தேசிய கல்விக்கழகத்தில்

1

 சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலையும் தேசியக் கல்விக்கழகமும் ஒரே வளாகத்திற்குள்தான் உள்ளன. சிவக்குமாரனுடன் இந்த வளாகத்திற்குள் நுழையும்போது நான் முன்னரே கண்டிருந்த ஐரோப்பியப் பல்கலைக்கழகங்கள்தான் நினைவுக்கு வந்தன. மாதவனுடனும் அரவிந்துடனும் எம்.ஐ.டி ஹார்வார்டுக்கும் திருமலைராஜனுடன் பெர்க்லி பல்கலைக்கும் வேணுதயாநிதியுடன் மினசோட்டா பல்கலைக்கும் பழனிஜோதியுடன் பிரின்ஸ்டனுக்கும் சென்றிருக்கிறேன். இந்தியப் பல்கலைக்கழகங்களில் இல்லாத ஒன்றை அங்கெல்லாம் கண்டிருக்கிறேன். அதை என் மனப்பிரமை என எவரேனும் சொன்னால் அதை மறுக்கவும் மாட்டேன்.

நம் பல்கலைகளில் ஒரு பள்ளிக்கூடத்தன்மை உண்டு. இங்குள்ள ஐ.ஐ.டி போன்ற அமைப்புகள் மேலும் மோசமான பள்ளிக்கூடங்கள்தான். மேலைநாட்டுப் பல்கலைகளில் நான் கண்ட அந்த உணர்வை உயர் கல்விநிலைகளுக்குரிய சுதந்திரமும் தீவிரமும் கலந்த மனநிலை எனச் சொல்வேன். அதை மாணவர்களின் முகங்களில், கல்லூரி அறைகளில், அறிவிப்புப்பலகைகளில் எங்கும் காணலாம். 

2 (2)

நான்யாங் பல்கலையில்தான் சரவணன் வேலைபார்க்கிறார், முதுநிலை அறிவியலாளராக. அவருடன் அவரது ஆய்வுக்கூடத்தைப்பார்க்க முன்னரே வந்திருக்கிறேன். இப்போது இங்கே ஒரு ‘ஊழியராக’ வருகிறேன். ஒருகுழப்பமான மனநிலை. மோசமான மாணவன் என்று பெயர் பெற்றவன் நான். கல்லூரி பற்றிய நல்ல நினைவுகள் ஏதும் கைவசமில்லை. அந்தச்சூழல் ஒருவகை கிளர்ச்சியையும் பதற்றத்தையும் அளித்தது.

பல்கலையில் என் அறை பெரிய மேஜையும் சிவப்பு மெத்தை நாற்காலிகளும் கொண்டது. அரசு அதிகாரிகளுக்குரிய அறை. இங்கேதான் நான் இருக்கவேண்டும், மாணவர்கள் வந்து சந்திக்கலாம். முதல்நாள் பொறுப்பேற்றுக்கொண்டேன். இணையவசதி, ஊழியர் அட்டைபெறுதல் என சின்னச்சின்ன வேலைகளில் இன்றும் போயிற்று. உண்மையில் வேலை நாளைமுதல்தான்.

எனக்கான வீடு நாலைந்துபேர் வசதியாகத் தங்க ஏற்றது. சோபா மற்றும் மரச்சாமான்களுடன் கூடிய பெரிய கூடம். படுக்கையறைகள் இரண்டு. சமையலறை. இரு குளியலறைகள். ஏசி சற்று ‘மக்கர்’ செய்தது. கூப்பிட்டு சொன்னதும் ஆளனுப்பிச் சரி செய்து கொடுத்தார்கள். பெரிய குடியிருப்பு வளாகம் இது. என் அடுக்குமாடிக்கட்டிடத்தின் கீழேயே ஒரு சீன உணவகமும் ஒரு மலாய் உணவகமும் இருக்கின்றன. சாலை தொடங்கும் இடத்தில் மளிகை மற்றும் பொருட்களை விற்கும் நான்கு பெரிய கடைகள். நேற்று சென்று சில அவசியப்பொருட்களை வாங்கிக்கொண்டேன்.

3 (2)

தனிமை. நான் ஊரிலும் மாடியறையில் தனிமையில்தான் இருக்கிறேன் என்றாலும் கீழே ஆளிருக்கிறது என்னும் உணர்வு இருந்தது, அதாவது தெய்வங்களுக்கு இருக்கும் பாதுகாப்புணர்வு. லண்டனில் ராய் மாக்ஸம் தனியாக இருப்பதைப் பார்த்தபோது ஓர் ஆசை எழுந்தது. வயதான காலத்தில் தனியாக இருக்கவேண்டும் என. எவரிடமும் கருணையையோ உதவியையோ நாடக்கூடாது. அதிலும் எக்காரணத்தாலும் பெண்களிடம் உதவிகோரக்கூடாது. பெண்கள் ஒரு வயதுக்குமேல் ஆண்களை வெற்றுச்சுமைகளாக உணர்வார்கள். சரியாக அந்தக் காலகட்டத்தில்தான் ஆண்கள் பெண்களைச் சார்ந்தும் இருப்பார்கள். கம்பீரம் தோரணை எல்லாம் போய் ‘பேச்சுகேட்க’ ஆரம்பிக்கும் காலம் அது.

ஆகவே இந்தத் தனிமையைப் பயன்படுத்தி வாழக் கற்றுக்கொள்ளவேண்டும் என எண்ணியிருந்தேன். ஒரு குடியை அமைப்பது மூளையை விண் விண் என தெறிக்கச் செய்கிறது. வாங்கவேண்டிய பொருட்களை கடைக்குச் சென்றதுமே மறந்துவிட்டேன். சம்பந்தமே இல்லாமல் ஒரு பெட்டி பேப்பர் கைக்குட்டைகள் வாங்கிக்கொண்டு திரும்பி வந்தேன். வாங்கச்சென்றது துணிதுவைக்கும் சோப்புத்தூள், பற்பசை முதலியவை.

IMG_0613

பரவாயில்லை, ஒருமாதிரி பயிற்சியால் சமாளித்துவிடலாம். நண்பர் கிருஷ்ணன் காலையில் எழுந்ததும் ஒருமணிநேரத்தில் சோறு குழம்பு ரசம் பொரியல் என விரிவாகச் சமைத்துவிட்டு நீதிமன்றம் செல்கிறார். அவரது அம்மா சென்ற வருடம் இறப்பது வரை அவருக்கு வெந்நீர் வைக்கக்கூடத் தெரியாது. அம்மா நாளெல்லாம் செய்யும் வேலையை ஒருமணி நேரத்தில் அவர் செய்கிறார். என்னைப் பொறுத்தவரை நான் அறிவித்துக்கொண்ட ஆணாதிக்கவாதி என்பதனால் எந்தவேலையும் பெண்களைவிட ஆண் சிறப்பாகச் செய்யமுடியும், செய்யவேண்டும் – பிள்ளைபெற்றுக்கொள்வதைத் தவிர.

இரவு வெண்முரசு எழுதிவிட்டு ஒன்றரை மணிக்கு தூங்கினேன். என் உடலுக்கு அப்போது பதினொன்றரை மணிதான். காலையில் உடம்பு ஐந்து என்னும்போது கடிகாரம் ஏழரை என்கிறது. அதைத்தான் கொஞ்சம் சமாளிக்கவேண்டும்.

முந்தைய கட்டுரைதேசம் -கடிதம்
அடுத்த கட்டுரைஞானக்கூத்தன் மறைவு