‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12

[ 19 ]

சௌனகர் சொல்லிவிட்டு கைகூப்பியபடி அமர்ந்ததும் அவையில் முழுமையான அமைதி நிலவியது. காத்யாயனரும் மாணவர்களும் தங்களுக்குள் எழுந்த அஸ்தினபுரியிலேயே நெடுநேரம் இருந்தனர். தௌம்யர் “அஸ்தினபுரியிலிருந்து கிளம்பி இரவு கருமைகொண்ட பின்னரே கங்கைக்கரையை அடைந்தோம். அங்கே ஒரு குறுங்காட்டில் மரங்களின் அடியில் இரவு தங்கினோம். நாங்கள் ஊர்களுக்குள் செல்லக்கூடாதென்பதனால் காட்டுக்கனிகளையும் கிழங்குகளையும்தான்  உண்ணவேண்டியிருந்தது. சமைப்பதற்குரிய கலங்களோ போர்வைகளோ எங்களிடமிருக்கவில்லை. ஏனென்றால் அஸ்தினபுரியிலிருந்து எதையும் எடுத்துவரக்கூடாதென்பது நெறி” என்றார்.

“அன்றிரவுதான் திரௌபதி முதல்முறையாக காட்டில் திறந்தவெளியில் தங்குகிறாள். காடும் வெளியும் எங்களுக்குப் புதியவை அல்ல என்பதனால் நாங்கள் உண்மையில் இப்பயணத்தை மகிழ்வுடனேயே அறிந்தோம். நகரின் ஓசைகளைப் பின்னிட்டபோதே எங்கள் உளநிலை மாறிவிட்டது. இளையோர் மெல்லிய வேடிக்கைகளை சொல்லத் தொடங்கினர். மந்தன் பெருமரங்களில் தொற்றி ஏறி எங்கள் தலைக்கு மேலேயே பறக்கும் கந்தர்வனைப்போல வந்துகொண்டிருந்தான். விஜயன் கனிகளை அம்புதொடுத்து வீழ்த்திக்காட்டினான். நாங்கள் அதை இவளும் மகிழ்வுடன் ஏற்கிறாள் என்றே எண்ணியிருந்தோம்” என்றார் தருமன்.

ஆனால் கங்கைக்கரையில் ஒரு சாலமரத்தடியில் இரவு தங்குவதற்காக அமர்ந்தபோதுதான் இவள் மிகவும் சோர்ந்திருப்பதை கண்டேன். உடல் வியர்வையில் குளிர்ந்திருந்தது. “நமது தங்குமிடத்திற்குச் செல்ல இன்னும் எத்தனை நேரமாகும்?” என்று கேட்டாள். நான் திகைப்புடன் “இதுதான் நமது தங்குமிடம்…” என்றேன். “இந்த மரத்தடியா?” என்றாள். “ஆம்” என்றேன். அவள் சுற்றிலும் பார்த்தாள். வேர்புடைப்புகள் நிறைந்த நிலம். “இங்கே எப்படிப் படுப்பது?” என்றாள். “ஏன்? இங்கே என்ன?” என்றேன். “வேர்களின்மேல் படுப்பது எப்படி?” என்றாள். நான் அப்போதுதான் அவள் விழிகளை பார்த்தேன். அவள் திகைப்பை என்னால் புரிந்துகொள்ளமுடிந்தது.

பீமன் “நாங்கள் இதன்மேல்தான் படுப்போம். ஆனால் நீ விரும்பினால் நான் உனக்கு சிறந்த படுக்கையை செய்து தருகிறேன்” என்றபடி எழுந்தான். “என்ன செய்யப்போகிறாய் மந்தா?” என்றேன். அவன் புன்னகையுடன் காட்டுக்குள் புகுந்தான். கொடிகளையும் வேர்ப்பட்டைகளையும் வெட்டிவந்தான். இரு மரங்களுக்கு நடுவே கொடிகளை இழுத்துக்கட்டிப் பின்னி ஒரு தூளியை செய்தான். அதன்மேல் மென்மையான இலைகளைப் பரப்பி மெத்தையாக்கினான். “இதில் படு. உன் அரண்மனை மஞ்சமளவுக்கே மென்மையானது” என்றான்.

