‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 4

[ 3 ]

அவைநிகழ்வை சௌனகர் சொல்லி முடித்ததும் நெடுநேரம் அமைதி நிலவியது. பெருமூச்சுகளும் மெல்லிய தொண்டைக்கமறல்களும் ஒலித்து அடங்கின. நள்ளிரவாகிவிட்டதை இருளின் ஒலிமாறுபாடே உணர்த்தியது. தௌம்யர் “ஆம், இவ்வண்ணம் நிகழ்ந்தது” என்று தனக்குத்தானே என மெல்லியகுரலில் சொன்னார். “பிறிதொரு காலத்தில் மானுடர் இது நிகழ்ந்ததென நம்ப மறுக்கலாம். இது சூதனின் புனைவு என்றே எண்ணலாம்.”

“இதை ஒவ்வொரு மானுடனும் நம்புவான்” என்று காத்யாயனர் சொன்னார். “ஏனென்றால் ஒவ்வொரு ஆண்மகனும் ஒருமுறையேனும் ஆற்றியதாகவே இது இருக்கும். ஒவ்வொரு பெண்ணும் உள்ளூர அஞ்சுவதாகவே இது உணரப்படும்.” அந்த அவையினர் அனைவருமே அச்சொற்களால் சொடுக்கப்பட்டனர். திகைத்த விழிகளுடன் அவர்கள் காத்யாயனரை நோக்கினர். “அஸ்தினபுரியின் அரசர் அந்த அவையில் பாஞ்சாலத்து அரசியை அடிக்க ஆணையிட்டிருக்கலாம். தன் காலடியில் வீழ்த்த விரும்பியிருக்கலாம். அணிகளைந்து மங்கலம் அழிக்க விரும்பியிருந்தால் அவள் கூந்தலை மழிக்கச் சொல்லியிருக்கலாம். ஆடை களைய ஏன் விழைந்தார்?”

“மாணவர்களே, அணுக்கமானதொன்றை அறிய முயல்வதன் தவிப்புக்கு நிகரான வேறேது நம்மை ஆட்டுவிக்கிறது? அவர் பூண்ட அனைத்தையும் களைந்து நோக்க நம் அகம் தவிக்கிறது. ஆடையையே களைய முடிகிறது. ஆணவத்தைப் பற்றி இழுத்துச் சுருட்டி வீசும் கைகள் நமக்கில்லை” என்றார் காத்யாயனர். “மானுடர் அணிந்துகொள்வதை எல்லாம் அவர்களாலேயே களைய முடியாதென்றிருக்க பிறர் களைவது எங்ஙனம்?” அவர் சொல்வதை புரிந்தும் புரியாமலும் அவர்கள் நோக்கி இருக்க அவர் “அங்கே அவர் களைந்தெறிந்தது தன் ஆடைகளையே. பாவம் மானுடர், ஒவ்வொருமுறையும் அதுவே நிகழ்கிறது” என்றார்.

சௌனகரிடம் திரும்பி “கூறுக, அமைச்சரே! அதன் பின்பு அரண்மனையில் நிகழ்ந்தது என்ன?” என்றார். சௌனகர் தலைவணங்கி “அவை கலைந்து கொந்தளித்துக்கொண்டிருந்ததை கண்டேன். எடைமிக்க தலைகொண்டவர்கள் போல வெளியே சென்றவர்கள் மெல்ல ஓசையிடத் தொடங்கினர். அரசவையில் குடி ஒருவனின் குரலெழுவது முறையல்ல என்றே வாளாவிருந்தேன். ,குடிமூத்தோர் ஒருவர் எழுந்திருந்தால் என் வாளை உருவியிருப்பேன் என்று ஒரு வீரன் சொன்னான். ஆம், முதியவர்கள் அறம் மறந்தனர், இளையோரை அவர்கள் தங்கள் செயலின்மையால் கட்டிப்போட்டனர் என இன்னொருவன் சொன்னான்”.

மிக விரைவிலேயே ஒவ்வொருவரும் அப்பழியை பிறிதொருவர் மேல் சுமத்திவிட்டனர். ஆயிரம் கோணங்களில் ஆராய்ந்து தாங்கள் வெளியேறும் வழியை கண்டுபிடித்தனர். ”இந்த அவைமுன் அன்னையின் கண்ணீர் விழுந்தது. அறிக நகர்மக்களே, கண்ணீர் விழுந்த மாளிகைகளின் அடித்தளம் மட்கத் தொடங்கிவிட்டது!” என்று ஒரு சூதன் பாடினான்.  “ஆம், அழியட்டும் பழிசுமந்த இப்பெருநகரம்!” என அவனுடன் இணைந்து ஓர் இளைஞன் கூவினான். எவனோ ஒருவன் பன்னிருபகடைக்களத்தின் வாயிலில் கட்டப்பட்ட பட்டுப்பாவட்டாவை இழுத்துப் பறித்து சுருட்டி வீசினான். அதைக் கண்டு இன்னும் சிலர் ஓடிச்சென்று அங்கிருந்த கொடிகளை பிடுங்கி வீசலாயினர்.

