அயல் முகம்

1

1988 -ல் நேரு நூற்றாண்டு விழாவை ஒட்டி நெஹ்ரு யாத்ரி என்னும் திட்டத்தை இந்திய ரயில்வே அறிவித்தது. ரூ.450 மதிப்புள்ள பயணச்சீட்டை எடுத்துக்கொள்ளலாம். அதைக் கொண்டு இந்தியா முழுக்க மூன்று மாதகாலம் தொடர்ச்சியாக பயணம் செய்யலாம். எத்தனை தொலைவு வேண்டுமானாலும் செல்லலாம். ஒரே பாதையில் போய் மீண்டு வரக்கூடாது. ஏனென்றால் அதை பருவப்பயணச்சீட்டாக யாரும் பயன்படுத்திவிடக்கூடாது என்பதற்காக.

நான் அத்தகைய பயணச்சீட்டை வாங்கிக் கொண்டு இரண்டு பயணங்களை மேற்கொண்டேன். அன்று காசர்கோடு என்னும் ஊரில் தொலைபேசித் துறையில் நாட்கூலி பெறும் ஊழியனாக இருந்தேன். ஆகவே விரும்பியபடி இந்தியாவைச் சுற்றிப்பார்க்கக்கூடிய வாய்ப்பு அன்று எனக்கு இருந்தது.

என்னுடைய வாழ்க்கைப் பார்வையையும் இந்தியா குறித்த அணுகுமுறையையும் மாற்றி அமைத்தது அந்தப் பயணம்தான் என்றால் மிகையல்ல. இந்தியா என்று பிறர் சொல்லும்போது அவர்கள் ஒரு வரைபடத்தை செய்திகள் வழியாக அவர்கள் அடைந்த ஒரு சித்திரத்தை சொல்கிறார்கள். நான் சென்று நின்று கண்டு பார்த்த ஒரு வாழ்க்கை அனுபவத்தை தான் எப்போதும் சொல்கிறேன். அப்பயணத்தில் நான் கண்ட அனுபவங்களைத் தொடர்ந்து சென்ற இருபத்தைந்து ஆண்டுகளாக எழுதி வருகிறேன்.

நிகழ்ந்தபோது சாதாரணமாகத் தென்பட்ட அனுபவங்கள் பல காலப்போக்கில் மேலும் மேலும் அர்த்தம் கொண்டு எழுந்து வருகின்றன. பயணத்தில் நமக்கு ஏதாவது ஒரு இக்கட்டை அளிக்கும் நிகழ்ச்சிகளே அதிகம் நினைவில் நிற்கின்றன. அவற்றை நாம் கடந்து வந்ததைப்பற்றி திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருக்கிறோம். மிக எளிய நிகழ்ச்சிகள் நம் நினைவில் நிற்காமல் கடந்து செல்கின்றன. ஆனால் அவை நமக்கு ஆழமான பாடங்களை அளித்திருப்பதை நம் வாழ்க்கை அனுபவம் திரும்பும்போது தான் நாம் உணர்வோம். அது ஒரு விதை போல நம் உள்ளத்தில் வளர்ந்து கொண்டே இருக்கும்.

போபாலில் இருந்து சாஞ்சி நோக்கி செல்லும் போது என்னருகே ஒருவர் ரயிலில் வந்து அமர்ந்தார். நான் இயல்பாக வெளியே ஓடிக்கொண்டிருந்த அரைப்பொட்டல் நிலத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் என்னிடம் பேச விரும்புவதை அவருடைய முகபாவனைகள் காட்டின. ஆனால் அன்று இருந்த மனநிலையில் நான் அவரிடம் பேச்சை தவிர்க்கும் எண்ணத்தில் இருந்தேன். அவர் மெல்லிய குரலில் என்னிடம் “தமிழாளா?” என்றார் ”ஆம்” என்றேன். “நானும் தழிழ்தான் சார்” என்று அவர் பேசத் தொடங்கினார்.

நெடுங்காலம் பேசாமல் இருந்தவர் பேசுவது போல கட்டற்ற சொல் மழையாக அது இருந்தது. “நான் விருதுநகரைச் சேர்ந்தவன்” என்றார். “எங்கள் ஊரில் இதைப்போல தான் வரண்டிருக்கும். எங்கு பார்த்தாலும் உடைமுள் காடுகளாகத்தான் இருக்கும்” என்றார்.

