தஞ்சை தரிசனம் – 1

அக்டோபர் 16 அதிகாலை ஐந்தரை மணிக்கு அரசுப்பேருந்தில் திருச்சி வந்துசேர்ந்தேன். இப்போதெல்லாம் பேருந்துப்பயணம் எனக்கு திகில் பயணமாக ஆகிவிட்டிருக்கிறது. பயணங்களில் தூங்குவது வரை தாகமும் சிறுநீர் முட்டலுமாக அவஸ்தை. ஆகவே முந்தையநாள் இரவே அதிகமாக தூங்காமல், பகல்தூக்கத்தையும் ரத்துசெய்துவிட்டு, பேருந்தில் ஏறினேன். பத்துமணிக்கெல்லாம் நல்ல தூக்கம் வந்துவிட்டது. உள்ளூர சிந்தனை ஓடிக்கொண்டிருப்பதுபோல இருந்தது. அரைத்துக்கம் ஒருவகை போதைநிலை. காலையில் திருச்சி.

நண்பர் இருவரும் அங்கே வந்திருந்தார்கள். நான் ஆட்டோவில் நண்பர்கள் ஓட்டலுக்குசெ சென்று என் அறையில் அரைமணிநேரம் என் சூட்கேஸ் மேல் காலைத்தூக்கி வைத்து படுத்துக்கொண்டேன். பேருந்துப்பயணங்கள் முடிந்தபின்னர் கால்களை உயரமாக தூக்கிவைத்து முதுகை நிமிர்த்திப்படுப்பது அபாரமானதோர் ஓய்வை அளிக்கிறது. குருதி கால்களில் இருந்து வெளியேறுகிறது.

ஆறரை மணிக்கு குளித்து உடைமாற்றினேன். அரங்கசாமி திருப்பூரில் எனக்கு நாலைந்து ஜதை ஜீன்ஸும் சட்டையும் வாங்கி அனுப்பியிருந்தார். நான் இப்போது அதிகம் புழங்கும் சினிமாத்துறையில் என் வழக்கமான சம்பிரதாய ஆபீஸர் உடை அன்னியமாக தெரிவதனால் இது தேவையாகிறது. கீழே வந்தேன். நண்பர்கள் அங்கே நின்றிருந்தார்கள்.

நேராக கொடும்பாளூர் சென்றோம். சோழர் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்திருக்கும் இடம் அது. கொடும்பாளூர் சிற்றரசர்கள் சோழர்குலத்துக்கு பெண்கொடுப்பவர்களாகவும் சோழர்களின் படைத்தலைவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். புதுக்கோட்டையில் இருந்து மதுரைசெல்லும் பாதையில் விராலிமலை தாண்டி சாலையோரமாகவே உள்ளது.

கொடும்பாளூரின் முக்கியமான வரலாற்றுச்சின்னங்கள் இரண்டுதான். மூவர்கோயில் மற்றும் முகுந்தேஸ்வரர் கோயில். அப்பகுதியே வரண்டு முள்மரங்களும் வெற்றுப்பொட்டலுமாகக் காட்சியளிப்பது வழக்கம். இப்போது அக்டோபரின் மழையால் புல் பரவிய நிலம் பசுமையாக தெரிகிறது. ஆனாலும் பெருபகுதி விளையாமண். விளைமண்ணும் கூட கிணற்றுப்பாசனம் என்று பட்டது

சாலையில் காரை நிறுத்திவிட்டு இறங்கும்போதே மூவர்கோயில் கண்ணுக்குப் படுகிறது. பிற்காலத்தைய சோழர் கோயில்களின் பெரிய அமைப்புகள் இல்லாதது இக்கோயில். ராஜராஜசோழனின் காலத்தில்தான் கட்டப்பட்டிருக்கிறது. ஆனால் தஞ்சை கோயில்கலையில் ராஜராஜன் காலம் ஒரு திருப்புமுனை. தஞ்சைபெரியகோயில் பெரிய கட்டுமானங்களுக்கான நிர்வாகம், சிற்கத்தேர்ச்சி, நிதி ஆகிய மூன்றும் உருவானமைக்கு ஆதாரம் . அதன்பின்னரே பெரும்கோயில்கள் எழ ஆரம்பித்தன

