பியுஷ் சில வினாக்கள்

1

 

வழக்கம்போல பியுஷ் மனுஷ் பற்றி ஒரு பன்னிரண்டு கடிதங்கள். எல்லாமே இணையத்தில் அவர்மேல் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்வைத்து என்னிடம் விளக்கம் கோருபவை. இதில் ஒரு பெண்மணி முன்வைத்துள்ள ஒருவகையான பாலியல்குற்றச்சாட்டும் அடங்கும்.

 

அதாவது, பல ஆண்டுகளுக்கு முன்பு அப்பெண்மணி பியூஷின் அமைப்பில் பணியாற்றியபோது அவர் பாலியல்சீண்டலா என்று இன்று சந்தேகம் வருவதற்குச் சாத்தியமான சில சொற்களைச் சொன்னாரா என்று இவர் இப்போது சந்தேகப்படுவதற்கு சிலவாய்ப்புகள் உள்ளனவா என இவர் யோசிக்கிறாராம்.

 

இந்தக்குற்றச்சாட்டுக்கள் எவையுமே பியூஷ் கைதுசெய்யப்பட்டு, அவர்மேல் ஊடகக் கவனம் விழுவது வரை எழவில்லை என்பதையாவது கவனிக்கும் நுண்ணுணர்வு நமக்கு இருக்கவேண்டும். ஊடகக் கவனத்துக்காக மானாட மயிலாட நிகழ்ச்சிக்குப்போய் குடும்பத்துடன் குத்துப்பாட்டு ஆடுபவர்கள் நாம். நள்ளிரவு நிகழ்ச்சியில் தன் பெயர்சொல்லி பாலியல் ஐயங்களைத் தீர்ப்பவர்கள். நம்ம்மில்  இருந்து வருபவர்கள் இவர்கள். சமூக ஊடகங்களில் சற்று கவனம்பெறுவது அன்றி வேறெந்த நோக்கமும் இவர்களுக்கில்லை. பரிதாபத்துக்குரிய உளநோயாளிகள்.

 

இந்தத்தருணத்தில் சில பொதுஅவதானிப்புகளை நான் சொல்ல விரும்புகிறேன். பொதுவாகவே தமிழர்களாகிய நமக்கு இலட்சியவாதங்களில் நம்பிக்கை இல்லை. ஏனென்றால் உண்மையான இலட்சியவாதம் இங்கே பொதுவெளியிலிருந்து காணாமலாகி நெடுநாட்களாகிறது. நம் வழிபாட்டுப்பிம்பங்கள் ஊழலில் திளைக்கும் அரசியல்வாதிகள். அல்லது ஊடகங்கள் உருவாக்கும் கேளிக்கைநாயகர்கள். நாம் எங்கும் காண்பது ஊழல், சுயநலம்.

 

ஆகவே எவர் எங்கே இலட்சியவேட்கையுடன் செயல்படுவதைக் கண்டாலும் நம்மால் அதை நம்பமுடிவதில்லை. அவருக்கு ஏதாவது சுயலாபம் இருக்கும், இல்லாமல் இப்படிச் செய்வாரா என்றுதான் நாம் யோசிப்போம்.இங்கே எழும் பேச்சுக்களில் பெரும்பாலானவை அத்தகையவைதான்

 

அவர் அவ்வாறு இலட்சியவாதத்தை வாழ்க்கையாகக் கொண்டிருப்பது உண்மை என்றால் நமக்கு நம் சொந்த சுயநலவாழ்க்கை மீதான விமர்சனமாகத் தெரிகிறது. ஆகவே எரிச்சல் கொள்கிறோம். ஏதாவது பழுது இருக்கிறதா என்று நம் மூளை தோண்ட ஆரம்பிக்கிறது. எங்காவது எதையாவது கண்டுபிடிக்கிறோம். அதை எவரேனும் சொன்னால் பாய்ந்துசென்று கவ்விக்கொள்கிறோம்.

