[ 13 ]
சகுனியின் அரண்மனைமுகப்பில் தேர் நின்றதும் விதுரர் “நான் அவரிடம் நேரடியாகவே பேசப்போகிறேன். சூழ்ச்சிகள் அவரிடம் வெல்ல முடியாது. அவரைப்போல மானுட உள்ளங்களின் உள்ளறிந்தவர் சிலரே” என்றார். “அவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றார் சௌனகர். “அவர் நாமறியும் அனைத்துக்கும் அப்பாற்பட்டவர். தெய்வங்களைப்போல குனிந்து மானுடப்பெருக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்” என்றார் விதுரர். காவலன் வந்து வணங்க தன் வரவை அறிவிக்கும்படி கோரினார் விதுரர்.
ஏவலன் வந்து அழைத்துச்செல்ல அவர்கள் மேலேறிச்சென்றபோது அந்த அரண்மனை குளிர்ந்து அமைதியில் மூழ்கிக்கிடப்பதை உணர்ந்தனர். எதிரொலிகள்கூட தூண்களிலும் சுவர்களிலும் நிறைந்திருந்த தண்மையில் முட்டி மறைந்தன. எங்கோ எவரோ பேசுவது மெல்லிய முணுமுணுப்பாக கேட்டது. சகுனியின் அறைக்குள் இருந்து வந்த ஏவலன் செல்லும்படி கைகாட்டினான். அவர்கள் உள்ளே சென்றதும் “வருக!” என்றார் சகுனி. கணிகர் மெல்ல முனகியபடி அசைந்தமர்ந்து “வருக, அமைச்சர்களே” என்றார்.
அமர்ந்ததும் விதுரர் நேரடியாக “நான் உங்களிருவரிடமும் முறையிடுவதற்காக வந்தேன்” என்றார். மெல்ல சிரித்து “ஆம், அங்கிருந்து இங்குதான் வருவீர்கள் என எண்ணினேன்” என்றார் கணிகர். “நாங்கள் செல்வதற்கு வேறு இடமில்லை” என்றார் விதுரர். “ஆம், பீஷ்மபிதாமகரிடம் நீங்கள் சென்று சொல்வதற்கேதுமில்லை” என்று கணிகர் சொன்னார். விதுரர் “அவர் முதிர்ந்து விலகிவிட்டார். இம்முடிவை ஏன் எடுத்தாரென அவரால் சொல்லமுடியுமென நான் நினைக்கவுமில்லை” என்றார்.
“இல்லை. இப்போதுதான் அவரால் தெளிவாக சொல்லமுடியுமென நினைக்கிறேன்” என்றார் கணிகர். “ஏனென்றால் அம்முடிவை எடுத்தமை குறித்து எண்ணி எண்ணி சொல்சேர்த்துக் கொண்டிருப்பார். அவற்றைச் சொல்ல ஆள்தேடிக்கொண்டுமிருக்கக்கூடும்.” சகுனி புன்னகைபுரிந்தார். விதுரர் பேச்சை மாற்றும்பொருட்டு சுற்றிலும் நோக்கி “நீங்களிருவரும் பகடைக்களம் ஆடாதிருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன்” என்றார். சகுனி “நான் நேற்றிரவே பகடைகளை நெருப்பில் வீசிவிட்டேன். இனி அவற்றுக்கு பணி ஏதுமில்லை” என்றார். கணிகரும் சிரித்தபடி “ஆம், எனக்கும் எதிரியிலாது ஆடுவதில் ஆர்வமில்லை” என்றார்.
விதுரர் இயல்புநிலையை அடைந்து “காந்தாரரே, தங்கள் தமக்கை என்ன உளநிலையில் இருக்கிறார் என்பதை அறிவீர்கள் என நினைக்கிறேன்” என்றார். சகுனி வெண்பளிங்குக் கூழாங்கல்போன்ற விழிகளை அவர் மேல் பதித்து அமர்ந்திருந்தார். “இன்று கொற்றவைக்கு ஏழு எருமைகள் பலிகொடுக்கப்பட்டு பிழையீட்டுப் பூசனை செய்யப்பட்டுள்ளது” என விதுரர் தொடர்ந்தார். “யாருக்காக நீங்கள் வஞ்சினம் கொண்டு வந்தீர்களோ அவரே நீங்கள் அடைவன அனைத்தையும் இடக்காலால் எற்றித்தள்ளிவிட்டு அங்கே அமர்ந்திருக்கிறார்.”
“ஆம்” என்று சகுனி சொன்னார். விழிவெண்கற்கள் மார்கழிப்பனியில் குளிர்ந்தவை போலிருந்தன. “ஆனால் எதையும் தொடங்கத்தான் நம்மால் முடியும். இன்று இது என் தமக்கைக்காக அல்ல. எனக்காகக்கூட அல்ல. எதற்காகவும் அல்ல.” விதுரர் அந்த வெறித்த விழிகளில் இருந்து தப்ப தன் விழிகளை விலக்கிக்கொண்டு “தங்களுக்கு பாண்டவர்கள்மேல் என்ன வஞ்சம்?” என்றார். சகுனி மெல்லியகுரலில் “உண்மையிலேயே வஞ்சமென ஏதுமில்லை, விதுரரே. ஒருவேளை நீர் வியக்கலாம், என் மருகன் மீது அன்பும் இல்லை” என்றார்.