நான் கங்கையில் இறங்கி நீராடி அந்திவணக்கங்களை முடித்துவிட்டு திரும்பிவந்தேன். அவர்கள் உணவுண்டுகொண்டிருந்தனர். பீமன் சுட்டுக்கொடுத்த கிழங்குகளையும் கனிகளையும் அவள் முன் கண்டேன். விழிதாழ்த்தி எங்கோ இருப்பவள் போலிருந்தாள். பீமன் “அருந்து… இவையே நல்லுணவுகள். மானுட உடலை தேவர்களுக்கிணையாக எடையில்லாது ஆக்குபவை” என்றான். அவள் மெல்ல விரல்களால் பிரித்து உண்பதை பார்த்துக்கொண்டிருந்தபோது அவள் உள்ளம் என்ன எண்ணுகிறது என என்னால் உணரமுடியவில்லை.

ஒருசொல்லும் இன்றி அவள் எழுந்து மஞ்சத்தில் படுத்துக்கொண்டாள். உண்மையிலேயே அது மிகச்சிறந்த படுக்கைதான். ஆனால் அவள் துயிலின்றி புரண்டு புரண்டு படுப்பதை இருளுக்குள் கேட்டேன். இளையோர் அனைவரும் உறங்கிவிட்டனர். அவளும் நானும் மட்டும் துயிலாதிருந்தோம். பெருமூச்சுகளாக விட்டுக்கொண்டிருந்தாள். பின்பு அவள் எழுந்து அமர்வதை கேட்டேன். என்னை அழைக்கப்போகிறாள் என்று தோன்றியது. உடனே அவள் எவரை அழைப்பாள் என்று பார்ப்போம் என எண்ணினேன். “இளையவரே” என அவள் பீமனை அழைத்தபோது வேறெவரை அழைப்பாள் என்று தோன்றியது.

ஆனால் பீமன் அங்கில்லை என உணர்ந்தேன். அவன் இருளுக்குள் ஓசையில்லாது நழுவி காட்டுக்குள் சென்றுவிட்டிருந்தான். நான் “என்ன?” என்றேன். “குளிர்கிறது” என்றாள். என்ன செய்வது என எனக்குத் தெரியவில்லை. என்னிடம் ஆடையாக இடையிலணிந்த மரவுரி அன்றி வேறேதுமில்லை. “நெருப்பிடவா?” என்றேன். “வேண்டாம். அவர்கள் துயிலட்டும்” என்றாள். மேலும் ஏதாவது அவளிடம் சொல்லவேண்டுமென எண்ணினேன். ஆனால் என் நா எடைமிக்கதாக மாறிவிட்டிருந்தது.

இருவரும் இருளுக்குள் விழித்திருந்தோம். எத்தனை தொலைவு இருவருக்கும் நடுவே என உணர்ந்தபோது எனக்கு திகைப்பாக இருந்தது. பகலொளியில் அந்தத் தொலைவை விழியால் கணக்கிடுகிறோம். அண்மை என்கிறது அது. நடுவே இருப்பவை பொருள்களே என்கின்றது. இருளில் அது சித்தத் தொலைவு. நடுவே விரிந்திருப்பது அலகிலி. நான் பெருமூச்சு விட்டேன். சற்றுநேரம் கடந்து அவள் பெருமூச்சுவிட்டாள். பெருமூச்சுகளால் உரையாடிக்கொண்டோம்.

நான் அப்போதுதான் துருவமீனை பார்த்தேன். முதற்கணம் அதுவும் இடம்மாறுவதாகவே எனக்குப் பட்டது. விழியிமைக்காது அதையே நோக்கிக்கொண்டிருந்தேன். அதன் ஒளி கூடிக்கூடிவந்தது. அது மட்டும் மிக அருகே வந்து என்னருகே நின்றது. கைநீட்டி அதைப் பிடிக்கமுடியும் என்பதைப்போல. நிலைபேறு என்று சொல்லிக்கொண்டேன். மண்ணிலுள்ள அனைத்து அசைவுகளையும் அளக்கும் நிலைபெயராமை. அதை அவளுக்குக் காட்டவேண்டும் என நினைத்தேன். ஆனால் என்னால் என் உடலுக்குள் புகுந்துகொள்ளமுடியவில்லை. இருளுக்குள் ஒரு எண்ணப்படலம் போல நான் பரவியிருந்தேன்.