 

‘பாத்தியா நாம் அப்பவே சொன்னேனே, இதெல்லாம் டுபாக்கூர்’ என்று சொல்லும்போது நம் முகத்தில் பெருமிதம் மிக்க இளிப்பு பரவுகிறது. அத்துடன் நாம் நம்பும், ஏற்கும் ஒன்றை அவர் எதிர்ப்பார் என்றால் அதையே காரணமாக ஆக்கி கொலைவெறி கொள்கிறோம். அதன்பின் எந்தவகையான அவதூறுக்கும் தயாராக ஆகிறோம். நம் கீழ்மையை ஒருவகை மூர்க்கமான அறச்சீற்றமாக ஆக்கிக்கொண்டு கூச்சலிடத்தொடங்குகிறோம். இதெல்லாம்தான் அண்ணா ஹசாரே விஷயத்திலும் இங்கே நடந்தது. இது நம்முடைய அடிப்படையான அறப்பிரச்சினை. நம் தலைமுறைகளாவது இந்த இழிவிலிருந்து வெளிவரவேண்டும்.

 

அரசியல்கோஷமிடுபவர்களின் ஆதரவும்சரி ,எதிர்ப்பும் சரி, அவதூறும் சரி, உணர்ச்சிவேகமும் சரி பொருட்படுத்தத் தக்கவையே அல்ல. தங்கள் கோஷங்களை அவர் எழுப்பினால் அவர் நல்லவர், இல்லையேல் அவர் எதிரி. இன்று அவருக்காக கோஷமிடுபவர்களில் பலர் அண்ணா ஹசாரேபற்றி அவதூறுகளை கிளப்பியவர்கள். அவரை அவதூறு செய்பவர்கள் பலர் வெறும் அரசியல் கைக்கூலிகள்.

 

அத்தனை சூழியலாளர்களுக்கும் பலவகையான எதிரிகள் இருப்பார்கள். சூழியல் என்பது ’வளர்ச்சி’ சார்ந்த பெருங்கட்டுமானங்கள் மற்றும் இயற்கையை ஆக்ரமிப்பது ஆகியவற்றுக்கு எதிரானதாகவே இருக்கமுடியும். அவற்றால் லாபம் அடையும் தரப்பினரின் கசப்பும் எதிர்ப்பும் அவர்கள்மேல் வந்து இறங்கும். அதில் பெரிய நிறுவனங்கள் மட்டும் அல்ல, ஏழைகளும் கூட இருப்பார்கள்.

 

பியுஷ் நீர்நிலை ஆக்ரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்திருக்கிறார், அகற்றியிருக்கிறார். அந்த ஆக்ரமிப்பாளர்கள் அவர்மேல் கசப்புகளைக் கொட்டுவதை முன்னரே நண்பர் ஒருவர் சொல்லியிருக்கிறார். நான் அறிந்த ஜகன்னாதன் கிருஷ்ணம்மாள் தம்பதியினரின் போராட்டத்தின்போது அவர்கள் செல்லுமிடமெங்கும் வசைபாட ஒரு கூட்டமே இருப்பதைக் கண்டிருக்கிறேன்.

 

பியூஷ் சூழியல்ல போராளி மட்டும் அல்ல. அவர் மாற்றுத் தொழில்முறை ஒன்றை கனவுகண்டவர். மரத்துக்குப்பதில் அனைத்து இடங்களிலும் மூங்கிலைப் பயன்படுத்துவதை அவர் முன்வைத்தார் – அது எந்த அளவு சாத்தியமென தெரியவில்லை. ஆனால் அது ஒரு வகை  மாற்றுவழி. வரண்ட நிலங்களில் மூங்கில் மட்டுமே லாபகரமான வேளாண்மை என்பதும் அவரது தரப்பு

 

அதை  லாபகரமாகச் செய்யவேண்டும், தொழிலாகச் செய்யவேண்டும் என்பதை அவர் முன்வைத்துவாதிட்டுக்கொண்டிருந்தார். அப்போதுதான் அந்தத் துறை வளரும் என்றார். தான் லாபகரமாக செயல்படுவதாக மேடைகள் தோறும் சொல்லிவந்தார். அவர் ஒரு மூங்கில் அடிப்படைவாதி என்று சிலர் கேலியாகச் சொல்லிக்கேட்டிருக்கிறேன்

 

அதைப்பிடித்துக்கொண்டு அவர் சேவகர் அல்ல, வணிகர் என்றும் ‘ஏழைகளின் மூங்கிலை வாங்கி விற்றவர்’ என்றும் ஒரு தரப்பு சொல்ல ஆரம்பித்துள்ளது. அவர் கூட்டுறவு முறையில் தரிசு நிலங்களை வாங்கி இயற்கைக் காடுகளை உருவாக்கினார். சந்தைவிலைக்கு அதிகமாக கொடுத்து வாங்கப்பட்ட பயனற்ற கரட்டுநிலங்கள் அவை

