சிங்கப்பூரில் இரண்டுமாதங்கள்…

travel with writer Jyamohan in the Spiti Valley at Himachal pradesh

உலகமெங்கும் கல்விமுறையில் மொழியின் இடம் மேலும்மேலும் முக்கியத்துவம் அடைந்துகொண்டே செல்லும் காலகட்டம் இது. குறிப்பாக அமெரிக்காவிலிருந்து இந்த அவதானிப்பு நிகழ்த்தப்பட்டு கல்விமுறையின் மையப்போக்காக ஆகியது. மொழியாக வழியாக அறிவதும், மொழியாக மாற்றப்படுவதும்தான் உண்மையில் அறிவென ஆகிறது. ஆகவே நூல்வாசிப்பை மிகப்பெரிய அளவில் இன்றைய கல்விமுறை வலியுறுத்துகிறது. சொல்லப்போனால், வாசிப்புப்பழக்கத்தை உருவாக்கி வழிகாட்டினால் மட்டுமேபோதும், குழந்தைகளே கற்றுக்கொள்ளும் என்பதே இன்றைய சிந்தனை

இதில் புனைவுவாசிப்பு மேலும் முக்கியமான பங்கை வகிக்கிறது. அது பொழுதுபோக்கு அல்ல. கற்பனை மூலம் கற்கவும், கற்றவற்றை விளக்கவும், தொகுத்துக்கொள்ளவும் உதவும் ஒரு முறை. இன்று வந்துகுவியும். தகவல்களை ஏதேனும் வகையில் ஒற்றை அமைப்பாகத் தொகுத்துக்கொள்ளாதவர்கள் அவற்றை எவ்வகையிலும் பயன்படுத்த முடிவதில்லை. ஒரு பெருவிவாதமாக அவற்றைத் தொகுத்துக்கொள்ளலாம். அல்லது ஒரு வாழ்க்கைபோல புனைந்துகொள்ளலாம்.

உதாரணமாக ராஜராஜசோழனின் ஆட்சிக்காலத்தைப்பற்றிய பல்வேறு தகவல்களை நாம் வரலாற்றுநூல்களில் இருந்து வாசிக்கலாம். எவையுமே நினைவில் நிற்பதில்லை. ஆனால் ராஜராஜசோழனின் ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்கலாமா, ராஜராஜன் சம்ஸ்கிருதத்திற்கு தமிழகத்தில் மறுபிறப்பு கொடுத்தவனா என்றெல்லாம் விவாதங்களாக அத்தகவல்களைத் தொகுத்தால் அவை நினைவில் நீடிக்கின்றன.

ஆனால் அதைவிட உதவியானது அந்தக்காலகட்ட வாழ்க்கையை அப்படியே ஒரு மனச்சித்திரமாகத் தீட்டிக்கொள்வது. முழுத்தகவல்களுடன் அச்சித்திரத்தை விரிவாக்கிக்கொண்டே செல்வது. ராஜராஜன் காலகட்டத்தில் நாம் வாழ்வதுபோலவே கற்பனைசெய்யும்போது தகவல்கள் நம்மிடமிருந்து அன்னியமானவை அல்ல. அதை அறிவியலில் தொழில்நுட்பத்தில்கூட செய்யமுடியும். அதற்குத்தான் புனைவுத்திறன் அவசியமாகிறது

ஆகவே புனைவுவாசிப்பும் சரி , புனைவு எழுதும் பயிற்சியும்சரி, எதிர்காலத்தில் எழுத்தாளர்களாக ஆகப்போகிறவர்களுக்குரியவை மட்டும் அல்ல. அவை அறிவியலாளர்களோ நிர்வாகிகளோ ஆகப்போகிறவர்களுக்கும் உரிய  இன்றியமையாத அடிப்படைகள்தான்.மொழியை விரித்து ஒன்றை தொடர்புறுத்தும் பயிற்சியை அவை அளிக்கின்றன. ஒரு சூழலை கற்பனையில் விரித்துக்கொள்ளவும் பலவகையில் வளர்த்தெடுக்கவும் கற்பிக்கின்றன.