மரக்கிளைகள் வழியாக பீமன் வருவது தெரிந்தது. மண்ணில் அவனுடைய பேருடல் இறகுபோல இறங்கி அமரும் விந்தையை கேட்டேன். மெல்ல வந்து தன் சருகுப்படுக்கையை அவன் அணுகியபோது திரௌபதி “இளையவரே” என்றாள். “என்ன?” என்று அவன் கேட்டான். “குளிர்கிறது” என்றாள். “எனக்கும் குளிர்ந்தது. ஆகவேதான் கங்கையில் போய் ஒரு முழுக்கு போட்டுவிட்டு வந்தேன். வா!” என்றான்.

அவள் அய்யோ என்று பதறியபோது அவன் அவளை இருகைகளாலும் அள்ளி சுழற்றித்தூக்கி தோளிலேற்றிக்கொண்டு விழுதொன்றைப்பற்றி ஆடி மேலே சென்றுவிட்டான். “அய்யோ அய்யோ வேண்டாம்” என்னும் அவள் குரலை மேலே கேட்டேன். அவர்கள் மறைந்ததும் மெல்ல எழுந்து அமர்ந்தேன். அப்பால் விஜயன் புரண்டுபடுத்து “கவலைவேண்டாம் மூத்தவரே, அவள் அவருடன் மட்டுமே இயல்பாக இருக்கமுடியும்” என்றான்.

அவன் அறிதுயிலன் என்பதை அப்போதுதான் எண்ணிக்கொண்டேன்.  “ஆம்” என்றேன். “எனக்கு அமைச்சர். இளையதம்பியருக்கு அன்னை. உனக்குக் காதலி. அவனுக்கு மட்டுமே தோழி.” விஜயன் நகைத்து “எனக்கு எதிரி என்றும் தோன்றுகிறது” என்றான். “அவள் கால்கள் புண்ணாக இருக்கின்றன” என்று அப்பால் நகுலன் சொன்னான். சகதேவன் “ஆம், அதற்கு ஏதாவது மருந்திடலாமென எண்ணினேன். பழகிக்கொள்வதே நன்று என்று பின்னர் நினைத்தேன்” என்றான்.

“துயிலவில்லையா நீங்கள்?” என்றேன். “மூத்தவரே, இது நாம் இறந்து பிறக்கும் இரவு அல்லவா?” என்றான் நகுலன். “இளையோரே, பன்னிரண்டு ஆண்டுகள்… எண்ணும்போது மலைப்பாக இல்லையா?” என்றேன். “இல்லை, மூத்தவரே. பெரும் விடுதலையுணர்வே எழுகிறது. எண்ணும்பொழுதெல்லாம் வஞ்சத்தை எதிர்கொண்டு வாழ்வதைப்போல துயர்மிக்கது பிறிதில்லை” என்றான் நகுலன். “அவ்வஞ்சம் நம்மிலும் நிறையலாகாது என்று காத்துக்கொள்வதற்கே கற்றவையும் பயின்றவையும் கொண்டுவந்தவையும் முழுமையாகத் தேவையாகின்றன” என்றான் சகதேவன்.  விஜயன் பெருமூச்சுடன் “ஆம், இப்போது தப்பிவிட்டோம். ஆனால் அவர்களை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும். மெல்லமெல்ல அவர்களைப்போலவே நாமும் ஆவதை எதனாலும் தடுக்கமுடியாது… ஒரு உச்சநிலையில் அவர்களுக்கும் நமக்கும் நம்மாலேயே வேறுபாடு காணமுடியாது” என்றான்.

