தேவகிச் சித்தியின் டைரி -சிறுகதை

pigeon_by_Kariyappa_Hanchinamani

சித்தி காபி சாப்பிட வருகிறாளா இல்லையா என்று கேட்டு வரும்படி அம்மா என்னிடம் கூறினாள். சித்தியும் சித்தப்பாவும் தூங்கும் அறையின் கதவைத் தள்ளிப் பார்த்தபோது அது பூட்டப்பட்டிருந்தது தெரிந்தது. எனவே முகப்பு வாசல் வழியாக வலது முற்றத்திற்குப் போய் , முருங்கை மரத்தில் ஏறி,  சன்னலுக்கு மேலே திறந்த வென்டிலேட்டர் வழியாக உள்ளே பார்த்தேன். பயமும் குறுகுறுப்பும் கலந்த பரவச நிலை ஏற்பட்டது. கிட்டத்தட்ட கோழி முட்டை திருடிக் குடிப்பதற்கு இணையானது அது. சித்தி உடைமாற்றிக் கொண்டிருக்கவில்லை. மாறாக மின் விளக்கை எரியவிட்டு, தரையில் சுவர்மீது சாய்ந்தபடி அமர்ந்து, ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள். அவ்வப்போது முகத்தில் வெட்கம் கலந்த சிரிப்பு வந்தது. கொசு கடித்திருக்கக்கூடும் ஒருமுறை கழுத்தையும், பாதத்தையும் சொறிந்து கொண்டாள். கொடியில் அவள் களைந்து போட்ட மஞ்சள் நிறச்சேலை கிடந்தது. பீரோ திறந்து உள்ளே வெள்ளிப்பாத்திரங்களும் புடவைகளும் தெரிந்தன. பெரிய இரட்டைக் கட்டில் மீது சித்தப்பாவின் லுங்கி களையப்பட்டு போடப்பட்ட நிலையில். புடவை காற்றில் அசைய சித்தி திடுக்கிட்டு ஏறிட்டுப்பார்த்தாள். எழுதிக் கொண்டிருந்ததை மூடிவிட்டாள். என்னை அவள் பார்த்துவிட்டாள் என்று எண்ணி மூச்சுத்திணறல்  அடைந்தேன். ஆனால் சித்தி மீண்டும் எழுத ஆரம்பித்தாள். கதவுக்கு மறுபக்கம் அம்மா என்னைக் கூப்பிடுவது கேட்டது. பிறகு “தேவகீ தேவகீ” என்ற அழைப்பு. சித்தி எழுதி வைத்ததை மூடினாள். கதவைப் பார்த்தாள். கூந்தலைக் காதில் ஒதுக்கி செருகிக் கொண்டாள். ஆனால் எழவில்லை. அம்மா கதவைத் தட்டினாள். சித்தி அவசரமாக எழுந்து, கையிலிருந்த டைரியை பீரோவிற்குள் உள்ளறையில் வைத்துப்பூட்டி, புடவைகளை அள்ளி அதை மூடி, பீரோவையும் பூட்டி, சாவிகளைக்  கைப்பையில் போட்டாள். முந்தானையால் வியர்வையை ஒற்றியபடி கதவைத் திறந்தாள்.

அம்மாவின் கையில் வினியின் ஜட்டி இருந்தது. புருவத்தைச் சுருக்கியபடி ‘என்ன பண்ணிக் கொண்டிருந்தாய்?’ என்றாள்.

‘புடவை மாற்றினேன்’

‘இவ்வளவு நேரமா? கூப்பிட்டது கேட்கவில்லையா?’

சித்தி பேசாமல்   வெளியே போனாள். இறங்கி கொல்லைப் பக்கம் போனேன். அவள் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்து பிரியமாகப் புன்னகைத்து, ‘மணி உன்னைத்தேடினானே, பார்த்தாயா?’ என்றாள்.

“எந்த மணி? நெட்டை மணியா?”

சித்தி விளக்குப் போட்டது போலச் சிரித்து, “அவன் பெயர் நெட்டையனா? குட்டையன் யார்?” என்றாள்.

“கெ. தபசிமணி, ஒன்பதாம்  வகுப்பு.”

“அது யார்?”

“அந்தோணிசார் பையன். கெட்டவன்.”

“ஏன்?”

நான் காரணங்களை யோசித்தபோது வினி உள்ளிருந்து வந்து, “சித்தி நான் நாளைக்கு ஹோம்வொர்க் செய்கிறேன். நாளைக்கு லீவு” என்றாள்.

“என்ன லீவு?”

