியாது, இந்தத்தலைமுறையின் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவனாக நான் இருந்தாலும்கூட. இப்படி ஒரு குரல் எழுந்தமையே நம் சூழலில் எவராலும் கவனிக்கப்படாது. தன் வன்மையாலேயே இவ்வெதிர்ப்பு சற்றேனும் பேசப்படும். அதுதான் நம் பண்பாட்டுச்சூழலின் மேலாதிக்கம் என்பது. இது அதற்கு எதிரான குரல்

மேலும், எழுத்தாளன் எழுதும்போது இடக்கரடக்கல்களைக் கவனிக்கவேண்டியதில்லை என்பது என் கருத்து. சொல்லப்படவேண்டியதை, பிறர் சொல்லத் தயங்குவதைச் சொல்வதே அவன் கடமை.

டி.எம்.கிருஷ்ணா விருதுபெற்றமை குறித்து என் எதிர்ப்புக்கான காரணங்களை முன்னரே சுருக்கமாகச் சொல்லிவிட்டிருந்தேன். ஆனால் என் கருத்து எதுவும்விவாதமாகிறது. நான் முழுமையாக விளக்காமல் பின்னகர முடிவதில்லை. ஆகவே மீண்டும்.

முதலில், நம் மரபிசைச்சூழலில் சாதியம் ஒரு முதன்மையான விசையாக இருக்கிறது என்பதை நானே பலமுறை பதிவுசெய்திருக்கிறேன். உண்மையில் அது பிராமண மேலாதிக்கம் அல்ல, ஒருவகையில் அய்யர் மேலாதிக்கம். இங்கல்ல எந்த மரபுசார் அமைப்பிலும் இப்படி சில மேலாதிக்கங்கள் இருக்கும். அதற்கான சமூகப்பின்னணியும் இருக்கும். டி.எம்.கிருஷ்ணாவின் குரல் அதற்கு எதிரான அய்யங்கார் ஆற்றாமை என எடுத்துக்கொள்ளலாம். இதை இசையுலகை கொஞ்சமேனும் கவனிப்பவர் அறிவார்கள்.

அவர் அதை தலித் ஆதரவு, ஒடுக்கப்பட்டோர் சார்பு, முற்போக்கு, புரட்சிகர இசைச்செயல்பாடாக ஆக்கிக்கொள்வது கூட என்னால் புரிந்துகொள்ளப்படுவதாகவே உள்ளது. அதை ஆங்கிலத்தில் நாளிதழ்க் கட்டுரைகளில், மாதந்தோறும் பிரசுரிக்கப்படும் அவரது ஆங்கிலப் பேட்டிகளில் உச்சகட்ட விசையுடன் கூச்சலிடுகிறார். அதனாலும் ஏதாவது பயன் இருக்கக்கூடும்தான்.

ஆனால் ‘செயல்பாடு’ என்பது என்ன? ஒருவர் ‘முற்போக்குக் கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்’ என்பது ஒரு செயல்பாடா என்ன? இங்கே எவர் பேசவில்லை முற்போக்கு? இவர் பேசும் முற்போக்குக்கு மகஸேஸே விருது என்றால் இங்கே மாதம் முப்பதாயிரம் மகஸேஸே விருதுகளை ரேஷன்கடை வாயிலாக வினியோகம் செய்யவேண்டியிருக்கும்.

சமூகச்செயல்பாடு அல்லது பண்பாட்டுச்செயல்பாடு என்பது என்ன? ஒருவர் தான் ஏற்றிருக்கும் கொள்கைக்கு உகந்த சமூகப் பணியை, பண்பாட்டுச்சேவையை அணையாத பொறுமையுடன் நெடுங்காலத்தவமாக ஆற்றி விளைவுகளை உருவாக்குவது. நாம் சமூகப்பணியாளர் என ஏற்றுக்கொண்டிருக்கும் அத்தனைபேரும் அத்தகையவர்களே.

ஆம், செய்துகாட்டும்போதுதான் அது சமூகப்பணி அல்லது பண்பாட்டுப்பங்களிப்பு. சும்மா சொல்லிக்கொண்டிருப்பது அல்ல. சத்தம்போடுவது அல்ல. ஊடகங்களை பணபலத்தாலோ குடும்பப்பின்னணியாலோ ஆக்ரமித்துக்கொள்வது அல்ல

டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசைச்சூழலின் சாதியத்தைச் சுட்டிக்காட்டி கட்டுரைகள் எழுதினார். நாலைந்து முறை சில ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் குடிசைப்பகுதிகளுக்கு சென்று சாலையில் அமர்ந்து பாடினார். அந்த மக்கள் அதை ரசித்தார்களா? அவர்களிடம் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டதா? அவர்கள் அந்த இசைக்குஅருகே வந்தார்களா?

