சிங்கப்பூர் – கடிதங்கள்

images

 

அன்புள்ள ஜெயமோகன் !

எனது பெயர்த்தி எட்டு வய‌து வரை லண்டனில் இருந்து ஆரம்பக் கல்வி கற்றாள். இப்போது ஒன்பது வயது. சென்னை திரும்பி விட்டாள். அவளது ஆறு வயதிலேயே படங்கள் இல்லாத புத்தகங்களை வாசிக்கப் பயிற்சி பெற்றுவிட்டாள். நான் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியீடான மகாபாரதம் (படச்சித்தரிப்புடன்)ஆங்கிலத்தில் உள்ளதை வாங்கி பெயர்த்திக்குப் பரிசளித்தேன்.

“தாத்தா! இனி எனக்குப் புத்தகம் வாங்கும் போது படம் இல்லாத புத்தகங்களையே வாங்குங்கள்!” என்றாள். ‘ஏன்?’ என்று கேட்டேன். “ஏனென்றால் நானே கற்பனை செய்து கொள்வேன். படங்கள் என் கற்பனையை கட்டுப்படுத்துகின்றன” என்றாள்.

சிங்கப்பூரில் ‘ஆசிரியர்’ வேலை பார்க்கப்போவது குறித்து மகிழ்ச்சி. உங்களுடைய அனுபவங்களைத் தொகுத்து எழுதப் போவதை நினைத்து இப்போதே மனம் துள்ளுகிறது.

அன்புடன்,

கே.முத்துராமகிருஷ்ணன்

ஆங்கரை,

லால்குடி

***

 images

அன்புடன் ஆசிரியருக்கு

சிங்கப்பூரில் இரு மாதங்கள் பதிவினைப் படித்தேன். மகிழ்ச்சியாகவும் ஒரு விதத்தில் பெருமிதமாகவும் உணர்ந்தேன்.

நம் ஊரும் கூடிய விரைவில் இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கும் என நம்புகிறேன். வாசிப்புக்கான வாய்ப்புகள் பல வகைகளில் பெருகியிருக்கும் இக்காலத்திலும் சில்லறைக் குறிப்புகளைத் தாண்டி வாசிக்காதவர்களே பெரும்பான்மையானவர்கள். வாசிக்கும் பழக்கம் பெருகியிருந்தாலும் நுண்மையான வாசிப்பு மிக மிகக் குறைவெனவே எண்ணத் தோன்றுகிறது. அரசுகளே தங்களைப் போன்ற சிறந்த எழுத்தாளர்களை சிந்தனையாளர்களை நேரடியாக மக்களுக்கு அறிமுகப்படுத்துவது மிகச் சிறந்த முன்னெடுப்பாக அமையும். நம்மூரில் அது நடக்க இன்னும் வெகு நாட்கள் ஆகு‌ம் என்று ஏக்கமாகவே இருந்தது. ஆனால் இந்த “சிங்கப்பூர்” பதிவு காலம் தொலைவில் இல்லையோ என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.

புவியீர்ப்பு விசை குறித்து பெரும்பாலும் அனைவரும் அறிந்திருப்பதற்கு அதனுடன் இணைத்து சொல்லப்படும் “ஆப்பிள்” தான் காரணம். சார்பியலும் மின்காந்த தேற்றமும் மிண்ணனு எந்திரங்களின் உருவாக்கமும் மின் உற்பத்தியும் ஐன்ஸ்டீனின் உள நிலையுடனும் மேக்ஸ்வெல்லின் பகுப்பறிவுடனும் உலகப் போர்களின் தேவையுடனும் டெஸ்லா-எடிசன் போட்டியுடனும் இணைத்து சொல்லித் தரப்பட்டால் இன்னும் ஆழமாக மனதில் பதிவதோடு கற்பதற்கான ஒரு அர்த்தத்தையும் அளிக்கும் என்ற எண்ணம் வெகு நாட்களாக எனக்கு இருந்தது. சிங்கப்பூர் அரசின் இந்த முன்னெடுப்பினை அப்படி புரிந்து கொள்ளலாமா?

சிங்கப்பூரில் உங்கள் பணி சிறப்பான வெற்றியை ஈட்ட விரும்புகிறவர்களில் நானும் ஒருவன் எனச் சொல்ல நினைத்தே தொடங்கினேன். கடிதம் நீண்டு விட்டது.

