விக்ரகங்கள்

1

 

அன்புள்ள ஜெ,

கபாலியில் ஒரு வசனம் “காந்தி சட்டையைக் கழட்டியதற்கும், அம்பேத்கார் கோட் போட்டதற்கும் காரணம் இருக்கு, அரசியல்” என்று ரஜினி சொல்கிறார்.

காந்தியின் உடை என்ற இந்த கட்டுரை உடனடியாக நினைவுக்கு வந்தது.

 

//உடையரசியலின் தொடக்கம் அங்கேதான். இந்திய மகாராஜாக்களை வேலைக்கார வேடமிட்டுத் தன் வேலைக்காரர்களுடன் சேர்த்து நிறுத்திய பிரிட்டிஷ் ஆதிக்க மனநிலைக்கு எதிரான கலகம் காந்தியின் உடை. தார்ப்பாய்ச்சிய ஒற்றை உடையும் மேல்துண்டுமாக அந்த வைஸ்ராயின் சபைக்குச் சென்றார் காந்தி. அதற்கு முன்பு அவர் தனக்குப்பின்னால் இந்தியதேசத்தையே அணிவகுத்து நிறுத்தியிருந்தார். தன் உடைமூலம் காந்தி பிரிட்டிஷ் ஏகாதிபத்திய மனத்திடம் சொன்னார் ’என்னை சமமாக மதித்து அமரச்செய்து என்னிடம் நீங்கள் பேசியே ஆகவேண்டும். முடியாதென்று சொல்லுங்கள் பார்ப்போம்’ என்று . ’நீங்கள் மகாராஜாக்களுக்கு வேலைக்கார வேடம் போட்டு நிற்கச் செய்யலாம். ஆனால் இந்தியாவின் ஏழைக்குடிமகனை நீங்கள் உங்களுக்குச் சமானமாக நடத்தியாகவேண்டும்’ என்று//

உடை தேர்வு என்பது யாரை நோக்கிப் பேசுகிறோம் என்பதை பொறுத்துதானா.

அன்புடன்

சுரேஷ் பாபு

 

index

அன்புள்ள சுரேஷ் பாபு,

உடை என்பது ‘நான் இன்னார்’ என்னும் ஓர் அறிவிப்பு. எந்த உடையும். நான் வணிகமுகவர், நான் கணிப்பொறியாளன், நான் ஓவியன், நான் துறவி என உடை ஓங்கிச் சொல்கிறது. காந்தியின் உடைதான் ஆந்திரபிரதேசத்தின் தீவிர இடதுசாரி இயக்கத்தின் பாடகரான கத்தாரின் உடையும். அப்படி நாமறிந்தவர்களின் உடைகளை ஒவ்வொன்றாக நினைவுகூர்ந்து பாருங்கள்.

உடை எவரை நோக்கிப் பேசுகிறார்களோ அவர்களுள் ஒருவர் என்னும் அடையாளத்தை கொள்கிறது. காந்தியின் உடை மேலதிகமாக ஒரு சமணத்துறவியாகவும் அவரைக் காட்டியது. அவர் சொல்லவந்ததை அனைத்தையும் அது தெளிவாகக் காட்டியது. எளிய வாழ்க்கை, அகிம்சை என

அம்பேத்கரின் உடை அவரை ஐரோப்பிய நாகரீகத்தில் ஊறிய நவீன மனிதராக, அறிவுஜீவியாக காட்டியது. தலித்துக்கள் நல்ல ஆடையணியவும் கல்விகற்கவும் சமூகத்தடை இருந்த அக்காலகட்டத்தில் அது ஓர் அறைகூவல். அது ஒரு பிரகடனம். அவரது அரசியல் அதிலிருந்தது

அத்துடன் இன்னொன்றும் உண்டு, அது அந்த ஆளுமையை நாம் எப்படி ஏற்கிறோம் என்பது. அம்பேத்கர் எப்போதுமே  கோட் சூட் மட்டும் அணிந்தவர் அல்ல. மிகப்பெரும்பாலான புகைப்படங்களில் அவர் எளிய மராட்டிய வெண்ணிற ஆடையையே அணிந்திருக்கிறார். பின்னாளில் பௌத்தத்திற்கு மாறியபோது பௌத்த நெறிபூண்டவர்களுக்குரிய மிக எளிய வெண்ணிற ஆடையைத்தான் அணிந்தார். இறுதிநாளில் அம்பேத்கரின் உடை அதுவே. ஆகவே நியாயப்படி அவரை அந்த ஆடையில்தான் நினைவுகூரவேண்டும்.