இன்றைய வாழ்க்கையின் தொழில்நுட்பம், அறிவியல், வணிகம், நிர்வாகம் என அனைத்துத் துறைகளும் தொடர்புறுத்தல்கலைக்கு மிகமுக்கியமான இடம் அளிப்பவை. சிறந்த தொடர்புறுத்தல் என்பது வெற்றிக்கான முதல்படி. அதற்குத்தேவையானது மொழித்திறன். புரிய வைக்கும் திறன் மட்டும் அல்ல, கற்பனையைத் தூண்டும் திறன். நம்பவைக்கும் திறன். அது புனைவுவாசிப்பால் உருவாவது. ஆகவேதான் புனைவுவாசிப்பும் புனைவெழுத்தும் நவீனக்கல்வியின் ஆதாரங்களாக இன்று வலியுறுத்தப்படுகின்றன

அமெரிக்க, ஐரோப்பியக் கல்விமுறையைக் கூர்ந்து அவதானிக்கும் கொரியா, சிங்கப்பூர் முதலிய நாடுகள் இக்காரணத்தால் சமீபகாலமாக தங்கள் கல்விமுறையிலும் வாசிப்பை முக்கியமாக முன்வைக்கின்றன. புனைவு எழுத்தை குறிப்பாக வலியுறுத்துகின்றன. கொரியாவும் சிங்கப்பூரும் சமீபகாலமாக இலக்கியத்திற்கும் நாடகத்திற்கும் பெருந்தொகைகளைச் செலவிடுகின்றன.மகத்தான நூலகங்களை அமைத்து நூல்கள் வாசிப்பதற்கே நிதிக்கொடை அளிக்கின்றன.இலக்கியநிகழ்ச்சிகள் அனைத்துக்கும் நிதியளிக்கின்றன. கருத்தரங்குகளும் பயிற்சிப்பட்டறைகளும் நிகழ்த்துகின்றன

சிங்கப்பூரின் இத்தகைய பல நிகழ்வுகளில் நான் கலந்துகொண்டிருக்கிறேன். சிங்கப்பூரின் Read Singapore என்னும் இயக்கத்தில் என் நூல்கள் வாசிப்புக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. இப்போது சிங்கப்பூர் கல்விமுறையில் புனைவிலக்கியத்தின் இடத்தை உருவாக்கும் முயற்சியின் பகுதியாக  National Institute of Education  அமைப்பின் அழைப்பின்பேரில்  writer in residence என்னும் பொறுப்பில் இருமாதகாலம் சிங்கப்பூரில் பணியாற்றவிருக்கிறேன்.

வரும் ஜூலை 25 ஆம் தேதி சிங்கப்பூர் செல்கிறேன். செம்டெம்பர் 27 வரை அங்கிருப்பேன். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு புனைவு எழுத்தை அறிமுகம்செய்வதும் பயிற்றுவதும் அவர்களைப்பற்றிய அவதானிப்புகளைத் தொகுப்பதும் பணி. கருத்தரங்குகளும் சில உள்ளன. இது அவர்களுக்கே ஒரு புதிய முயற்சி.

எனக்கும் புதியபணிதான். எனக்கு இதுவரை அரசு, அல்லது அமைப்புகள் எதனுடனும் உறவிருந்ததில்லை. நான் செய்தபயணங்கள் அனைத்துமே என் வாசகர்களின் அழைப்பு மற்றும் உபசரிப்பால்தான். முதல்முறையாக ஓர் அரசுசார்ந்த பணி வந்துள்ளது. முற்றிலும்புதிய பணியும்கூட. என்ன செய்யமுடியுமென்று பார்க்கலாம். எப்படியானாலும் சிங்கப்பூரில் இரண்டுமாதம் என்பது உற்சாகமான ஒரு புதிய அனுபவமாகவே இருக்குமென நினைக்கிறேன்

முந்தைய கட்டுரைபியுஷ் சில வினாக்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 2