கொடும்பாலூர் மூவர்கோயில் எளிமையான கற்கட்டுமானம். இப்போது இரண்டு கோயில்களே கோபுரங்களுடன் உள்ளன. ஒன்று இடிந்துவிட்டது. கருவறைகள் மட்டுமே உள்ளன. முகமண்டபங்கள் இடிந்து விட்டிருக்கின்றன. சுற்றும் இருந்த சிறு கோயில்களும் அஸ்திவாரங்களுடன் உள்ளன. ஆனால் சிற்பவேலைப்பாடுகள் கொண்ட கோயில் இது. கோயிலின் மேல்கூரை விளிம்புகளில் அழகான சிற்பங்கள் உள்ளன. கங்காதரர் பிட்சாடனர் சிற்பங்கள். சோழர் காலச்சிற்பங்கள் செம்மையான மணற்பாறைகளினாலானவை. இங்கும் அப்படியே. நாயக்கர்காலத்தில்தான் கருங்கல்சிற்பங்கள் தமிழகத்தில் ஏராளமாக உருவாயின.

பழைய கல்வெட்டுகளில் ‘கொடும்பை’ என்ற பெயரால் இந்நகர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘இருக்குவேளூர்’ என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. நெடுங்காலம் கொடும்பாளூர் வேளிர்கள் தனிநாடாகவே இருந்திருக்கிறார்கள். பல்லவர்களுக்கும் சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் மாறி மாறி கப்பம் கட்டியிருக்கிறார்கள். பின்னர் திருப்புறம்பியம் போரில் சோழர்கள் பாண்டியர்களையும் பல்லவர்களையும் வென்று மேலாதிக்கம் கொண்ட மன்னர்களாக ஆனபோது சோழர்களுக்கு கட்டுப்பட்ட அரசாக ஆகியது.

சோழர்களின் அரசில் கொடும்பாளூர் வேளிர்கள் முக்கியமான இடம் பெற்றார்கள். கொடும்பாளூர் அரசரான பூதி விக்ரமகேசரி தன் மகள் வானதியை ராஜராஜ சோழனுக்கு மணம்செய்து கொடுத்து அரசகுலத்துக்கு நெருக்கமானவராக ஆனார். வானதி பொன்னியின்செல்வன் நாவல்மூலம் தமிழர்களுக்கு மிக நெருக்கமான கதாபாத்திரம்.

பூதிவிக்ரமகேசரி மூவர்கோயிலைக் கட்டினார் என்று கல்வெட்டுகள் சொல்கின்றன. மூவர் என்று சொல்லப்படுவது தேவார மூவரையா அல்லது மும்மூர்த்திகளையா என்ற ஐயம் உள்ளது. கோயில்கள் இன்று வழிபாட்டில் இல்லை. தொல்பொருள்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. நாங்கள் சென்ற போது அங்கே ஊழியர்கள் ஆயுதபூஜை செய்துகொண்டிருந்தார்கள். சுண்டல் வாங்க குழந்தைகள் வந்திருந்தன.

கோயிலுக்கு அருகே அங்கே அகழ்வாய்வில்கிடைத்த சிற்பங்களை கொண்டு ஒரு அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டிருந்தது. மூவர்கோயிலில் ஒருகோயிலிலேயே சிவலிங்கம் உள்ளது. மற்ற கருவறைகள் காலியாகக் கிடந்தன. பூதி விக்ரம கேசரி ஒருகோயிலை தனக்காகவும் பிற இருகோயில்களை தன் மனைவியருக்காகவும் கட்டியதாக சம்ஸ்கிருதக் கல்வெட்டு உள்ளது.