“திருவள்ளுவர் தினம்” என்று நான் ஆர்வமாகச் சொன்னேன். “திருவள்ளுவர் செத்துப்போய்விட்டார் சித்தி”

“அடப்பாவமே, தாடியெல்லாம் வைத்திருப்பாரே? அந்தத் தாத்தாவா?” சித்தி கேட்டாள்.

உள்ளிருந்து அம்மா, “வினிக்கழுதை டம்ளர் எங்கேடி? சனியன், கூப்பிட்டால் காது கேட்கிறதா பார்… ஏய் வினி? ” என்று கத்தினாள். வினி உள்ளே ஓடினாள். சித்தியிடம் ‘போகிறேன்’ என்று சைகை காட்டிவிட்டு தேரடிக்கு ஓடிப்போனேன்.

மறுநாள் எதிர்வீட்டு ராணியத்தையும், அம்மாவும், பாட்டியும் உட்கார்ந்து முருங்கைக் கீரை ஆய்ந்து கொண்டிருந்தபோது சித்தி பற்றிப்பேச்சு வந்தது. சித்தி ஆபிஸ் போய்விட்டாள். ஆபீசுக்கெல்லாம் திருவள்ளுவர் தினம் கிடையாது. காரணம் ஆபீசில் திருவள்ளுவர் படம் கிடையாது.

“என்ன, எலிசபெத் ராணி புதுப்புடவை வாங்கியிருக்கிறாள் போலிருக்கிறது” என்றாள் ராணியத்தை.

“சம்பாதிக்கிறாள், கட்டிக் கொள்கிறாள்” என்றாள் அம்மா. “மற்றவர்கள் மாதிரி அடுப்படியும் கரியுமா அவள் தலையில் எழுதியிருக்கிறது?”

“நீயும் போயேன் வேலைக்கு”  என்றால் பாட்டி. “யார் வேண்டாம் என்கிறார்கள்?”

“மானம் கெட்ட பிழைப்பு எங்கள் குடும்பத்தில் இல்லை. நாலுபேர் முன்னால் உட்கார்ந்து அரட்டையடிப்பதும் கண்டவன் வாயால் பேச்சு கேட்பதும்…”

“அது டேநைட் புடவை. ராத்திரியில் திருப்பிக் கட்டிக்கொண்டால் போதும். பளபளவென்று இருக்கும். ஞானம் வாத்தியார் பெண்டாட்டி பாசிப்பருப்பு நிறத்தில் ஒன்று கட்டியிருந்தாள். நானூறு ரூபாய் என்றாள். முந்நூறுக்கு குறையாது” என்றாள் ராணியத்தை.

“சின்னப்பெண்கள் கட்டினால் நன்றாக இருக்கும்” என்றாள் பாட்டி

ராணியத்தையின் ஓரக்கண் அம்மாவைப்பார்த்து சிரித்து திரும்பியது. “இல்லை பாட்டி, கொஞ்சம் வயதானவர்கள் கூடக் கட்டுகிறார்கள். அன்றைக்குக் கோயிலில் கீழத்தெருவிலிருந்து ஒரு மாமி கட்டிக் கொண்டு வந்தாள்”

“உண்மையாகவா?”

“பின்னே?”

“மரகதப்பச்சை என்றால் அத்தைக்கு எடுப்பாக இருக்கும்” என்றாள் அம்மா. ராணி அத்தையும் அம்மாவும் புன்னகைத்தனர்.

“என்னவோ… இந்த வயதில் இனி நான் கட்டிக் கொண்டு எங்கே போகப்போகிறேன்?” பாட்டி கண்ணாடியைத் தூக்கி மேலே விட்டாள். ஒரு கீரை இலையைத் தூக்கிப் பார்த்தாள்.

“ஏன், சுபா வீட்டுக்குப் போகும்போது கட்டுகிறது” என்றாள் அத்தை.

“ஆமாம். கேட்டால் போதும், வாங்கித் தந்துவிடுகிறான் பிள்ளை” பாட்டி கோபமாக நான் வைத்திருந்த முருங்கைக் கீரைத்தண்டுகளைப்பார்த்தாள், “என்னடா இது?”

“துடைப்பம்”

“முகரையைப்பார். ஆண்பிள்ளை உனக்கு எதற்குத் துடைப்பம்? போடா…” தண்டுகளைப் பிடுங்கி வீசினாள்

அங்கே தொடர்ந்து அமர்ந்திருக்கும் தகுதியைப் பெறும் பொருட்டு தேவகிச் சித்தியைப்பற்றி ஏதாவது கூறவேண்டும் என்று எண்ணிய கணம் டைரி ஞாபகம் வந்தது. “அம்மா, சித்தி டைரி எழுதுகிறாள்” என்றேன்

“என்னது அது?” என்றாள் ராணியத்தை

“டைரி. சிவப்பாக அட்டை போட்ட டைரி. அன்றைக்கு அம்மா கூப்பிட்டபோது உள்ளே தாழ் போட்டுக்கொண்டு அதில் எழுதினாள்”.