நான் “விருதுநகரில்?” எங்கே என்றேன்.

“விருதுநகரின் பக்கத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தை சொன்னார். “இங்கே என்ன செய்கிறீர்கள்?” என்றேன். “இங்கே நான் மிட்டாய் விற்கிறேன் சார். விருதுநகரிலிருந்து இங்கு மிட்டாய் கொண்டு வந்து விற்பேன்” என்றார்.

“அப்படியா?” என்றேன். “எத்தனை பிள்ளைகள்?” என்று கேட்டேன். “இரண்டு பெண்கள்” என்று அவர் சொன்னார்.“அதிர்ஷ்டசாலி!” என்று நான் சொன்னேன். அவர் முகம் சற்று மாறுபட்டது. அதை நான் உணர்ந்து “தமிழகத்தில் பெண் பிறந்தால் அதை ஒரு பெரிய சுமை என்று சொல்வார்கள் நான் கேரளப்பின்னணி உடையவன். எங்களூரில் பெண்கள் கடவுளின் கொடை என்று தான் சொல்வார்கள். பெண்ணைப்பெற்ற ஆண் அதிர்ஷ்டசாலி என்று சொல்வார்கள் என்றேன்”

அவர் முகம் மலர்ந்தது. “ஆமாம் சார் எனக்கும் என் பெண்கள் மேல் பெரிய பிரியம் உண்டு. காலையில் அவர்கள் முகத்தை பார்க்காமல் நான் வீட்டை விட்டு கிளம்புவதே இல்லை. இரவு வீட்டுக்கு திரும்பினால் அவர்கள் தூங்கிக் கொண்டிருப்பார்கள். இரண்டு பேரின் காலை மட்டும் தொட்டுப்பார்த்துவிட்டு நான் படுத்துக் கொள்வேன். கால்களைத்தான் இரவு பார்க்கிறேன் என்பதனால் இருவருக்குமே கொலுசு வாங்கிப் போட்டிருக்கிறேன். வெள்ளிக்கொலுசு. ஊருக்குப்போய் கோவில்பட்டியிலிருந்து கொலுசு வாங்கிக் கொண்டு வந்தேன் ” என்றார்.

அந்த மகிழ்வு என்னையும் மகிழச்செய்தது. “பெண்ணைப்பெற்ற தந்தை ஒருபோதும் தனிமையை அடைவதில்லை என்று எங்கள் ஊரில் சொல்வார்கள்” என்றேன். “ஆமாம் சார் இப்போது திரும்பிப்பார்க்கும் போது யாருக்கெல்லாம் பெண்கள் இருக்கிறார்களோ அவர்கள் எல்லாருமே முதுமையில் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள். பையன்களைத்தான் நம்ப முடியாது” என்று அவர் சொன்னார்.

அதன்பிறகு தன்னுடைய இருபெண் குழந்தைகளையும் பற்றி விரிவாக சொல்ல ஆரம்பித்தார். அவர்களுடைய படிப்பு, அவர்களுடைய சுட்டித்தனம், அவர்கள் சினிமாவில் பலவிஷயங்களை நினைவில் வைத்துக் கொண்டு சொல்வது, தொலைக்காட்சியில் நிகழ்ச்சியில் வரும் விளம்பர கதாநாயகிகளைப்போலவே நடித்துக் காட்டுவது, “சிறியவள் விளம்பரங்களை அப்படியே திருப்பிச் சொல்வாள் சார்” என்று சொல்லி அவள் பல விளம்பரங்களை எப்படிச் சொல்வாள் என்பதை சொல்லிக் காட்டினார்.

முத்துலட்சுமி நாகலட்சுமி என்று இரு பெண்களுக்கும் பெயரிட்டிருப்பதாகவும் லட்சுமி என்ற பெயர் கண்டிப்பாக வரவேண்டும் என்ற எண்ணம் தனக்கிருந்ததாகவும் சொன்னார். [பெயர்களை மாற்றியிருக்கிறேன்] “அவர்கள் லட்சுமிகள் தானே சார். வீட்டுக்குள் பெண் குழந்தை வருவது லட்சுமி வருவது போலத்தானே சார்?” என்று என்னைக்கேட்டார். “ஆமாம் கண்டிப்பாக. ஒரு லட்சுமி வந்தாலே வாழ்க்கை வளமாகிவிட்டும் உங்களுக்கு இரண்டு லட்சுமிகள் ”என்றேன்.