சற்றுநேரத்தில் அங்கிருந்த இளைஞர்கள் அனைவரும் கொடிகளையும் பட்டுத்திரைகளையும் அணியாடைகளையும் தோரணங்களையும் பிடுங்கி வீசத்தொடங்கினர். படைவீரர்கள் வெறுமனே நோக்கி நின்றனர். வாளாவிருப்பதனூடாக அவர்களும் அதில் பங்குகொண்டனர். அதனூடாக கழுவாய் தேடிக்கொண்ட நிறைவை அடைந்தனர். அவைமுற்றத்தின் பெரிய அணிப்பந்தலின் மூங்கில்தூண்கள் முறியும் ஒலியை கேட்டேன். மரப்பட்டைக்கூரை பிளக்கும் ஒலிகள் எழுந்தன. உறுமியபடி முனகியபடி அது சரிந்து பரந்து விழுந்தது.

வெறிகொண்டவர்கள் போல மக்கள் அதை பிடுங்கி வீசினர். சிம்புகளையும் பட்டைகளையும் தூக்கி மாளிகை மேலும் அரண்மனை முற்றத்திலும் வீசினர். அரசமுத்திரைகள் அனைத்தும் பிடுங்கி வீசப்பட்டன. எங்கோ எவரோ ஒரு காந்தார வீரனை கோலால் அடித்து வீழ்த்தினார்கள். அவன் கூச்சலிட காந்தாரப்படையினர் அவன் உதவிக்கு வந்தனர். ”காந்தாரர்கள்! அவ்விழிமகன்களால் அழிந்தது நம் தொல்நகரம்!” என ஒரு குரல் எழுந்தது. பெருங்கூட்டம் காந்தாரர்களுக்காக திரும்பியது. காந்தாரர்களுக்குரிய வெண்சுதைநிறத்துடனிருந்த அத்தனை வீரர்களும் இழுத்துப் போடப்பட்டு அடிக்கப்பட்டனர். குருதி வழிய பலர் தப்பி ஓடினர். பின்னர் அறிந்தேன் மூவர் கொல்லப்பட்டதாக.

குருதிமணம் அவர்களை வெறிகொள்ளச் செய்தது. பசுங்குருதியை அள்ளி கைகளிலும் முகத்திலும் பூசிக்கொண்ட மக்கள் வெறிநடனமிட்டனர். காந்தாரப்படையினர் ஓடி அரண்மனைகளுக்குள் புகுந்துகொண்டனர். மேற்குக்காவல்நிலை அவர்களின் படையிடமிருந்தமையால் அவர்கள் கூட்டமாக மேற்கே குவிந்து படைக்கலம் ஏந்தினர். காந்தாரத்தின் கொடியுடன் அவர்கள் வாள்களையும் வேல்களையும் தூக்கிக் கூச்சலிட்டபடி அங்கே அணிதிரண்டனர். ஆகவே கூட்டம் கடைவீதி நோக்கி சென்றது. காந்தாரத்து வணிகர்களின் கடைகள் அனைத்தும் உடைத்துச் சூறையாடப்பட்டன. பொருட்களை அள்ளி வீசி வணிகர்களை அடித்து குருதி வழிய தூக்கி வீசினர்.

நகரமே கட்டின்மை நோக்கி சென்றுகொண்டிருந்ததைக் கண்டேன். அரண்மனைமுகப்பில் நின்றபோது தொலைவில் பல இடங்களில் நெருப்புப் புகை எழுந்தது. எண்ணை மணமும் கூலம் எரியும் வாடையும் கலந்தெழுந்தன. வெறிக்கூச்சல்களும் குதிரைகளின் கனைப்பொலியும் சூழ்ந்தன. எக்கணமும் மக்கள் திரண்டு அரண்மனைக்கு எதிராக வந்துவிடக்கூடும் என்று அஞ்சினேன். அரண்மனைக்கோட்டையை மூடி மேலும் காவலிட ஏற்பாடு செய்யவேண்டும் என எண்ணினேன்.