அம்மா முகம் மாறியது. பாட்டியின் வாய் திறந்திருக்க மாறி மாறிப்பார்த்தாள். “நீ எப்படிப்பார்த்தாய்?” என்றாள் அம்மா.

“முருங்கை மரத்தில் ஏறிப்பார்த்தேன்” என்றேன். உடனே என் வயிறு பகீரிட்டது. அவசரமாக “சும்மாதான் அம்மா ஏறினேன்” என்றேன் “அந்த டைரியை சித்தி பீரோ உள்ளறையில் வைத்துப்பூட்டிவிட்டாள்.”

“டைரியா எழுதுகிறாள்?” என்று ராணியத்தை என்னைக் கூர்ந்து பார்த்துக் கேட்டாள்.

அம்மா சிரித்தபடி, “வேறு என்ன, பைசாக்கணக்குதான். அவள் சம்பளத்தை நாங்கள் தின்றுவிடக்கூடாதல்லவா?” என்றாள். என்னிடம் “போடா போய்க்கடையில் அப்பா இருக்கிறாரா என்று பார்த்துவிட்டு வா” என்று அதட்டினாள்.

“அப்பாவா?” என்று தயங்கினேன்.

“போடா”

நான் வெளியே வந்தேன். ஏதோ தவறு செய்துவிட்டது போலப்பட்டது. கடையில் அப்பா இல்லை. வரதன் இருந்தான். அவனிடம் நான்கு உலர்திராட்சை வாங்கி வாயில் போட்டுவிட்டு, நாகராஜன் வீட்டுக்குப்போய் அவன் வளர்க்கும் புறாக்களைப்பார்த்தேன். மதியச்சாப்பாட்டுக்குத் திரும்பினேன்.

தொட்டுக்கொள்ள முருங்கைக்கீரை என்பதால் உற்சாகம் ஏற்படவில்லை. இரண்டுமணி ஆகிவிட்டது.

சமையலறையில் அம்மா இல்லை. “அம்மா” என்று கத்தினேன். கூடத்தில் ஃபேன் கறக் கறக் என்று சுழல, கீழே பாட்டியும் வினியும் தூங்கினர்.

அம்மா என்று கூப்பிட்டபடி நான் நடந்தபோது சித்தியின் அறையிலிருந்து அம்மா கூப்பிட்டாள். நான் உள்ளே போனேன். “எங்கேடா அந்த டைரி?

“சித்தி அதை பீரோவிற்குள் வைத்து பூட்டிவிட்டாளே?”

“பீரோவில் இல்லையே?”

“சேலைக்கு அடியில் ஒரு உள்ளறை இருக்கிறது அம்மா”

அம்மா புடவைகளைத் தள்ளினாள். உள்ளறை இருந்தது. நான் ஒரு பிராவை எடுத்துப்பார்த்தேன். அம்மா “இது வேறயா?”என்றாள். “இதுக்கு ஏதுடா சாவி?”

“சாவியைச் சித்தி கைப்பையில் போட்டுவிட்டாளே?”

“ஓகோ, கையோடு கொண்டு போகிறாளா? சரி வா, சாப்பிடு” அம்மா பிராவைப் பிடுங்கி உள்ளே போட்டு கதவை அறைந்து ,மூடி பூட்டினாள்

“எனக்கு முருங்கைக்கீரை வேண்டாம்”

“உனக்கு முட்டை இருக்கிறது”

“ஆம்லெட்டா..?”

“சாம்பாரில் போட்டது. வா”

சாப்பிடும்போது வெளியே அம்மாவும் பாட்டியும் பேசுவது கேட்டது. பாட்டி திடீரென்று உரத்த குரலில் ”பட்டணத்து பவிஷுக்காரி வேண்டாம்டா என்று தலைதலையாக அடித்துக் கொண்டேன் கேட்டானா? என்ன இழவெல்லாம் எழுதி வைத்திருக்கிறாளோ சண்டாளி” என்றாள். அம்மா அவளைத் தணிந்த குரலில் அடக்கினாள்.

கையை டிராயரில் துடைத்தபடி வெளியே வந்தேன். அம்மா ஏதோ பேச ,பாட்டி அக்கறையாகத் தலையை ஆட்டியபடி இருந்தாள். வாய் திறந்திருந்தது. சோடாபுட்டிக் கண்ணாடியில் ஃபேன் சுழல்வது தெரிந்தது. அருகே போக விரும்பினேன். அம்மா அதட்டித் துரத்திவிட்டாள். என்ன பேசுகிறார்கள்? அப்படி அவர்கள் சுமுகமாகப் பேசுவதே அபூர்வம்.

