‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 3

இரண்டாம் காடு : சுனகம்

[ 1 ]

இமயத்தின் சரிவில் சௌனி என்னும் பெயர்கொண்ட சிற்றாற்றின் இரு கரைகளிலும் செறிந்திருந்த அடர்காடு சுனகவனம் என்று அழைக்கப்பட்டது. ஒருகாலத்தில் அங்கே மதமெழுந்த பெருங்கோட்டுக் களிறுகளைக்கூட படைசூழ்கை அமைத்து தாக்கி கொன்றுண்ணும் காட்டுநாய்கள் குலங்கள் குலங்களாகச் செறிந்திருந்தன. தேர்ந்த வேட்டைக்காரர்களும் அதற்குள் செல்ல அஞ்சினர்.  பகலிலும் இரவிலும் அக்காடே நாய் என குரைத்துக்கொண்டிருந்தமையால் அப்பெயர் பெற்றது.

கோசல மன்னன் ருருவுக்கும் அரசி பிரமத்வரைக்கும் மைந்தனாகப் பிறந்த க்ருத்ஸமதன் என்னும் இளவரசன் வேதமுனிவனாகும் ஊழ்நெறி கொண்டவன் என்றனர் நிமித்திகர். எனவே அவனை பிறந்த நாள்முதல் நால்வேதத்தின் ஒருசொல்லும் செவியில் விழாது வளர்த்தார் ருரு மன்னர். ஐம்புலனுக்கும் இனியவை மட்டுமே அவனுக்களிக்கப்பட்டன. விழைவன அனைத்தும் அருகணைந்தன.

புலன்கள் பற்றி எரியும் அணையா விறகு என க்ருத்ஸமதர் அரண்மனையில் பதினெட்டு வயதுவரை வாழ்ந்தார். அழகிய இளவரசியர் இருவர் அவருக்கு மனைவியாயினர். பொன்னாலான அரண்மனையில் மென்மயிர் மஞ்சங்களில் அவர்களுடன் காதலாடினார். அணிபூண்டார். ஆடையணிந்தார். இசைகேட்டார். இனியவற்றை உண்டார். இளமைந்தர் இருவருக்கு தந்தையானார்.

ஆயினும் ஏதோ எஞ்சியிருந்தது. தன் அமைச்சரிடம் “மானுடர் புவியில் இதற்கப்பாலும் அடைவதற்கு என ஏதும் உண்டா, அமைச்சரே?” என்றார். அமைச்சர் “புவியில் அடைவதற்கு என பிறிதொன்றுமில்லை” என்றார். “புவிக்கு அப்பால்?” என்று கேட்டார். “அதை எவர் அறியமுடியும்?” என்றார் அமைச்சர்.

ஒவ்வொருநாளும் க்ருத்ஸமதரின் அமைதியின்மை பெருகிவந்தது. வழிதவறி அலையும் பாலைநிலத்தில் எழுந்த விடாயை எத்தனை முறை எண்ணம் மாற்றினாலும், எவ்வளவு சொல் அள்ளி மூடினாலும் இல்லையென்றாக்கிவிட இயலாது என்று உணரலானார். “நான் விழைவது எது என்று மட்டும் அறிந்தேன் என்றால் போதும், இங்கிருந்து அக்கணமே கிளம்பிவிடுவேன்” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார்.

ஒருநாள் நள்ளிரவில் விழித்துக்கொண்டபோது தன் கனவுக்குள் புகுந்து ஒலித்த ஒற்றைச் சொல்லை நினைவுகூர்ந்தார். இருண்ட ஆழத்தில் எதிரொலித்தொடரின் ஆயிரமாவது அலைபோல மங்கி ஓய்ந்துகொண்டிருந்த அதை மீட்டி மீட்டி மேலெடுத்தார். அது ஒரு வினா என்று கண்டார். பொருளெனத் திரளாத சொல். அந்த வினாவை மீண்டும் மீண்டும் தன்னுள் கேட்டபடி அமர்ந்திருக்கையில் அப்பால் தோட்டத்தில் அதை பேரொலியென கேட்டார்.