அவரே அதைச் சொல்லியிருக்கிறார். என்னவென்றே தெரியாமல் நாலைந்துபேர் வேடிக்கைபார்த்தார்கள், அவ்வளவுதான் என்று. அப்படியென்றால் ஏன் அதைச் செய்தார்? வெறும் ஊடகக் கவன ஈர்ப்பு. அதற்குமேல் ‘நீ என்னை மதிக்கவில்லை என்றால் நான் உன் இசையை குப்பையில் வீசுவேன்’ என அந்த இசை மேல் ஆதிக்கம் செலுத்துபவர்களிடம் சொல்லும் முனைப்பு. அவர்களைச் சீண்டுவது மட்டுமே அவரது நோக்கம்.

இவ்வாறு குப்பத்தில் பாடுவதென்பது உண்மையில் அவருக்கு குப்பத்தின்மீதிருக்கும் இழிவான எண்ணத்தையே காட்டுகிறது.உண்மையிலேயே டி.எம்.கிருஷ்ணாவுக்கு ஆர்வமிருந்தால் தலித்துக்கள், பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இசை கற்பிக்க ஓர் அமைப்பை உருவாக்கியிருக்கவேண்டும். அவர்களில் ஒரு நூறுபேருக்காவது இசையைக் கற்பித்து ஒரு ஐந்து பாடகர்களாவது அவர்களிடமிருந்து எழுந்து வந்திருக்கவேண்டும். அதுதான் சமூகப்பணி,பண்பாட்டுப்பங்களிப்பு.

அது எளிய செயல் அல்ல. பெரும் அர்ப்பணிப்பும் சலிப்படையாத ஊக்கமும் தொடர்ச்சியான செயல்பாடும் அதற்குத்தேவை. செய்யத் தொடங்கியபின்னர்தான் அதிலுள்ள சிக்கல்கள் ஒவ்வொன்றாக எழுந்து முன்னால் வரும். அனைத்தையும் எதிர்கொண்டு வென்று சாதிப்பதற்கு எளியவர்களால் முடியாது. அழுத்தமான கொள்கை உறுதி தேவை.

அப்படிச் செய்து காட்டிய ஒவ்வொருவரும் நம் சூழலில் வாழும் தெய்வங்களே. நான் அவர்கள் அனைவரையும் தாள்தொட்டு வணங்கத் தயாராக இருப்பவன். ஏனென்றால் என்னால் அதை நினைத்தே பார்க்கமுடியாதென அறிவேன். நான் எளியவன். ஆகவே அவர்கள்முன் பணிந்து என்னை நிறைவுசெய்துகொள்கிறேன்.

திருப்பூரில் காதுகேளாதோர் பள்ளி ஒன்று உள்ளது. அதில் ஒரு விழாவுக்காகச் சென்றிருந்தேன். அதன் நிறுவனர் முருகசாமியும் காதுகேளாதவர்தான். பெரும் உழைப்பில் பொறுமையாக பல்லாண்டுக்காலம் முயன்று அந்த அமைப்பை உருவாக்கி முன்னெடுப்பவர் அம்மாமனிதர். அவரது அமைப்புக்கு ஒரு நன்கொடை அளிக்கவேண்டியிருந்தது. அதை கொடுக்கக்கூடாது என்று பட்டது. கால்தொட்டு வணங்கி படைத்துவிட்டு வந்தேன்.

டி.எம்.கிருஷ்ணா அவர் சொல்வதில் ஒரு சிறுபகுதியை செய்துகாட்டியிருந்தால் அவர் என் ஆதர்ச புருஷன். அவர் செய்வது வெறும் வசைபாடல். தமிழ்ச்சூழலில் வசைபாடிகளுக்கா பஞ்சம்? எதையும் எப்படியும் ஏதேனும் காரணம் சொல்லி வசைபாடினால் நீங்கள் சிந்தனையாளர், சமூகசேவகர், பண்பாட்டுச் செயல்வீரர்.