 

ஆனால் இயற்கைவேளாண்மை முறையின் அறிவியல்சார்ந்து அங்கே பசுமை கொண்டுவரப்பட்டபோது இன்று அந்நிலங்களின் மதிப்புகூடியிருக்கிறது. உடனே ஒரு கும்பல் கிளம்பி நிலங்களை அவர் ‘அபகரித்து’விட்டதாகச் சொல்கிறார்கள். விற்றவர்களுக்கே அந்த எரிச்சல் உள்ளது என அறிகிறேன்.

 

இந்த சிக்கலை எப்போதுமே பண்ணை உருவாக்குபவர்கள் எதிர்கொள்வார்கள். ஐம்பதுவருடம் தரிசாகக்கிடக்கும் நிலமாக இருக்கும். அதில் பண்ணை உருவாக்குவதை ஒரு பெரும்பணியாக இவர்கள் செய்வார்கள். நிலத்தை விற்றவர் அது பண்ணையாக ஆனபின் தான் ஏமாற்றப்பட்டதாக உணரத்தொடங்குவார். அவதூறு சொல்வார். நிலத்தை திரும்பக்கேட்பார். பியுஷ் உருவாக்கியது பண்ணைகூட அல்ல, காடு.

 

இத்தகைய எந்த ஒரு குற்றச்சாட்டு கிளம்பி வந்தாலும் பாய்ந்து அதைக்கவ்விக்கொண்டு கூச்சலிடும் நாலாந்தர அரசியல்வாதிகள் இங்குள்ளனர். அரசியல் அல்லக்கைகள். போலிக்கோஷமிடும் வாய்ச்சொல் புரட்சியாளர்கள். இந்தக்குரலை நாமும் அறியாமல் எதிரொலிக்கிறோம் என்றால் அடிப்படையில் அது நம் நேர்மையின்மையின் சிக்கல் மட்டுமே

 

நம் முன் உள்ள நேரடியான எளிய கேள்வி இதுதான்.  சொல்வது எளிது. குறைசொல்வதுமேலும் எளிது. எதையாவது செய்து காட்டுபவர்களே முக்கியமானவர்கள். அவர்களைக் குறைசொல்பவர்களின் தனிப்பட்ட தகுதி என்ன? அதைக்கேட்காமல் மேலே பேசலாகாது. அவர்கள் சொந்த இழிவைக் கடைபரப்புபவர்கள் மட்டுமே

 

பியுஷ் நான் நம்பும் சில முக்கியமான நண்பர்களுக்கு அணுக்கமானவர். அவர்களிடமிருந்து அவரைப்பற்றி நிறையவே அறிந்திருக்கிறேன். அவர் சூழியலுக்கு ஆற்றிய களப்பணிகள், பொது நீதிக்காக நடத்திய போராட்டங்கள். அவர் சற்று உணர்ச்சிகரமானவர், மிகையான சொல்லாட்சிகள் கொண்டவர் என்கிறார்கள். அவர் தன் எல்லைக்கு அப்பாற்பட்டவற்றைச் செய்யமுயன்றார் என்கிறார்கள். அவர் இடதுசாரிக் கருத்துக்களைக் கொண்டவர் என்கிறார்கள்.

 

அவரிடம் எனக்கு முரண்பட ஏராளமாக இருக்கலாம். அது வேறு  விஷயம். ஆனால் இங்கே நிகழ்ந்திருப்பது நேரடியான அரசு வன்முறை. ஒரு களப்பணியாளர் மக்கள்பணியின்பொருட்டு ஜாமீன் இல்லாது சிறைவைக்கப்பட்டு தாக்கப்பட்டிருக்கிறார்.  எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படாதநிலையில் சிறையில் இருக்கிறார். அதைக்கூட பார்க்கமுடியாத அளவுக்கு கண்கள் மங்கியிருக்கின்றன என்றால் நாம் ஜனநாயகம் பற்றிப் பேசவேண்டியதே இல்லை.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ -1
அடுத்த கட்டுரைசிங்கப்பூரில் இரண்டுமாதங்கள்…