சென்னை முதல் சிங்கப்பூர் வரை – பரபரப்புக்குக் குறைவில்லை

1

 

இன்று காலை பத்துமணி வாக்கில் சிங்கப்பூர் வந்துசேர்ந்தேன். சென்னையில் இருந்து இண்டியன் ஏர்லைன்ஸ் விமானம். திருச்சிவழியாக சுற்றிக்கொண்டு வந்து சேர்ந்திருக்கவேண்டும். நான் வழியில் எங்கும் கண்ணே திறக்கவில்லை. ‘செம’ தூக்கம்.

காரணம் இருந்தது. நான் 23 அன்றே காலையில் சென்னை வந்துவிட்டேன். தொடர்ச்சியான சினிமாச் சந்திப்புகள். மாலையில் சைதன்யாவையும் அஜிதனையும் வெளியே கூட்டிக்கொண்டுசெல்வதாகச் சொல்லியிருந்தேன். ஆனால் சங்கர் அலுவலகத்தில் இருந்து கிளம்பவே 5.30 ஆகிவிட்டது. காரிலிருந்து காருக்கு தாவி அவர்களுடன் கிளம்பினேன்

பெசண்ட் நகர் பீச்சுக்குச் சென்றோம். அதுதான் நாற்றம் இல்லாமல் இருக்கும், மெரினா சாக்கடைவாசம் அடிக்கும் என்றார்கள். எனக்கு மெரினா பழைய நினைவுகளின் தொகுப்பு. கடற்கரையில் அமர்ந்துபேசிக்கொண்டிருந்தோம். அதன்பின் அங்கெயே சாப்பிட்டோம்

செல்லும்போது ஊபர். திரும்பிவர முயன்றால் ஊபர் செயலி சுற்றிக்கொண்டே இருந்தது. என்னிடம் சாதாரண நோக்கியா செல்பேசி தான். அஜிதனிடம் அதைவிட பாழடைந்த சாம்சங். சைதன்யாதான் ஸ்மார்ட் ஃபோன்காரி. அவளிடம் வேறு டாக்ஸி எண் அல்லது செயலி இல்லை

ஆகவே அவளுடைய தோழியை தொலைபேசியில் அழைத்துச் சொல்லி ஓலா பதிவுசெய்தோம். ஓட்டுநர் எண் வந்தது. அழைத்தால் சைதன்யாவின் தங்குமிடம் இருக்கும் தாம்பரத்துக்கு அப்பால் உள்ள பகுதிக்கு வண்டி வராது என்றார். ஏன் வராது என்று கேட்டால் ‘வராதுசார் சொல்லிட்டேன்ல? அவ்ளவுதான்’ என்றார். ‘ஏன் வராது?” என்று மீண்டும் கேட்டேன். “மீட்டர் மேலே எவ்ளவு குடுப்பே?’ என்றார்

வெட்டிவிட்டு என்ன செய்வதென்று யோசித்தோம். இரவு ஒன்பதரை மணி. மீட்டர்மேலே கொடுத்திருக்கலாம். ஆனால் இந்த நவீன டாக்ஸி சேவைகள் நடுத்தரவர்க்கத்திற்குப் பெரிய உதவி. இவற்றையும் இந்தமாதிரி வீணர்கள் சீரழிப்பதை அனுமதிக்கக் கூடாது என்று தோன்றியது

கெ.எஃப்.சி பக்கத்தில் ஒரு ஃபாஸ்ட் டிராக் காலியாக நின்றது. கேட்டபோது மீட்டருக்கு வருகிறேன் என்றார். அதில் ஏறி சைதன்யாவைக் கொண்டுசென்று அவள் குடியிருப்பில் விட்டுவிட்டு திரும்ப என் விடுதிக்கு வரும்போது பதினொன்றரை. அதன்பின் அஜிதனிடம் கொஞ்சம் அரசியல், கொஞ்சம் இலக்கியம்

மறுநாள் காலையிலேயே எழுந்து எழுதினேன். சுகா வந்தார். சினிமாப்பணிகள் ஆரம்பித்தன. கே.பி.வினோத்துடன் மாலையில் பிஹைண்ட் வுட்ஸ் நடத்திய சினிமாவிழாவுக்குச் சென்றேன். சிறந்த வசனத்திற்கான விருது சுபாவுக்கும் ஜெயம்ராஜாவுக்கும் அளிக்கப்பட்டது. அப்பதக்கங்களை அளித்தேன்.

ஒட்டுமொத்த சாதனைக்கான பாலசந்தர் விருது சங்கருக்கு. விருதுபெற்ற சங்கரைப் பாராட்டி ஓரிரு சொற்கள் சொன்னேன். “அமெரிக்காவில் நான் டெஸ்லாவின் புதிய காரைப்பார்த்தேன். ஒரு தொழில்நுட்பச்சாதனை . கூடவே அது ஒரு கலைப்படைப்பு. மைக்கேல் அஞ்செலோ ஓவியம்போல. கலை என்பது உயர்தொழில்நுட்பமும் கூட. டெஸ்லா கார் தானியங்கி வண்டிகளின் நூறு ஆண்டுக்கால தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சம். அதேபோலத்தான் சங்கர். தமிழ் சினிமாத்தொழில்நுட்பங்களின் உச்சத்தைத் தொகுத்து தன் படைப்புகளை உருவாக்குபவர். திரைக்கதையும் ஒரு தொழில்நுட்பமே என அவரிடம் கற்றேன்”