தனக்குத்தானே தலையசைத்துவிட்டு “இப்போது எவரிடமும் அணுக்கமோ விலக்கமோ முற்றிலும் இல்லை. நான் வேறெங்கோ இருந்து இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இறந்துபோனவர்கள் வாழ்க்கையை பார்ப்பதுபோல” என்றார் சகுனி. “உங்கள் உணர்வுகள் எனக்குப்புரியவில்லை காந்தாரரே” என்றார் விதுரர். “நான் என் பெருங்கனவால் இவையனைத்தையும் தொடங்கிவைத்தேன். அதற்கென்றே வாழ்ந்தேன். இன்று அறுபதாண்டுகாலம் ஆகிறது. ஒரு முழு மானுட வாழ்நாள். திரும்பிப்பார்க்கையில் அனைத்தும் முழுமையாக பொருளிழந்துவிட்டிருக்கின்றன.”
சிரிப்பதுபோல சகுனியின் சிவந்த சிறிய உதடுகள் வளைந்தன. “நேற்று திரும்பிவந்ததும் என் பகடைக்காய்களை தூக்கி வீசினேன். முதலில் ஆடலாமென்றுதான் அவற்றை எடுத்தேன். களம்பரப்பி அமர்ந்தபோது அக்களம் என் விழிகளுக்கு முற்றிலும் அறிமுகமற்றதுபோல் தோன்றியது. பகடைக்காய்களை கையில் எடுத்தபோது அவற்றை முதல்முறையாக எடுப்பதுபோல் உணர்ந்தேன். நினைவு அறிந்திருந்த ஒன்றை உடலும் உள்ளமும் அறிந்திருக்கவில்லை. அந்தத் துன்பம் தாளாமலான கணத்தில் ஏவலனை கூவி அழைத்து அவற்றை எடுத்துச்சென்று அனலில் இடச்சொன்னேன்.”
“அவன் அவற்றை எடுத்துச்செல்வதைக் காணும்போது என் உள்ளம் என்ன உணர்கிறது என்று பார்க்கலாம் என்று காத்திருந்தேன். ஒன்றுமில்லை. வேறேதோ நிகழ்வதுபோல. நான் அங்கில்லை என்பதுபோல. அவன் அவற்றை கொண்டு சென்றபின் இதோ செல்கிறது என் நாற்பதாண்டுகாலத் தவம் என்று சொல்லிக்கொண்டேன். மீண்டும் ஒரு பகடையாடல் நிகழுமென்றால் என்ன செய்வேன் என வலிந்து கேட்டுக்கொண்டேன். உள்ளம் தொடப்படவே இல்லை. பகடையை நான் ஆடிய நினைவுகூட மீளவில்லை.”
“பின்னர் எழுந்து சென்று அடுமனையை அடைந்து எங்கே எரிகிறது என் பகடை என்று கேட்டேன். அவர்கள் சுட்டிக்காட்டிய அடுமனை அடுப்பின் முன் நின்று அவை அனலில் பொசுங்குவதை நோக்கினேன். வெறுமைநிறைந்த உள்ளத்துடன் வெறித்து நின்றேன். அவை தந்தத்தால் ஆன பகடைகள். எரிந்தணையும்போது மெல்லிய சிதைமணம் வந்தது. அவை வளைந்து பொசுங்கி உருகி வழிந்து நீலச்சுடராகி மறைந்தன.”
“எரியும் எலும்பின் மணம் எஞ்சியிருந்த மூக்குடன் திரும்பி வந்தேன்” என்று சகுனி தொடர்ந்தார். “எங்காவது செல்லவேண்டுமெனத் தோன்றியது. ஆனால் உடல் முழுமையாகத் தளர்ந்திருந்தது. இவ்விருக்கையில் வந்து அமர்ந்தேன். வெளியே அந்திமறைவதை நோக்கிக்கொண்டிருந்தேன். ஆம் முடிந்தது, அவ்வளவுதான் என்று சொல்லிக்கொண்டேன். பின்னர் அச்சொற்களை சூழ்ந்திருந்த அனைத்தும் என்னைநோக்கி சொல்லத் தொடங்கின.”
“அச்சொற்கள் அளித்த விடுதலையை என்னால் சொல்லி விளக்கமுடியாது. முன்னிரவிலேயே துயிலச்சென்றுவிட்டேன். இந்தப் பீடத்திலிருந்து எழுந்து படுக்கைவரை செல்வதுகூட கடினமாக இருந்தது. என் உடல் எடைமிகுந்து கால்கள் குழைந்தன. கண்ணிமைகள் சரிந்து பாதிமூடியிருந்தன. படுக்கையில் விழுந்ததும் மிதக்கும் உணர்வைப் பெற்றேன். ஒருசொல் இல்லாத அமைதி.” சகுனியின் குரல் தணிந்து வந்தது. துயிலுக்குள் இருந்தே அவர் பேசிக்கொண்டிருப்பதுபோல.