SOLVALAR_KAADU_EPI_04

எங்கள் அரசரையும் இளையோரையும் அரண்மனைக்கு கொண்டுசென்று விட்டுவிட்டு நான் மீண்டும் பன்னிருபகடைக்களத்திற்கே சென்றேன். அரசியை அஸ்தினபுரியின் இளவரசியும் அரசியரும் அழைத்துச் சென்றுவிட்டனர் என்று அறிந்தேன். விதுரர் எங்கு சென்றார் என்று வினவியபோது அவரை பேரரசரின் தூதன் அழைத்ததாக அறிந்தேன். பேரரசரின் மாளிகை நோக்கி சென்றபோது வழியிலேயே அவரைக் கண்டேன். சிற்றமைச்சர் கனகரிடம் ஆணைகளை பிறப்பித்துக்கொண்டு நின்றிருந்தார்.

என்னைக் கண்டதும் சினத்தால் சுருங்கிய முகத்துடன் நோக்கி ”உங்களுக்கு இங்கு என்ன அலுவல் ,இந்திரப்பிரஸ்தத்தின் அமைச்சரே?” என்றார். “நான் அஸ்தினபுரியின் பேரரசரைக் காண விழைகிறேன். இத்தருணத்தில் இந்திரப்பிரஸ்தத்தின் அரசரும் இளையோரும் இங்கு வர முடியாது. ஏதேனும் சொல்வதற்கிருந்தது என்றால் என்னிடமே அவற்றை பேரரசர் சொல்லி அனுப்பலாம்” என்றேன். ”ஆம், அதுவும் நல்லதே, வருக” என்ற விதுரர் என்னையும் உடனழைத்துக்கொண்டு இடைநாழியில் நடந்தார்.

நடக்க நடக்க அவர் சற்று எளிதானதுபோல் தோன்றியது. ”என்னை இந்திரப்பிரஸ்தத்தின் தரப்பு என்று இங்கே குற்றம்சாட்டுபவர் சிலர் உள்ளனர், இத்தருணத்தில் நான் அவ்வண்ணமே பேசவேண்டியிருக்கிறது, எனக்கு வேறு வழியேதும் இல்லை” என்றார். நான் அவரிடம் நகர் பற்றிய என் அச்சங்களை சொன்னேன். அவர் புன்னகைத்து ”அவர்கள் அறியாது ஒரு நாடகத்தையே ஆடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார். ”அவர்கள் மேற்கே செல்லாது வணிகர்களை நோக்கிச் செல்வதற்குமேல் சான்று தேவையில்லை. போதிய அளவு நடித்துவிட்டதை அவர்களே உணரும்போது இல்லம் மீள்வார்கள்” என்றார்.

நான் அவரது களைத்த குரலை கேட்டுக்கொண்டு உடன் நடந்தேன். ”சௌனகரே, இப்போது அவர்களின் உணர்வுகள் எழுந்துகொண்டிருக்கின்றன. படைகளைக்கொண்டு அவர்களை எதிர்கொண்டால் சில உயிர்கள் விழும். உண்மையில் அவர்கள் விழைவதும் அதையே. ஓரிருவர் இறந்தால் அவர்கள் அந்தப் பழியுணர்விலிருந்து விடுபடுவர். அக்கொலைகளையும் அரசுமேல் ஏற்றி வசைபாடி உளம் ஆறுவர்” என்றார் விதுரர். ”அவர்களின் உணர்வுகள் இறங்கத்தொடங்கும்போது பத்து குதிரைவீரர்கள் வேலுடன் தெருவிலிறங்கினால்போதும், அமைதி மீண்டுவிடும். வீரர்கள் வேல்தாழ்த்தி நிற்கும்படி ஆணையிட்டவன் நானே” என்றார்.

நாங்கள் நடந்து புஷ்பகோஷ்டத்தை அடைந்து பேரரசரின் இசையவை நோக்கி சென்றபோது விதுரர் நீள்மூச்சுடன் ”இத்தருணத்தில்தான் விப்ரரின் இழப்பை பெரிதாக உணர்கிறேன். அங்கிருக்கும் என் மூத்தவரிடமல்ல அவர் அருகே குடிகொண்டிருந்த விப்ரரிடம்தான் இதுநாள் வரை நான் பேசிக்கொண்டிருந்ததாக உணர்கிறேன்” என்றார். ”மூத்தவரிடம் என்றுமில்லாத ஊசலாட்டத்தை பார்க்கிறேன். என் இதுநாள்வரையிலான வாழ்க்கையில் நானறிந்த பட்டறிவு ஒன்றுண்டு, ஊசலாடும் எதுவும் எதிர்நிலையிலேயே சென்று அமையும்” என்றார். அச்சொல்லாட்சி என்னை அதிரச்செய்தது. அது மிகையானது என்று என் சித்தம் சொன்னபோதே அது உண்மை என்று என் உள்ளம் உறுதிசெய்தது.