“ஏன்?” என்று சினத்துடன் கேட்டேன். “மூத்தவரே, அவையில் நான் உரைத்த வஞ்சினத்தைத்தான் எண்ணிக்கொண்டிருக்கிறேன். சகுனியும், துரியோதனனும், கர்ணனும், பிறகௌரவரும் மண்ணாசையால் ஆட்டுவிக்கப்படுபவர்கள். அவர்களின் வஞ்சமும் அவ்வளவுக்கே எளியது. ஆனால் நாம்? அவர்களின் குலமறுக்கும் பெருவஞ்சம் கொண்டவர்களாக ஆகிவிட்டிருக்கிறோம். அவர்களை வஞ்சம் வந்து பற்றிக்கொண்டிருக்கிறது, அதை விடுவது எளிது. நாம் வஞ்சத்தை சென்று கவ்வியிருக்கிறோம். விடவே முடியாது” என்றான் பார்த்தன்.

நான் அச்சொற்களைக் கேட்டு திகைத்துவிட்டேன். “என்னையுமா சொல்கிறாய், இளையவனே?” என்றேன். “ஆம், தங்கள் உள்ளத்திலும் ஒரு கணமேனும் அந்தப் பெருவஞ்சம் எழவில்லை என்று சொல்லமுடியுமா?” என்றான். நான் சிலகணங்களுக்குப்பின் “ஆம், அன்றிரவு துயிலுக்குமுன் என் தேவி அவையில் நின்றதை எண்ணிக்கொண்டேன். என் உள்ளம் எரிந்தெழுந்தது. அவர்களின் குலம்முடிக்க வஞ்சம் கொண்டேன்” என்றேன். “அச்சொற்கள் அவர்களை எரித்துவிட்டன, மூத்தவரே. இனி எத்தனை நாட்களென்பதே வினா” என்றான் சகதேவன்.

“நாம் நம்மை தூய்மைப்படுத்திக்கொள்வோம். இந்தப் பன்னிரு ஆண்டுகாலமும் நம்மை கழுவிக்கொண்டே இருப்போம்… இந்தக் கானேகல் அதற்கென்றே நமக்கு அமைந்தது என்று கொள்வோம்” என்றேன். “இல்லை மூத்தவரே, சொல்லை எழுப்புவது எளிது. அதை வெல்லல் தெய்வங்களாலும் ஆகாது. இனி எப்போதும் நாம் நம் வஞ்சினத்திற்கு கட்டுப்பட்டவர்கள் மட்டுமே” என்றான் விஜயன். நான் நெஞ்சு கல்லென்றாக புரண்டுபடுத்து நீள்மூச்சுவிட்டேன். அதன்பின் நாங்கள் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை.

சற்றுநேரத்தில் ஈர உடையுடன் அவர்கள் திரும்பிவந்தனர். காலைக்குளிர் என்மேல் ஊசிகளைப்போல இறங்கிக்கொண்டிருந்தது. அவள் அவனிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டு உடலை மேலும் மேலும் ஒடுக்கிக்கொண்டேன். சற்றுநேரத்தில் அவர்கள் இருவரும் துயின்றுவிட்டனர். மெல்லிய மூச்சொலியை கேட்டுக்கொண்டு விடியும்வரை நான் உடலை குறுக்கிக்கொண்டே இருந்தேன். முதல்கதிரைக் கண்டதும் எழுந்து கைகூப்பினேன். என் உள்ளத்திலும் ஒளிநிறைக என்று வணங்கினேன். ஆனால் அச்சொற்கள் என் உள்ளத்தைச் சென்றடையவில்லை. அங்கு சூரியன் எழவுமில்லை.