உடலதிர எழுந்துசென்று சாளரத்தருகே நின்று நோக்கினார். அது ஒரு கிழட்டு நாய். பின்னிலவைக்கண்டு ஒரு பாறைமேல் ஏறி நின்று, மூக்கு கூர்ந்த முகத்தை மேல் நோக்கி நீட்டி, வாலை கால்கவையில் செருகி அது ஊளையிட்டுக்கொண்டிருந்தது. அதன் விழிகளை அங்கிருந்தே காணமுடிந்தது. அதிலிருந்த களிப்பையும் பித்தையும் கண்டு அவர் நடுங்கினார்.

க்ருத்ஸமதர் அன்று விடிவதற்குள்ளாகவே தன் இரு துணைவியரையும் கால்களைத் தொட்டு சென்னிசூடி வணங்கிவிட்டு கிளம்பினார். தன்னந்தனியாக நகர்த்தெருவில் நடந்து கோட்டையை விட்டு அகன்றார். மரவுரி அணிந்து, இரந்துண்டு, நாட்டை நடந்து நீங்கினார். பன்னிரு நாடுகளைக் கடந்து அவர் இமயமலைக்காட்டை வந்தடைந்தார்.

அவருக்கென அமைக்கப்பட்டிருந்த இடம் சுனகம். அவர் அக்காட்டின் எல்லையென அமைந்த சௌனி ஆற்றின் கரையை வந்தடைந்து நீர் அள்ளிப் பருகிக்கொண்டிருந்தபோது அக்காடு தன்னுள் எழுந்த வினாவை ஓங்கி ஒலித்துக்கொண்டிருப்பதை கேட்டார். மரவுரியை களைந்துவிட்டு அக்காட்டுக்குள் நுழைந்து உள்ளே சென்றார்.

3

சினந்த விழிகளுடன் பெருங்குரலில் குரைத்தபடி அவரை நோக்கி வந்தன நாய்கள். அவர் தன் இரு கால்களிலும் கைகளை ஊன்றி முன்னால் குனிந்து உரத்தகுரலில் தன் வினாவை எழுப்பினார். முன்நடத்தி வந்த கடுவன் திகைத்து, பின் மெல்ல வால்தாழ்த்தி, முகம் மண்ணோடு சேர்த்து முனகியது. அத்தனை நாய்களும் செவிமடித்து, வால்தாழ்த்தி அவருக்கு முன் மண்டியிட்டன.

சுனகத்தில் நுழைந்து தன் குடிலை அமைத்த முதல் முனிவரை பின்னர் அவரை அறிந்தவர்கள் சுனகர் என்றழைத்தனர். நாய்கள் அவரை தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டன. புழுதி அணிந்த வெற்றுடலில் சடைமுடி திகழ அவர் செல்லும்போது அவை பணிந்த ஏவலர் படை போல வால் தூக்கி, செவி மடித்து, கூர்முகம் நீட்டி உடன் சென்றன. அவரது ஓலைக்குடிலுக்கு வெளியே எந்நேரமும் அவை காவல் நின்றன. சிறு ஓசை கேட்டாலும் செவிகூர்ந்து மூங்கில் உரசும் ஒலியில் உறுமியபடி எழுந்து ஏன் என்று வினவின.

அக்காட்டிலிருந்து நாய்கள் சொல்சொல்லெனத் திரட்டி வைத்திருந்த வேதத்தை சுனகர் பெற்றுக்கொண்டார். நாய்வேதத்திலிருந்து மானுடவேதத்தை அவர் மீட்டிப்பிரித்தெடுத்தார். வேதமென்பது அனைத்தையும் பற்றவைக்கும் வல்லமை கொண்ட சொல் மட்டுமே என்று அவர் அறிந்தார். சொல் எரியும் ஒளியில் கண்டடைவதெல்லாம் வேதப்பொருளே என்றார். அவர் அறிந்தது தெளிந்ததும் அதை பகிர மாணவன் தேடிவந்தான்.

தனித்து பசித்து தேடி அலைந்து தன்னிடம் வந்து சேர்ந்த இளமாணவனை சுனகர் தன் மைந்தனாகவும் நீர்தொட்டு ஏற்றுக்கொண்டார். அவரிடமிருந்து வேதங்களை சொல்லென்றும் பொருளென்றும் அவர் கற்றறிந்தார். சௌனகர் என்று அவர் பின்னாளில் வேதமெய்ப்பொருள் நவின்ற பெரும்படிவராக அறியப்படலானார்.