நாங்கள் அரசரின் இசையவை முகப்பை அடைந்தபோதே உள்ளே எவரோ இருப்பதை உணர்ந்தோம். விதுரர் மெல்லிய குரலில் ”எவர்?” என்று கேட்டார். தலைவணங்கிய காவலன் ”பேரரசி காந்தாரி” என்றான். விதுரர் ”நான் வந்துள்ளதாகச் சென்று சொல்” என்றார். நான் தயங்கி ”அவ்வண்ணமெனில் நான் பின்னர் மன்னருக்கு முகம் காட்டுகிறேன், இது தருணமல்ல” என்றேன். ”இல்லை நீங்களும் உடன்வருக” என்றார் விதுரர். ”இது உங்கள் குடிக்குள் நிகழ்வது” என்று நான் சொன்னேன். ”ஆம், ஆகவேதான் நானும் உங்களை அழைக்கிறேன். உணர்வுநிலைகள் எங்கே செல்லுமென என்னால் உய்த்துணர இயலவில்லை. அயலார் ஒருவர் அருகிருப்பது நன்று” என்றார்.

காவலன் உள்ளே சென்ற பின்பு அவரே புன்னகைத்தபடி ”அயலார் ஒருவர் உடனிருக்கையில் என்ன நிகழ்கிறது? நாம் நம்மை அவரது கண்கள் வழியாகவும் நோக்குகிறோம். உணர்வுகளை அடக்குகிறோம். நல்லியல்புகளை பேணிக்கொள்கிறோம்” என்றார். நான் புன்னகை செய்தேன். ”சௌனகரே, நாம் பிறர் கண்களுக்கு மட்டுமே சிறந்தவர்களாக இருக்கமுடியுமா என்ன?” என்றார் விதுரர். நான் சிரித்து ”நமக்கு நல்லவர்களாக இருக்கையில் பிறருக்கு எதிரிகளாகிவிடுவோம் என்றொரு சொல்வழக்கு உண்டு” என்றேன். பின்னர் ”அவ்வண்ணம் இன்று அனைவருக்கும் எதிரி என நின்றிருக்கும் ஒருவரின் அமைச்சன் நான்” என்றேன்.

விதுரர் என்னை நோக்கித் திரும்பி, ”அவ்வண்ணமெனில் உங்கள் அரசர் தம்பியரையும் தேவியையும் வைத்தாடியது பிழையல்ல என்று எண்ணுகிறீர்களா?” என்றார். ”பிழையே” என்று நான் சொன்னேன். ”ஆனால் அந்தச் சூதாட்டத்தில் ஒருகணமேனும் பங்கெடுக்காத எவர் இருந்தார் அந்த அவையில்? ஆடியிருந்தால் அரசர் செய்ததை தானும் செய்திருக்க மாட்டோம் என்று நெஞ்சுக்கு உரைக்கும் துணிவுள்ள எவர் நம்மிடையே உள்ளனர்?” என்றேன். ”நமக்காக நாம் ஆடினோம், நம் விழைவுகளுக்காக. நம் இருளுக்காக. பிறருக்காக ஆடினார் என்பதனாலேயே அவர் நம்மை விட ஒரு படி மேலானவரே. ஆகவேதான் அனைத்துப் பழிகளையும் அவர் தோள்மேல் ஏற்றிவைக்க விழைகிறோம். அதை மிக்க மகிழ்வுடன் ஏற்றுக்கொள்பவர் அவர் என்றும் அறிந்திருக்கிறோம்” என்றேன். விதுரர் ஒன்றும் சொல்லாமல் பெருமூச்சுவிட்டார் என்றார் சௌனகர்.

[ 4 ]

குளிர்ந்த பாசிப்பரப்பு போல கால்களை வாங்கிக்கொண்ட மெத்தைத்தரையில் விதுரருடன் நடந்துசெல்லும்போது சௌனகர் அந்தத் தரையால் என்ன பயன் என்றுதான் எண்ணினார். அது ஓசைகளை குறைத்துவிடுகிறதே ஒழிய இல்லாமலாக்குவதில்லை. காலடிகள் முணுமுணுப்பாக ஒலிக்கின்றன. அமைதியில் முணுமுணுப்புகள் முரசொலி போலவே எழக்கூடும். அவர் நினைத்தது உண்மையென்பதைப்போல திருதராஷ்டிரர் காந்தாரி இருவரும் திரும்பிப்பார்த்தனர்.