அவர் கிட்டத்தட்ட கண்கலங்கி விட்டார். பிறகு என் கால்களை தொட்டு தொட்டு பேசத்தொடங்கினார். என்னைப்பற்றி கேட்டார். நான் வீட்டைவிட்டு வெளியேறி ஆன்மிகமான ஒரு பயணத்தில் இருப்பதாகச் சொன்னேன். எந்தெந்த ஊர்களுக்கெல்லாம் நான் சென்றேன் என்பதையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

திடீரென்று அவர் முகம் சற்று மாறியது. “எப்படியாயிருந்தாலும் நீங்கள் நல்லாயிருப்பீர்கள் சார். நீங்கள் ஒரு அரசு வேலையில் இருக்கிறீர்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது நமக்கு வாழ்க்கை பிரகாசமாக இருக்கிறது என்ற எண்ணம் இருக்கும். ஆனால் வாழ்க்கையில் நாம் என்ன ஆவோம் என்றே சொல்ல முடியாது” என்றபின் பெருமூச்சுவிட்டார் “நான் கோவில்பட்டியில் இருந்து எனது அப்பா சித்தியின் பேச்சைக்கேட்டு அடிக்கிறார் என்பதனால் வீட்டைவிட்டு ஓடிவந்தேன் சார். பல இடங்களில் வேலை பார்த்தேன். பலகாரக்கடைகளில் வேலை பார்ப்பது மிகவும் கடினம் .எண்ணை மேலே விழுந்து கொண்டே இருக்கும். கைகால்கள் எல்லாமே தீக்காயங்களாக இருக்கும், பாருங்கள்” என்று தன் கைகளைக் காட்டினார்.

கைமுழுக்க பல்வேறு இடங்களில் வெந்து காயங்கள் பளபளவென்று இருந்தன. “இப்போது சில இடங்களில் என்னைப் பிடித்து நிறுத்தி மருத்துவர்கள் எனக்கு தொழுநோய் இருக்கிறதா என்று கூட பார்ப்பதுண்டு” என்றார். “ஆனால் இதைக்கூட தாங்கிக் கொள்ளலாம் ஆனால் அடிதான் தாங்கமுடியாது, அதைவிட அவமானம். அடிதாங்காமல் நான் பலகாரக்கடையிலிருந்து ஓடி வந்தேன்” என்றார். “அதன் பிறகு என்ன செய்தீர்கள்?” என்றேன். ”மிட்டாய் வியாபாரத்தை அப்போது தான் ஆரம்பித்தீர்களா?”

“நாப் மிட்டாய் வியாபாரம் செய்யவில்லை சார், பிக்பாக்கெட் அடிக்கிறேன்” என்றார். என் முகம் மாறாததைப்பார்த்துவிட்டு அவர் குற்றவுணர்ச்சியுடன் “தப்புதான் சார். ஆனால் அப்படியே பழகிவிட்டது. இளமையிலேயே பிக்பாக்கெட் அடிக்கும் கூட்டத்துடன் சேர்ந்து கொண்டேன்” என்றார்.

“எங்கு பிக்பாக்கெட் அடிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். “போபால் சந்தைகளிலும் பேருந்து நிலையத்திலும் மாறி மாறி நின்றிருப்பேன். ஒருவாரத்திற்கு ஒருமுறை தான் ஏதாவது சிக்கும்” என்றார்.