“விதுரரே, நான் நினைவறிந்த நாள்முதல் அப்படி ஒரு அமைதியான முன்துயில்பொழுதை அறிந்ததில்லை. மெல்லிய ரீங்காரத்துடன் ஒவ்வொன்றும் உருகியிணைந்துகொண்டிருந்தன. ஆழ்ந்த உறக்கம். இன்றுகாலை நன்கு பொழுதுவிடிந்தபின் கணிகர் வந்து அழைத்தபோதுதான் விழித்துக்கொண்டேன்” என்றார் சகுனி. “என் வாழ்க்கையின் ஒரு பகுதி முடிந்தது. அப்பகுதியின் உணர்வுகளும் இலக்குகளும் எதுவும் இங்கு ஒரு பொருட்டல்ல. இங்கிருக்கையில் எனக்கு ஒன்றே முதன்மையானது. நான் இருக்கிறேன். இதுவாக, இவ்வாறாக. இந்தப் பீடம் பீடமாக இருப்பதுபோல, அந்த மரம் மரமாக இருப்பதுபோல. நான் சகுனி. என் இயல்பெதுவோ அதுவாக இங்கிருக்கவே வந்தேன். இதன் இயல்பும் இலக்கும் என்னால் புரிந்துகொள்ளக்கூடியவையே அல்ல. நான் முழுமையாக இருப்பது மட்டுமே என்னால் செய்யக்கூடுவது.”
“ஆகவே நான் சகுனியாகவே இருப்பேன். எதன்பொருட்டும் துயர்கொள்ளப்போவதில்லை. இரக்கமோ அச்சமோ அறவுணர்வோ என்னுள் எழப்போவதில்லை. ஏனென்றால் நான் சகுனி. என் செயல்கள் என்னுடையவை அல்ல. ஓநாய் ஊன்கிழித்து உண்பதுபோல, கரையான் மாளிகைகளை கரைத்தழிப்பதுபோல இது என் கடன். எனவே நான் பழிசூடவோ இழிவடையவோ தயங்கவும் போவதில்லை.”
அவர் எவரிடமோ பேசுவதுபோலிருந்தது. குளிர்விழிகள் அசையாது நாட்டியிருந்தன. சௌனகர் அவற்றைத் தவிர்த்து வெளியே பொழிந்துகொண்டிருந்த வெயிலை நோக்கிக்கொண்டிருந்தார். வெள்ளிப்பெருக்காக பின்காலை. வழக்கமாக அஸ்தினபுரி செயல்வெறிகொள்ளும் நேரம். ஆனால் நகரம் அமைதியாகக் கிடந்தது. இறப்புநிகழ்ந்த வீட்டின் இரண்டாவதுநாள் வெறுமை திகழ்ந்தது தெருக்களில்.
சகுனி அமைதி அடைந்ததும் அறைக்குள் ஒலியின்மை பெருகி எடைகொண்டது. அசைந்து அதை கலைத்து “தங்கள் செயல்களுக்குப் பொருளில்லை என்றால் இனி ஏன் இவற்றை செய்யவேண்டும்? இந்த ஆடலில் இருந்து விலகிக்கொள்ளுங்கள். நீங்கள் விலகிக்கொண்டாலே அனைத்தும் முழுமைபெற்றுவிடும்” என்றார் விதுரர். “இல்லை, இந்த ஆடலே நான். ஆடாதபோது நான் இல்லை என்றுபொருள். உயிருடலுடன் எஞ்சுவது வரை முழுவிரைவுடன் இவ்வாடலிலேயே இருப்பேன்” என்று சொல்லி சகுனி மீண்டும் இதழ்வளைய புன்னகைசெய்தார்.
“என்ன செய்யவிருக்கிறீர்கள்?” என்றார் விதுரர் சினத்துடன். “என் இலக்கு அவ்வாறேதான் இருக்கிறது. அதை நான் மாற்றமுடியாது, ஏனென்றால் என் உடலையும் உயிரையும் அந்த அச்சிலேயே வார்த்து இறுக்கி எடுத்திருக்கிறேன்” என்று சகுனி சொன்னார். “என் மருகன் பேரரசன் ஆகவேண்டும். பாரதவர்ஷத்தை ஆளவேண்டும்.” விதுரரின் உடலில் வந்த அந்த மெல்லிய அசைவை அச்சமென சௌனகர் அறிந்தார். சகுனி எவ்வுணர்ச்சியும் தெரியாத குரலில் தொடர்ந்தார் “அவன் எதிரிகள் முற்றழியவேண்டும்… தடம்கூட எஞ்சாது. எவராக இருப்பினும்.”
விதுரர் தன்னிலை மறந்து உரக்க “அது நிகழப்போவதில்லை. கேட்டீரல்லவா, பீமனின் வஞ்சினத்தை. உம் மருகன் உடல்பிளந்து களம்படுவான். அவன் நூற்றுவர் உடன்பிறந்தாரும் குருதிகொட்டி மடிவார்கள். வெறும் அழிவு… அதுமட்டுமே எஞ்சப்போகிறது. காந்தாரரே, சில சொற்கள் இதழ்மீறி வெளிவருகையிலேயே தெய்வங்களாகி நிலைகொள்ளத் தொடங்கிவிடுகின்றன. அத்தகைய சொற்கள் அவை. அதை உணராத ஒரு மானுட உள்ளமேனும் அவையில் இருந்திருக்குமென நான் எண்ணவில்லை.”