நன்றி

அன்புடன்

சுரேஷ் ப்ரதீப்

***

அன்புள்ள ஜெ,

நாஞ்சிலைப்பற்றி நீங்கள் எழுதியது போல, இனி உங்களுக்கும் “… நாட்டிலிருந்து திரும்பி விமானம் விட்டிறங்கி வீடுவந்து சேர்ந்து மனைவி, மக்களோடு அளவளாவிவிட்டு உண்டு உறங்கினால் உடனே ….. நாட்டுக்கு அடுத்த விமானம்” என்ற ரீதியில் எழுதவேண்டியதுதான் போல.

இம்முறை தங்களது மதிப்பு தெரிந்து சிங்கப்பூர் அரசு அழைத்திருப்பது அறிந்து மிகவும் மகிழ்வாய் இருக்கிறது. எப்போதும் வெளிநாட்டுக்காரன் மதித்தால்தான் தான் மதிக்கும் விசித்திர பழக்கம் கொண்ட தமிழகம் இனியாவது உங்களது திறமையையும் புலமையையும் மதிப்பையும் உணரட்டும். மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வாசிப்பு பற்றி சொன்னீர்கள். முன்பே உங்களுக்கு இதை எழுதியிருக்கிறேனா என்று தெரியவில்லை. இங்கே அமெரிக்காவில் என் நண்பர் ஒருவர் சில வருடங்கள் முன் அவருடைய மகன் ஒரு இலக்கிய வினாடி வினா போட்டியில் வென்று ஆப்பிரிக்க சுற்றுலா சென்று வந்ததாக சொன்னார். இந்த நிகழ்வை நடத்துவது நியூசிலாந்தைச்சேர்ந்த ஒரு தனிமனிதராம். பள்ளி மாணவர்களில் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தும் முகமாக அமெரிக்காவில் தன் சொந்தக்காசை செலவழித்து பள்ளி மாணவர்களோடு உரையாடி, ஒரு குறிப்பிட்ட நூலை வாசிக்கச்சொல்லி அது குறித்து ஒரு வினாடிவினா நடத்தில் வெல்லும் மாணவர்களுக்கு பரிசளிக்கிறாராம்.

ஆச்சரியமாக இருந்தது. இதுவே சிங்கப்பூரில் இயக்கமாக நிகழ்வதாக நீங்கள் குறிப்பிட்டிருப்பது கண்டு தமிழகத்துக்கும் இப்படிப்பட்ட நல்லூழ் வாய்க்குமா என்ற ஏக்கம்தான் ஏற்பட்டது.

அன்புடன்

பொன்.முத்துக்குமார்

***

அன்புள்ள ஜெ எம்

உங்கள் சிங்கை பயணம் வெற்றி கரமாக என் வாழ்த்துகள்.

ஒரு வகையில் ஆசிரியராகப் பணி ஆற்றப்போகிறீர்கள். இதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆவல். உங்கள் பயிற்சி ஆங்கிலத்திலா? அல்லது தமிழிலா? தமிழ் என்றால் தமிழ் மாணவர்கள் இல்லையா?

94-95 வருடங்களில் நாங்கள் அங்குள்ள பல்கலை சாலையில் ஆசிரிய பணி செய்தோம். மிகவும் ஊக்கம் உள்ள மாணவர்கள். ஆனால் பெரும்பாலும் சீன வம்ச வழியினர். தமிழ் மாணவர்கள் மிகக் குறைவு.

உங்கள் அனுபவங்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

அருண் மொழியும் வருகிறார்களா?

அன்புடன்

சிவா

**

அன்புள்ள ஜெ,

ஐரோப்பிய பயண அனுபவம் குறித்து ஒன்றும் எழுதவில்லையே? பூமியில் பல இடங்களுக்கும், தொலைதூர நட்சத்திரங்களுக்கும் மற்றும் புடவியின் எல்லைகளுக்கும் மனப்பயணம் மட்டுமே செய்யும் என்னைப் போன்றோர் என்னதான் செய்வது? :-)

உங்கள் சிங்கப்பூர் பயண நோக்கம் (writer in residence) ஆர்வமூட்டுகிறது. இயன்றபோது மாணவர்களுடனான உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி

கார்த்திகேயன்

முந்தைய கட்டுரைகபாலிக்காய்ச்சல் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவணிகக்கலையும் கலையும்