அங்கிருந்து காரில் ஏறி வெயில் உருகிப் பளபளத்துக்கிடந்த காலிநிலங்கள் வழியாகச் சென்றோம். புதுக்கோட்டையில் கிரானைட் வெட்டி எடுப்பது பெரிய தொழில் போலும். எங்கும் வெட்டியெடுக்கப்பட்ட கற்கள் பேருருவம் கொண்டு சாலையோரமாக காத்துக்கிடந்தன. பண்டைய கருங்கல்கோட்டையின்றின் இடிபாடுகள்போல.

காலடிப்பட்டி வழியாக குடுமியான் மலை.முன்பு திருநாலக்குன்றம் என்று அழைக்கபப்ட்டது. சம்ஸ்கிருதப்பெயர் சிகாநல்லூர். சிகை என்றால் குடுமி. குடுமி என்றால் மலைச்சிகரம் என்றும் பெயருண்டு. ஊற்றுநீர் ஊறி நீண்டு வழிந்துகிடந்த குளிர்ந்த பாறை வழியாக குன்றின் மேல் ஏறிச்சென்றோம். ஒற்றைப்பெரும்பாறையாலான மலை அது. மாபெரும் திமிங்கலம் ஒன்றின்மேல் ஏறுவது போல. சாலையோரம் பையன்கள் சறுக்கி விளையாடி பாரை அதீத வழுவழுப்பாக இருந்தது. இருமுறை விழப்பார்த்தபின்னர் வேறு வழியே ஏறினோம்

குன்றின் வயிற்று மடிப்புக்குள் புராதனமான சமணப்படுக்கைகள் கொண்ட குகைகள். குளிர்ந்த தரையில் செதுக்கப்பட்ட படுக்கைகளைக் காணும்போது ஒருவகையான தனிமையுணர்ச்சியால் பீடிக்கப்பட்டேன். அந்தப்பழங்காலத்தில் நாமறியா சமணத்துறவியர் எப்படி அந்த வெறும்கல்தரையில் படுத்துறங்கினர். எபப்டி மழைக்காலத்தை கடந்தனர்? பசித்தும் தனித்தும் விழித்தும் வாழ்ந்தனர்? ஆம், ஞானம் மனிதனை அன்னியனாக்கும் , அவனை நாடுகடத்தும், சிரச்சேதமும் செய்யும்….

குன்றின்மேல் ஒரு சிறிய கோயில். சிவன்கோயில்தான். அருகே சில சிறிய துணைச்சன்னிதிகள் இடிந்துக்கிடந்தன. பொதுவாக இம்மாதிரி மலையுச்சிகளில் கோயில்கள் தாந்த்ரீக வழிபாட்டுக்காகவே கட்டப்படுகின்றன. அங்கே பொதுமக்கள் நடமாட்டம் இருப்பதில்லை. அக்காலத்தில் சைவமதத்தின் தாந்த்ரீகர்கள் இந்தியாவில் வலுவான மதங்களாக செயல்பட்டிருந்திருக்கிறார்கள்.

காற்று சுழன்றடிக்கும் மலையுச்சி. வெயில் தெரியவில்லை. காலத்தை உணரவைக்கும் மௌனம். கோயில் முடிவிலா நீளம் கொண்ட அந்த மௌனத்தில் மிதந்து கிடப்பதுபோலிருந்தது. கோயிலின் அருகே ஒரு யோகி தங்கிய சிறிய குகை. அதற்குள் அவரது கறுப்புவெள்ளை புகைப்படம் உள்ளது. மலைவிளிம்புகளில் தூக்கி நிறுத்தபப்ட்டவை போன்ற மாபெரும் உருளைப்பாறைகள். ஏதோ ஒரு கணத்துக்காக முடிவில்லாமல் காத்து நின்றன அவை.