“அதுநிகழ்ந்தாலும் எனக்கு எந்தத் துயருமில்லை” என்று சகுனி விழியின் ஒளி கூர்ந்து நிற்க மெல்லியகுரலில் சொன்னார். “நான் என் பணியை செய்கிறேன். அதன் பயனை முடிவுசெய்யவேண்டியது பெருவெளியை ஆளும் வல்லமைகள்.” அவர் இதழ்கள் மீண்டும் இளநகையில் வளைந்தன. “கேட்டிருப்பீர்கள், வேதாந்திகளின் சொற்றொடர் அது. நான் என் செயலை பற்றின்றி ஆற்றுபவன். எனவே யோகி.”
விதுரர் பெருமூச்சுடன் மெல்ல தளர்ந்தார். கணிகர் இருமும் ஒலி அக்கூடத்தை நிறைத்தபடி ஒலித்தது. கால்களை நீட்டி உடலை இயல்பாக்கிக்கொண்டு சௌனகரை நோக்கினார். “இவரை முன்னரே அறிமுகம் செய்திருப்பீர்கள் கணிகரே, இந்திரப்பிரஸ்தத்தின் அமைச்சர்” என்றார். கணிகர் “நாம் ஓரிரு சொற்கள் பேசவும் வாய்ப்பு கிடைத்தது” என்றார். சௌனகர் “ஆம்” என்றார். “காந்தாரரின் ஆசிரியரை சந்திக்கும் பேறு பெற்றேன்.”
“கணிகரே, இனி நீங்கள் முடிவுசெய்யவேண்டும்” என்றார் விதுரர். “போர் ஒன்று நிகழவேண்டும் என நீங்கள் விழைந்தால் அதுவே நிகழட்டும். ஆனால் நீங்கள் அறிந்த ஒன்றுண்டு, எங்கள் தரப்பில் இளைய யாதவர் களமிறங்கினால் பீஷ்மரே ஆயினும் நீங்கள் வெல்ல இயலாது.” கணிகர் சிரித்து உடல்குலுங்கினார். “அவர் களமிறங்கவேண்டுமென்றால் நேற்றே இங்கு வந்திருக்கவேண்டும்… நேற்று அவைகூடுவதற்கு முன்னரே” என்றார். கண்கள் இடுங்க விதுரரை நோக்கி “களமிறங்கவும் செய்தார். நுண்ணிய கண்களால் நான் அவரைக் கண்டேன்” என்றார்.
சௌனகரின் உள்ளம் சிலிர்ப்பு கொண்டது. “ஆனால் இப்போரில் அவர் இல்லை… அவரை நம்பி நீங்கள் படை திரட்டவேண்டியதில்லை” என்றார். அதை முன்னரே உணர்ந்திருந்தவர் போல விதுரர் பெருமூச்சுடன் பேசாமலிருந்தார். “நீங்கள் இங்கு வருவதற்கு முன்னரே பேரரசரின் தூதனாக யுயுத்ஸு என்னிடம் வந்திருந்தார்” என்றார் கணிகர். விதுரர் திகைப்புடன் நிமிர்ந்து நோக்கினார். “பாண்டவர்கள் அடிமையாவதை எவ்வகையிலும் ஏற்கமுடியாது என்று பேரரசர் என்னிடம் சொன்னார். அதைமட்டும் தவிர்த்து எதைச்செய்வதாக இருந்தாலும் தனக்கு ஒப்புதலே என்றார்.”
“இல்லை, என்னிடம் பேரரசர் சொன்னது அதுவல்ல” என்றார் விதுரர். “அவர்கள் நாடாளலாகாது என்பதே அஸ்தினபுரியின் அரசரின் திட்டம் என்று நான் சொன்னேன். அவர்களை அடிமைகொள்ளும் அத்தருணம் மட்டுமே தேவை. அது நிகழ்ந்துவிட்டது. வெற்றி முழுமையாகிவிட்டது. இனி அவர்களை விடுதலைசெய்வதுதான் நல்லது என்பதே என் எண்ணம்” என்றார் கணிகர். “ஏனென்றால் அவர்கள் அரசகுலத்து அடிமைகள். இனி அவர்களை தொழும்பர்மன்றில் பேணுவதென்பது இடர்களையே உருவாக்கும். அவர்களை தொழும்பர்களின் உடையில் தொடர்ந்து மக்கள் பார்ப்பது மக்கள் உள்ளங்களை அவர்கள்பால் திரும்பச்செய்யும்.”
விதுரரின் முகம் வெறுப்புடன் சுருங்கியிருந்தது. கைகளால் பீடத்தின்பிடியை இறுகப்பற்றிக்கொண்டு மறுகணம் எழப்போகிறவர் போலிருந்தார். கணிகர் “ஆனால் படைக்கலப்பயிற்சி கொண்ட அடிமைகளை விடுதலைசெய்யும்போது சில நெறிகள் கடைபிடிக்கப்படுவதுண்டு. அவர்கள் காடுகளுக்குள் சென்று அங்கே தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். மக்கள்வாழும் பகுதிகள் எங்கும் தென்படக்கூடாது. நால்வருணத்திற்குரிய தொழில்களில் எதையும் அவர்கள் செய்யலாகாது” என்றார். “ஏனென்றால் எங்கு எதைச்செய்தாலும் அவர்களின் படைக்கலம் அவர்களை ஷத்ரியர்களாகவே ஆக்கும்.”
