வணிகக்கலையும் கலையும்

1

அன்புள்ள ஜெ,

வணிகக்கலைக்கு எதிரானவர் என்று ஒரு சித்திரம் உங்களுக்கு இருந்தது. திடீரென்று வணிகக்கலை கேளிக்கைக்குத் தேவைதான் என்று ஆரம்பித்திருக்கிறீர்கள். ஏன் இந்த பல்டி என்று கேட்டால் கோபித்துக்கொள்ள மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

கோபிநாத்

***

அன்புள்ள கோபிநாத்,

நான் 1990 வாக்கில் சுந்தர ராமசாமி சுஜாதாவை [காலச்சுவடு ஆண்டு மலர் மீதான சுஜாதாவின் விமர்சனத்தில் என நினைக்கிறேன்] வணிகச்சீரழிவின் நாயகன் என்று சொன்னதற்கு எதிராக எழுதிய குறிப்பில் தொடங்கி எப்படியும் நூற்றைம்பது முறை இதை விளக்கியிருப்பேன். மீண்டும் விளக்குகிறேன். வேறுவழி?

வணிகக் கலை அல்லது எழுத்து சமூகவிரோத சக்தியோ சீரழிவோ ஒன்றும் அல்ல. அது ஒரு சமூகத்தேவை. நிறுவனப்படுத்தப்பட்டதும், படைப்பூக்கம் இல்லாத உழைப்பு கட்டாயமாக ஆக்கப்பட்டுள்ளதுமான இன்றைய சமூகத்தில் அந்த வெறுமையை வெல்லும்பொருட்டு கேளிக்கைகள் பேருருவம் கொள்கின்றன.இது மார்க்ஸில் இருந்து ஆரம்பித்து அல்தூஸர் வழியாக விரிவடைந்த  அன்னியமாதல் கோட்பாடுகளால் விளக்கப்பட்டுள்ளது.

வணிகக்கலை மக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது. அவர்கள் நாடும் சிறிய மகிழ்ச்சிகரமான இடைவேளையை அளிக்கிறது. அவர்கள் தங்கள் பண்டைய தொகுப்படையாளங்களில் இருந்து தனிமைப்பட்டிருக்கிறார்கள். கேளிக்கைகள் வழியாக அவர்கள் மீண்டும் பெருந்திரளாக ஆகிறார்கள். அதை எவ்வகையிலும் தவிர்க்கமுடியாது. அது இல்லாத லட்சிய சமூகத்தை கற்பனைசெய்யலாம். ஆனால் இந்தச்சமூக அமைப்புக்குள் அதைத் தடுப்பது சாத்தியமல்ல.

ஆகவே கல்கியோ சாண்டில்யனோ சுஜாதாவோ, எம்.கெ.தியாகராஜபாகவதரோ, எம்.ஜி.ஆரோ ரஜினிகாந்தோ அவர்களுக்குரிய பங்களிப்பை சமூக இயக்கத்தில் ஆற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே சரியான புரிதல். அது பெருவாரியான மக்களால் பங்கெடுக்கப்படுவதனால், பெரும்பணம் புரள்வதனால் ஒரு தொழில். ஒரு வணிகம். அவ்வளவுதான். அதற்கு அப்பால் ஒன்றுமல்ல.

வணிக எழுத்து அல்லது வணிகக்கலை அல்லது  இலக்கியம் அல்லது கலையாக முன்வைக்கப்படும்போது மட்டுமே அது எதிர்க்கப்படவேண்டியதாகிறது. அதுவும் வணிகக்கலையை இகழ்ந்தோ அதில் ஈடுபடுவதை கண்டித்தோ அல்ல. அதற்கும் இலக்கியத்திற்கும் கலைக்கும் உள்ள வேறுபாட்டை அழுத்தமாக முன்வைப்பதன் மூலமே. சரியான இலக்கியத்தை, உண்மையான கலையை அடையாளம்காட்டலாம். அதன் இயல்புகளை வரையறைசெய்து விவாதிக்கலாம். அதன் இலக்கணத்தையும் வரலாற்றையும் கற்பிக்கலாம். அதுவே ஆக்கபூர்வமான பணி

இலக்கியமும் கலையும் வணிகத்திற்கு எதிர் சக்தி அல்ல. அவை செயல்படும் தளமே வேறு. சாண்டில்யனுக்கும் ஜானகிராமனுக்கும் இடையே போட்டியே இல்லை.  சுஜாதாவை நான் தேர்ந்த கதைசொல்லி என்றும் சிறந்த சித்தரிப்பாளர் என்றும் சொல்வேன். அவர் தமிழின் கேளிக்கை எழுத்தின் முதன்மைச் சாதனையாளர் என்பேன். ஆனால் அவரது நாடகங்கள், சில சிறுகதைகள் அன்றி அனைத்துமே வணிக எழுத்து என்றும் சொல்வேன். அவரை சீரழிவு எழுத்தாளர் என்று சொல்லமாட்டேன். அதேசமயம் இலக்கியவாதி என்று ஏற்கவும் மாட்டேன்.