வேதப்பொருள் அமைத்து சௌனகர் அமைத்த முறைமை சௌனகமரபு என்றாயிற்று. அவரது நெறிகளும் விளக்கங்களும் பிராமணங்களாகவும் ஆரண்யகங்களாகவும் அவரது மாணவர்களால் அமைக்கப்பட்டன. அவர் சொல்லி மாணவர் எழுதிய நூல்களாகிய ரிக்வேத அனுக்ரமணி, ரிக் பிரதிசாக்யம் என்பவை பன்னிரு வேத கல்விநிலைகளில் பயிலப்பட்டன.

சௌனகரின் மாணவர் ஆஸ்வலாயனரின் காலகட்டத்தில் சௌனக குருமுறை பன்னிரு கிளைகளாக பரவியது.  வேதப்பொருளாயும் கல்விநிலைகளில் சௌனகமே முதன்மையானதும் முந்தையதும் என்று கொள்ளப்பட்டது. அரசகுடிப்பிறந்த உக்ரவசு ஆஸ்வலாயனரின் மாணவராக ஆகி காத்யாயனர் என்னும் பெயர் கொண்டார். தர்மவ்ருத்தர், சதஹோத்ரர், சௌனகர், காத்யாயனர், ஆஸ்வலாயனர், சுனகர், சுபோத்யர், சுசரிதர், தர்மஹோத்ரர்  என அந்த ஆசிரியர்நிரை நீண்டது.

[ 2 ] 

மாலைவெயில் சிவக்கத்தொடங்கிய நேரத்தில்தான் தருமனும் திரௌபதியும் தம்பியரும் சௌனகக் காட்டின் எல்லைக்குள் நுழைந்தனர். அவர்களுடன் அமைச்சர் சௌனகரும் தலைமை வைதிகர் தௌம்யரும் பன்னிரு ஏவலரும் பன்னிரு படைவீரர்களும் உடன்வந்தனர். அவர்கள் காட்டை நெருங்கியபோதே நாய்களின் ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது. குரைக்கும்  காடு என அதை அவர்கள் முன்னரே அறிந்திருந்தனர்.

சௌனகத்தின் எல்லையென அமைந்த  நீலிமையின் கரையில் முதன்மை மாணவர் பிரதீபர் பன்னிருதுணைவருடன் அவர்களுக்காக காத்துநின்றிருந்தார். அவரைச் சூழ்ந்து நூறு நாய்கள் நிமிர்ந்த தலையுடன், ஒலி கேட்டு கோட்டி முன் கவித்த செவிகளும், ஈரமூக்கும், நீட்டிய வாலுமாக நின்றன. பாண்டவர்கள் எல்லை கடந்ததும் முதல்நாய் மெல்ல முனக மற்ற நாய்கள் உரத்த குரலில் முகமன் உரைத்தன.

நாய்கள் முன்னால் விரைந்தோட பிரதீபரும் பிறரும் பாண்டவர்களை நோக்கி சென்றனர். தலைமைநாய் தரையில் மூக்கு தொடப் பணிந்து தருமனை வரவேற்றது. ஐந்து கான்மங்கலங்கள் கொண்ட மரத்தாலத்தை காட்டி முகமன் உரைத்து பிரதீபர் இந்திரப்பிரஸ்தத்தின் அரசரை சௌனகத்திற்குள் வரவேற்றார். வேதம் முழங்க அவரை வழிகாட்டி அழைத்துச்சென்றார். நாய்கள் சூழ்ந்து வர அவர்கள் சௌனகக் காட்டுக்குள் சென்றனர்.

சிவந்த கொடிபோல வளைந்து பசும்புல்வெளியினூடாகச் சென்ற ஒற்றையடிப்பாதையில் தருமன் தலைகுனிந்து நடந்தார். அவருக்குப் பின்னால் மரவுரியாடையால் முகம் மறைத்து எவர் விழிகளையும் நோக்காதவளாக திரௌபதி  நடந்தாள். நிமிர்ந்த தலையுடன் பெருங்கைகளை வீசியபடி வந்த பீமன் இருபக்கமும் அடர்ந்திருந்த மரக்கூட்டங்களின்மேல் கூடணையும் ஒலியெழுப்பி பறந்து அமைந்து எழுந்துகொண்டிருந்த பறவைக்கூட்டங்களை நோக்கி மெல்ல முகம் மலர்ந்தான்.