மீண்டும் தேரடிக்கு வந்தேன். என்ன செய்வது என்று தெரியவில்லை. ஏப்பம் விட்டபோது முட்டை மணம் உள்ளிருந்து வந்தது .கிலேசமாக இருந்தது. சித்திக்கு என்னவோ பிரச்னை வரப்போகிறது என்று புரிந்தது. அதற்குக்காரணம் நான்தான். சித்தி நல்லவள். கதையெல்லாம் சொல்பவள். அவள் புடவைகட்டும் காட்சி மனதில் மின்னி மறைந்தது. அவள் வரும்போது ஓடிப்போய் சொல்லிவிடவேண்டும். தேரடியில் காத்திருந்தேன்.

அப்பாவும் மாடனும் வந்தார்கள். அப்பா என்னிடம், “என்னடா?” என்றார்.

“ஒன்றுமில்லை”

“வா வீட்டுக்கு, ஊர் சுற்றுவதே பிழைப்பு” என்றபடி நடந்தார். மாடன் தலைமீது நார்ப்பெட்டியில் ஏதோ இருந்தது. பெரிய பற்களைக் காட்டியபடி சிரித்தான். வீட்டுக்கு வந்ததும் மாடன் பெட்டியுடன் கொல்லைப்பக்கம் போனான். நான் உள்ளே போனேன். அப்பா சிறுதிண்ணையில் நின்றபடி கால் கழுவினார். வினி ஒரு எவர்சில்வர் டபராவில் தண்ணீர் வைத்து ஸ்பூனால் கிண்டிக் கொண்டிருந்தாள். என்னைப்பார்த்ததும் “அப்பாவுக்கு காப்பி போடுகிறேன்” என்றாள். நான் அவள் சடையைப்பிடித்து இழுத்துவிட்டு, சமையலறை மேடையில் நறுக்கி வைக்கப்பட்டிருந்த வெண்டைக்காய்த் துண்டுகளில் இரண்டை எடுத்து வாயில் போட்டபடி, கொல்லைப்பக்கம் வந்தேன். பாட்டி தொழுவில் இருந்தாள். மாடன் இறக்கிவைத்த நார்ப்பெட்டியில் கருப்பட்டியும் வாழைக்குலையும் இருந்தன.

“குஞ்சு இன்றைக்கு ஸ்கூல் போகவில்லையா?” என்றான் மாடன்.

கருப்பட்டிக் கண்ணைப் பிய்க்க முடியவில்லை. உறுதியாக இருந்தது. நகத்தால் பிறாண்டி சிறிது எடுத்து வாயில் போட்டேன். “திருவள்ளுவர் செத்துப்போய்விட்டார்” என்றேன்.

“அதுவா காரியம்?” மாடன் சொன்னான். “நாகர்கோவிலிலே அந்த முதலாளிக்கு ஒரு பஸ் இருக்கிறது. சேர்மாதேவிக்குப் பனை ஏறப்போனபோது அந்த பஸ்ஸில் தான் ஏறினேன்.”

“சேர்மாதேவி ரொம்ப தூரமா?”

“ரொம்ப தூரம். ஏழு நதி தாண்டிப் போக வேண்டும். அங்கேயெல்லாம் எல்லா பனைக்கும் ஒரே பனையிலிருந்தே தாவித்தாவி போகலாம். குஞ்சு பெரிய பஸ்ஸில் ஏறியதுண்டா?”

“குலசேகரம் போனபோது ஏறினேன். சித்திகூடப் போனேனே அப்போது”

“அது டவுன்பஸ். இது சிட்டி பஸ். ஸீட்டெல்லாம் பெரிய கட்டில் மெத்தை மாதிரி இருக்கும். ஆற்றுமணலில் உட்கார்வது போல் பொதுபொதுவென்று இருக்கும்.”

உள்ளே அப்பாவின் உரத்த குரல் கேட்டது. நான் உள்ளே போனேன். அப்பா அம்மாவிடம் ஏதோ கூற அம்மா கோபத்துடன், “எனக்கென்ன, நல்லது சொல்லிவிட்டேன். அப்புறம் உங்கள் இஷ்டம்”  என்றாள்.

“இப்போது என்ன சொல்கிறாய்?”

“நான் ஒன்றுமே சொல்லவில்லை சாமீ” அம்மா உள்ளே வந்துவிட்டாள்.