அதன்பின் அவள் முழுமையாக மாறிவிட்டாள். எங்கள் ஐவரில் அவள் பீமனை மட்டுமே நோக்கினாள், அவனிடம் மட்டுமே உரையாடினாள். அவர்களின் தனியுலகில் சிரித்தும் விளையாடியும் அவர்கள் வாழ்வதை கண்டேன். இங்கு சௌனகக்காட்டுக்குள் நுழையும்போது அவள் என்னிடம் “நாம் மீண்டும் ஏன் மானுடர் உலகுக்குள் நுழையவேண்டும்?” என்றாள். “இது மானுடர் உலகம் அல்ல, இது வேதநிலை” என்றேன். “வேதம் மானுடரின் விழைவுகளின் பெருந்தொகை” என்றாள். “இல்லை, அது ஆழ்ந்த பொருள்கொண்டது” என்றேன். “அப்பொருள்நூல்கள் மானுடனின் அச்சத்தின் பெருந்தொகை மட்டுமே” என்றாள். பின்னர் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை.

“விழைவால் அலைக்கழிந்து அச்சத்தால் அமைந்துதான் இங்கு வந்துள்ளோம், ஆசிரியரே. இங்கு அமர்ந்திருக்கையில் அதை தெளிவாகவே உணர்கிறோம். நாங்கள் செய்யக்கூடுவதென்ன?” என்றார் தருமன். காத்யாயனர் “இன்று இரவு பிந்திவிட்டது. ஒருநாளுக்கு மிகையான சொற்கள் இவை. இவற்றை எண்ணி அடுக்கி சித்தம் சமைக்கவே பல இரவுகள் ஆகும்” என்று புன்னகையுடன் சொன்னார். “அரசே, இங்கு குருகுலத்தின் குறுங்காட்டுக்குள் கங்கையின் ஓரமாக பேராலமரம் ஒன்று நின்றுள்ளது. அதை பிரமாணம் என்று எங்கள் ஆசிரியப்பெருமக்கள் அழைத்தனர். அந்த மரத்தை நாளை உங்களுக்கு சௌனகர் காட்டுவார்.”

காத்யாயனர் கைகூப்பி கண்மூடியதும் அவரது மாணவர்கள் அமைதிப்பாடலை பாடினர். அவர் கால்தொட்டு வணங்கி ஒவ்வொருவராக அகன்றுசென்றனர். தருமனும் தம்பியரும் வணங்கியதை அவர் அறிந்ததாகத் தெரியவில்லை. நீள்மூச்சுடன் வெளியே சென்ற தருமன் அண்ணாந்து இடையில் கைவைத்து  விண்மீன்களை நோக்கி நின்றார். துருவனைக் கண்டதும் மீண்டும் பெருமூச்சுவிட்டார். சௌனகர் “உங்களுக்கான வசிப்பிடங்களை மாணவர்கள் காட்டுவார்கள், அரசே” என்றார். நகுலன் சிரித்து “நீண்டநாட்களுக்குப்பின் மேலே கூரை கவிந்திருக்க துயிலப்போகிறோம்” என்றான்.

[ 20 ]

காலை முதற்கதிர் எழும்பொழுதிலேயே யுதிஷ்டிரரும் தம்பியரும் நீராடி காலைவணக்கம் முடித்து தங்கள் குடில்முற்றத்தில் காத்திருந்தனர். சௌனகரும் ஏழு மாணவர்களும் தொலைவிலிருந்தே வணங்கியபடி வந்தனர். அவர்களின் வாழ்த்துக்கு தருமன் முகமனுரைத்தார். சௌனகர் “செல்வோம், அரசே” என்றார். அவர்கள் அவரை தொடர்ந்தனர். தௌம்யரும் அவரது பன்னிரு மாணவர்களும்  திரௌபதியும் சற்று பின்னால் தனியாக வந்தனர்.

சிறிய ஒற்றையடிப்பாதை குறுங்காட்டுக்குள் ஆடைக்குள் ஊசிநூல்போல புகுந்து வெளிவந்து மீண்டும் புகுந்தது. காலைப்பறவைகளின் ஒலி தலைக்குமேல் பெருகி நின்றது. ஒளிக்குழாய்கள் சரிந்து ஊன்றி நின்ற காட்டுப்பாதையில் மின்னி எரிந்து அணைந்து மீண்டும் மின்னியபடி அவர்கள் சென்றனர். அவர்களின் காலடியோசைகள் எங்கெங்கோ பட்டு எதிரொலித்தன.  “இவ்வழி” என சௌனகர் ஒரு சொல் உரைத்தபோது உடலில் கல்விழுந்தவர்கள் போல அவர்கள் திடுக்கிட்டனர்.