”சிறைக்கு போயிருக்கிறீர்களா?” என்று கேட்டேன். “நான்கு முறை போயிருக்கிறேன்” என்றார். ”பிக்பாக்கெட் அடிப்பதை ஒருவருஷம் வரை யாருக்கும் தெரியாமல் செய்வோம் சார். அதற்குள் நாம் பிக்பாக்கெட் அடிப்பது மற்ற பிக்பாக்கெட் ஆட்களுக்குத் தெரிந்துவிடும். அவர்கள் போலீசிடம் சொல்லிவிடுவார்கள். போலீஸ்காரர்களிடம் குறிப்பிட்ட இடைவெளியில் நாமே சென்று சரணாகதி அடைந்துவிட வேண்டும். நம்மை சிறைக்கு அனுப்புவார்கள்”

“சிறைக்கு போகும்போது வீட்டில் என்ன செய்வார்கள்?” என்று கேட்டேன். “கொஞ்சம் பணம் சேர்த்து கொடுத்துவிட்டுதான் போவேன்” என்றபின் ”போலீஸ்காரர்கள் அப்போது மனைவியை தொந்திரவு செய்வார்கள். அதுமட்டும்தான் கஷ்டம்” என்றார். அவர் சொன்னது எனக்குப்புரிந்தது, நான் அவரை சும்மா பார்த்துக் கொண்டிருந்தேன்.

“என் மனைவி நல்ல குடும்பத்தை சார்ந்தவள் சார். நான் திருமணம் செய்யும்போது இங்கே மிட்டாய் வியாபாரம் செய்வதாகத்தான் சொன்னேன். முதலில் போலீஸ் என்னைத் தேடிவந்து கைது செய்த போது தான் என் தொழில் அவளுக்குத் தெரிந்தது. அன்று என்னை அவர்கள் திட்டி சாபம் இட்டாள் தூக்கு போட்டுச் சாவதற்கு முயன்றாள். பக்கத்துவீட்டுக்காரர்கள் காப்பாற்றிவிட்டார்கள். அன்று என் மூத்த மகள் அவர்கள் வயிற்றில் இருந்தாள்” என்றார்.

நான் என்ன சொல்வதென்று தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். “நான் திரும்பி வரும்போது குழந்தை பிறந்திருந்தது. ஜெயிலில் ஒருமுறை கூட அவள் வந்து என்னை பார்க்கவில்லை. நான் திரும்பி வந்து குழந்தையின் கால்களை என் தலைமேல் வைத்துக் கொண்டு இனிமேல் பிக்பாக்கெட் அடிப்பதில்லை என்று சத்தியம் செய்து கொடுத்தேன். ஆனால் அதன் பிறகு என்னால் எந்த வேலையும் செய்யமுடியவில்லை. எங்கு போனாலும் பிக்பாக்கெட் என்ற அடையாளம் இருந்து கொண்டே தான் இருக்கும். சிறைக்கு போனவனை மிக எளிதாக அடையாளம் கண்டு கொள்கிறார்கள் சார். ஒரு வாரத்திற்கு மேல் எங்கும் வேலை செய்ய முடியாது .எப்படியோ தெரிந்துவிடும். ஆகவே மீண்டும் அதையே செய்ய ஆரம்பித்தேன்”

“குழந்தை வளர்ந்து வந்தது அதற்கான செலவுகளுக்கான பணம் தேவைப்பட்டபோது மெதுவாக அவளும் அதற்கு ஒத்துக் கொண்டாள். இப்போதும் எப்போதாவது நினைத்துக் கொண்டு வருத்தப்படுவாள். மற்றபடி பிரச்னை ஒன்றுமில்லை. எப்படியோ குழந்தைகளையும் படிக்கவைத்து ஊருக்கு அனுப்பி திருமணம் செய்து வைக்க வேண்டும்” என்றார்.

“ஊரிலேயே அனுப்பி படிக்க வைக்கலாமே?” என்றேன். “ஊரில் யாரும் இல்லையே. ஊரில் குலதெய்வம் மட்டும் தான் இருக்கிறது” என்றார். “ஊருக்கெல்லாம் செல்வீர்களா?” என்றேன். “ஆமாம் வாழ்க்கையில் இன்பம் என்பதே ஊருக்குச் செல்வது தான். கொஞ்சம் பணம் எடுத்துக் கொண்டு செல்வேன். அங்கு எல்லாருக்கும் பொருட்களை வாங்கிக் கொண்டு போவோம். நான் மிக வசதியாக இருப்பதாகத் தான் ஊரில் எல்லோரும் நினைக்கிறார்கள். ஊரில் எங்கள் குலதெய்வக்கோயிலின் திண்ணையை நான் தான் எடுத்துக் கட்டிக் கொடுத்தேன்” என்றார்.

