சிலம்பு ஒருகடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

கீழ்க்கண்ட சுட்டியில் திரு இந்திரா பார்த்தசாரதி அவர்களின் கட்டுரை வாசிக்க நேர்ந்தது.

http://www.thinnai.com/?module=displaystory&story_id=60108253&format=html

முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் சிலப்பதிகாரத்தை அணுகியுள்ளார். அவருடைய வாதங்கள் சரி/தவறு என்பதைத் தாண்டி, அப்படியும் யோசிக்க இடமிருக்கிறது என்று படுகிறது. உதாரணத்துக்கு சில பத்திகள்,

“ஆனால் கண்ணகி இத்தகைய தமிழ் மரபிலும் வந்தவளாகத் தெரியவில்லை. கோவலன் மாதவியிடம் சென்றதற்காகக் கடிந்து ஒரு சொல்கூடப் பேசவில்லை. கற்பைப்பற்றிய அவளுடைய ‘அப்செஷன் ‘ தான் காவியம் முழுவதும் பேசப்படுகிறது. மாதவி கோவலனைப் பிரிந்ததும் கோசிகாமாணி மூலம் கடிதம் அனுப்புகிறாள், இது இயற்கை. ஆனால் கண்ணகி, கோவலன் அவளை விட்டுப் பிரிந்திருந்தபோது, கடிதமோ, தூதோ அனுப்பியதாகச் சிலப்பதிகாரம் முழுவதும் செய்தியில்லை. இளங்கோவடிகள் கண்ணகியின் குணச்சித்திரத்தை எவ்வளவு நுணுக்கமாகப் படைத்திருக்கிறார் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு

கண்ணகியின் கற்பைச் சிறப்பித்துக் கூறுவதற்காகத்தான் இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் இயற்றினார் என்பது தவறான கருத்து. அப்படியிருந்திருந்தால், காவிய மரபின்படி இக்காவியத்துக்கு அவர் கண்ணகியின் பெயரையே இட்டிருக்க வேண்டும். மனப் பொருத்தமில்லாத ஒரு மண வாழ்க்கையின் பாலைவன நிலையைச் சுட்டிக் காட்ட எழுந்ததே இக்காவியம். வஞ்சிக் காண்டம் ஓர் இடைச் செருகல் என்றுங் கருத இடமிருக்கிறது…

சிலப்பதிகாரத் தேர்ச்சி உள்ளவர் என்ற முறையில் இது பற்றி தங்கள் நிலையறிய ஆவல்.

மிக்க அன்புடன்,
கணேஷ்
சிங்கப்பூர்

அன்புள்ள கணேஷ்

சிலப்பதிகாரம் ஓர் இலக்கியப்பிரதி. இலக்கியப்பிரதிகள் என்பவை வாசகனுக்கு கற்பனைக்கான சாத்தியங்களை திறந்துகொடுக்கின்றன. அதற்கான மொழிக்குறிகளால் அவை ஆக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைக்கொண்டு வாசகன் தன்னுடைய பிரதியை உருவாக்கிக் கொள்கிறான். இதற்கு பெயரே வாசிப்பு. அதாவது எழுத்தாளன் ஒரு அர்த்தத்தை குறிகளாக உருவாக்குகிறான். அதை வாசகன் தன் போக்கில் வாசித்து தன் அர்த்தமாக ஆக்கிக்கொள்கிறான்

ஒரு இலக்கியப்பிரதியை ஒரே சமயம் இருவர் வாசித்தால் உருவாவது இரண்டு பிரதிகளே. இப்படி முடிவில்லாமல் பிரதிகளை உருவாக்கும் ஆற்றம் இலக்கியப்படைப்புகளுக்கு உண்டு. மிக அதிகமான பிரதிகளை காலம்தோறும் உருவாக்கும் பிரதிகளைச் செவ்வியல் ஆக்கங்கள் என்கிறொம்

