அன்புள்ள ஜே,
பியூஸ் அவர்களை பற்றிய உங்கள் கட்டுரை மிகவும் முக்கியம் வாய்ந்தது. அனைத்து தளங்களிலும் அவரை பற்றி விவாதிக்க வேண்டிய சூழல் உருவாகி விட்டது.
தமிழ் நாட்டில் ஏரிகளையும் குளங்களையும் ஆக்கிரமித்து கான்க்ரீட் கட்டிடங்கள் கட்டும் தொழிலதிபர்கள் அவர்களுக்கு துணை போகும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் ஒரு பக்கம்.
இன்னொரு பக்கம் நம் கண் முன்னே நடக்கும் இயற்கை வள கொள்ளை, காடுகளை அளித்தல், மரங்களை அழித்தல் என எதையுமே கண்டு கொள்ளாமல் நடிகர்கள் பின்னாலும், கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகள் பின்னாலும் சுற்றி திரியும், அதை தட்டி கேட்க வக்கில்லாத மக்கள்.
இத்தனைக்கும் நடுவில் ராஜஸ்தானில் இருந்து வந்து தான் வாழும் மண்ணிற்காக மண்ணின் மைந்தர்களை விட பல மடங்கு உழைத்த ஒரு சமூக ஆர்வலரை தேசிய கொடி எரித்ததாக பொய் காரணம் சொல்லி 30 காவல் துறையினர் கடுமையாக தாக்கி உள்ளனர்.நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது. அறம் என்ற ஒன்று நம் அதிகாரிகளிடம் உண்டா.
தமிழ் நாட்டில் நீங்கள் நல்லது செய்தால் 10,000 கேள்விகளும், நக்கலான விமர்சனங்களும் வரும்.ஏரிகள் சுத்தம் செய்தால், அட அதுக்கு பக்கத்துல எடம் வாங்கி போட்டிருப்பான் அதான் இதை செய்யுறான். காடுகளை உருவாக்கினால், அட அவன் லாபம் பாத்து விக்கறதுக்கு இதெல்லாம் பண்றான். சேட்டு பசங்க எப்பிடீன்னு நமக்கு தெரியாதா.
வினுப்ரியா என்ற பெண்ணின் ஆபாச புகை படத்தை லஞ்சம் வாங்கி கொண்டும் குறிப்பிட்ட நேரத்தில் சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்காத காவல்துறையின் மெத்தன போக்கை கண்டித்தவரும் இந்த வட நாட்டு சேட்டு தான். தமிழன் தமிழன் என்று முழங்கும் எந்த கொம்பனும் தான் கண் முன்னே நடந்த கொடூரத்தை கேள்வி கேட்கவில்லை. ஆனால் சமந்தா கடை திறப்பு விழாவிற்கு வந்தால் லட்சக்கணக்கில் திரள்வார்கள்.
இப்படிப்பட்ட சொரணை கெட்ட தமிழ் மக்களுக்காக பியூஸ் போன்றவர்கள் போராடி சிறையில் உதை படுவது மனதை மேலும் வேதனை படுத்துகிறது. அவருக்கு குடும்பம் உண்டு. இது போன்ற காட்டு மிராண்டித்தனமான செயல்களால் பியூஸ் குடும்பம் நிலை குலைந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
நம்மாழ்வாரை இழந்தோம், சசி பெருமாளை இழந்தோம், நிறைய RTI போராளிகளை இழந்தோம். மனுஷயும் நாம் இழந்து விட கூடாது. இவரது இந்த கைது மூலம் ஓர் ஆறுதல்; சமூக வலைதளங்கள் மற்றும் தனியார் செய்தி நிறுவனங்கள் மூலம் பியூஸ் கைது செய்ய பட்ட செய்தி காட்டு தீ போல் பரவியது.இணையம் மூலம் பெட்டிஷன் போட பட்டு 12,000 மேல் கையெழுத்து இட்டனர்.