“உங்கள் பெண்களுக்குத் தெரியும் வரைதான் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும்” என்று நான் சொன்னேன். ”அதெல்லாம் தெரியாது .சார் தெரியாமல் பார்த்துக் கொள்ளலாம் ”என்றார். பிறகு என் தொடையைத் தொட்டு “நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள் சார். இதெல்லாம் ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது.” என்றார்

”இல்லை எனக்கொன்றும் பெரிய பிரச்னை இல்லை” என்று நான் சொன்னேன். ”கேட்கும்போது முதலில் கஷ்டமாக இருக்கும் ஆனால் இதெல்லாம் வாழ்க்கையில் சாதாரணம் தான் எல்லாரும் இதைப்போன்ற பிரச்னைகள் வழியாகத்தானே கடந்து வருகிறார்கள்?” என்றார்.

நான் “அப்படியா?” என்றேன். “எனக்கொரு நண்பன் இருக்கிறான் சார் அவன் தான் ஆறுதல் சொல்வான் .இப்போதெல்லாம் இதைப்பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை” என்றார். “சரி” என்று நான் சொன்னேன்.

தமிழக தேர்தல் பற்றியும் புதிதாக வெளியாகியிருந்த ரஜினிகாந்தின் படம் பற்றியும் பேச ஆரம்பித்தார் பேச்சு பல இடங்களில் சென்று கொண்டிருந்தது. அவர் மிக மகிழ்ச்சியாக ரஜினியின் கையசைவுகளையும் முகபாவனைகளையும் நடித்துக் காட்டினார். நான் வாய்விட்டு சிரித்துவிட்டேன். எங்களை சுற்றியிருந்தவர்கள் இறங்கி சென்றார்கள் .நானும் அவரும் மட்டும் எஞ்சினோம்.

“பத்திரமா இருங்க சார்” என்றார். புரியாமல் “ஏன்?” என்றேன். “உங்கள் உடம்பை நான் மூன்று முறை தொட்டு பார்த்தேன். உங்களுக்கு சுயநினைவே இல்லை” என்றார். “எதற்காக?” என்றேன். “ஒருவரைத் தொட்டுப்பார்க்கும்போது அவரது உடல் எதிர்வினையாற்றுகிறதா என்று பார்ப்போம். அறியாமலே திரும்பிப்பார்ப்பவரிடமிருந்து பிக்பாக்கெட் அடிக்க முடியாது. பலர் தங்களுக்குள் ஆழ்ந்து யார் கையை வைப்பார்கள் என்று தெரியாமல் இருப்பார்கள் அவர்களைத்தான் நாங்கள் பிக்பாக்கெட் அடிப்போம்” என்றார்.

“நான் திரும்பிப் பார்த்தேனா?” என்றேன். ”நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்தீர்கள். உங்கள் மனம் மிகுந்த கவலையில் இருக்கிறது” என்றார். “கவலையில்லையே” என்று நான் சொன்னேன். ”தெரியவில்லை ஆனால் நீங்கள் எதையுமே கவனிக்காமல் உங்களுக்குள் மூழ்கி இருந்தீர்கள்” என்றார்.

“சரி” என்று சொல்லி நான் புன்னகை செய்தேன். மீண்டும் என் நினைவுகள் ஓடத்தொடங்கின. என்னை வாட்டி வதைக்கும் நினைவுகள். இருவரும் பேசாமல் சிறிது நேரம் அமர்ந்திருந்தோம். நான் வெளியே ஓடிக் கொண்டிருந்த வரண்ட நிலத்தைப்பார்த்து சற்று நேரம் காட்சிகளில் மூழ்கிப்போனேன் .ஏதோ ஒர் ஓசை கேட்க திரும்பிப்பார்த்தேன். அவர் கண்ணீர் வழிய விசும்பிக் கொண்டிருந்தார்.

 

குங்குமம் முகங்களின் தேசம் தொடரில் இருந்து

முந்தைய கட்டுரைஞானக்கூத்தன் – இரு நோக்குகள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17