சிலப்பதிகாரம் பல நூற்றாண்டுகளாக இங்கே வாசிக்கப்பட்டது. அது நூறாண்டுகளுக்கு முன் எப்படி வாசிக்கப்பட்டது என்றுகூட நம்மால் இன்று ஊகிக்கமுடியாது. ஆகவே இளங்கோ என்ன உத்தேசித்தார் என்று நாம் இப்போது யோசிக்க முடியாது. இப்போது நம் கையில் கிடைக்கும் நூலில் உள்ள குறியீடுகள் நம்மிடம் என்ன சொல்கின்றன என்பதே முக்கியம்

இக்குறியீடுகளை நாம் நம் விருப்பப்படி பொருள்கொள்ள முடியாது. அது செயற்கையான பொருள்கொள்ளல். நம் பண்பாட்டுச் சூழல் நம் ஆழ்மனதை வடிவமைத்துள்ளது. இச்சூழலில் நம் ஆழ்மனதில் அக்குறிகள் என்ன வகையான உணர்வுகளை கருத்துக்களை மேலதிக குறிகளை உருவாக்குகின்றன என்றே பார்க்க வேண்டும். அதுவே முறையான வாசிப்பு.

அவ்வாறு சிலப்பதிகாரத்தை வாசிக்க பலநூறு சாத்தியக்கூறுகள் அதில் உள்ளன . ‘சிலப்பதிகாரக் காப்பியக் கட்டமைப்பு’ என்ற நூலில் ஆ பழனி [தமிழினிவெளியீடு] சிலம்பில் உள்ள நுட்பமான மர்மங்களை வாசித்து அதை பொருள்கொள்ள முயல்வதை சிறந்த உதாரணமாக சொல்லலாம். நானெழுதிய ‘கொற்றவை’ கூட அப்படிப்பட்ட ஒரு வாசிப்பே.

இந்திராபார்த்தசாரதியின் வாசிப்பு இரு தளங்களில் நிகழ்கிறது. ஒன்று அக்காப்பியம் அளிக்கும் குறிகள் அவரது மனத்தில் உருவாக்கும் கற்பனைச்சாத்தியங்களை ஒட்டிய வாசிப்பு. அதுதான் கண்ணகி பற்றிய சித்திரமாக ஆகிறது. அப்படி வாசிக்க அவருக்கு உரிமை உண்டு. அந்த வாசிப்பை நாம் நம் வாசிப்புகளுடன் சேர்த்து பரிசீலிக்கலாம்.

இரண்டாவது வாசிப்பு ஆராய்ச்சி சார்ந்தது. அதனடிப்படையில் வஞ்சிக்காண்டம்m பிற்சேர்க்கை எனலாம் என்கிறார். என் நோக்கில் இந்த ஐயத்துக்கான வலுவான காரணம் அக்காப்பியத்தில் உள்ளது. புகார், மதுரைக் காண்டங்களின் கவித்துவம் வஞ்சிக்காண்டத்தில் இல்லை. புகார், வஞ்சிக்காண்டங்களில் இல்லாத அதீதமான புராணிகத்தன்மையும் அதில் உள்ளது. முற்பிறப்புக் கதைகள் உதாரணம். அது கதையின் எல்லா முடிச்சுகளையும் செயற்கையாக தீர்த்து வைப்பதாகவும் சம்பந்தமே இல்லாமல் சேரன் செங்குட்டுவனின் வடபுல படையெடுப்பை விதந்தோதுவதாகவும் உள்ளது.

முக்கியமாக முதல்கட்ட கதையில் அதிக முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரமான தேவந்தி வஞ்சிக்காண்டத்தில் விரிவாக வெளிப்படுகிறாள். கேரள கண்ணகி ஆலயங்களில் கண்ணகிக்கு இணையான தேவியாக பெருந்தோழி [தேவந்தி] தனி சன்னிதியில் அமர்ந்திருப்பதைக் காணலாம். வஞ்சிக்காண்டம் சேர நாட்டில் பிற்காலத்தில் உருவானதாக இருக்க வாய்ப்புள்ளது. இந்திரா பார்த்தசாரதி கூறுவது அறிஞர்கள் ஆய்ந்துநோக்க வேண்டிய ஒரு கோணம்தான். அதனால் சிலம்பின் இப்போதைய அமைப்பு மாறவேண்டும் என்று சொல்லவரவில்லை. அது சிலம்பை புரிந்துகொள்ள ஒரு புதுவழியை திறக்கலாம்