நாலைந்து தெருக்களில் பத்துப்பதினைந்துபேர் முன் அவர்களுக்கு என்னவென்றே தெரியாத பாடல்களை கொஞ்சநேரம் பாடிவிட்டு அதை உரியமுறையில் ஊடக விளம்பரம் செய்து ஒருவர் மகஸேஸே போன்ற பெரும் விருதை சென்றடைய முடியும் என்றால் அதன்பின் இங்கே சமூகசேவை, பண்பாட்டுச்சேவை என்பதற்கெல்லாம் என்ன பொருள்?

இப்படி மதிப்பீடுகளைச் சிதைப்பவர்கள் உண்மையில் சேவை என்பதன் பொருளை அல்லவா அவமதிக்கிறார்கள்? தன் வாழ்க்கையை அர்ப்பணித்து சேவை செய்பவர்களைச் சிறுமை செய்கிறார்கள் அவர்கள். நமக்கு ஏன் இந்த வேறுபாடு புரியவில்லை?

டி.எம்.கிருஷ்ணாவிடம் ‘சரி, நீ என்ன செய்து காட்டினாய்?” என்று ஒருவராவது கேட்கவேண்டாமா என்ன? சரி, தொலையட்டும். இனிமேலாவது அவர் கூச்சலிடுவதில் ஒரு சிறுபகுதியையாவது செய்து காட்டட்டும். ஒரு பத்துவருடம், இந்த மண்ணில் இறங்கி மனிதர்களுடன் வாழ்ந்து அவர்களுக்கு பணியாற்றட்டும். பத்துவருடம் கழித்து வந்து ‘ஆம், நான் சொன்னது தவறு’ என மன்னிப்பு கேட்கிறேன்.

எனக்குக் கடிதம் எழுதியவர்களில் பாதிப்பேர் டி.எம்.கிருஷ்ணா சொல்லும் கருத்துக்களில், அவரது அரசியலில் உடன்பாடு கொண்டவர்கள். ஆகவே அவர் பெரிய சமூகசேவகர், அவரை ஆதரிப்போம் என்கிறார்கள். அவரை எதிர்த்தால் அதை அரசியலாக பொருள் கொள்வோம் என்கிறார்கள். தெருமுனை அரசியல் அப்படித்தான். ஆனால் கொஞ்சம் படித்தவர்கள் அதைச் சொல்லும்போது கசப்பு ஏற்படுகிறது.

இங்கே இப்படி விருதுபெற்று ஏணியில் ஏறுபவர்கள் அத்தனைபேரும் ஆரம்பத்திலிருந்தே இந்தக் ‘கப்பங்’களைஒழுங்காகக் கட்டியவர்கள் என்பதுகூடவா இவர்களுக்குத் தெரியவில்லை? அரசியல் சரிநிலைகளை ஒழுங்காக எடுக்காமல் இதற்கு இறங்குவார்களா இத்தகையவர்கள்? பலர் டி.எம்.கிருஷ்ணா மோடியை எதிர்த்தமைக்காக இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது என்று சொல்லியே அவரை மூர்க்கமாக ஆதரிப்பதைப் பார்க்கிறேன். வேடிக்கைதான்.

சரி, இது இவரது உண்மையான அரசியல் என்றே கொள்வோம். அதற்காக சமூகசேவைக்காகவும் பண்பாட்டுச்சேவைக்காகவும் விருது பெறுபவர் செய்த உண்மையான சமூகப்பண்பாட்டுப்பணி என்ன என்று கேட்கக்கூடாதா என்ன? அந்தக்கேள்வியை ஒருவராவது கேட்டாகவேண்டும் நண்பர்களே . இல்லையேல் இங்கே வெறும் அரசியல் ஆதரவும் அரசியல் எதிர்ப்பும்தான் இருக்கிறது, பண்பாட்டுச்செயல்பாடு இல்லை என்றே பொருள்.

இத்தனைக்கும் அப்பால் இதை வெறும் அரசியலாக மட்டுமே பார்க்கும் ஆத்மாக்களை நான் மன்னிக்கிறேன். அவர்களின் உலகம் வேறு.

டி.எம். கிருஷ்ணாதான் இசையில் சாதியமேலாதிக்கத்தை ஒழிக்க வந்த அவதாரமா? சென்ற நூறாண்டுக்காலமாக இங்கே எத்தனைபெரிய பண்பாட்டியக்கம் நிகழ்ந்திருக்கிறது என அவருக்குத் தெரியுமா? அவரே சொல்கிறார். அவர் மரபிசை பாடியபோது மக்கள் வேடிக்கைபார்த்ததுபோல அவர்களின் நாட்டாரிசையை அவரும் ஒன்றும் தெரியாமல் வேடிக்கைபார்த்தாராம்.