உளம் எழுந்து அங்கிலாதவனாக உணர்ந்தபோது அவன் உடல் நெகிழ்ந்து தோள்களில் மெல்லிய துள்ளல் தோன்றியது. எக்கணமும் குரங்குபோலப் பாய்ந்து மரக்கிளைகளில் தொற்றி அவன் மேலேறக்கூடும் என்று எண்ணிய அர்ஜுனன் புன்னகையுடன் திரும்பி இளையோரை பார்த்தான். அவன் நோக்கிலேயே எண்ணத்தைப் புரிந்துகொண்ட அவர்கள் இதழ்விரிய புன்னகைசெய்தனர்.

சௌனக வேதமையம் நீலிமை சிறு ஊற்றெனத் தோன்றும் மலையடிவாரத்தில் இருந்தது. முந்நூற்றெட்டு மாணவர்களும் நாற்பத்தாறு ஆசிரியர்களும் கொண்ட அந்தத் தொன்மையான கல்விச்சாலையின் மையக்குடில் புல்செறிந்த சிறு குன்றென அந்தியொளியில் பொன்னிறத்தில் எழுந்து நின்றது. அதன் பின்புறம் பிறைவடிவில் அறுபது மாணாக்கர்குடில்கள் சூழ்ந்திருந்தன.

பெருங்குடிலுக்கு முன்புறம் வேள்விமுற்றமும் அதற்கு அப்பால் நீள்சதுர வடிவான வேள்விச்சாலையும் இருந்தன. மாணவர்குடில்களுக்குப் பின்னாலிருந்த குறுங்காட்டுக்குள் ஆநிலைகள் அமைந்திருந்தன. காட்டுமரங்களை முள்மூங்கில்களால் கட்டி இணைத்து ஆநிலைகளைச் சுற்றி வேலியமைத்திருந்தனர். நான்கு மூலைகளிலும் பெருமரங்களின் மேல் ஆநிரைகாக்கும் ஏறுமாடங்களில் முரசுகளுடன் இளமாணவர் அமர்ந்திருந்தனர்.

அவர்களின் வருகையை காட்டுப்பறவைகள் தொலைவிலேயே அறிவித்தன. அவர்களுக்கு முன்னால் மரக்கிளைகளில் பாய்ந்து சென்ற கருங்குரங்குக் கூட்டம் கட்டியம் உரைத்தது. அவர்கள் மூங்கில்வேலியைக் கடந்ததும் முரசுகள் முழங்கத்தொடங்கின. கல்விநிலையின் தலைவராக அமைந்த பன்னிரண்டாவது காத்யாயனர் தன் முதன்மை மாணவர் எழுவர் தொடர மையக்குடிலில் இருந்து இறங்கி வேள்விமுற்றத்தில் நின்று அவர்களை எதிர்கொண்டார்.

வேதமங்கலத்துடன் கல்விநிலைக்குள் புகுந்த தருமன் குனிந்து அந்த மண்ணைத்தொட்டு தன் சென்னியில் அணிந்து வணங்கினார். கூப்பிய கைகளுடன் அவர்கள் நடந்துசென்று மகாசௌனகரான காத்யாயனரை அணுகி அவர் கால்களைத் தொட்டு வணங்கினர். “வேந்தனென புவியாளுக! அறம் புரந்து விண் புகுக! குடிவளர்ந்து காலத்தை வெல்க!” என்று காத்யாயனர் தருமனை வாழ்த்தினார்.

விழிமணிகள் என கூழாங்கற்கள் பரவிய சரிவில் சிற்றலைகளில் அந்தியொளி அலைய ஒழுகிய நீலிமையில் இறங்கி அவர்கள் உடல்தூய்மை செய்தனர். அவர்களை அடுமனைக் குடிலுக்குள் அழைத்துச்சென்று மென்மரத்தாலான மணைகளில் அமரச்செய்தனர். அனலில் சுட்ட கிழங்கும், அப்பங்களும், தேன் கலந்த இன்னீரும் அளித்தனர்.

