அஞ்சலி-மகாஸ்வேதா தேவி

mahasweta-devi

 

மகாஸ்வேதா தேவியின் காட்டின் உரிமை என்னும் நாவல் வழியாக [ஆரண்ய அதிகார், தமிழாக்கம் சு கிருஷ்ணமூர்த்தி, சாகித்ய அக்காதமி வெளியீடு] நான் அவரை முதலில் அறிமுகம் செய்துகொண்டேன். வங்க இலக்கியத்தில் பெரும் ஆர்வம் கொண்டிருந்த அந்த வயதில் அந்நாவல் ஏமாற்றத்தையே அளித்தது. அது ஒரு பிரச்சார நாவல். வங்காள மலைவாழ்மக்கள் அவர்களின் வாழ்விடங்களிலிருந்து அகற்றப்படுவதைப் பற்றியது.

அந்நாவலுடன் ஒப்பிடத்தக்க படைப்பு விபூதிபூஷன் பந்த்யோபாத்யாயவின் வனவாசி [ஆரண்யக், தமிழாக்கம் த நா குமாரசாமி, நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு] காட்டின் உரிமையை வாசித்த மறுநாளே இதை வாசித்தேன். இதிலும் காடுதான். ஆனால் அரசியல்காடு அல்ல. அதிலும் சந்தால்கள் தங்கள் பூர்வநிலத்தை இழப்பதன் வலிமிக்கச் சித்திரம் உள்ளது. சந்தால்களின் இளவரசியான பானுமதியை நிலவில் காணும் காட்சி இத்தனை ஆண்டுகளுக்குப்பின்னரும் துல்லியமாக நினைவுள்ளது. சந்தால் மன்னர்களின் கல்லறைகளை என்னால் பார்க்கமுடிகிறது.

அந்த வயதிலேயே கலைக்கும் பிரச்சாரத்திற்கும் உறவை தெளிவுபடுத்திய நாவல்கள் இவை. கலை வாழ்க்கையை செறிவுபடுத்துகிறது. அதன் மையமாக உள்ள சிக்கலை, முரணியக்கத்தை, வலைப்பின்னலை நோக்கிக் கொண்டுசெல்கிறது. பிரச்சாரம் வாழ்க்கையை எளிமைப்படுத்துகிறது. குறுக்குகிறது. ஆசிரியர் கொண்டுள்ள ஒரு நோக்கம் நோக்கிச் செலுத்துகிறது. கலை மேலும் மேலும் வளர்ந்து செல்கிறது. பிரச்சாரம் சொல்லவந்ததைச் சொல்லிவிட்டு நின்றுவிடுகிறது. கலைக்கு காலமில்லை. காலமாறுதலில் அது மீண்டும் புதியதாகப்பிறந்தெழுகிறது. பிரச்சாரம் காலத்துடன் பிணைந்த உண்மையை மட்டுமே வெளிப்படுத்துகிறது. அதன்பின் அது தொல்லியல் சான்றாக மாறி நின்றுவிடுகிறது

மகாஸ்வேதாதேவி உண்மையான களப்போராளி. சந்தால்களுடனும் அடித்தள மக்களுடனும் அவர்களின் வாழ்க்கையில் கலந்து போராடி மீண்டவர். அவர் எழுதியவற்றில் பாவனை இல்லை. பொய் இல்லை. அவை அவரது வாழ்க்கையின் ஆவணங்கள்.அவரது நீதியுணர்வு நெருப்பு போன்றது. ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிரான அவரது அறைகூவல்களை சினம் கொண்டு எழுந்த ஓர் அன்னையின் முழக்கமாகவே காண்கிறேன். துர்க்கையின் மண்ணிலிருந்து எழுந்து வந்தவர் அவர். இந்திய இலக்கிய உலகில் பிரச்சார இலக்கியத்தின் உச்சகட்டம் என ஒன்று உண்டு என்றால் அது மகாஸ்வேதாதேவியின் புனைகதைகளே.

ஆனாலும் அவை கலையாக ஆகவில்லை. அவை மானுடரை அவர்களின் நுண்மைகளுடன் தொட்டு அள்ளி வைக்கவில்லை. தருணங்களை வரலாற்றுப்பெருக்கில் வைத்துக் காட்டவில்லை. அவை மகாஸ்வேதாதேவியைக் கடந்து செல்லவே இல்லை.