தலையைச் சற்று சரித்து காளைபோல உரக்க மூச்சுவிட்ட திருதராஷ்டிரர் “விதுரா, உன்னை இத்தனை நேரமாக எதிர்பார்த்திருந்தேன்…” என்றார். விதுரர் ஒன்றும் சொல்லாமல் அருகே சென்று காந்தாரியை நோக்கி “வணங்குகிறேன் அரசி” என்றார். காந்தாரி கை தூக்கி அவரை வாழ்த்தினார். “என்ன சொல்கிறாய்? என்ன நடந்தது அங்கே?” என்று திருதராஷ்டிரர் தன் பெருங்கைகளை ஒன்றுடன் ஒன்று அறைந்தபடி கூவினார். “தாங்கள் முழுமையாகவே அறிந்திருப்பீர்கள். தாங்கள் அறிந்தவையே நிகழ்ந்தன” என்றார் விதுரர். “நீ சொல்! உன் வாயால் சொல்… மூடா, நீயும் அங்கிருந்தாய். உன் மைந்தர் உன் முன் இழிவடைந்தனர். நீ பார்த்து அமர்ந்திருந்தாய்” என்று திருதராஷ்டிரர் தொண்டைநரம்புகள் புடைக்கக் கூவியபடி விதுரரை அள்ளி இறுக்கி கொல்லப்போகிறவர் போல கைகளை விரித்துச் சூழ்ந்தபடி அணுகினார்.

விதுரர் “ஆம், என் மைந்தர். மைந்தர் வடிவில் நாம் நம் கீழ்மையை காண்கிறோம்” என்றார். “அவன் எப்படி அதை செய்யத் துணிந்தான்? அவனை என் மகன் என்று எண்ணித் தருக்கினேனே… அவன் என் மகனே அல்ல. அவன்…” என்று திருதராஷ்டிரர் கூவியதை இடைமறித்து காந்தாரி கூரியகுரலில் “அவன் உங்கள் மைந்தன். ஆகவேதான் அவ்வாறு செய்தான்” என்றாள். அவர் திகைத்து அசைவிழந்த வாயுடன் உறைந்து பின் மீண்டு நடுங்கும் மென்குரலில் “என்ன சொல்கிறாய்?” என்றார். “இன்று அவளை அவிழ்ந்த ஆடையுடன் என் மருகியர் அழைத்துவந்தனர். அவள் விம்மும் ஒலியைக் கேட்டபோது அது சம்படையின் குரல் என எண்ணினேன்” என்றாள் காந்தாரி.

திருதராஷ்டிரர் புரியாதவர் போல தலையைச் சரித்தபடி நின்றபின் கால் தளர்ந்தவராக திரும்பிச் சென்று அரியணையில் அமர்ந்தார். நடுங்கும் கைகளை ஒன்றன்மேல் ஒன்றென வைத்துக்கொண்டு வலிகொண்ட விலங்கு போல உம்ம் உம்ம் என ஒலியெழுப்பினார். காந்தாரி விதுரரை நோக்கி “அவைநடுவே இழிவு செய்யப்பட்டாள் என் குலக்கொடி. என் மைந்தர்களுக்காக மட்டும் அல்ல, அங்கே இருந்த அத்தனை ஆண்மகன்களுக்காகவும் நாணுகிறேன். அங்கே எழுந்துசென்ற என் குடியின் பெண்கள் அனைவரையும் மாறி மாறி நெஞ்சோடு அணைத்துக்கொண்டு கண்ணீர்விட்டேன்…” என்றாள்.

“என்ன நிகழ்ந்தது என்றால்…” என விதுரர் சொல்லத்தொடங்க “என்ன நிகழ்ந்தது? ஓர் அரசியல்நிகழ்வு, அல்லவா? அதற்கப்பால் உங்களுக்கு அது எவ்வகையிலேனும் ஒரு பொருட்டா?” என அவள் மேலெழாத குரலில் கேட்டாள். விதுரர் ஏதோ சொல்ல வாயசைத்தார். “எழுந்து சென்று உடைவாளை உருவி அவன் கழுத்தில் பாய்ச்சியிருக்கவேண்டும் உங்கள் பிதாமகர். அந்த அவையில் நாக்கை இழுத்து அறுத்து விழுந்திருக்கவேண்டும் நீர். இனி எத்தனை சொற்களில் எத்தனை அறமுரைத்தாலும் அதன் பொருள் என்ன? வென்றது எந்த அரசியலும் அல்ல. வென்றது ஆண் எனும் கீழ்மை. பெற்று முலையூட்டி வளர்த்து மண்ணில் விட்ட அத்தனை அன்னையருக்கும் ஆயிரமாண்டுகாலமாக ஆண்கள் இழைக்கும் கீழ்மறம்…”

அவள் கொதிப்புடன் உதடுகளை கடித்தாள். வெண்முகமும் கழுத்தும் தோள்களும் சிவந்து புண்ணானவை போல் தோன்றின. தன்னை அடக்க அவள் முயலும்தோறும் குருதிவிம்மும் கலமென ஆனாள். நீலநரம்புகள் அசைந்த கழுத்தும் இறுகித் துடித்த கன்னங்களுமாக மறுகணம் வெடிக்கப்போவதுபோல நின்றாள். பின்பு மூச்சின் ஒலியில் “என் அரண்மனைமுற்றத்தில் இது நிகழ்ந்தது. இதன் பெரும்பழியிலிருந்து ஒருகணமும் விலகாதிருக்கட்டும் என் கொடிவழிகள். விண்வாழும் காந்தாரத்துப் பேரன்னையர் இவ்விழிசெயலுக்கு எதை பிழைநிகர் விடுக்கிறார்களோ அனைத்தும் வந்து இங்கு அமையட்டும்!” என்றாள்.