விதுரர் மெல்ல கைப்பிடியை விட்டு தோள்தளர்ந்தார். அனைத்தையும் அவர் புரிந்துகொண்டதாகத் தோன்றியது. சௌனகர் அவர்கள் இருவரையும் மாறிமாறி பார்த்துக்கொண்டிருந்தார். கணிகர் சௌனகரிடம் “என்ன செய்யலாம், அமைச்சரே? அரசர் அவர்களை விடுதலை செய்வார். அதற்கு நான் அவரிடம் கருத்துரை அளிக்கிறேன். விடுதலை செய்யப்பட்ட அடிமைகளுக்குரிய வாழ்க்கையை அவர்கள் வாழவேண்டும், அவ்வளவுதான்” என்றார். சௌனகர் விதுரரை நோக்க அவர் “எத்தனை காலம்?” என்றார்.
கணிகர் “எத்தனை காலம் என்றால், அடிமைகள் வாழ்நாள் முழுக்க அவ்வண்ணமே வாழவேண்டும் என்பதே நெறி” என்றார். விதுரர் சினத்துடன் ஏதோ சொல்ல கையெடுக்க “பொறுங்கள். வாழ்நாள் முழுக்க பாண்டவர் கான்புகவேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. லகிமாதேவியின் ஸ்மிருதியின்படி ஒருமுறை வியாழன் சுற்றிவருகையில் மானுடரின் ஒரு வாழ்நாள் நிகழ்ந்து முடிகிறது. ஆகவே பன்னிரு ஆண்டுக்காலம் என்பது ஒருவகை வாழ்நாளே” என்றார் கணிகர். “பத்து வியாழவட்டக்காலம் வாழ்பவரே புவிநிறைவை அடைகிறார் என்கின்றது ஸ்மிருதி.”
“ஒரு வியாழவட்டம் அவர்கள் காட்டில் வாழ்ந்தால் போதும்” என்று கணிகர் மீண்டும் சொன்னார். “அதன்பின்?” என்று விதுரர் கேட்டார். “அவர்கள் மறுபிறப்பெடுக்கிறார்கள். அதன்பின் ஓராண்டுகாலம் அவர்களுக்கு இரண்டாவது குழந்தைப்பருவம். ஓராண்டு முடிந்து மீண்டும் காயத்ரி பெற்று உபநயனம் செய்துகொண்டு அவர்கள் ஷத்ரியர்களாக ஆகலாம். அதன்பின் அவர்கள் தங்கள் நாட்டை அரசரிடம் வந்து கோரலாம். அவர் மறுப்பாரென்றால் படைகொண்டுவந்து பொருதலாம். வென்றால் நாடாளலாம்.” அவரது புன்னகை விரிந்தது. “விரும்பினால் மீண்டும் சூதாடவும் அமரலாம்.”
“அந்த ஓராண்டுகாலம்…” என்று சௌனகர் சொல்லத் தொடங்க “ஆம், வேட்டைக்கழுகுகள் குழவிகளையே கவ்விச்செல்லும். அன்னை உயிர்கள் அவற்றை பொந்துகளுக்குள் ஒளித்துவைக்கும்…” என்றபடி மெல்ல உடல்குலுங்க நகைத்தார் கணிகர். “குழவியர் ஒளிந்துவாழ்வதே முறை. குழிகளுக்குள் வளைகளுக்குள் புதர்களுக்குள்… அப்பருவத்தில் அவர்களைத் தேடி வேட்டையாடி அழிக்க அரசப்படைகளுக்கு உரிமையுண்டு. அவர்கள் மறைந்து வாழ்ந்து ஓராண்டைக் கடந்து உபவீதம் அணிந்து எழுந்து வரட்டும். அது அனைத்து உயிர்களுக்கும் உரிய இயற்கையின் நெறி அல்லவா?”
விதுரர் எழுந்தார். “அது நடவாது…” என்றார். “நான் யுயுத்ஸுவிடம் சொல்லி அனுப்பிவிட்டேன். பிறிதொரு வழியும் என் முன் இல்லை என்றேன். என் சொற்களின் பொருளை பேரரசர் அறிவார்” என்றார் கணிகர். “இல்லை, இது நடவாது. அவர்கள் நாடாள்வார்கள். ஐயமே தேவையில்லை. அதன்பொருட்டு இங்கே குருதிபெருகினாலும் சரி” என்று விதுரர் எழுந்துகொண்டார். கணிகர் சௌனகரிடம் “நான் சொன்னவற்றுக்கு நீங்களும் சான்று அமைச்சரே. யுதிஷ்டிரரிடம் சொல்லும்…” என்றார். சௌனகர் “ஆம், அது என் கடமை” என்றார்.