ஆனால் கண்ணகி குறித்த அவரது நோக்கு எனக்கு சரியாகப் படவில்லை. தமிழ் பழமரபில் இல்லறத்தாள் -பரத்தை என இரு முறைகள் இருந்துள்ளன. தலைவன் பரத்தையரை நாடிச்செல்ல் தலைவி பெரிய மனக்குறை ஏதும் இல்லாமல் ஆற்றியிருப்பதையே நாம் காண்கிறோம். அவன் திரும்பி வரும்போது அவள் சற்றே ஊடுகிறாள். பெரும்பாலும் அவனுக்கு தூது ஏதும் அனுப்புவதில்லை. அந்த தலைவியின் சித்திரம் சங்ககாலத்தையது. அவள் பார்வையில் பரத்தையரிடம் தலைவன் செல்லுவது பெரிய ஒழுக்கக்கேடு ஒன்றும் இல்லை. அக்காலத்தில் அது இயல்பே. தலைவி பொறுமையுடன் இருப்பதை சங்கப்பாடல்களும் பாராட்டுகின்றன. இளங்கோ அதை கொஞ்சம் தீவிரப்படுத்துகிறார், அவ்வளவுதான்.

மேலும் கண்ணகி கதைக்கு முன்னுதாரணமாக உள்ள கதை புற நாநூற்றில் வரும் வையாவிக்கோப்பெரும்பேகனின் மனைவி கண்ணகி. அவளும் கணவனால் புறக்கணிக்கப்பட்டு ஆற்றியிருக்கிறாள். அவளைப்பற்றி பரணர் உள்பட பல கவிஞர்கள் பாடியிருக்கிறார்கள். அதே கதையின் இன்னொரு வடிவமே கோவலன் கண்ணகி கதை. கேரளத்தில் நாட்டார் மரபில் புழங்கும் கண்ணகியம்மன் பாடலில் கோவலனுக்கு பேகன் என்றுதான் பெயர் சொல்லப்படுகிறது.

தமிழில் ஏற்கனவே இருந்த உண்மைக்கதைகள் சிலவற்றின் நாடகத்தனமான கலவையே சிலப்பதிகாரத்தின் கதை. ஆம், சிலம்பு கற்பின் கதை அல்ல. அது சாமானியனின் அற உணர்ச்சியின் கதை. இளங்கோவே சொல்வது போல ‘அரைசியல் பிழைத்தோர்க்கு கூற்றாக வரும் அறத்தின்’ கதை அது

இளங்கோ உருவாக்க நினைப்பது அறச்சீற்றம் கொண்ட ஒரு சாதாரண குடிமகளின் சித்திரத்தை. அதிகாரத்தை அவள் தட்டிக்கேட்கவேண்டும். அதற்கான தகுதி அவளுக்கு வரவேண்டுமென்றால் அவள் மரபு சொல்லும் எல்லா அற, ஒழுக்க விழுமியங்களும் கொண்டவளாக இருக்கவேண்டும். ஆகவே அவளை உச்சகட்ட கற்புக்கரசியாக சித்தரிக்கிறார். அவளது கதாபாத்திரத்தை மிகைப்படுத்துகிறார். வெடிக்க காத்திருக்கும் குண்டின் அமைதியை அவளுக்கு அளிக்கிறார். ‘வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திராமல்’ வாழ்பவள் வேனிலில் நடக்கிறாள். . மெல்லிய இயல்புகொண்டவள் கொற்றவையாக ஆகிறாள்.இந்த நாடகீயமான பரிணாமத்தைச் சுட்டவே கண்ணகி அப்படி ஆக்கப்பட்டிருக்கிறாள்

நான் எழுதிய கொற்றவை என்ற உரைநடைக்காவியம், மற்றும் மொழியாக்கம் செய்த கொடுங்கோளூர் கண்ணகி என்ற நூல் இரண்டையும் நீங்கள் வாசிக்கலாம்.

ஜெ

முந்தைய கட்டுரைதஞ்சை தரிசனம் – 2
அடுத்த கட்டுரைமனுஷ்யபுத்திரன் -கடிதம்