தொலைவிலேயே அவர்கள் பிரமாணத்தை பார்த்துவிட்டனர். ஆயிரம் கைகள் கொண்ட கார்த்தவீரியனைப்போல தன் கிளைகளை நீட்டி பசுந்தழைக்கூரையிடப்பட்ட பெரும் மாளிகைபோல அது நின்றது.  விழுதுகள் ஒவ்வொன்றும் அடிமரம் அளவுக்கே பருத்திருந்தன. அதன் விழுதுகளின் காட்டுக்குள் நிழல் இருளெனச் செறிந்திருந்தது. மேலிருந்து பறவைகளின் பூசல் மழையோசைபோல எழுந்துகொண்டிருந்தது.  அணுகும்தோறும் அந்த மரம் மேலெழுந்து மறைந்தது. அதன் விழுதுகள் மாளிகைத்தூண்களென்றாயின.

SOLVALAR_KAADU_EPI_12

பசுவின் வால்போல சிவந்த முனைக்கொத்துக்கள் காற்றில் ஆடிய இளைய விழுதுகள் தலைதொட்டு ஆட, வேரூன்றி மரங்களென்றான பெருவிழுதுகளுக்கு ஊடாக வளைந்து வளைந்து சென்று அங்கு புடைத்திருந்த வேர்களின் மேல் அவர்கள் அமர்ந்துகொண்டனர்.  அந்தணர்கள் அவர்களைச் சூழ்ந்து அமர்ந்தனர்.  நடுவே சௌனகர் உயர்ந்த வேர்ப்பீடம் ஒன்றில் அமர்ந்தார்.  தருமன் கைகூப்பி “அந்தணரே, தங்களிடம் இந்த மரத்தைப்பற்றி எங்களிடம் சொல்லும்படி முதன்மைச் சௌனகர் ஆணையிட்டார். நான் என் விழைவுகளையும் அச்சங்களையும் வெல்வதெப்படி என்று கேட்டதற்கு மறுமொழியென அதை அவர் சொன்னார்” என்றார்.

“அரசே, இந்த ஆலமரம் பிரமாணம் என்று பெயர் பெற்றது. சான்று என்று பொருள். நேர்ச்சான்றும் ஒப்புமைச்சான்றும் ஆகி நின்றிருக்கிறது இங்கு. இதை மூன்றாவது காத்யாயனர் இங்கே நட்டார். இதனருகே அமர்ந்து இதைச் சான்றாக்கி நால்வேதமுணர்ந்து பெற்ற தன் மெய்யறிவை அவர் மாணவர்களுக்கு அளித்தார். பின்னர் வேதம்கற்று நிறைவுறும் நாளில் மாணவர்களை இங்கு அழைத்துவந்து இதைச் சான்றாக்கி உறுதிபூணும் மரபு உருவானது. பன்னிரு தலைமுறைக்காலமாக வேதச்சான்றாக இது இங்கே நின்றுள்ளது.”

“இதன் தளிரிலைகள் வேதமோதும் நாவுகள். இதன் பச்சை இலைகள் வேதச்சொல் கேட்கக் குவிந்த செவிகள். இதன் வேர் விண்ணில் விரிந்துள்ளது. கிளைகளோ மண்ணில் பரக்கின்றன. இதன் விழுதுகள் மரங்களாகின்றன. மரங்கள் விழுதுகளாகின்றன. தனிமரமே காடானது. இதற்கு இறப்பே இல்லை” என்றார் சௌனகர். தருமன் பெருமூச்சுவிட்டார். சௌனகர் “அரசே, கேள். இத்தருணத்தில் வேதம் உனக்குச் சொல்வதென்ன என்று சொல்லும்படி ஆசிரியர் என்னை பணித்திருக்கிறார்” என்றார்.