அவர்கள் வேடிக்கைபார்த்தது இயல்பு. ஏனென்றால் செவ்வியல் இசை என்பது அதை சற்றேனும் பயின்று செவியைப் பழக்கப்படுத்திக்கொள்பவர்களுக்குரியது. ஆனால் இவருக்கு நாட்டாரிசை வேடிக்கையாக இருந்தது என்றால் அது அறியாமையின் உச்சம். ஏனென்றால் அந்த இசையிலிருந்துதான் அவர் பாடும் இசை உருவாகி வந்தது.

எந்தச் செவ்வியல்கலையையும் பொதுமக்களிடம் அப்படியே சும்மா எடுத்துக்கொண்டு போக முடியாது. அப்படி ஒருவர் கிளம்பினால் அவரை காலிடப்பா என்று சொல்வதுதான் சரியான மதிப்பீடு.சாதாரண மக்களால் செவ்வியல் கலையை உடனே ரசிக்கமுடியாது. அந்த செவ்வியல் இசை அவர்களிடமிருக்கும் இசையில் இருந்து உருவாகி வந்ததுதான். ஆனால் அது ஒரு மிக நீளமான பண்பாட்டுப் பரிணாமம். அதைக் கொஞ்சமேனும் உணர்ந்த ஒருவர் இந்தவகையான அசட்டு அபிப்பிராயங்களை உதிர்க்கமாட்டார்

தமிழின் தொன்மையான பண்ணிசையிலிருந்து உருவாகி வந்தது கர்நாடக சங்கீதம் என நாம் சொல்லும் தென்னிந்திய இசை. அது உருவாகி வந்த பதினாறு பதினெழாம் நூற்றாண்டில் தென்னகம் கர்நாடகம் என்றே பொதுவாகச் சொல்லப்பட்டது, ஒட்டுமொத்தமாக நாயக்கர் ஆட்சி இருந்தமையால். ஆகவே அப்பெயர் அதற்கு அமைந்தது

இசையின் பரிணாம வளர்ச்சி உலகம் முழுக்க ஒன்றுதான். வாழ்க்கையில் இருந்து இயல்பாக அது உருவாகிறது. கட்டற்றதாக இருக்கிறது. இலக்கணம் இருப்பதில்லை.ஆகவே அதைப் பாடுவதற்கான பயிற்சியும் இருப்பதில்லை. சிறு இனக்குழுக்கள் நடுவே அது பாடப்படுகிறது. அதை பிறர் ரசிக்கமுடிவதில்லை. தொழில், விருந்து, சடங்கு, வழிபாடு ஆகியவற்றுக்காக அது இசைக்கப்படுகிறது.

சமூக உருவாக்கத்தின் போக்கில் அந்த சிறு சிறு இசை மரபுகள் இணைகின்றன. அவை ஒட்டுமொத்தமாக ஒரு தன்னிச்சையான இசைப்பெருக்காக ஆகின்றன. அதையே நாம் நாட்டார் இசை என்று சொல்கிறோம். அது என்றுமுள பெருக்கு. நதிகளைப்போல

அதிலிருந்து இலக்கணம் வகுக்கப்பட்டு உருவாவதே செவ்வியல் இசை. இலக்கணம் வகுக்கப்பட்டதும்தான் அதில் புறவயமான கல்வி சாத்தியமாகிறது. அதில் நிபுணர்கள் உருவாகி வருகிறார்கள். தன்னிச்சையான வெளிப்பாடு என்பதற்குப் பதிலாக தொடர்ச்சியாக தன்னை மேம்படுத்திக்கொள்ளும் இசைமுறைமை உருவாகி வருகிறது. உணர்வெழுச்சிக்குப் பதிலாக நுட்பம் முக்கியமானதாக ஆகிறது.

அதைப் பாடுவது மட்டுமல்ல கேட்பதும் பயிற்சியினால்தான் சாத்தியம் என்றாகிறது. ஆகவே அது அனைவருக்கும் உரியதல்ல என்று ஆகிறது. அதற்கான வாழ்க்கைமுறையும் அதற்கான மனநிலையும் தேவையாகிறது. பிற செவ்வியல் மரபுகளுடன் அது உரையாடுகிறது . கொண்டும் கொடுத்தும் அது மேலும் மேலும் வளர்கிறது. உலகமெங்குமுள்ள அத்தனை செவ்வியல் கலைகளின் வளர்ச்சியும் இப்படித்தான் நிகழ்கிறது.

