கபாலியும் தலித் அரசியலும்

1

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்கள் சிங்கப்பூர் பயணம் மகிழ்ச்சி அளிக்கிறது. தங்கள் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

கபாலி வெளியீட்டுக்கு பிறகு இணையத்தில் விவாதிக்கப்படும் கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு எட்டியிருக்கும் என எண்ணுகிறேன். அது சம்பந்தமான எனது ஐயத்தை தெளிவுப்படுத்த வேண்டுகிறேன்.

ரஞ்சித் தனது படங்களில் வலுக்கட்டாயமாக தலித் அரசியலை சித்தரிக்கிறார் என்று ஒரு சாரரின் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. அதுவும் கபாலிக்கு பிறகு இவ்விமர்சனம் அதிகமாகியிருக்கிறது.

மற்றோரு விமர்சனம் அம்பேத்கரை தன் படங்களில் இடம்பெற செய்வதன் மூலம் தான் பேசுவது தலித் அரசியல் என திணிக்க முயல்கிறார் என்பது. இடைநிலை சாதியிலிருந்து வந்தவர்கள் முத்துராமலிங்கத்தேவர் அவர்களையோ காமராசர் அவர்களையோ தன் சாதிய பாசத்தினால் தூக்கிப்பிடிப்பதற்கும் ரஞ்சித் அம்பேத்காரை முன்னிலைப்படுத்துவதற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பது அவர்கள் வாதம்.

தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்கள் அம்பத்காரை தங்களின் சமூகத்தின் அடையாளமாகப் பார்ப்பதை சாதிய நோக்கமாகப் பார்க்க வேண்டுமா?

இடைநிலை சாதியினரின் அரசியலையும் தலித் அல்லது ஒடுக்கப்பட்டவர்களின் அரசியலையும் ஒரே கண்ணோட்டத்தோடு அணுக வேண்டுமா?

மேலும் இக்காலக்கட்டத்தில் சினிமா போன்ற பரவலான, எளிதில் மக்களை சென்றடையும் ஊடகத்தில் தலித் அரசியல் பேசுவதன் முக்கியத்தும் என்ன? ‘அடங்கலாம் முடியாது… அதெல்லாம் அந்த காலம்’ என்ற வசனம் பலரை சீண்டியிருப்பது வெளிப்படையாக தெரிகிறது.

தங்களின் பதிலுக்காக…

பாலாஜி சி

 

அன்புள்ள பாலாஜி,

அத்தனை வணிக சினிமாவிலும் ஒரு பிரச்சார அம்சம் இருக்கும். அது ராம்போ அல்லது அவதார் ஆக இருந்தாலும் சரி. பராசக்தி அல்லது அந்நியன்  ஆக இருந்தாலும் சரி. ஆகவே கபாலியில் மட்டும் பிரச்சாரம் இருக்கிறது என்று சொல்பவர்கள் அந்தப்பிரச்சாரத்துடன் உடன்பட முடியவில்லை என்று மட்டும்தான் சொல்கிறார்கள்

வணிக சினிமா ஒரு கலவை. அதில் வேடிக்கைகள், உணர்வெழுச்சிகள், சமூகக்கோபங்கள் அல்லது கருத்துக்கள் கலக்கப்பட்டிருக்கும். அக்கலவை இயற்கையானது அல்ல. ஆகவே அனைத்துமே  ‘திணிக்கப்பட்டவை’ மட்டுமே. இங்கல்ல ஹாலிவுட் காவியமான ‘அவதார்’ படமே ஆனாலும் கூட. கபாலியில் அந்தப்பிரச்சாரம் மிக மென்மையாகவே சொல்லப்பட்டுள்ளது என்றே நான் அறிந்தேன். நான் இன்னும் படம் பார்க்கவில்லை

தமிழ் சினிமா உலகில் தலித் அரசியல் இதுவரை பேசப்பட்டதில்லை. ரஞ்சித் அதற்காகவே முக்கியமானவர். கதாநாயகனை உயர்குடியினன் ஆக மட்டுமே காட்டவேண்டும் என ஒரு எழுதப்படாத சட்டமே தமிழ் சினிமாவில் இருந்தது. இன்றும் ஓரளவு உள்ளது. சாதிக்குறிப்பு இல்லாமல் ராஜா, கோபால் என்றெல்லாம் கதாநாயகனுக்குப் பெயர் இருக்கும். ஆனால் எங்கோ ஓர் இடத்தில் அவன் பிள்ளைவாள் அல்லது முதலியார் என்று குறிப்பு இருக்கும். அவன் அப்பா பெயருடன் சாதி இருக்கும். உறவினர் பெயர் சாதியொட்டுடன் இருக்கும். அல்லது செட் அமைப்பில் சாதிக்குறிப்பு இருக்கும்

சின்னப்பாதேவர் படமெடுத்தபோதேகூட தேவர்  இளைஞன் கதாநாயகன் ஆகவில்லை.நடித்தவரே அகமுடையாராக இருந்தபோதும் அது நிகழவில்லை. பட்டிக்காடா பட்டணமா அவ்வகையில் ஒரு விதிவிலக்கு. மிகப்பிந்தித்தான் தமிழில் நடுச்சாதியடையாளம் கொண்ட கதாநாயகர்கள் வரத்தொடங்கினர். அச்சாதியின் பெருமையும் அரசியலும் பேசப்படலாயிற்று.