பாட்டி உட்கார்ந்த இடத்திலிருந்து “நாராயணா, அவள் சொல்வதிலும் காரியம் உண்டு கேட்டாயா? இந்தக்காலம் பழைய காலமில்லை. எங்கள் காலத்தில் தலையும் முலையும் வந்த பெண்ணை சகோதரன் கூட பார்க்க முடியாது. இப்போது போடுகிற வேஷமும் ஆடுகிற ஆட்டமும்… ஜாக்ரதையாக இருந்தால் தோசமில்லை” என்றாள்.

“சரி சரி, எனக்குத் தலைவலிக்கிறது.”

“வந்தால் கேட்டுப்பார். என்ன கேட்கிறோம் அப்படி? என்னம்மா எழுதுகிறாய் என்றுதானே? தப்பாக ஒன்றும் இல்லையென்றால் காட்டுவதற்கு என்ன?” பாட்டியின் தலைமீது வைக்கோல் கூளம் ஒட்டியிருந்தது.

“வாயை மூடுகிறாயா இல்லையா?” என்று அப்பா கத்தினார்.

பாட்டி “என்னவோ போ” என்றாள். தலையைத் தடவி வைக்கோலை எடுத்துச் சுருட்டி, “டேய், இதை வெளியே போடுடா”என்றாள்.

வினி வாயில் கட்டை விரலைப்போட்டபடி அறை வாசலில் நின்று காலை ஆட்டினாள். வழக்கம்போல அப்பா அவளைக் கூப்பிட்டு மடிமீது அமரச்செய்யவில்லை. அவள் இன்னும் சற்று முன்னகர்ந்தாள். அப்பா திரும்பிப் பார்த்தார். சிறிது நேரம் உற்றுப்பார்த்தார். பிறகு திடீர் கோபத்துடன், “கையை எடுடீ கழுதை” என்று அதட்டினார். வினி அப்படியே பின்னகர்ந்து உள்ளே ஓடி வந்தாள். பாய்ந்து போய் பாட்டி மடியில் போய் விசும்பி அழுதாள். பாட்டி அவள் தலையை வருடினாள்.

சற்று நேரத்தில் தாத்தா வந்தார். பஞ்சாங்கக் கட்டை பூஜையறையில் கொண்டுபோய் வைத்துவிட்டு, நேராக சமையலறைக்கு போனார். பாட்டி அவரைக்கண்டதும் காலை மடக்கிவிட்டு ,அவர் போனதும் நீட்டிக் கொண்டாள்.

சாப்பிட்டுவிட்டுத் தாத்தா துண்டில் கையைத் துடைத்தபடி வந்தார். “பஞ்சாபி வந்தானா?” என்று அம்மாவைக் கேட்டார். “ஜாதகம் கொண்டு வந்து தருகிறேன் என்றான்”

“யாரும் வரலையே” என்றாள் அம்மா. பிறகு “ஏதோ பேச வேண்டும் என்றார்” என்று முகவாயால் அப்பாவைக் காட்டினாள்.

“என்னிடமா?”

“ஆமாம்”

“என்னவாம்?”

“தெரியவில்லை”

தாத்தா வெளியே போனார். அம்மா விளக்கைப் போட்டுவிட்டு “படிடா டேய்” என்றாள். நான் தமிழ்ப் புத்தகத்தை எடுத்துப் பிரித்துக் கொண்டு அமர்ந்தேன். மனம் ஓடவில்லை. சித்தி வந்தால் என்ன நடக்கும்?.

ஸ்கூட்டர் சத்தம் கேட்டது. என் மனம் படபடத்தது. வாசலை எட்டிப்பார்த்தேன். சித்தி ஏதோ சொன்னபடி வந்தவள் அப்பாவைக் கண்டதும் நிறுத்திவிட்டு, புடவை சரசரக்க மௌனமாக வந்தாள். கடந்து அறைக்குப்போனாள். சித்தப்பா ஸ்கூட்டரை குறுந்திண்ணை மேல் ஏற்றி வைத்துவிட்டு, ஷுக்களைக் கையில் எடுத்தபடி உள்ளே வந்தார். அப்பா, “மணி, இப்படி வா” என்றார்.

அம்மா நான் எட்டிப்பார்ப்பதை கவனித்து, “படிடா கழுதை, உதை கேட்கிறதா?” என்றாள். நான்  “தமிழர் காதல் மானம் வீரம் ஆகியவற்றை கண்ணெனப்போற்றினர்.  தமிழர் காதல் மானம் வீரம் ஆகியவற்றை கண்ணெனப்போற்றினர்” என்றேன். திடீரென்று தாத்தா “என்னடா சொந்த விஷயம்? குடும்ப மானம் கப்பலேறினால் அது சொந்த விஷயமா?” என்று கத்தினார். நான் ஈனஸ்வரத்தில் “களவு கற்பு என்று இது இருவகைப்படும்” என்று கூறியபிறகு அமைதியடைந்தேன். அப்பா, “சும்மா இருங்கள் அப்பா” என்றார். சித்தப்பாவிடம் “கேட்டால் போகிறது மணி, அற்பவிஷயம்” என்று சொன்னார்.