“பார், இதோ சூழ்ந்திருக்கும் காட்டின் ஒவ்வொரு இலையும் விண்ணை நோக்கி இறைஞ்சுகிறது. நீர், விண்நீர் என. காற்று, இன்காற்று என. ஒளி, மேலும் ஒளி என. இறைஞ்சுதல் உயிர்களின் அறம் என்றுணர்க! தான் என்று உணர்ந்த அணு மறுகணம் விழைவைச் சூடுகிறது. உயிரை அளிக்கக் கோருகிறது. அன்னத்தைக் கோரிப்பெற்று உடல் சமைக்கிறது. மூச்சை அள்ளிக்கொள்கிறது. வெளிவந்ததும் மொழியை பற்றிக்கொள்கிறது. விழைவின்றி உயிர்கள் இல்லை. விழைவின் புலன் அறியும் வடிவையே உயிர் என்கிறோம்.”

“ஆகவே விழைக! வாழ்வை, வெற்றியை, புகழை, அறத்தை, வீடுபேற்றை. விழைவை வேண்டுதலாக்குக! வேண்டுதலை படையலாக்குக! வேதிக்கப்படுவதே வேதம். வேட்டலே வேள்வி. படைக்கப்படுவதைப் பெற்று விண்ணக தேவர்கள் அளிப்பதே அருங்கொடை. விண்கொடையால் சிறப்புறுக!”

“இங்குள்ள ஒவ்வொன்றும் வேள்வியில் ஈடுபட்டிருக்கின்றன என்று அறிக! மானைக் கொன்று ஊனை வாயில் கொணர்ந்து தன் மைந்தருக்கு ஊட்டிவிட்டு பசித்துக்கிடக்கும் பெண்புலி வேள்வியையே இயற்றுகிறது. கோழிக்குஞ்சை கவ்விச்செல்லும் பருந்து ஆற்றுவதும் வேள்வியே. வயலில் வியர்வையை படைப்பவனும் போர்க்களத்தில் குருதி வீழ்த்துபவனும் அவியளிப்பவர்களே.”

“வேட்கப்படுவதே அருளப்படுகிறது. ஆகவே அரசே,  வெற்றியையும் புகழையும் விழைக! அதன்பொருட்டு படைக்கலம் கொண்டு எழுக! குருதியெனில் குருதி, கண்ணீர் எனில் கண்ணீர், அனலெனில் அனல். அனைத்தையும் அவியாக்குக! வென்றெடுத்த நிலத்தை முடிசூடி ஆள்க! அறம்நின்று குடிகாத்து புகழ்கொள்க! ஆற்றவேண்டியதை ஆற்றியபின் அனைத்தையும் துறந்து அகம்நோக்கி அமர்ந்து உதிர்க! அதுவே உன் அறம் என்கிறது வேதம். பிறிதனைத்தும் வெறும் நடிப்புகளே.”

“இயலாமையை தன் தகுதியெனக்கொள்பவனே செயலின்மையை அறமென மாற்றிக்கொள்கிறான். தோல்வியை எந்நிலையிலும் சிறப்புறுத்துவதில்லை மெய்வேதம். வேதம் வென்றவர்களுக்குரியது. வெல்ல எழுந்தவன் கையில் படைக்கலம், நெறிச்சாலையில் கொலைவாள். காட்டுத்தீ சருகுகளை என வெற்றிக்கு உதவாத சொற்கள் அனைத்தையும் அது எரித்தழித்துவிடும். தயங்கவைப்பது இரக்கமென்றால் அது இழிந்ததே. அஞ்சவைப்பது அறக்குழப்பம் என்றால் அது பழிகொணர்வதே. பின்நோக்கச் செய்வது அன்பு என்றால் அது வெறுக்கத்தக்கதே.”

“வெல்க! அடைக! நிறைக! அதுவே வேதமெய்ப்பொருள் என்றுணர்க! நீ அரசன் என்றால் ஆட்சியே உன் முதன்மைவேள்வி. அறத்தில் நிற்றலே நீ அளிக்கும் அவி. அறம் தழைக்கும் மண்ணில் திகழ்வது வேதம். வேதத்தை வாழச்செய்க என்பதே வேதம் அளிக்கும் அறைகூவல்” சௌனகர் சொன்னார்.