சினிமா முழுக்கமுழுக்க பின்னூட்டம் மூலம் வடிவமைக்கப்படுவது. அது ஒரு வணிகம் என்பதனால் அதுவே எதையும் பேசுவதில்லை. அது சமகாலத்தை நோக்குகிறது. அதில் புழங்குவனவற்றை பேசுகிறது. அவற்றில் எது ஏற்கப்படுகிறதோ அது மேலும்முன்வைக்கப்படும். ஏற்கப்படாதது நிராகரிக்கப்படும்.

ரஞ்சித் சமகாலச் சூழலில் இருக்கும் அடித்தளச் சாதியின் அரசியலைப்பேசும் ஒரு படத்தை முன்வைத்திருக்கிறார் என்கிறார்கள். தேவர்மகன் சின்னக்கவுண்டர் எல்லாம் வரமுடியும் என்றால் கபாலியும் வரட்டுமே. அது ஏற்கப்படுகிறது என்றே வரும் செய்திகள் காட்டுகின்றன. அவ்வேற்புக்கு அவர் ரஜினி காந்த் என்னும் அடையாளத்தைப் பயன்படுத்தியிருக்கிறார் என்றால் அது ரஞ்சித்தின் வெற்றிதான்.மேலும் கபாலிகள் வரட்டும்.

 

ஜெ

 

 

அன்புள்ள ஜெ,

நலம் தானே! பல விஷயங்கள் இருந்தும் அவற்றைப் பற்றியெல்லாம் எழுதாமல் கபாலியைப் பற்றி எழுதுகிறேனே என எண்ண வேண்டாம். இரு விஷயங்கள் எனக்கு உங்களிடம் பகிர்ந்துகொள்ளத் தூண்டின.

  1. கபாலியின் உடை – மிகத் தெளிவாகவே படத்தில் அது அம்பேத்கார் எதற்காக கோட் அணிந்தாரோ அதற்காகவே தானும் அணிந்திருப்பதாகச் சொல்வது.
  2. கபாலி அமரும் முறைகள்

உடையரசியல் பற்றிய என் முதல் அறிதல் உங்களின் காந்தியின் உடை என்ற கட்டுரையே. மிகச் சரியாக படத்திலும் “காந்தி சட்டையக் கழற்றினதுக்கும் அம்பேத்கார் இத போட்டதுக்கும் பின்னாடி நிறைய காரணங்கள் இருக்கு நண்பா, எல்லாம் அரசியல்” என்று முக்கியமான தருணத்தில் ஒரு வசனம் வருகிறது.

இரண்டாவது படம் முழுக்க தனக்கு எதிரானவர்களிடம் கபாலி அமர்ந்த படியே பேசிக் கொண்டிருப்பது. அதுவும் அவரே சொல்வது போல கெத்தாக, கால் மேல் கால் போட்டு, ஸ்டைலாக அமர்ந்து அதிகாரக் குரலில் பேசுவது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் சீன வில்லனிடம் அவர் கூறும் வசனங்கள். படம் முழுக்க எனக்கு “நூறு நாற்காலிகள்” நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது. “அமர வேண்டும்… இந்த பிச்சைக்காரக் கிழவியை புதைத்து இவளது இதயம் அதன் அத்தனை தாபங்களுடனும் மட்கி மண்ணாகவேண்டுமென்றால் எனக்கு இன்னும் நூறுநாற்காலிகள் வேண்டும்”. படத்தில் கபாலியும், கதையில் தர்மாவும் வேண்டிய நாற்காலிகள் அவர்களின் எதிரில் இருப்பவர்களை உசுப்பேற்றவோ, அவர்களிடம் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கவோ அல்ல. மாறாக தன்னவர்களுக்கு, தனக்கே கூட, “நம்மால் முடியும்” என்று கூறிக் கொண்டே இருப்பதற்குத் தான். காலங்காலமாக மனதுக்குள் நுழைந்து, துரியம் வரை சென்று சேர்ந்த குனிதலை நிமிர்த்திக் கொள்ளத்தான். குனிந்த சுயம் நிமிர்வு கொண்டால் அதை எதிர்கொள்பவர்கள் பதறுவது இயல்பு தானே!! இன்று வைரமுத்துவின் ஒரு பேச்சு – ‘கோட்டும், கபாலியின் தோல்வியையும் அவர் புரிந்து கொள்கிறாராம்…’. அவர் ஒரு சோறு தான். கபாலிக் காய்ச்சலைப் பற்றி, அதில் இறங்கி அழிந்து போகும் ரசிகர்களைப் பற்றி, அதற்குச் செய்யக் கூடிய செலவுகளில் செய்ய வேண்டிய சமூகப் பணிகளைப் பற்றி பாடம் எடுத்த பலரின் ‘கொண்டைகள்’ தெரியத்துவங்கி விட்டன… படம் முழு வெற்றி என்றால் முழுமையாக வந்து விடும்!!! நாற்காலியும், உடையும் அவை சென்று சேர வேண்டிய இடத்தைச் சென்று சேர்ந்து விட்டன!!!

அன்புடன்,

அருணாச்சலம் மகராஜன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 13
அடுத்த கட்டுரைஅஞ்சலி-மகாஸ்வேதா தேவி