இவருக்கு ஏற்பட்ட கொடுமை மற்ற சமூக போராளிகளுக்கு ஏற்பட கூடாது என்பதே அனைவரின் கவலை. அதற்கு பியூஸ் போன்றோர் தனியா போராடாமல், அவருக்கு ஓர் பிரச்சனை என்றால் அனைத்து சூழியல் போராளிகளும் ஒன்று திரண்டு குரல் கொடுக்க வேண்டும். இந்த முறை அதை ஓரளவு காண முடிந்தது. இது தொடர்ந்தால் மகிழ்ச்சி. மேலும் பல பியூஸ் உருவாவார்கள்.
நன்றி,
சம்பத்
***
அன்புள்ள ஜெ,
பியூஷ் பற்றிய எனது பதிவினை உங்கள் தளத்தில் வெளியிட்டதற்கு நன்றி.
என்னைப் பற்றிய வரிகள் ஒரு புறம் மிகுந்த உற்சாகத்தையும் மறு புறம் கூச்சத்தையும் அளித்தன. ஆனாலும், நீங்கள் பகிர்ந்துகொண்டதால், இப்பிரச்சனை மீது மேலும் அதிக கவனம் குவிந்தது.
’பியுஷ் மனுஷ்- நம் அறத்தின் முன்பாக’ என்ற உங்களுடைய பதிவும், தவறான சந்தர்ப்பத்தில் வரும் பியூஷ் பற்றிய விமர்சனங்களுக்கும், அவதூறுகளுக்கும் வலுவான பதிலாக அமைந்தது.
அடுத்த முறை கோவை வரும்போது, எங்கள் தோட்டத்துக்கு அவசியம் வாருங்கள். கிராமத்தில் நாங்கள் நடத்தும் பயிலகத்தின் மாணவர்களுக்கு உங்களைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் பல புதிய திறப்புகள் கிடைக்கும். நன்றி.
அன்புடன்
த.கண்ணன்
***
அன்புள்ள கண்ணன்
பியுஷை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியாது. ஆனால் என் நண்பர்கள் ஷாஜி சென்னை, ‘கெவின்கேர்’ பாலா போன்றவகளுக்கு நெருக்கமானவர் அவர்
சந்திப்போம்
ஜெ
***
அன்புள்ள ஜெ
பீயுஷ் பற்றிய உங்கள் ஆணித்தரமான வாதங்கள் அவர்மேல் உதிரிகளால் முன்வைக்கப்பட்ட அனைத்து விமர்சனங்களுக்கும் தெளிவான பதிலாக அமைந்தது. தி இந்து நாளிதழிலும் அவற்றை போட்டிருந்தனர் நன்றி
வழக்கமாக உடனடியாக எதிர்வினையாற்ற மாட்டீர்கள். இம்முறை எதிர்வினையாற்றியது ஆச்சரியம்
ஜெயராஜ்
***
அன்புள்ள ஜெயராஜ்,
கொஞ்சம் பொறுக்கலாம் என்பதே எப்போதும் என் எண்ணம்
ஆனால் இம்முறை அது என் நண்பர் பாலாவின் ஆணை
ஜெ
***
ஜெ,
நேரடியாக ஒரு கேள்வி. நீங்கள் பியுஷ் மனுஷ் பற்றி உங்கள் நல்லெண்ணத்தை, ஆதரவை வலிமையாகத் தெரிவிகிறீர்கள். அதேபோல இயங்கிவரும் பூவுலகின் நண்பர்கள் என்னும் அமைப்பைப்பற்றி உங்கள் எண்ணம் என்ன?
ஜெயராமன்
***
அன்புள்ள ஜெயராமன்,
எந்த அடிப்படையில் பியுஷ் மனுஷ் ஒரு முக்கியமான களப்பணியாளர் என்று சொல்கிறேனோ அந்த அடிப்படையில் பூவுலகின் நண்பர்கள் ஒரு மோசமான சந்தர்ப்பவாதிகளின், சுயலாப நோக்குள்ள ஒரு சிறு குழுவின் அமைப்பு என்று நம்புகிறேன்
சென்ற காலங்களில் இவர்களைப்பற்றி அறியவந்தவை எல்லாமே கசப்பானவை. உண்மையான களப்பணிகளை இம்மாதிரி நச்சுக்காளான்கள் இழிவுசெய்கின்றன
ஜெ