பண்ணிசை தமிழகத்தின் நாட்டார் மரபில் இருந்து உருவான தொன்மையான மரபிசை. அது நடுக்காலத்தில் அழிந்து சோழர் காலத்தில் கண்டெடுக்கப்பட்டு மறுமலர்ச்சி அடைந்தது. நீலகண்ட யாழ்ப்பாணரில் இருந்து தமிழ்ப்பண்கள் மீட்டெடுக்கப்பட்டன என்று தொல்வரலாறு சொல்கிறது. அதன்பின் மீண்டும் அது மையத்தை விட்டு மறைந்தது. தெலுங்கு மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் வடக்கத்திய இசைமரபுகளுடன் இணைந்து அது மறுபிறப்பெடுத்தது. அதுவே கர்நாடக இசை. மிகச்சுருக்கமான வரலாறு இது

மறுபக்கம் நாட்டாரிசை பல்வேறு மாற்றங்களுடன் இங்கே இருந்துகொண்டுதான் இருக்கிறது. அதை மக்கள் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் பாடிக்கொண்டும் ரசித்துக்கொண்டும்தான் இருக்கிறார்கள்.

ஆகவே, டி.எம்.கிருஷ்ணா நினைப்பதுபோல இங்கே பிராமணரல்லாதவர்கள் இசை இல்லாமல் வாடிக்கொண்டிருக்கவில்லை. அவர் சொற்கத்திலிருந்து நெருப்பைக்கொண்டு வந்த புரமித்யூஸ் போல அவர்களுக்கு இசையைக் கொண்டுவந்து கொடுக்கவுமில்லை. அவர்களிடமிருப்பது வேறு இசை. அவர்களுக்கு அன்னியமாக இருப்பது தமிழ்ச்செவ்வியலிசையின் இரண்டாயிரம் வருடத்தைய இலக்கணமரபுதான். அதை அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்காமல் செவ்வியலிசையை அவர்கள் முன் பாடி அவர்களைச் சிரிக்கவைத்திருக்கிறார். ஆனால் அதை சாதகமாகப்பயன்படுத்தி மகஸேஸே விருதை வென்று கடைசிச் சிரிப்பை அவர் சிரித்துவிட்டார்.

கர்நாடக இசையே கூட பிராமணர் அல்லாத பிறரிடம் இருக்கவில்லை என்பதும் வரலாற்றுப்பொய்யே. இசைவேளாளர் இன்றும் மிக முக்கியமான இசைமரபை கொண்டிருக்கிறார்கள். பிற சாதியினரும் இசைப்பயிற்சி கொண்டிருந்தனர். இன்று பிராமணர்களில் ஒரு சிறுசாரார் தவிர பிறர் இசைப்பயிற்சியைக் கைவிட்டுவிட்டனர் என்பதனால் அவர்களிடம் மட்டும் அது எஞ்சியிருக்கிறது என்பதுதான் உண்மை. கேட்பவர்கள் அய்யர்களே அதிகம் என்றிருக்க பாடுபவர்களிலும் அமைப்புகளிலும் அய்யர்களுக்கு மேலாதிக்கம் இருப்பது தவிர்க்கமுடியாதது

சென்ற நூற்றாண்டில் தமிழிசை இயக்கம் இங்கே வீச்சுடன் எழுந்தது. தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் அதன் முதற்புள்ளி. தண்டபாணி தேசிகர், குடந்தை சுந்தரேசனார் , சேலம் ஜெயலட்சுமி வரை தமிழிசை ஆய்வாளர்களின் நீண்ட வரிசை ஒன்று உள்ளது. [நான் நண்பர்களுடன் நடத்திய சொல்புதிது மும்மாத இதழில் 2000 தில்தமிழிசைச் சிறப்பிதழ் ஒன்று வெளியிட்டோம்]