விதுரர் “பேரரசி, தீச்சொல்லிடவேண்டாம்… அவர்கள் உங்கள் மைந்தர்” என்று சொல்லி கைநீட்ட அவள் உரக்க “ஆம், இது தீச்சொல்லேதான். காந்தாரத்துப் பேரன்னையர் சான்றாகுக! ஆரியகௌசிகை ஆற்றங்கரையில் அமர்ந்த ஆறு அன்னையரின் ஆலயத்தின் முன் இப்போது நின்றிருக்கிறது என் உள்ளம். மரு, இருணை, ஃபூர்ணி, காமலை, கிலை, ஆரண்யை… அன்று இவர் கைபற்றி அவர்களுக்கு முன் நின்றபோது செம்முகில்போலச் சுருண்டெழுந்து வந்து மூடி ஆர்ப்பரித்து அன்னையர் சொன்னதென்ன என்று இப்போது புரிகிறது. அன்னையர் முடிவு செய்யட்டும்…” என்றாள்.

“இழிமகளே, என்ன சொல்கிறாய்?” என்று கூவிய திருதராஷ்டிரர் கையை ஓங்கியபடி எழுந்தார். “பெற்ற மைந்தருக்கு தீச்சொல்லிடுகிறாயா? அன்னையா நீ?” காந்தாரி “ஆம், பீலித்தாலத்தால் மங்கலம் அணிந்தவள். பெற்றுப்பெருகிய பேரன்னை. அச்சொல்லால்தான் இதை சொல்கிறேன். அன்னையர் முடிவுசெய்யட்டும்…” என்று சொல்லி அவரை நோக்கி மெல்லிய அசைவொன்றை வைக்க அதை உடலால் உணர்ந்தவர் என பின்னடைந்தார்.

விதுரர் மீண்டும் “அரசி, அவர்கள் உங்கள் மைந்தர்” என்றார். “இல்லை, அவர்கள் இந்தக் குருகுலத்தின் கீழ்க்குருதியினர். காந்தாரத்துப் பேரன்னையின் சிறுமைந்தர் அல்ல” என்றாள். மீண்டும் முன்னால் வந்து “ஆம், அவர்கள் என் கீழ்மையை தங்கள் குருதியெனக் கொண்டவர்கள். அவர்களும் விழியிழந்தவர்களே. போதுமா? எனக்கு நாணில்லை. எங்கும் நான் சொல்தாழ்த்தப் போவதுமில்லை. அவன் என் மைந்தன். அவனே என் கொடிவழியின் முதல்வன். அவன் செய்தவற்றுடன் நானும் உடன் நிற்கிறேன். அவன் சென்றுசேரும் இருளுலகுகளுக்கு நானும் உடன்செல்கிறேன்… இனியென்ன?” என்று திருதராஷ்டிரர் கூச்சலிட்டார்.

வெண்பற்கள் வெறித்து எழ, வளைந்து வளைந்து புருவம் அலைய, முகம் சுளிக்க “இனியென்ன தேவை உனக்கு? செல்… உடனே சென்றுவிடு… அடேய் விதுரா, மூடா, அவளை உடனே இங்கிருந்து செல்லும்படி சொல்… இனி அவள் சொல்லை நான் கேட்கவிரும்பவில்லை” என்றார்.
காந்தாரி பற்களை கடித்துக்கொண்டு “இனி நானும் சொல்வதற்கொன்றுமில்லை. அனைத்தும் முற்றுமுடிவாகிவிட்டன” என்றபின் திரும்பி நடந்தாள். அறையின் மறுஎல்லையில் நின்றிருந்த சத்யசேனையும் சத்யவிரதையும் வந்து அவள் கைகளை பற்றிக்கொண்டனர். ஓசையற்றவர்களாக அவர்கள் விலகிச்சென்றனர்.