அவர்கள் உணவுண்டுகொண்டிருக்கையில் வெளியே அந்திப்பொழுதின் அனல்புரத்தலுக்கான அழைப்பு எழுந்தது. தருமன் எழுந்து சிறுசாளரத்தினூடாக மரவுரி அணிந்த இளமாணவர்கள் கைகளில் விறகும் தர்ப்பையும் மலர்களும் தேன்சிமிழ்களும் பாற்குடங்களும் கொண்டு வேள்விச்சாலைக்கு செல்வதை நோக்கி நின்றார்.

வேதம் முழங்கத்தொடங்கியபோது உடன் வேள்விச்சாலைக்கு சுற்றும் கூடியிருந்த பல்லாயிரம் நாய்களும் பின்னங்கால்களில் அமர்ந்து முகம் தூக்கி அதே ஒலியை எழுப்பின. மானுடக்குரல்களுடன் நாய்க்குரல்களும் பழுதற இணைந்த வேதம் வானின் அலையென எழுந்து பரவியது. இளநீலப்புகை எழுந்து ஈச்சைமரக்கூரைமேல் தயங்கிப்பரவியது. அறியாது கைகளைக் கூப்பினார். அவர் விழிகளிலிருந்து கண்ணீர் வழியத்தொடங்கியது.

வேள்விமுடித்து காத்யாயனர் மையக்குடிலில் வந்து அமர்ந்தார். சூழ்ந்திருந்த குடில்கள் அனைத்திலும் விளக்குகள் எரிய அப்பகுதி விண்மீன்பரப்பென ஆயிற்று. ஆநிலைகளைச் சுற்றி மரங்களில் கட்டப்பட்ட பந்தங்களில் அரக்கும் எண்ணையும் உண்ட சுடர் எழுந்தாடியது. வானிலிருந்து பொழிந்த பனி செவ்வொளியை பொடிபோலச் சூடி இளம்பட்டுத் திரைபோல அசைந்தது.

ஐந்து இளமாணாக்கர்கள் நெய்விளக்குகளை ஒவ்வொன்றாக சுடர்சூடச்செய்தனர். இதழ் எழுந்த அகல்களின் ஒளியில் பொன்மூங்கில் தூண்களின் வளைவுகளும் சுடர்கொண்டன. நிழல்கள் எழுந்து நாகங்களாகி கூரைமேல் வளைந்து படம் எடுத்தன. வட்டவடிவமான மையக்குடிலுக்குள் மையத்தில் மங்கலப்பொருட்கள் வைக்கப்பட்ட மரத்தாலத்தில் ஏழு திரியிடப்பட்ட நிலைவிளக்கு எரிந்தது.

இருபக்கமும் ஐந்துசுடர் எரிந்த கல்விளக்குகள் நடுவே உயர்ந்த மரப்பீடத்திலிட்ட புலித்தோல் இருக்கையில் காத்யாயனர் அமர்ந்தார். தருமனின் இருபக்கமும் பீமனும் அர்ஜுனனும் அமர்ந்தனர். பின்னால் திரௌபதி அவர் நிழலில் தன்னை முழுமையாக மறைத்துக்கொண்டு அமர்ந்தாள். நகுலனும் சகதேவனும் சுவர் அருகே அமர்ந்தனர். மாணவர்கள் ஒவ்வொருவராக மரவுரி அசையும் ஒலிமட்டுமே கேட்க மெல்ல வந்து அவர்களுக்குரிய புல்லிருக்கைகளில் அமர்ந்தனர். அவர்களின் உடலின் வெம்மை காற்றில் நிறைந்தது.

தேன்கலந்த இன்னீரும் கிழங்கும் அவர்களுக்கு அளிக்கப்பட்டன. அமைச்சர் சௌனகர் காத்யாயனரை வணங்கி “முதன்மை ஆசிரியரே, அஸ்தினபுரியில் நிகழ்ந்தவற்றை தாங்களும் சற்று அறிந்திருப்பீர்கள். நகர்நீங்கி இவர்கள் கானேக முற்பட்டபோது என் ஆசிரியர் குடிகொள்ளும் தொன்மையான சௌனகமே என் உள்ளத்தில் எழுந்தது. நாடும் புகழும் இழந்து துயர்கொண்டு வந்திருக்கும் அரசருக்குரிய நன்மொழிகளை இங்கே பெறமுடியும் என்று அழைத்துவந்தேன்” என்றார். “தொல்புகழ் சௌனகரின் மண்ணை சென்னிசூடும் பேறு பெற்றேன். தங்கள் மொழிகளை உள்ளம் சூட விழைகிறேன்” என்றார் தருமன்.