குன்றுக்குக் கீழே சிகாநாதசுவாமி கோயில் உள்ளது. இது ஒரு குடைவரைக் கோயில். பல்லவர் காலத்தது. முன்னால் நீண்டிருக்கும் கோயில் ஏழு எட்டாம் நூற்றாண்டில் பிறகாலப் பாண்டிய ஆட்சியின் தொடக்க காலத்தில் கட்டப்பட்டது. பாண்டியர்களால் முன்பக்கம் மண்டபங்கள் எடுக்கப்பட்டன. பிரகாரங்களையும் முகப்புகோபுரங்களையும் முன் மண்டபங்களையும் நாயக்கர்கள் கட்டியிருக்கிறார்கள். நாயக்கர் காலகட்டத்தைச் சேர்ந்த பெரிய கருங்கல் சிற்பங்கள் பிரகாரங்களில் நம் கண்களைச் சந்திக்கும் கண்களும் மௌனமாக உச்சரிக்கும் உதடுகளுமாக நின்றன. தென் தமிழ்நாட்டுக் கோயில்களில் காணப்படும் ராஜகுமாரியை தூக்கிச்செல்லும் குறவன், ரதிமன்மதன் சிலைகள் .

குடுமியான்மலை கல்வெட்டுகள் தமிழ் வரலாற்றில் முக்கியமானவை. இங்குதான் தமிழ் இசைமரபை ஆதாரபூர்வமாக அறிந்துகொள்வதற்கான கல்வெட்டுக்குறிப்புகள் கிடைத்தன. ருத்ராச்சார்யா என்பவரது சீடனாக விளங்கிய மன்னன் ஒருவனால் இக்கல்வெட்டு செதுக்கப்பட்டது. தமிழிசையின் ஒருகாலகட்டம் சிலப்பதிகாரத்துடன் முடிகிறது. அதன்பின் களப்பிரர் காலம். அப்போது தமிழகத்தில் இசை பேணப்படவில்லை. பின்னர் ராஜராஜசோழன் காலகட்டத்தில் பண்ணிசை புத்துயிர்கொண்டது. ராஜராஜன் காலத்துக்கு முன்னர் கோயில்களைச் சார்ந்து இசைமரபு எப்படி தாக்குப்பிடித்தது என்பதற்கான ஆதாரம் இக்கல்வெட்டு.

கி.பி 10ம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களில் இவ்வூர் திருநலக்குன்றம் என்றும் 14ம் நூற்றாண்டு கல்வெட்டில் சிகாநல்லூர் என்றும் கடவுளின் பெயர் குடுமியார் என்றும் 17 – 18ம் நூற்றாண்டு கல்வெட்டில் குடுமியான்மலை என்றும் குறிப்பிடப்படுகிறது.

குடுமியான்மலையில் இருந்து மீண்டும் காலடிப்பட்டி வந்து அங்கிருந்து சித்தன்னவாசல் சென்றோம். அன்னவாசல் என்ற இடத்தில் திரும்பி சித்தன்னவாசலுக்கு நேராகச் சாலை உள்ளது. சிற்றன்னவாசல் புதுக்கோட்டைமாவட்டத்திலேயே மிகத்தொன்மையான காலத்தில் மனிதர்கள் வாழ்ந்த இடம். பழங்கற்காலக் கருவிகள் பல இங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சமணார்களின் அறங்களில் அன்னதானம் என்பது முக்கியமானது. அதனாலேயே இவ்வூர்களுக்கு அன்னவாசல்,சித்தன்னவாசல் என்ற பெயர்கள் வந்திருக்கலாம்.

சித்தன்னவாசலில் குகைக்கோயில் ஒன்று உள்ளது. கிமு இரண்டாம் நூற்றாண்டைச்சேர்ந்தது இது. நாங்கள் ஏற்கனவே சொல்லிவைத்திருந்தமையால் அங்கே எங்களுக்காக ஊழியர் காத்திருந்தார். கதவைத்திறந்து உள்ளே அனுமதித்தார். உள்ளே கொண்டு சென்று சுவர்களில் வரையப்பட்டிருந்த ஓவியங்களைக் காட்டினார். பலவகையிலும் அஜந்தா குகைகளை நினைவுபடுத்தியது இக்குகைக்கோயில். உள்ளே சமணதீர்த்தங்காரர்களின் சுவர்புடைப்புச் சிலைகள் கண்மூடி ஊழ்கத்தில் இருந்தன. கோயிலின் சுவர்களிலும் கூரைகளிலும் ஓவியங்கள்