திருதராஷ்டிரர் தளர்ந்தவராக மீண்டும் அரியணையில் அமர்ந்தபடி தலையை அசைத்தார். மணமேற்று மூக்கு சுளித்து தலைதிருப்பி “உடனிருப்பவர் யார்? சௌனகரா?” என்றார். “ஆம், அரசே” என்றார் சௌனகர். “அந்தணரே, அறமுணர்ந்து அமைந்த எத்தனை படிவரும் வைதிகரும் அமர்ந்த அவை இது! அத்தனைபேருக்கும் தலைமுறை தலைமுறையாக கொடையளித்து வணங்கியிருக்கிறோமே, உங்கள் சொல்கூடவா எங்கள் குலம் காக்க எழவில்லை?” என்றார் திருதராஷ்டிரர்.

“ஊழ் என்பதன்றி ஒரு சொல்லும் நான் சொல்லத் துணியமாட்டேன்” என்றார் சௌனகர். “ஊழ்தான். வேறேதுமில்லை. எண்ணிப்பார்க்கையில் என் நினைவறிந்த நாள்முதலே ஒவ்வொன்றும் இத்தருணத்தை நோக்கியே அனைத்தையும் நகர்த்திக்கொண்டு வந்திருப்பதை காண்கிறேன்” என்றார் திருதராஷ்டிரர். “எது வரப்போகிறது என்று எண்ணவும் அஞ்சி பின்திரும்பிவிடுகிறேன்.”

கைவிடப்பட்டவர் போல, எவரிடமோ முறையிடுபவர் போல அவர் கைகளைத் தூக்கி முகம் மேலே நோக்க விழிச்சதைகள் உருள உடைந்தகுரலில் சொன்னார் “மானுடர் அறிவதேயில்லை, சொல்லப்படும் ஒவ்வொன்றும் நிகழ்ந்தே தீருமென்று. பேதைகள் போல ஆணையிடுகிறார்கள். வஞ்சம் உரைக்கிறார்கள். சொல்லில் உறங்கும் தெய்வங்களை பேதைகள்போல பித்தர்கள்போல எழுப்பி தங்கள் மேலேயே ஏவிக்கொள்கிறார்கள்.”

மடிந்து அமர்ந்திருந்த அவரது கால்கள் மட்டும் நடுங்கிக்கொண்டிருந்தன. தலையை தன் கைகளால் பற்றியபடி தோள்குறுக்கி அமர்ந்து “சிறியோர் செய்கை செய்தான். அவள் சொன்னது முற்றிலும் உண்மை. எந்தையும் மூதாதையரும் செய்த சிறுமை அது. சுனந்தையின், அம்பையின், அம்பிகையின் கண்ணீர். சிவையின், சம்படையின் துயரம்… நம் மீது அவர்களின் தீச்சொற்கள் மேலும் மேலுமென விழுந்துகொண்டே இருந்தன” என்றார்.

நிமிர்ந்து விதுரரை நோக்கியபோது அவரது தசைக்குழிக் கண்களிலிருந்து நீர் கசிந்து வழிந்தது. “அவர்களிட்ட வஞ்சினங்களைச் சொன்னார்கள், விதுரா. என் மைந்தர்கள் குருதிவழியக்கிடக்கும் படுகளத்தை நான் உள்விழிகளுக்குள் கண்டுவிட்டேன்.” விதுரர் ஒன்றும் சொல்லவில்லை.

அவர் மறுத்து ஏதேனும் சொல்வார் என எண்ணியவர் போல திருதராஷ்டிரர் தொடர்ந்தார் “பெண்ணின் சொல். அது பார்ப்புப்பேய்களைவிட இரக்கமற்றது. ஒருகணமும் விடாது தலைமுறைகள்தோறும் தொடர்வது…” விதுரர் “ஆம்” என்றார். திருதராஷ்டிரர் அதைக்கேட்டு உடல் அதிர தலைதூக்கினார். “நாம் என்ன செய்ய முடியும்? சொல்…” என்றார்.

“நீங்களே இன்னமும் இம்மணிமுடிக்குரியவர். உங்கள் மைந்தர் வென்றவை உட்பட உங்களுக்குரியவையே” என்றார் விதுரர். கைகளை ஓங்கித்தட்டியபடி எழுந்த திருதராஷ்டிரர் “அவ்வண்ணமென்றால் இதோ நான் அவர்கள் இழந்த அனைத்தையும் திருப்பி அளிக்கிறேன். இந்திரப்பிரஸ்தத்தின் அரசனாக நானே என் மைந்தன் தருமனை முடிசூட்டுகிறேன்” என்றார்.

“ஆம் அரசே, தாங்கள் அதை உறுதிபடச் சொன்னால் எவரும் மறுசொல்லெடுக்க இயலாது” என்றார் விதுரர். “அம்முடிவை நீங்கள் எடுக்கையில் இந்திரப்பிரஸ்தத்தின் அமைச்சரும் உடனிருக்கட்டும் என்றே இவரை அழைத்துவந்தேன்.” திருதராஷ்டிரர் “ஆம், அது நன்று. எங்கே ஓலைநாயகம்? இப்போதே திருமுகம் எழுதப்படட்டும்… இது என் சொல். இதை மறுசொல்லெடுத்துப் பேசும் எவரும் என் முடிக்கு எதிரிகள்” என்றார்.