[ 14 ]
சகுனியின் அரண்மனையிலிருந்து வெளியே வரும்போதே விதுரர் கொதிக்கத் தொடங்கிவிட்டிருந்தார். “என்ன வஞ்சம்… எத்தனை ஆணவம்! யாரிடம் கட்டளையிடுகிறார் முடவர்? நாடாண்ட என் மைந்தர் காடுபுகுவதா? அமைச்சரே, ஒருநாள் இச்சொற்களை என்னிடம் சொன்னதன் பொருட்டு இவரை கழுவில் அமரச்செய்வேன். தெய்வங்கள் துணைநிற்கட்டும். என்னை ஆளும் மூதாதையர் சொல் உடன்வரட்டும். இவன் கழுவிலமர்ந்திருப்பதை என் விழிகளால் பார்ப்பேன்…”
அச்சத்துடன் அவரை நோக்கியபடி சௌனகர் நடந்தார். தேரிலேறிக் கொண்டதும் விதுரர் “பேரரசரின் அவைக்கு” என்றார். சௌனகர் தொண்டையைக் கனைத்தபடி “அமைச்சரே, நாம் அமைச்சர்கள். ஒருபோதும் நிலையழியலாகாது. அரசர்களுக்கு மாறாநெறியை சொல்லவேண்டியவர் நாம். எனவே நமக்கு வஞ்சமும் சினமும் இருக்கலாகாது” என்றார். சினத்துடன் திரும்பிய விதுரர் “ஆம், ஆனால் நான் அமைச்சன் அல்ல. நான் பாண்டவர்களின் தந்தை” என்றார். சௌனகர் “அவ்வண்ணமென்றால் நீங்கள் கௌரவர்களுக்கும் தந்தை அல்லவா?” என்றார்.
அதிர்ந்து விழிதிருப்பிய விதுரர் கையை வீசி அவர் சொல்லவந்ததை விலக்கினார். “சுருதை இறந்தபின் அனைத்திலிருந்தும் விலகிவிட்டிருந்தேன். எனக்கென்ன என்று நான் இருந்திருக்காவிட்டால் இந்தச் சூதே நிகழ்ந்திருக்காது. சௌனகரே, இந்நிகழ்வுகளுக்கு முதல்பொறுப்பு நானே. நான் சென்று அழைத்திராவிட்டால் யுதிஷ்டிரன் சூதுக்களத்திற்கு வந்தமைந்திருக்கமாட்டான்…” சௌனகர் “இனி அப்படி எண்ணங்களை ஓட்டுவதில் பொருளே இல்லை. இவை இவ்வண்ணம் நிகழ்ந்தன என்பதனாலேயே இது ஊழ் என்றாகிறது” என்றார்.
“நான் இதை விடமுடியாது… அவைநிகழ்வுக்குப்பின் மீண்டும் பழைய விதுரனாக ஆகிவிட்டேன்” என்றார் விதுரர். “இல்லை அமைச்சரே, நீங்கள் முந்தைய விதுரர் அல்ல. உங்கள் விழிகளில் நான் எப்போதும் கண்டிருந்த அந்த புன்னகை மறைந்துவிட்டிருக்கிறது. இந்தக் கொந்தளிப்பும் நடுக்கமும் முன்பு உங்களிடம் இருந்ததில்லை.” விதுரர் பெருமூச்சுடன் “ஆம்” என்றார். “அவைநிகழ்வு என்னை சிதைத்துவிட்டது. அதன்பின் இதுவரை நான் ஒரு கணமும் துயிலவில்லை. இனி என்னால் துயிலமுடியுமா என்றே உள்ளம் மயங்குகிறது.”
அவர் விழிகளை மூடி நெற்றிப்பொட்டை அழுத்திக்கொண்டார். “அந்த அவைநடுவே… அங்கு நானும் இருந்தேன், இறந்து மட்கிய உடலாக” என்றார். சிவந்த விழிகளுடன் சௌனகரை நோக்கி “அக்காட்சி என்னுள் ஓயாது நிகழ்கிறது, அமைச்சரே. நடக்கும்போதும் உரையாடும்போதும் உள்ளத்தின் ஒருபகுதியில் அது இருந்துகொண்டே இருக்கிறது. இனி என் வாழ்வில் அதிலிருந்து எனக்கு விடுதலை இல்லை.”
‘தேரின் சகட ஒலி சீரான தாளமாக இருப்பதுதான் எத்தனை ஆறுதல் அளிப்பது!’ என சௌனகர் எண்ணிக்கொண்டார். ஒவ்வொன்றும் சிதறிக்கிடக்கின்றன. நகரமல்ல இது, மாபெரும் இடிபாடு. விண்ணிலிருந்து விழுந்து உடைந்து பரவியது. பொருளற்ற வடிவங்கள். கட்டிடங்கள், சாலைகள். எங்கும் உயிரசைவு இருக்கவில்லை. உச்சிவெயிலில் பறவைகள் கிளைகளுக்குள் மறைந்துவிட்டிருந்தன. கூரைவிளிம்புகள் கூர்நிழலாக மண்ணில் விழுந்துகிடந்தன. அத்தனை வாயில்களுக்கு அப்பாலும் இருள். இந்நகரில் இன்னமும் மானுடர் வாழ்கிறார்கள். இன்னமும் உண்டு உறவாடி துயின்று விழிக்கிறார்கள். இன்னமும் ஆலயக்கருவறைகளில் தெய்வங்கள் விழிகொண்டு படைக்கலம் பூண்டு அமர்ந்திருக்கின்றன.