எண்பதுகளில் காயத்ரி ஸ்பிவாக் மொழியியல் அறிஞராக உலகப்புகழ்பெற்றார். அவர் மகாஸ்வேதா தேவியை உலகமெங்கும் கொண்டுசென்றார். இந்தியாவில் பணியாற்றும் தன்னார்வக்குழுக்களுக்கு மிகவும் பிடித்தமான படைப்பாளி மகாஸ்வேதா தேவிதான். அவரைப்பற்றி ஐரோப்பிய மொழிகளில் ஏராளமாக எழுதப்பட்டது. அவரை நோபல் பரிசு வரை கொண்டுசென்று முன்வைத்தார் காயத்ரி ஸ்பிவாக். ஆனால் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டபோதும் அவருக்கு அது அளிக்கப்படவில்லை.

இந்தியாவில் சாத்தியமான அனைத்து விருதுகளையும் மகாஸ்வேதா தேவி பெற்றிருக்கிறார். இந்தியமொழிகள் அனைத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறார். பின்னாளில் மகாஸ்வேதாதேவியை முன்மாதிரியாகக் கொண்ட பல படைப்பாளிகள் உருவாகிவந்தனர். ஒருபக்கம் களப்பணி மறுபக்கம் இலக்கியம். ஒன்று, இன்னொன்றை ஆதரிக்கும். உதாரணம் சுகதகுமாரி,பிரதிபா ராய். 

ஆனால் அவர்களில் மகாஸ்வேதாதேவி போன்ற பெரும் தியாகவாழ்க்கையை வாழ்ந்தவர்கள், போராடியவர்கள் மிகச்சிலரே. கணிசமானவர்கள் தன்னார்வக்குழுக்களுக்காக எழுதியவர்கள். தன்னார்வலக்குழு நடத்தியவர்கள். அவர்களும் மகாஸ்வேதா தேவி சென்ற பாதையில் சென்று பரிசுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றனர்.

நெடுநாட்களுக்குப்பின் மகாஸ்வேதாதேவியின் ஹஸார் சௌராஸி கி மா என்னும் நாவலை மலையாளத்தில் வாசித்தேன். [அவரது எல்லா நாவல்களும் மலையாளத்தில் கிடைக்கின்றன. ஹாஸார் சௌராஸி கி மா தமிழில் 1084ன் அம்மா என்ற பேரில் சு.கிருஷ்ணமூர்த்தியால் மொழியாக்கம் செய்யப்பட்டு வந்துள்ளது.கோவிந்த் நிஹலானி இதை சினிமாவாக எடுத்திருக்கிறார். 1084 என அடையாளப்படுத்தப்பட்ட ஒரு நக்சலைட்டின் சடலத்தின் அம்மாவைப்பற்றிய நாவல். இந்த நாவலின் பாதிப்பு ஜான் அப்ரஹாமின் அம்ம அறியான் என்னும் சினிமாவில் உண்டு]

வலுவான கதைக்கோவை கொண்ட நாவல். ஆனால் வாழ்க்கை நுணுக்கங்களுக்குப் பதிலாக, மானுட உணர்ச்சிகளுக்கு பதிலாக, வரலாற்று உண்மைகளுக்குப் பதிலாக ஒற்றைப்படையான அறச்சீற்றத்தை மட்டுமே முன்வைக்கும் இந்நாவல் நான் அவரைப்பற்றி எண்ணியது சரிதான் என மீண்டும் உறுதிப்படுத்தியது.

மகாஸ்வேதா தேவி இந்தியாவின் களப்பணிப் படைப்பாளிகளில் மிகச்சிறந்தவர் என சொல்லலாம். ஆனால் ஆஷாபூர்ணா தேவியைப்போல வங்கத்தின் ஆன்மாவை எழுதிய படைப்பாளி அல்ல.

மகாஸ்வேதாதேவிக்கு அஞ்சலி

 

 

வனலீலை

முந்தைய கட்டுரைகபாலியும் தலித் அரசியலும்
அடுத்த கட்டுரைஇசை,டி.எம்.கிருஷ்ணா-கடிதங்கள்