அவர் கைகளைத் தட்ட ஏவலன் எட்டிப்பார்த்தான். “ஓலைநாயகம்…” என்றார் விதுரர். அவன் தலைவணங்கி வெளியே சென்றான். சௌனகர் “ஆனால் கொடையென அரசைப்பெறுதல் என்பது…” எனத் தொடங்க “அந்தணரே, இது கொடை அல்ல. நான் பாண்டவர்களின் தந்தை” என்றார் திருதராஷ்டிரர். “ஆம்” என்று சௌனகர் தலைவணங்கினார்.

முகம் மலர கைகளை விரித்தபடி “அவ்வளவுதான், முடிந்துவிட்டது. நான் துரியோதனனை அழைக்கிறேன். அவன் என் சொற்களை தட்டமாட்டான். அவன் ஆற்றிய பெரும்பிழையை தருமன் பொறுத்தருள்வான் என்பதிலும் எனக்கு ஐயமே இல்லை… நானே சென்று பாஞ்சாலத்து அரசியை பார்க்கிறேன். அவள் காலடியில் என் தலையை வைத்துப் பணிந்து இரக்கிறேன். இம்முதியவன் அவள் தந்தைக்கு நிகரானவன் என்கிறேன். என் மைந்தர் ஆற்றிய பெரும்பழிக்காக அவள் என் குடியை பொறுத்தருள்க! அதனால் அவளுக்குப் பெருமையே மிகும்… இந்நாள்வரை மண்ணின் அளப்பரிய பொறையால்தான் இங்கே மானுடம் வாழ்கிறது. பெண் பொறுத்தாலொழிய குடியில்லை என்று அவளும் அறிந்திருப்பாள்…” என்றார்.

மீண்டும் அரியணையில் அமர்ந்து இரு கைப்பிடிகளிலும் கையால் அடித்தபடி அவர் சிரித்தார். “ஆம், நான் உறுதியாகவே அறிகிறேன். அனைத்தும் சீரடைந்துவிடும். இதைவிடக் கீழான செயல்களிலிருந்து தன் மேன்மையைத் திரட்டி மீள என் மைந்தனாலும் இயன்றிருக்கிறது. அனைத்தையும்விட நான் என் முதல்மைந்தன் தருமனை அறிவேன். அப்பேரறத்தான் என் இளையோனின் வடிவம். அவனில் குடிகொண்டிருக்கும் பாண்டுவிடம் கோருகிறேன். உன் மைந்தரை பொறுத்தருள்க என்று. அவன் ஒருபோதும் தட்டியதில்லை…”

அவர் எழுந்து கையை வீசி “என்ன செய்கிறார்கள்? ஓலைநாயகங்கள் எங்கே?” என்றார். விதுரர் “வந்துகொண்டிருக்கிறார்கள், அரசே” என்றார். “விரைந்து வரச்சொல்… இன்று மாலையே ஆணை நகர்மன்றுகளில் முழங்கியாகவேண்டும்.” விதுரர் பெருமூச்சு விட்டார்.

“அனைத்தும் சீரடைந்தபின் சென்று காந்தாரியை காண்கிறேன். அவள் என்னிடம் இன்றுபோல் ஒருநாளும் பேசியதில்லை… அவளே அதன்பொருட்டு வருந்துவாள். அவளிடம் இதைச் சொன்னால் கண்ணீர் விடுவாள். அந்தக் கண்ணீரை நான் என் கைகளால் தொடவேண்டும்… ஓலைநாயகங்கள் வருகிறார்களா இல்லையா?” திருதராஷ்டிரர் வாயிலை நோக்கித் திரும்பி “மூடர்கள், வேண்டிய நேரத்தில்தான் மறைவார்கள்… இன்னும் ஒருகணத்தில் அவர்கள் இங்கில்லை என்றால்…” என்றார்.

காலடி ஓசை கேட்க சௌனகர் திரும்பி நோக்கினார். உதவியாளனுடன் ஓலைநாயகம் மெல்லிய காலடிவைத்து ஓடிவந்தார். “மூடா, அழைத்தால் வராமல் அங்கே என்ன செய்கிறாய்? ஓலைகளை எடு… எழுது! இது என் ஆணை” என்றார் திருதராஷ்டிரர்.

முந்தைய கட்டுரைகபாலிக்காய்ச்சல்
அடுத்த கட்டுரைகபாலிக்காய்ச்சல் -கடிதங்கள்