இலக்கியத்தை முன்வைக்கையில் கூடவே வணிகக்கலைகளை, கேளிக்கை எழுத்தை நிராகரித்து வசைபாடும்போது ஒரு இருமை உருவாகிறது. மக்களால் ரசிக்கப்படுவதற்கு எதிரானதே கலையும் இலக்கியமும் என்னும் மனநிலை வந்துவிடுகிறது. கலையும் இலக்கியமும் ஒருவகை மேட்டிமை அடையாளங்கள் என்றாகி விடுகிறது. அது நிகழலாகாது. கலையும் இலக்கியமும் ஓர் ஆசிரியனின் அகம் வெளிப்படும் தளங்கள். அவனூடாக அச்சமூகத்தின் ஆழம் வெளியாகும் வாயில்கள். ஆகவே  அச்சமூகத்தின் அனைவருக்கும் உரியவை, அவர்களில் சிலரே அங்கு வருகிறார்கள் எனினும்.

எந்த ஒரு சமூகத்திலும் வணிகக்கேளிக்கைக் கலையும் எழுத்தும் இருந்துகொண்டுதான் இருக்கும். அவை  மக்களின் களியாட்டவெளி. கூடவே கலைக்கும் இலக்கியத்திற்கும் வருவதற்கான ஒருவகைப் பயிற்சிக்களங்களாகவும் உள்ளன.இன்று தமிழில் வணிக எழுத்து அருகிவருவதனால் பொதுவான வாசிப்பே குறைந்துவருகிறது என்பதை பலமுறை எழுதியிருக்கிறேன்.

இலக்கியம் அல்லது கலை பரப்பியக்கமாக ஆக முடியாது. பல லட்சம்பேர் அதில் ஈடுபடுவது உலகின் எப்பகுதியில் இதுவரை நிகழ்ந்ததில்லை. பரப்பியக்கமாக அமையக்கூடியது வணிகக் கேளிக்கைக் கலையும் இலக்கியமும்தான். ஏனென்றால் அவற்றுக்கு மக்களிடம் சொல்வதற்கு என ஏதுமில்லை. கேட்பவர்களின் ரசனைக்கும் தேவைக்கும் ஏற்பவே  அவை பேசுகின்றன. அவை மக்களை நோக்கி திருப்பிவைக்கப்பட்ட கண்ணாடிகள். அவை வெறும் எதிரொலிகள். ஆகவே அவை இலக்கியத்தைவிட மக்களை நேரடியாக பிரதிபலிக்கின்றன என்று அண்டோனியோ கிராம்சி சொல்கிறார்.

இலக்கியமும் கலையும் அவற்றை ரசிப்பதற்கான பயிற்சியையும் மனநிலையையும் எதிர்பார்க்கின்றன. இல்லாதவர்களை வெளியே தள்ளுகின்றன. அவற்றின் அடிப்படையிலேயே தனக்குரியவர்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் ஒரு வடிகட்டியும் இருக்கிறது. ஆகவே அவை எந்நிலையிலும் எந்தச்சமூகத்திலும் பெரும்பான்மையினருக்குரியவையாக ஆக முடியாது

அந்நிலையில் வணிகக்கலையும் எழுத்துமே ஒருசமூகம் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் பொதுப்பேச்சைத் தீர்மானிக்கின்றன. வணிகக்கலையும் இலக்கியமும் அழியும் என்றால் அந்த உரையாடல் நிகழாமலாகும். ஜெர்மானிய, பிரெஞ்சு, ஜப்பானிய வணிகசினிமா அழிந்த இடத்தில் ஹாலிவுட் சினிமாதான் சென்று அமர்ந்தது. அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் ஊடகம் இல்லாமலாகியது. அதேசமயம் அவர்களின் கலைப்பட இயக்கம் சிறிய ஓடையாக  தன் தடத்தில்தான் சென்றுகொண்டிருக்கிறது.

இந்தியாவில் தமிழ்போன்ற வட்டார வணிக சினிமாக்கள் இந்தப் பண்பாடு தன்னைப்பற்றி தன்னுடன் பேசிக்கொள்ளும் பொதுவடிவமாக இன்றுள்ளன. ஆகவேதான் இந்த மண்ணைவிட்டுச்சென்றவர்களுக்கு அவையே ஒரே இணைக்கும்பாலமாக உள்ளன.

தமிழின் முக்கியமான முன்னோடி இலக்கியவாதிகள் பலரும் வணிகக்கேளிக்கை எழுத்தின் ரசிகர்களாகவே இருந்துள்ளனர். புதுமைப்பித்தன்,க.நா.சு, வல்லிக்கண்ணன் போன்றவர்கள் துப்பறியும்நாவல்களின் பரம ரசிகர்கள். நானும் அவ்வப்போது உணர்வுரீதியான இடைவெளிகளை அவற்றைக்கொண்டே நிரப்புகிறேன்.

ஆகவே வணிகக்கலையை சீரழிவு என்று நான் சொல்வதில்லை. அது ஒரு பரப்பிய இயக்கம். அது ஒரு வணிகம்.  அதேசமயம் அதை கலையிலிருந்து வேறுபடுத்திப்பார்ப்பதையும் எப்போதும் வலியுறுத்துவேன்.

ஜெ

முந்தைய கட்டுரைசிங்கப்பூர் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 5