சித்தப்பா “எப்படியண்ணா இதைப்போய்..” என்றார்.

“ரகசியம் ஒன்றும் இல்லையென்றால் பிரச்சனையே இல்லையே. உனக்கு ஒன்றும் பிரச்னை இல்லையென்றால் நான் தலையிடவில்லை” என்றார் அப்பா.

தாத்தா உரக்க “குடும்பத்திற்குள் அப்படி விட்டுவிட முடியுமா? எல்லாருக்கும்தானே மானக்கேடு?” என்றார்.

சித்தப்பாவும் கோபமடைந்தார். “இப்போது மானக்கேடுக்கு என்ன நடந்தது? என்னபேச்சு இது?”

“வாயை மூடுடா பொண்ணையா…. போய் அவள் முந்தானையில் ஒண்டிக் கொள். மானம் கெட்ட பிறவி”

“அப்பா நீங்கள் வாயை மூட முடியுமா இல்லையா?”

“நான் போகிறேன். எனக்கு இதெல்லாம் சகித்துக் கொள்ள முடியாது”

“ஒழியுங்கள்” என்றார் சித்தப்பா

“இதோ பார் மணி, என்ன இப்போது பிரச்னை? தப்பாக ஏதும் இல்லை என்றால் ஒன்றுமே பிரச்னை இல்லையே?  தெரிந்து கொள்ளத்தானே? உனக்குப் பிடிக்கவில்லை என்றால் கேட்கவே வேண்டாம்” என்றார் அப்பா.

அம்மா உள்ளே நின்றபடி, “சம்பாதிக்கிற பெண் என்றால் கொஞ்சம் முன்னே பின்னேதான் இருக்கும். இதெல்லாம் அவருக்குத் தெரியாதா? நீங்கள் என்ன பேசுவது?” என்றாள்.

“நீ உள்ளே போ” என்று அப்பா கத்தினார்.

“நான் போகிறேன் எனக்கென்ன?” அம்மா சொன்னாள். “என்னவோ அத்தை புலம்புகிறாரே என்று சொல்லவந்தால் எனக்கேது பொல்லாப்பு? நமக்குத் தான் இருக்கிறதே அடுப்பும் கரிச்சட்டியும்”

சித்தி புடவை மாற்றிவிட்டு வெளியே வந்தாள். வளையல்களை முழங்கையில் இழுத்துவிட்டபடி முகம் கழுவப்போனாள். அவளிடம் வியர்வை மணம் எழுந்தது. “சித்தி அப்பா திட்டினார்கள்” என்றபடி வினி பின்னால் போனாள். பாட்டி எழுந்து வாசலுக்குப்போய் “இதோ பார் மணி நமது குடும்பத்தில் இதுவரை ஒரு தப்பும் நடந்ததில்லை. ஒருத்தர் கைநீட்டிப்பேசினதுமில்லை….” என்றாள்

“சரி, இப்போது என்ன? நான் கேட்டுவிடுகிறேன்” என்றார் சித்தப்பா.

சித்தி அம்மாவையும் பாட்டியையும் ஓரக்கண்ணால் பார்த்தபடி உள்வாசலருகே போனாள். சித்தப்பாவைப்பார்த்து “என்ன?”  என்று மெல்லிய குரலில் கேட்டாள்.

“உன் ஹாண்ட் பாகை எடு”

அம்மா என்னிடம் திரும்பி, “போய் எடுத்து வாடா” என்றாள்.

நான் ஓடிப்போய் எடுத்துவந்தேன். சித்தப்பா அதை வாங்கி, திறந்து சிறுசாவியை எடுத்து என்னிடம் தந்து, “போய் அந்த டைரியை எடுத்து வாடா” என்றார்.

சித்தி குழம்பி, “எந்த டைரி?” என்று பதறினாள்.

அம்மா என்னிடமிருந்து சாவியைப்பிடுங்கி உள்ளே போய் டைரியை எடுத்து வந்தாள். சித்தி கோபமாக “அது என் டைரி” என்றாள்.

“உன் டைரிதான். நீ அதில் என்ன எழுதியிருக்கிறாய் என்று இவர்கள் அறிய வேண்டுமாம்” என்றார் சித்தப்பா, “காட்டு ,மனசு அடங்கட்டும்”

“மாட்டேன். காட்ட மாட்டேன்” என்றாள் சித்தி, அதுவரை அவளிடமிருந்து கேட்டறியாத குரலில்.