தமிழிசை இயக்கத்தின் நோக்கங்கள் இரண்டு. ஒன்று, தமிழ்ச் செவ்வியல் இசையின் வரலாற்றை எழுதுவது . இரண்டு, மக்களிடம் பரவலாக மரபிசையைக் கொண்டுசெல்வது. இதில் முதல்பணி மிகவெற்றிகரமாகவே முடிந்திருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் வாசிக்க எப்படியும் நூறு நூல்களைச் சுட்டிக்காட்டமுடியும். ஆனால் மக்களிடையே கொண்டுசெல்லும் பணி நேரடியாக பெரும்பாலும் வெற்றிபெறவில்லை

அதற்கான காரணங்கள் பல. முதன்மைக்காரணம், மரபிசையின் சாரமாக இருந்த பக்தி.மாறிவந்த வாழ்க்கைச்சூழலில் பக்திக்கான இடம் குறைவே. ஆகவே மரபிசையும் பக்தி இசையாகச் சுருங்கியது. அதைத்தவிர்க்கவே ‘தாமரைபூத்த தடாகமடி’ [தண்டபாணி தேசிகர்] போன்ற இசைப்பாடல்கள் இங்கே உருவாயின. [இதைத்தான் 2015ல் டி.எம் கிருஷ்ணா புதியதாகக் கண்டுபிடித்து ஆக்ரோஷமாக தி இண்டுவில் பேட்டி கொடுத்தார்]

பலவகையான முயற்சிகள் நிகழ்ந்தன. ஆயிரக்கணக்கான தமிழிசைப்பாடல்கள் உருவாக்கப்பட்டன.மறைந்துபோன தமிழிசை மூவரின் பாடல்கள் மீண்டும் ஸ்வரப்படுத்தப்பட்டு பாடப்பட்டன.

அவை மொழிவெறியால் உருவாக்கப்பட்டவை அல்ல, மொழிவெறி கலையை உருவாக்காது. அவை மக்கள் பேசும் மொழியில் அவர்கள் வாழும் வாழ்விலிருந்து இசை உருவாகவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டவை. அவை பலவகையிலும் மக்களிடம்கொண்டுசெல்லப்பட்டன தமிழிசைமன்றங்கள் அவ்வாறு உருவானவைதான்

நேரடியாக அல்லாவிட்டாலும் தமிழிசை இயக்கத்தின் பணியால்தான் இன்று மக்களிடையே மரபிசை நீடிக்கிறது. தமிழிசைப்பாடல்களை சற்று இசையார்வமுள்ளவர்கள் பாடிக்கொண்டிருக்கிறார்கள். மதுரை சோமு,மகாராஜபுரம் சந்தானம் முதல் இன்று சஞ்சய் சுப்ரமணியம் வரை தமிழிசைப்பாடல்களை புதிது புதிதாக பாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்

இவ்வளவு பெரும்பணி நடந்திருக்கிறது இங்கே. மகத்தான முன்னோடிகள் பலர் இதில் செயல்பட்டிருக்கிறார்கள்.அத்தனைக்குப் பின்னரும் மரபிசை போதிய அளவில் பரவவில்லை என்றால் அதற்கு மேலும் நுட்பமான பண்பாட்டுக்காரணிகள் இருக்கலாம். களத்தில் இறங்கிப் பணியாற்றுபவர்கள் மட்டுமே அதைக் கண்டறிய முடியும், கடக்கமுடியும். அது ஒரு பெரும்பணி. சவாலான பணி.

மரபிசையை சாமானிய மக்கள் ரசிக்கமுடியாது. ஆனால் அனைத்து மக்கள்தரப்பிலிருந்தும் மரபிசையை பாடவும் ரசிக்கவும் கூடிய ஒரு தரப்பை உருவாக்கி எடுக்கமுடியும். அப்படி உருவாகி வந்தால்மட்டுமே மரபிசை அது இன்றிருக்கும் பஜனைமடச் சூழலில் இருந்து, சாதி அடையாளத்தில் இருந்து வெளிவர முடியும்

அதற்கு மரபிசையின் இலக்கணத்தை, ரசனைமுறையை தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் ஆர்வமுடையவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். அமைப்பு ரீதியான தொடர் முயற்சிகள் தேவை.

அனைத்துக்கும் அப்பால் ஒன்றுண்டு. மரபிசையின் வளர்ச்சிப்போக்கில் அது மேலும் மேலும் இலக்கணமாகக் குறுகி சிறிய வட்டத்திற்குள் சென்றுவிட்டது. அதற்கும் நாட்டார் மரபுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி விழுந்துவிட்டது. ஆகவே அது முற்றிலும் அன்னியமாக உள்ளது மக்களின் செவிகளுக்கு. அந்த இடைவெளியை படைப்பூக்கத்துடன் நிரப்பியாகவேண்டும். அதைச்செய்ய தமிழிசை இயக்கத்தால் முடியவில்லை. அது போதிய அளவு வெற்றிபெறாது போனது இதனால்தான் என்பதுஎன் எண்ணம்.