தேர் நின்ற ஒலிகேட்டு சௌனகர் தன்னிலை மீண்டார். விதுரர் விழித்துக்கொண்டு “எங்கு வந்துள்ளோம்?” என்றார். “புஷ்பகோஷ்டம்” என்றார் சௌனகர். “ஆம், மூத்தவரை பார்க்கவேண்டும்…” என்றபின் சால்வையை சீரமைத்தபடி எழுந்தார் விதுரர். “மூத்தவர் ஒருபோதும் இளையோர் காடேகவேண்டுமென ஆணையிடமாட்டார். அதன் பொருளென்ன என்று அவர் அறிவார்.” சௌனகர் அவரை நோக்க “அமைச்சரே, பன்னிரு வருடங்கள் என்றால் என்ன? முற்றிலும் புதிய ஒரு தலைமுறை உருவாகி வந்துவிடும், புதியநோக்குகள், புதிய வழிகள். மீள்பவர்கள் அனைவரும் மறந்துபோய்விட்ட ஓர் இறந்தகாலத்தில் இருந்து எழுந்து வருகிறார்கள்.”
“அத்துடன் இன்று முனைகொண்டிருக்கும் அத்தனை அரசியல் இக்கட்டுகளும் இயல்பாக முட்டி மோதி முடிவுகண்டிருக்கும். வென்றவரும் தோற்றவரும் வகுக்கப்பட்டிருப்பார்கள்” என்றார் சௌனகர். “ஆம்” என்றபின் விதுரர் “அதை நான் ஒப்புக்கொள்ளப்போவதில்லை. ஒருபோதும் என் மைந்தர் காடேகமாட்டார்கள். அவர்களின் மண் அவர்களுக்குரியதாகவே இருக்கும்” என்றார்.
இசைக்கூடத்தில் திருதராஷ்டிரர் இருந்தார். ஏவலன் அவர்கள் உள்ளே செல்லலாம் என்று சொன்னபோது விதுரர் “நான் பேசுகிறேன். நீங்கள் தருமனின் செவி என உடனிருந்தால் போதும்” என்றார். சௌனகர் தலையசைத்தார். மெத்தைவேய்ந்த தரையில் அவர்கள் தளர்ந்த கால்களுடன் நடந்தனர். இசைச்சூதர் மூவர் யாழும் குழலும் மீட்டிக்கொண்டிருக்க பீடத்தில் சாய்ந்தமர்ந்து விழிமூடி திருதராஷ்டிரர் கேட்டுக்கொண்டிருந்தார். அவர்கள் சென்று ஓசையிடாமல் பீடங்களில் அமர்ந்தனர். இசைக்கு ஏற்ப திருதராஷ்டிரரின் உடலில் மெல்லிய அலையெழுவதை சௌனகர் நோக்கிக்கொண்டிருந்தார்.
பண்நிரவல் முடிந்ததும் முதற்சூதர் தலைவணங்கினார். “நன்று…” என்று திருதராஷ்டிரர் முனகினார். “காத்திருங்கள், பாணரே. சற்றுநேரம், இப்பேச்சை முடித்துக்கொள்கிறேன்” என்றார். அவர்கள் இசைக்கலங்களை அங்கேயே விட்டுவிட்டு ஆடையோசையுடன் எழுந்து விலகினர். அவர்கள் வெளியே சென்று கதவுமூடும் ஒலி கேட்டதுமே விதுரர் உரத்த குரலில் “மூத்தவரே, நான் கணிகரை பார்க்கச் சென்றிருந்தேன். இங்கிருந்து யுயுத்ஸு ஒரு செய்தியுடன் சென்றதாகச் சொன்னார்” என்றார். அவரை கையசைத்து மறித்த திருதராஷ்டிரர் “ஆம், நானே அனுப்பினேன். ஒரு வெளியேறும் வழியை கண்டடையும்படி சொன்னேன்” என்றார்.
“ஆனால் அவர் சொல்வது…” என உரக்க மறித்த விதுரரை திருதராஷ்டிர்ர் மீண்டும் கையசைத்து தடுத்தார். “அவர் சொல்வது மட்டுமே இப்போது ஒரே வழி… அவர்கள் காடுபுகட்டும்,” விதுரர் “மூத்தவரே…” என்றார். “வேறு வழியில்லை. அவர்கள் இங்கே தொழும்பராக இருப்பதை என்னால் ஏற்கமுடியாது. பன்னிரு ஆண்டுக்காலம் அவர்கள் இங்கில்லை என்றால் அனைத்தும் இயல்பாகவே அடங்கிவிட்டிருக்கும். அடுத்த தலைமுறை மேலெழுந்து வந்திருக்கும்… அதுவன்றி வேறேதும் உகந்தவழியென எனக்குத் தெரியவில்லை” என்றார் திருதராஷ்டிரர்.