“கத்தாதே. அவர்கள் பார்க்கட்டும். என்னவோ வாயில் வந்தபடி பேசுகிறார்கள். அண்ணி அதைப்படியுங்கள்”

“நான் எதற்குப்படிக்கிறேன்? பெரியவர்கள் படித்து என்ன வேண்டுமோ அதைச் செய்யட்டும்” அம்மா நீட்டி நீட்டிச் சொன்னாள்.

“மாட்டேன். தரமாட்டேன்” என்றபடி சித்தி அம்மாவை நோக்கிப்பாய்ந்து டைரியைப்பிடுங்க முயன்றாள். அம்மா கையை மேலே தூக்கிக் கொண்டாள் .தள்ளியபடி பின்னால் நகர்ந்தாள்.

சித்தப்பா டைரியை வாங்கிக் கொண்டார். சித்தி அவளுடைய வழக்கத்தை மீறி வெளியே ஓடி சித்தப்பாவைத் தடுத்தாள்.

அம்மா, “நன்றாகப்பார்த்துக் கொள்ளுங்கள். நான் தான் என்னவோ அபவாதம் சொல்கிறேன் என்றீர்களே” என்றாள்

“அதிலே ஒன்றுமே இல்லை” என்று சித்தி அழுதபடி சொன்னார்கள். “என்னிடம் தந்துவிடுங்கள். படிக்காதீர்கள் தயவு செய்து படிக்காதீர்கள்.”

“இதோ பார் மணி, நீயே அதைப்படி .உனக்குத் திருப்தியென்றால் சரி. இதோ பாரம்மா, உன் புருஷன் மட்டும் தான் படிப்பான். வேறு யாரும் படிக்க மாட்டார்கள். போதுமா?” என்றார் அப்பா.

“அது என் டைரி. வேற யாரும் அதைப்படிக்கக்கூடாது” என்று சித்தி கத்தினாள். அவளைப் பார்க்க பைத்தியம்போல் இருந்தது.

தாத்தா எழுந்து “ஏன்? புருஷன் கூட படிக்கக்கூடாத  ரகசியம் என்ன உனக்கு?” என்று அதட்டினார்.

“அப்படி அதில் ஒன்றும் இல்லை” சித்தி அழுதபடி சொன்னாள்.

“தேவு, இதோ பார், நீ இப்படி அடம் பிடித்தால் எல்லாரும் என்ன நினைப்பார்க்ள்?”

“வேண்டாம் அதை யாரும் படிக்கக்கூடாது”

“அப்படி என்ன ரகசியம் பெண்ணுக்கு வேண்டிக் கிடக்கிறது?” என்றாள் அம்மா.

“என் தாலி மேல் ஆணையாகச் சொல்கிறேன். அதிலே மனசாட்சிக்கு விரோதமாக  ஒன்றுமே இல்லை. என்னை நம்புங்கள்”

“பின்னே, படித்தால் என்னவாம்?” என்று அம்மா கேட்டாள்.

“என் மனதில் பட்டதையெல்லாம் எழுதி வைத்திருக்கிறேன்.  தப்பாக ஒன்றுமே அதில் இல்லை.”

“இதோ பார் தேவு, இவர்கள் சந்தேகப்படுவதுபோல் இதில் தப்பாக ஏதும் இல்லைதானே?”

“திருச்செந்தூர் முருகன் மேல் ஆணையாக…”

“அப்படியென்றால் ஏன் பயப்படுகிறாய்? நான் படித்துவிடுகிறேன். பிரச்னை தீர்ந்துவிடும்”

“இல்லை. யாரும் படிக்கக்கூடாது”

சித்தப்பா கோபத்துடன் “என்ன சொல்கிறாய் என்று புரிந்துதான் சொல்கிறாயா?” என்றார்.

“இல்லை யாரும் அதைப்படிக்கக்கூடாது” என சித்தி அழுதாள்.

சித்தப்பா அவளை உற்றுப்பார்த்தார். அவர் முகம் கோணியது. “அப்படியா சங்கதி? அப்படியானால் படித்துப் பார்த்துவிட்டுத்தான் மறுவேலை”

அவர் டைரியை பிரிப்பதற்குள் சித்தி பாய்ந்து டைரியைப் பிடுங்கிக் கொண்டாள். அம்மா பாய்ந்து பிடிப்பதற்குள் ஓடி சமையலறைக்குள் புகுந்து கொண்டு கதவைச் சாத்திக் கொண்டாள்.