அங்கிருந்தே நேராக விமானநிலையம். அங்கே ஒரு பெரும் குளறுபடி. ’செக் இன்’ செய்து பெட்டிகளை ஒப்படைத்துவிட்டு குடிபெயரல் படிவத்தை நான் நிரப்பிக்கொண்டிருந்தபோது புர்க்கா போட்ட ஏழெட்டு பெண்கள் வந்து எழுதித்தரும்படிச் சொன்னார்கள். எழுதிக்கொடுத்துவிட்டுச் சென்று வரிசையில் நின்று அதிகாரிமுன் சென்றபோது தெரிந்தது விசா காகிதங்கள் அடங்கிய கோப்பை காணோம்

பதறியடித்து திரும்பிவந்தால் படிவம் நிரப்பிக்கொண்டிருந்த மேஜையில் அது இல்லை. அந்தப்பெண்களே கைமறதியாகக் கொண்டுசென்றுவிட்டனர். தேடிச்சலித்து ஏர்இண்டியா ஊழியர்களிடம் சொன்னேன். விசா என் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டது. ஒரு அச்சு எடுத்தால்போதும். ஆனால் வெளியே போக அனுமதி இல்லை என்றார்கள். விசா தொலைந்துவிட்டதைச் சொன்னேன்.

அவர்களில் ஒருவர் என் பெட்டிகளை நிறுத்திவைக்கச் சொன்னார். என்னை வெளியே கொண்டுசென்று விட்டு அக்பர் டிராவல்ஸில் சென்று கேட்கும்படிச் சொன்னார். அங்கே அச்சு எடுக்க ஒரே இடம் அதுதான்.

அக்பர் டிராவல்ஸில் ஒரே ஊழியர். அவரைசூழ்ந்து பெரும் கூட்டம். டிக்கெட் கேட்பவர்கள். மின்னஞ்சலில் இருந்து அச்சு எடுக்க முண்டுபவர்கள். ஒருவழியாக அரைமணிநேரத்தில் என் முறை வந்தது. என் மின்னஞ்சலை திறந்து கடிதத்தை எடுத்து அச்சுக்குக் கொடுத்தால் இரண்டு பக்கம் அச்சானதும் அச்சுப்பொறி நின்றுவிட்டது.

மீண்டும் மீண்டும் அச்சுப்பொறி நின்றது. பாவம், பொறுமையான பாய். ‘ஸாரி ஸார்” என்று சொல்லிக்கொண்டு முயற்சி செய்தபடியே இருந்தார். நேரம் ஆகிவிட்டது. சரிதான் விமானம் போய்விட்டது என்றே முடிவுசெய்தேன்.

ஒருவர் வந்து இன்னொரு அச்சு எடுக்கக் கேட்டார். என் காகிதம் அச்சான பின்னரே அதைச்செய்யமுடியும் என்றார் பாய். அவரும் பாய்தான். உள்ளே சென்று தடதடவென ஏதோ செய்தார். அவருடைய பக்கம் அச்சாகிவந்தது

மீண்டும் என் பக்கங்கள். அவை அச்சாகவில்லை. எனக்கு ஓர் எண்ணம் பளிச்சிட்டது பிடிஎஃப் வடிவில் 12 பக்கம். அதனால்தான் தடங்கலா? ஒவ்வொரு பக்கமாக அச்சிடச் சொன்னேன். வந்தது. அதற்குள் ஏழெட்டுமுறை ஏர் இண்டியா ஊழியர்கள் அழைத்துவிட்டனர். ‘சார் வருகிறீர்களா இல்லையா?”

மூச்சுவாங்க ஓடி அவர்களைச் சென்றடைந்தேன். ஒருவர் என்னைக் கூட்டிச்சென்று எல்லா வரிசைகளையும் கடந்து குடிபெயர்வை அடையச்செய்தார். சோதனை முடிந்து உள்ளே சென்றபோது விமானம் சித்தமாக இருந்தது.

ஏறி அமர்ந்தால் எப்படி தூக்கம் வராமலிருக்கும்? சிங்கப்பூர் வந்துவிட்டது என என் பக்கத்தில் இருந்த இன்னொரு பாய்தான் சொன்னார். ’குடுத்துவச்சவிக சார். என்னா தூக்கம்!” என்றார். “மனசு சுத்தமா இருந்தா நல்லா தூக்கம் வரும் பாய்” என்று சொல்லியிருக்கலாம். சும்மா புன்னகைத்து வைத்தேன்.

விமானநிலையத்தில் பேராசிரியர் சிவக்குமாரும் நண்பர்களும் வந்திருந்தனர். எனக்கு இங்கே ஒரு அப்பார்ட்மெண்ட் குடியிருப்பாக அளிக்கப்பட்டிருக்கிறது. பெரிய இரு படுக்கையறைகள், சமையலறை, கூடம், சோபா எல்லாம் உண்டு. எல்லா அறைகளையும் என் இருப்பால் நிறைக்கவேண்டும்

அறையில் சரவணன் விவேகானந்தன் காத்திருந்தார். புன்னகையுடன் ‘வெல்கம் டு சிங்கப்பூர்’ என்றார். நான் சிங்கப்பூருக்கு வந்துவிட்டேன் என அப்போதுதான் முழுநம்பிக்கை வந்தது

 

முந்தைய கட்டுரைபியுஷ்- கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 8