தௌம்யர் “இதுவும் நல்லூழே என்று நான் அரசரிடம் சொன்னேன். கானகங்களில் மெய்சொற்கள் நூறுமேனி தளிர்க்கும் காலம் இது. ஒவ்வொரு கல்விநிலையிலும் சென்று அறம் கற்று உளம்தேர்ந்து மீண்டபின்னரே அரசர் விண்ணவர் போற்ற பாரதவர்ஷத்தை முழுதாளமுடியும் என்று மூதாதையர் எண்ணுகிறார்கள் போலும்” என்றார். “வேதம் வளர்ந்த கானகங்களில் சௌனகம் மூத்ததும் முதன்மையானதுமாகும். காலத்தை அறியாத வடக்குமலை உச்சிகளை போல இங்கே மாறாது வாழ்கிறது வேதமெய்ப்பொருள் என்று அறிந்திருக்கிறேன். அது எங்கள் அரசருக்கு கைகூடுக!”

காத்யாயனர் புன்னகையுடன் “ஊழின் வழிகளைப்பற்றி ஒருபோதும் உள்ளி உள்ளிச் சொல்லாடலாகாது என்பதே மூதாதையர் கூற்று” என்றார். “அங்கு நிகழ்ந்தவை வேறுமுறையில் நிகழமுடியாதவை என்று உணரும் அடக்கம் இருந்தால் மட்டுமே அவை அளித்த துயரத்தை கடக்கமுடியும். ஒரு சிறு இறகு காற்றில் பறந்தலைவதை காணுங்கள். அது தேரும் திசையும் சென்றமரும் இடமும் முடிவிலா விசும்பால் முடிவுசெய்யப்படுபவை என்று அறிவீர்களா? பெருங்கடல்களை ஊதிப் பறக்கவைக்கும் வெறுமைப்பெருக்கே அந்தச் சிறு தூவலையும் அலைக்கழிக்கின்றது என்றால் வியப்பு கொள்ளாதிருப்பீர்களா? ஆமென்றால் மட்டுமே துயரை கடக்க முடியும் என்றறிக!”

“அரசே, இப்புவியில் கோரப்படாத எதுவும் அளிக்கப்படுவதில்லை. விழையப்படாத எதுவும் அணுகுவதுமில்லை. இன்பங்களையே மானுட உள்ளம் கோருகிறது என்றும், நன்மையையே அது விழைகிறது என்றும் எண்ணுவதுபோல் மடமை பிறிதில்லை. மானுட உள்ளம் மகிழ்ச்சி எனும் ஆழத்தால் ஆனது. ஆனால் ஆணவமெனும் அலைகளால் மூடப்பட்டுள்ளது. முனிவராயினும் சான்றோராயினும் மானுடர் கோருவது மகிழ்ச்சியை அல்ல, ஆணவநிறைவை மட்டுமே. அவர்கள் தாமறியாது விழைவது தருக்கி எழுந்து நிற்பதைத்தான். ஒவ்வொரு கணமும் உங்களுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் சொற்பெருக்கை நோக்குக! அது வேண்டுவதுதான் என்ன? வென்று தருக்க, எழுந்து ஓங்க, நிகரின்றி நிற்க வெவ்வேறு களங்கள் மட்டுமே அல்லவா?”