சினமெழுந்தவரைப்போல பல்லைக்கடித்து “எத்தனைகாலம்! சொல்லப்போனால் இவர்கள் பிறப்பதற்கு முன்னரே இந்தப்பூசல் தொடங்கிவிட்டது. இயன்ற அனைத்தையும் செய்துவிட்டேன். ஒவ்வொருநாளும் இதை அஞ்சி தெய்வங்களிடம் மன்றாடியபடியே வாழ்ந்துகொண்டிருந்தேன். என்ன செய்தாலும் எரியில் எண்ணை என இதை வளர்க்கவே செய்கிறது” என்றார். “ஆம், வேறுவழியே இல்லை. பதின்மூன்று ஆண்டுகாலம் இருதரப்பினரும் முழுமையாகவே விலகியிருக்கட்டும். ஒருவருக்குப் பிறர் இல்லையென்றே அமையட்டும். அது ஒன்றே வழி.”
விதுரர் “பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்?” என்று உரக்கக் கூவினார். “பன்னிரண்டு ஆண்டுகாலம் புடம்போட்ட நஞ்சாக அது எழும்… எரியை அணைக்கவேண்டும். மூடிவைப்பது அறிவின்மை.” திருதராஷ்டிரர் “ஆம், நான் அறிவேன். ஆனால் பன்னிரண்டு ஆண்டுகள் நான் உயிருடனிருக்கமாட்டேன். நான் சென்றபின் என்ன நடந்தால் என்ன? என் மூதாதையருக்கும் இளையோனுக்கும் நான் மறுமொழி சொல்லவேண்டியதில்லை…” சோர்ந்து குரல்தழைய “இளையோனே, இதற்கப்பால் என்னால் எண்ண முடியவில்லை. என் முன் எஞ்சியிருப்பது இவ்வழி ஒன்றே.”
விதுரர் உடைந்த குரலில் கூவியபடி திருதராஷ்டிரரை நோக்கி சென்றார் “நான் ஒப்ப மாட்டேன். ஒருபோதும் அவர்கள் கானேகப்போவதில்லை… இது சூது… மூத்தவரே. அவ்விழிமக்களின் சூதுக்கு இரையாகிவிட்டீர்கள். நான் ஏற்கமாட்டேன்.” திருதராஷ்டிரர் “நான் ஆணையிட்டுவிட்டேன். யுயுத்ஸுவிடம் ஓலையெழுதச் சொல்லிவிட்டேன்” என்றார். “உங்களுக்கே தெரிகிறது இது நெறியின்மை என்று… ஆகவே என்னிடமும் மறைத்தீர்கள்.” திருதராஷ்டிரர் “ஆம், நீ ஏற்கமாட்டாய் என நான் அறிவேன். ஆனால் எனக்கு வேறுநெறி தெரியவில்லை” என்றார். “இது கீழ்மை… மூத்தவரே, அஸ்தினபுரியின் மதவேழம் இழிசேற்றில் விழுந்துவிட்டது…”
“நான் அச்சத்தின் குழியில் விழுந்து நெடுநாட்களாகிறது. பன்னிரண்டு ஆண்டுகாலம் நிம்மதியாகத் துயிலமுடியும் என்றால் அதுமட்டும் போதும் எனக்கு” என்றார் திருதராஷ்டிரர். “சௌனகரே, தருமனிடம் நான் ஆணையிட்டதாகச் சொல்லுங்கள். அனைவரிடமும் இந்தக் கானேகல் அவனே விரும்பி ஏற்றுக்கொண்டதாகவே அவன் சொல்லவேண்டும். பூசலைத்தவிர்க்கும்பொருட்டு அவனே இம்முடிவை முன்வைத்ததாகவே காந்தாரி அறியவேண்டும்…” சௌனகர் “ஆணை” என்றார். “தருமனிடம் என் சொற்களை உரையுங்கள். அவனுக்கு அவன் தந்தையின் நெஞ்சுருகிய நல்வாழ்த்து என்றும் உடனிருக்குமென அறிவியுங்கள்.” “அவ்வாறே” என்றார் சௌனகர்.
அவர் செல்லலாம் என்று திருதராஷ்டிரர் கையசைத்தார். தலைவணங்கி சௌனகர் திரும்பி நடந்தார். விதுரர் “இது கீழ்மை… மூத்தவரே, கீழ்களின் நெறி இது. ஏன் இப்படி வீழ்ந்தீர்கள்?” என்று அழுகையென கூவுவதை அவர் கேட்டார். “பிறிதொன்றும் இங்கு நிகழாது, இளையோனே” என்றார் திருதராஷ்டிரர். “நான் இதை ஏற்கமாட்டேன். என் சொல் இதற்கு உடன்நிற்காது” என்று விதுரர் மேலும் கூவினார். பின் உடைந்து இழுபட்ட குரலில் “நான் முன்னரே எண்ணினேன்…. இதை முன்னரே ஐயப்பட்டேன். உங்களை அறியாமல் உங்கள் உள்ளம் மாறிக்கொண்டிருந்தது… வேண்டாம், மூத்தவரே” என்று அழுதார்.கதவைமூடும்வரை அக்குரலே அவர் காதுகளில் இருந்தது