குருவும் கலைஞனும்

483124-guru-poornima

நேற்று முன்தினம்  குருபூர்ணிமை. வெண்முரசின் சொல்வளர்காடு முழுமையாகவே குருநாதர்களைப் பற்றியதென்பதனால் தனியாக நித்யாவை நினைக்க வேண்டியிருக்கவில்லை. ஆனால் பலமுறை ஊட்டி குருகுலமும் நீண்டநடை சென்ற நாட்களும் பேசிய சொற்களும் நினைவில் எழுந்தன. குருவுடன் கொள்ளும் காதலுக்கு நிகராக மண்ணில் பேரின்பம் வேறில்லை.

என்னை தங்கள் குருவாக  எண்ணி சில மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் வந்தன. எவற்றுக்கும் நான் பதிலோ வாழ்த்தோ சொல்லவில்லை. அந்த நிலைக்கு நான் எவ்வகையிலும் தகுதியானவன் அல்ல. ஆசிரியர் என்பது மிகப்பெரிய பொறுப்பு. அதற்குரிய அக, புறத் தகுதிகள் மிகக்கூரியவை. எளிதாக ஆசிரியர்களை ஏற்றுக்கொள்வது காலப்போக்கில் மனச்சோர்வுகளையே உருவாக்கும்

இது ஒரு அவையடக்கச் சொல் அல்ல. நேரடியான ஓர் உண்மை. நான் என்றல்ல, எந்த எழுத்தாளரைப் பற்றியும் இதைச்சொல்வேன். அவர்கள் ஆசிரியர்களோ வழிகாட்டிகளோ ஆகமுடியாது. அவர்களின் படைப்புக்களைவிட அவர்கள் மிகக்கீழ்படியிலேயே நின்றிருப்பார்கள். அவர்கள் பறக்கும்போதே நீங்கள் பார்க்கிறீர்கள். அமர்ந்திருக்கையில் அவர்கள் எளிய மனிதர்கள்

ஏனென்றால் எழுத்தாளனின் உள்ளம் இருநிலைகளில் ஆடுவது. கீழ்மையின் ஆழங்களுக்கு அதனால்செல்லமுடியும். அதனாலேயே அது உச்சங்களை நோக்கி மறுவிசையும் கொள்ளக்கூடும். அது யோகியின், மெய்மையில் அமர்ந்த ஞானியின் உள்ளம் அல்ல. அலைக்கழிப்புகளும் கொந்தளிப்புகளும் நிறைந்தது. தன்னைத்தானே அடிக்கடி தோற்கடிப்பது. ஆகவே அமைதியற்றது.நிலைகொள்ளாதது.

ஆகவே இலக்கிய உண்மை என்பது ஒரு குரு அருளும் மெய்மை அல்ல. மெய்மையை அது சுட்டக்கூடும். மெய்மையை அன்றாட அனுபவமாக ஆக்கக்கூடும். ஆனால் அது மொழிவழியாக கற்பனையை தூண்டி அளிக்கப்படுவது . ஒருவன் தன் சொந்த அனுபவத்தாலும் அறிதலாலும் உள்ளுணர்வாலும் அதை பரிசீலிக்கவே செய்யவேண்டும், முழுதாக ஏற்கக்கூடாது. அது தல்ஸ்தோய் சொல்வதாக இருந்தாலும்கூட.

ஆகவேதான் நான் அடிக்கடிச் சொல்வதுண்டு, மேற்கோள் அல்லது பொன்மொழி சொல்லும்தகுதி எழுத்தாளர்களுக்கில்லை என. அவன் சொல்வது ஒரு பெரிய சித்தரிப்பின் பகுதி. அச்சித்தரிப்புவெளியில் வாழ்ந்து அவ்வாழ்க்கையனுபவம்மூலம் வாசகன் அடைவதே உண்மை. ஆசிரியன் சொல்வது அல்ல.

நான் எழுதும் நாவலை நித்யா எழுதமுடியாது. அதனால் நான் அவரைவிட மேலானவன் அல்ல. அவர் கடல் என்றால் நான் துளியே. அவர் சொல்ல வருவனவற்றை ஒருவேளை அவரைவிடச் சிறப்பாக என்னால் சொல்ல முடியும் என்பதனால் தான் நான் முக்கியமானவன். எழுத்தாளர்களின் இடம் அது மட்டுமே. பாரதிபோன்ற மேதையே ஆனாலும் அவர் அரவிந்தருக்கு நிகரானவர் அல்ல. அரவிந்தர்களே குருநாதர்கள், பாரதிகள் கவிஞர்கள் மட்டுமே.

ஆகவே எனக்கு மின்னஞ்சல் அனுப்பிய அனைவருக்கும் நண்பனாக நின்று வாழ்த்துச்சொல்கிறேன்.குருவருள் துணைநிற்கட்டும்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 2
அடுத்த கட்டுரைஅன்னையின் சிறகுக்குள்