“ஆகவேதான் மானுடர் துயரங்களையும் தீமைகளையும் நாடுகிறார்கள். தோள்வல்லமை கொண்ட சூதன் அடங்காது திமிறும் புரவியையே நாடுகிறான். துடுப்புதேர்ந்த குகன் புயல்வரவேண்டும் என்று கோருகிறான். சொல்லறிந்த பாணன் பொருட்சிக்கல்கொண்ட பாடலை விரும்புகிறான்” என்று காத்யாயனர் சொன்னார். “யுதிஷ்டிரரே, நீங்கள் உள்ளாழத்தில் நாடியதையே அடைந்தீர்கள்.  அரசி திரௌபதி அவள் கோரியதையே பெற்றாள். துயரும் இழிவும் வந்துற்ற அந்த தீத்தருணங்களில் உங்களுக்குள் வாழும் அறியாத்தெய்வமொன்று உவகைகொண்டது அல்லவா? அனைத்தும் நிகழ்ந்தடங்கிய பின்னர் நீங்கள் அறிந்தது ஆழ்ந்த அமைதியைத்தான் அல்லவா?”

“என்றாவது எண்ணியிருக்கிறீர்களா, உவகைப்பெருக்கிற்குப் பின் ஏன் உள்ளம் நிறைவிலாது ஏங்குகிறது என்று? துயர் முற்றிக் கனிந்தபின் ஏன் உள்ளம் அடங்கி அலையழிந்ததாகிறது என்று? எந்த தெய்வங்களின் சூதாட்டக் களம் மானுட உள்ளம்?” காத்யாயனர் கேட்டார். தலைகுனிந்து தருமன் பெருமூச்சு விட்டார். “நன்று, இதோ இழப்பும் இழிவும் மானுடவாழ்க்கையை நிறைவுகொள்ளச் செய்கின்றன. தேனை இனிப்பாக்குவது நாவிலிருக்கும் எச்சிலின் இயல்பான கசப்பே. இதோ, நீங்கள் தேடிச்செல்லும் களங்கள் திறந்திருக்கின்றன. வென்று மேலெழுக! ஆணவம் நிறைந்து அமைக!”

அவை ஆழ்ந்த அமைதியில் இருந்தது. வெளியே ஏதோ பறவையின் குக்குறுகல் ஒலி கேட்டது. மிகத்தொலைவிலென ஆநிலையில் நின்றிருந்த பசுக்களின் குளம்பு மிதிபடுவதும் காதுகள் அடிபடுவதும் கேட்டன. தருமன் மீண்டும் ஒரு பெருமூச்சு விட்டு மெல்ல அசைந்து விழிதூக்காது “நான் ஒரு சொல்லையும் மறுக்கமாட்டேன், ஆசிரியரே” என்றார். “அவையில் அனைத்தும் நிகழ்ந்து முடிந்தபோது சீழ்தேங்கி வலித்த உறுப்பொன்றை வெட்டி வீசிய நிம்மதியையே அடைந்தேன். அவைநின்ற அத்தனைபேராலும் வெறுக்கப்பட்டபோதும் என் உடன்குருதியினர் வசைச்சொல் கூவிப் பழித்தபோதும் ஆம் ஆம் என்று என் அகம் நின்று ததும்பியது. இன்னும் துயர் வந்து உறுக! இன்னமும் சிறுமை வந்து சேர்க! மேலும் மேலும் இழிவுகொண்டு நான் சிறுத்து நிலம்படிய விழைந்தேன்.”

“அது ஓர் ஈடுவைப்பு போல. ஒரு கழுவாய் போல” என்று தருமன் சொன்னார். “அறச்செல்வன் என்று என்னைக் கொண்டாடிய அவையினர் என் சரிவைக் கண்டு மகிழ்ந்து நிறைவதை கண்டேன். மறுஎண்ணமற்ற பணிவுடன் என்னை தந்தையென வணங்கிய என் இளையோர் சீறும் சொல்லுடன் எதிர் எழுந்து நிற்பதைக் கண்டேன். அவர்களுக்குள் இருந்ததுதான் அதுவும். அந்த சிறுநஞ்சும் உமிழப்பட்டு அவர்கள் விடுதலை அடைந்தனர். இனி அவர்கள் என்னை முழுமையாக மதிக்கவும் உளம்கரைந்து விரும்பவும் எந்தத் தடையும் இல்லை.”