“தேவகீ, தேவகீ” என்று கூப்பிட்டபடி அம்மா கதவைத் தட்டினாள். அப்பாவும் தாத்தாவும் பாட்டியும் கதவருகே குழுமிவிட்டார்கள். “தேவூ தேவூ” என்று கூவியபடி சித்தப்பா கதவை ஓங்கி ஓங்கி உதைத்தார். பாட்டி வாயைத் திறந்தபடி கையை மட்டும் ஆட்டினாள். தாத்தாவின் தலை ஓணான் போல வெடவெடத்தது. அப்பா “கதவை உடை” என்று சத்தம் போட்டார்.

உள்ளே மண்ணெண்ணெய் வீச்சம் எழுந்தது. பிறகு குப்பென்று தீ எரியும் சத்தமும் பொசுங்கல் வாடையும் எழுந்தது.

சித்தப்பா விசித்திரமான குரலில், “தேவூ, தேவூ” என்று கூறியபடி தோளால் கதவை முட்டினார். ஓரே அலறலாக இருந்தது. சட்டென்று கதவு திறந்தது. உள்ளே ஒரே புகை. சித்தி வியர்வையில் கூந்தல் முகமெங்கும் ஒட்டியிருக்க வெளியே வந்தாள்

“தேவூ, நீ….”  என்றார் சித்தப்பா. உள்ளே பார்த்தார். “டைரியையா கொளுத்தினாய்? அடிப்பாவி….”

அம்மா உள்ளே எட்டிப்பார்த்தாள். ”கரிதான் மிச்சம். கைகாரி” என்றாள்.

சித்தி மூச்சு வாங்கினாள். கண்ணீர் உலர்ந்த முகத்தில் இமையில் மயிர் ஒன்று ஒட்டியிருந்தது. அமைதியாக இருந்தாள். வாந்தி எடுத்து முடித்துவிட்டவள் போலத் தெரிந்தாள்.

சித்தப்பா அவளை அடிக்கக் கையோங்கினார். அவள் அமைதியாக நிற்பதைக் கண்டதும் கையைத் தணித்தார். “தேவடியா நாயே” என்றார்.

“என் தாலிமீது ஆணையாக ,மனத்தாலும் கூட நான் எந்தத் தப்பும் செய்யவில்லை. அந்த டைரியிலும் எதுவும் தவறாக இல்லை. நான் அப்படிப்பட்டவள் இல்லை. என்னை நம்புங்கள்” என்றாள் சித்தி. அவள் குரல் தழுதழுத்தது.

“உன்னை எப்படி நம்புவது?” அம்மா கேட்டாள். “எதற்காக அதை எரித்தாய்?”

“அது என் டைரி. அதை வேறு யாரும் படிக்கக்கூடாது” சித்தி அப்படியே சரிந்து முழங்காலைக் கட்டிக் கொண்டாள். “அந்த டைரியில் தப்பாக ஒன்றுமே இல்லை. என்னை நம்புங்கள்” என்றாள். பிறகு முகத்தை முட்டுகள் மீது வைத்துக் கேவிக் கேவி அழ ஆரம்பித்தாள். அவள் தலைமயிர்மீது தாளின் கரித்துகள் ஒட்டியிருந்தது. தோள்கள் குலுங்கின. வாடிய மல்லிகைச்சரம் தொங்கி ஆடியது.

எல்லாரும் சித்தப்பாவையே பார்த்தார்கள். அவர் அவளையே உற்றுப்பார்த்தபடி நின்றார். பிறகு தன் அறைக்குள் போய்விட்டார். என்னையும் வினியையும் அம்மா படுக்கும்படிச் சொன்னாள். ஒவ்வொருவராக படுத்துக் கொண்டனர். யாரும் பிறகு எதுவும் பேசவில்லை. சித்தி வெகுநேரம் அழுவது கேட்டது. அவள் ஹாலிலேயே தூங்கிவிட்டாள்.

மறுநாள் சித்தப்பா அவளை அவள் அப்பா வீட்டுக்குக் கொண்டு விட்டுவிட்டு வந்தார். ஒருமாதம் சித்தியின் அப்பாவும் பெரியப்பாவும் வருவதும், போவதும், விவாதிப்பதும் எல்லாம் நடந்தது. மேட்டுவீட்டு பெரிய தாத்தா கூட  ஒருமுறை வந்து வெகுநேரம் சித்தப்பாவிடமும் அப்பாவிடமும் தாத்தாவிடமும் பேசினார். சித்தியைப்பிறகு கூட்டி வரவேயில்லை. அவளை சித்தப்பா விவாகரத்து செய்துவிட்ட விஷயம் மூன்று வருடம் கழித்து அவர் வேறு திருமணம் செய்தபோது தான் எனக்குப் புரிந்தது.

 

[1999 ஓம்சக்தி]

முந்தைய கட்டுரைகொற்றவையின் நீலம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 16