“ஆனால் விழைவே துன்பத்தை அளிக்கிறதென்பதும் உண்மை. எனவே துன்பமில்லாமல் உயிர்களுக்கு வாழ்க்கையில்லை என்று உணர்க! துன்பத்தை முற்றிலும் விட எண்ணும் முனிவர் விழைவை முழுதும் கைவிடுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையை முழுமையாக இழந்து சருகுகளைப்போல் மண்ணில் உதிர்கிறார்கள். இன்மையென்றாகி வெட்டவெளியில் உதிர்தலே அவர்களின் அறம்.”

“இன்பத்தை மட்டும் விழைபவன் வேதம் புரப்பவன் அல்ல. துன்பமும் வாழ்க்கையே என்றுணர்ந்து அதையும் வேட்பவனே வேதத்திற்கு இனியவன். நெறியின் பொருட்டு துன்பம் கொள்வதும் இனியதே. நன்றின்பொருட்டு விடும் கண்ணீர் தூய நெய்யென வேதநெருப்பை கிளர்ந்தெழச்செய்கிறது. அறத்தின் பொருட்டு சிந்தப்படும் குருதி உலர்ந்த விறகென வேதக்கனலாகிறது” என சௌனகர் தொடர்ந்தார்.

“தன்பொருட்டு மட்டும் கொள்ளும் விழைவே திருஷ்ணை எனப்படுகிறது. உயிர்களனைத்தையும் ஆட்டுவிக்கும் பெருவிசை அதுவே. புள்ளும் புழுவும் அச்சரடால் கட்டப்பட்டுள்ளன. கைகளும் கால்களும் சிறகுகளும் துடுப்புகளும் கொம்புகளும் அதனால்தான் ஆட்டுவிக்கப்படுகின்றன. விழைவிலிருந்து விலக உயிர்களால் ஆகாது. ஆனால்  திருஷ்ணையிலிருந்து விடுபடுபவனே சிறந்த அரசன். அவனை ராஜரிஷி என்று கொண்டாடுகின்றனர் வைதிகர்.”

“மிதிலையின் ராஜரிஷியான ஜனகனை வணங்குக! அரசே, அறத்தின்பொருட்டு கொள்ளும் விழைவே திருஷ்ணையிலிருந்து விடுபடும் வழி என்று அறிக! இது இங்கு ஆற்றப்படுவதற்கு நான் கருவியாகியுள்ளேன் என உணர்பவன் இதுவே நான் என்று உணரமாட்டான். இது என் விழைவு என்றும் அவன் சொல்லமாட்டான். நீ புலி இரையைத் தேடுவதைப்போல அரசை நாடினால் துயரையே சூடுகிறாய். எரி விறகை அணுகுவதைப்போல சென்றாய் என்றால் அத்துயர் உன்னுடையதல்ல. உன் அறமே நீ!”

“வேள்வி, கல்வி, கொடை, தவம், உண்மை, பொறுமை, புலன்வெல்லல், விழைவின்மை என்னும் எட்டுவகை ஒழுக்கங்களும் தன்னிலிருந்து தன்னை விலக்குவதன் வழியாகவே நிகழும். தன்னை ஆட்டுவிக்கும் பெருவிசையே தானென்னும் உணர்வு என்று உணர்வதொன்றே அவ்வாறு விலகிக்கொள்வதற்கான வழியாகும். உன்னை வழிநடத்துவது நீ கொண்ட அறமே ஆகுக! ஆம், அவ்வாறே ஆகுக!”

சௌனகர் கைகூப்பி ஓங்கார ஒலியெழுப்பி பேச்சை முடித்தார். யுதிஷ்டிரர் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். இலைகளினூடாக காற்று பெருகிச்செல்லும் ஒலி அவர்களை சூழ்ந்திருந்தது.

முந்தைய கட்டுரைஇசை, டி எம் கிருஷ்ணா -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஞானக்கூத்தன் – தமிழ் ஹிந்து- கடிதம்