இது எல்லா செவ்வியல்கலைகளுக்கும் நிகழ்வதே. நம் கவிமரபையே பாருங்கள். சங்ககாலத்தில் இறுதியில் செய்யுள்வடிவம் இறுகியது. இலக்கணமாக ஆயிற்று. சிலப்பதிகாரம் அதை உடைத்து கானல்வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை என நாட்டார் வடிவங்களை உள்ளே கொண்டுவந்தது. தமிழ்மரபு மீண்டும் புத்துயிர் பெற்றது.

இறுதியாக பாரதியின் காலகட்டத்தில் கவிராயர்களால் செய்யுள் என்பது யமகம், மடக்கு, சித்திரகவி, இரட்டுற மொழிதல் என்றெல்லாம் கணக்கு வழக்காக ஆக்கப்பட்டிருந்தது. வாராது வந்த மாமணி என வந்தவன் அதை உடைத்தான். நாட்டுப்புறவழக்கிலேயே கவிதை எழுதி மீண்டும் நம் மரபுக்கு உயிர்கொடுத்தான்.

ஆக, வரலாற்றின் போக்கில் இருபெரும் இசை மரபுகளுக்கிடையே உருவான பெரிய இடைவெளியே பிரச்சினை. சபாவில் வந்து பாட்டுகேட்க குப்பத்து மக்களால் முடியவில்லை என்பதல்ல. அய்யரும் அய்யங்காரும் வந்து தெருவில் பாடவில்லை என்பதும் அல்ல. நுண்ணிய கள ஆய்வு மூலம், முழுமையான மரபுப்பயிற்சி மூலம், ஒட்டுமொத்தப் பண்பாட்டுப் பார்வைமூலம் சீர்செய்யவேண்டியது அது.

இதை எதையுமே உணராமல் ஒருவர் காலையில் எழுந்து சென்னை குப்பத்தில் ஒரு சாலையில் குந்தி தொடையில் தட்டி சபா சங்கீதத்தைப் பாடுகிறார். கர்நாடக இசையை மக்களிடம் கொண்டுசெல்கிறேன் என குடும்பநாளிதழில் ஆங்கிலக்கட்டுரை எழுதுகிறார். இசைமூலம் சமூகப்பிளவை இணைத்த சமூகப்பணிக்காக உலகப்புகழ்பெற்ற பரிசை ‘வென்றெடுக்கிறார்’. தமிழிலன்றி வேறெங்காவது இந்த அபத்தம் நிகழுமா என்ன?

உண்மையான பண்பாட்டு அக்கறை இருந்தால் சிலநாட்களிலேயே தெரிந்துகொள்ளக்கூடிய வரலாற்றுப்பின்னணி இது. களமிறங்கி ஏதேனும் செய்யத்தொடங்கினால் மிக எளிதில் கைகூடும் தெளிவு இது. அது ஏதுமில்லாமல் பிராமண உட்சாதி அரசியல், சுயமுன்னேற்ற உத்திகள் , ஊடகவெறி என சென்றுகொண்டிருக்கும் ஒருவரிடம் இதையெல்லாம் சொல்லிப்புரியவைக்க என்னைப்போன்ற ஒருவரால் முடியாதுதான். மேலும் டி.எம்.கிருஷ்ணா செல்லும்பாதை இந்தியாவில் மிகவெற்றிகரமானது என நிரூபிக்கப்பட்டது. அவருக்கு வானமே எல்லை. என்ன செய்யமுடியும்?

ஜெ

 

 

பழைய கட்டுரைகள்

தமிழிசை இருபார்வைகள்

தமிழிசை மேலும் ஒரு கடிதம்

தமிழிசையா?

தமிழிசையும் ராமும்

தமிழிசை காழ்ப்பே வரலாறாக

தமிழிசையும் ஆபிரகாம் பண்டிதரும்

கர்நாடக சங்கீதம் சுருக்கமான வரலாறு

முந்தைய கட்டுரைகாட்சன் சாமுவேல் எங்களுடன் கல்லூரியில்- லோகமாதேவி
அடுத்த கட்டுரைஇசையை அறிதல்