ஆனால் தலித்துக்கள் அவரது எளிய ஆடைகொண்ட தோற்றத்தை முழுமையாகவே புறக்கணித்தனர். பலருக்கு அந்த எளிய ஆடை அணிந்த அம்பேத்கரின் படங்களைக் காட்டினால் அது எவரென்றே தெரியாது. அவர்களின் விடுதலை சார்ந்த, சுயமரியாதை சார்ந்த அரசியலுக்கு கோட் சூட் அணிந்த அம்பேத்கர்தான் தேவை.

அம்பேத்கரின் இன்றைய சிலைகள் என்பவை அம்பேத்கரின் நேரடிச் சித்தரிப்பு அல்ல. அவை அம்பேத்கரைப்பற்றிய தலித் மக்களின் மனப்பிம்பத்தின் வடிவங்கள். அதை நாம் விக்ரகம் எனலாம். விக்ரகம் என்பது வெறும் சிலை அல்ல. அது ஒரு குறியீடு.

சிவன், விஷ்ணு, புத்தர், ஏசு என அத்தனை சிலைகளுமே குறியீடுகள்தான். தங்கள் தோற்றம் மூலம் அவர்கள் பேசுகிறார்கள். புத்தரின் விரல்கள் என்னென்ன சொல்கின்றன . ஏசுவின் கையிலுள்ள ஆட்டுக்குட்டி எத்தனை அர்த்தம்பொதிந்தது. அம்பேத்கரின் கை தூக்கப்பட்டிருக்கும் விதம், மறுகையிலிருக்கும் புத்தகம் – எல்லாமே குறியீடுகள்தான்.

 

images

நான் பிரின்ஸ்டன் பல்கலை வளாகத்தில் ஐன்ஸ்டீனின் சிலையைப்பார்க்கையில் இதை நினைத்துக்கொண்டேன். ஒருவகையான விளையாட்டுத்தன்மையும் அலட்சியமும் ஒவ்வொரு புள்ளியிலும் தெரியும்படியாக அச்சிலை வனையப்பட்டிருந்தது. கரடுமுரடான செதுக்கல்கள் வழியாக உருவாகிவரும் ஐன்ஸ்டீனின் முகத்தில் குறும்பு இருந்தது. வாரப்படாத தலை. அலட்சியமான உடை

ஐன்ஸ்டீன் அப்படி எப்போதுமே இருந்திருக்கமாட்டார். பொறுப்பாக உடையணிந்த நேர்த்தியான தோற்றத்தில் எத்தனையோ புகைப்படங்கள் உள்ளன. ஆனால் ஐன்ஸ்டீன் என்பது அந்த மனப்பிம்பமே – ஞானமும் குழந்தைமையும் கொண்ட அபூர்வமான முயங்கல் அவரது ஆளுமை.

ஆகவேதான் கோட் சூட் போட்ட காந்திக்கு நாம் சிலைவைக்க முடியாது. மீசை இல்லாத ஜெயகாந்தனை ஏற்கமுடியாது. நாம் மனிதர்களில் இருந்து விக்ரகங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறோம். அது நாம் அவர்களை உள்வாங்கிக்கொள்ளும் ,நினைவில் நிறுத்திக்கொள்ளும் வழிமுறை

ஜெ

 

 

 

முந்தைய கட்டுரைஞானக்கூத்தன் – தமிழ் ஹிந்து- கடிதம்
அடுத்த கட்டுரைஇசை,டி.எம்.கிருஷ்ணா – கார்த்திக்