புராதன ஓவியங்களில் காவி,நீலம் இரண்டும் மட்டுமே ரசாயனநிறங்கள். பாறைகளில் இருந்து எடுக்கப்படுபவை. பிற பச்சிலைநிறங்கள். ஆகவே அவை காலப்போக்கில் அழிந்து போகின்றன. கூரை ஓவியத்தில் ஒரு தாமரைத்தடாகம் . சமணமுனிவர் தாமரைமலர்களை கொய்கிறார். யானை ஒன்று நீரில் நிற்கிறது கிறது. முதலைகள் மீன்கள். ஓவியங்களின் ஒற்றைப்பரிமாணத்தன்மை, உடைகள் சுற்றப்பட்டிருக்கும் விதம், மிகச்சிறப்பான அணிகள் கொண்ட மணிமுடிகள் போன்றவை அஜந்தாவை நினைவூட்டின.

கிபி எட்டாம் நூற்றாண்டில் ஸ்ரீமாற ஸ்ரீவல்லப பாண்டிய மன்னனின் ஆட்சிக் காலத்தில், இளம் கௌதமன் என்னும் சமண முனிவரால் முன் மண்டபம் புதுப்பிக்கப்பட்டதாக 9ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் சொல்கின்றன. தூணில் மன்னர், இளங்கௌதமர் ஆகிய இருவருடைய ஓவியங்களும் உள்ளன. குகைக்குள் இருந்த சமணாச்சிற்பங்களில் பார்ஸ்வநாதரை உடனே அடையாளம் கண்டுகொள்ளலாம்– தலைக்குமேல் நாகம் படம் விரித்திருக்கும். அருகே ஆதிநாதர். அருகே ரிஷப அடையாளம்.

கோயிலை விட்டுவந்து சித்தன்னவாசலுக்குள் நுழையும்போதே எதிரே எழுந்துவரும் மாபெரும் பாறைமேல் ஏறிச்சென்றோம். பாறையின் விலாவழியாக கம்பியிடப்பட்ட பாதை ஏறி மறுபக்கச் சரிவை அடைந்தது. அங்கே சமணர் தங்கும் குகைகள். உள்ளே பதிமூன்று படுக்கைகள். அவற்றில் கிமு இரண்டாம்நூற்றாண்டு கல்வெட்டுகள் உள்ளன என்று சொன்னார்கள். ஆனால் நெடுங்காலம் அங்கே வந்த நம் பயணிகளின் காதல்கல்வெட்டுகள்தான் பரவிக்கிடந்தன. வரலாற்றைப் பார்த்ததும் நம் அற்பத்தனம் வெளிவரும் அளவுக்கு வேறெங்கும் நிகழ்வதில்லை.

குளிர்ந்த குகை அருகே ஊற்றுநீர்தேங்கும் இரு சுனைகள். கால்கீழே பிரம்மாண்டமான வெட்டவெளி. அங்கே ஒரு பெரிய குளம். மதுரையைச் சுற்றியிருக்கும் சமணக்குன்றுகளில் இருந்து பார்த்தாலும் கிட்டத்தட்ட இதே காட்சிதான் தெரியும் இப்போதும் நவீன காலகட்டம் அங்கு வந்து சேர்ந்திருக்கவில்லை. ஈராயிரம் வருடம் முன் அங்கே தன் மாணவர்களுடன் அமர்ந்த சமணமுனிவர் கண்ட காட்சி என் கண்முன்னும் விரிவது போல் இருந்தது.

படங்களுக்கு

Kudumiyanmalai

http://templedarshan.blogspot.com/2010/01/story-behind-name-kudumiyanmalai.html

முந்தைய கட்டுரைராஜராஜன், மேலும் கடிதங்கள்
அடுத்த கட்டுரைதஞ்சை தரிசனம் – 2