புன்னகையுடன் அவர் தொடர்ந்தார் “அத்துடன் அவையெல்லாம் என் தகுதிக்கு அளிக்கப்படும் இயல்பான மதிப்புகள் என்னும் மயக்கத்திலிருந்து நானும் விடுதலை பெற்றேன். இவையனைத்தும் சூழலும் தருணமும் அமைக்கும் உளநிலைகள் மட்டுமே. இவற்றுக்கு அப்பால் எங்கோ மானுட உள்ளம் இயல்பாக தன்னை நிகழ்த்திக் கொள்கிறது. நிகழ்ந்தபின் நோக்கி வியக்கிறது.” பெருமூச்சுடன் அவர் தலைகுனிந்தார். “அனைத்துக்கும் மேலாக நான் என்னை அறிந்தேன். அறத்தைக் கற்பதும் பேசுவதும் எளிது, கடைபிடிப்பது கடினம் என்று உணர்ந்தேன். என் எல்லைகளை நான் கண்டுகொண்டேன். நான் நல்லவன் என்று கொண்டிருந்த ஆணவம் அழிந்தது. என்னைத் தளைத்திருந்த பெருந்தளை அறுந்து விடுதலை கொண்டேன்.”

காத்யாயனர் “ஒவ்வொரு விசைக்கும் நிகரான மறுவிசை எழுவதாகவே இப்புடவி உள்ளது. தேர்ச்சிற்பிகளுக்கு அது தெரியும்… தேர் விரைவுகொள்ளும்தோறும் காற்று கல்லாகிறது என்று ஒரு பழமொழி உண்டு. சிறிய இறகிதழை மெல்ல ஏந்தி அது விழைந்த திசைக்கு கொண்டுசெல்லும் அதே மென்காற்றுதான் அதுவும்” என்று புன்னகைத்தார். “ஒழுக்கநோன்பாளனின் காமம் கடல் வற்றித் துளியாவதுபோல் கடுங்கசப்பு கொள்கிறது. அறத்தில் அமைந்தவனின் ஆணவம் ஏழுமுனையும் கூர்மை பெறுகிறது. ஐந்தவிந்து அடங்கியவனில் சினம் அணையாக்கனல் என காத்திருக்கிறது. அரசே, தவம்செய்பவனை நோக்கியே மாரன் ஐந்து படைகளுடன் வருகிறான். இருண்டதெய்வங்கள் விழியொளிர வந்து சூழ்கின்றன. இந்திரனின் படைகள் அவன் மீதே ஏவப்படுகின்றன.”

“அரசர் சொன்னதை நானும் என் விழிகளாலேயே கண்டேன்” என்று தௌம்யர் சொன்னார். “அவை கலைந்ததுமே மூன்று இளைய தம்பியரும் ஓடிவந்து அரசரின் கால்களில் விழுந்து கண்ணீர் விட்டனர். அவர் அவர்களை அள்ளித்தூக்கி தன் மார்போடு அணைத்துக்கொண்டார். விம்மியழுதபடி பார்த்தன் சொன்னதை நான் கேட்டேன். இவ்வண்ணம் எப்படி நடந்தது என்றே அறியேன் மூத்தவரே. இந்தக்களத்தை நாமறியா தெய்வங்கள் எடுத்துக்கொண்டன. நாம் எண்ணத்தின் இறுதியாழத்திலும் உணராத சொற்களை நம் நாவில் அமைத்தன. தங்கள் முடிவில்லாத அன்பால் இந்தப் பெரும்பிழையையும் பொறுத்தருளுங்கள் என்றார். அவரை தோள் வளைத்துத் தழுவி நீ ஒருசொல்லும் பிழை சொல்லவில்லை இளையோனே. என் உள்ளமே பிரிந்து நின்று என்னை நோக்கிச் சொன்னதாகவே அவற்றை நான் கேட்டேன். நானே நீங்கள் ஐவரும் என்றார். அதைக்கேட்டு நின்ற நான் அழுதேன்.”

“நகுலன் அரசரின் தோளில் தலைசாய்த்து அழுதபடி நடந்தவை என்ன என்று மீள எண்ணவே நெஞ்சு கூடவில்லை மூத்தவரே. இப்படி நிகழலாகுமா, இது கனவில்லை என்று கொள்வதெப்படி என்றே பதைப்பு எழுகிறது என்றார். சகதேவன் நிகழப்போவதை எண்ணி நான் உருகிக்கொண்டிருக்கிறேன் தந்தையே. இங்குரைக்கப்பட்ட ஒவ்வொரு சொல்லும் மானுடத்தைப் பிளந்து ஒலிக்கும் ஊழின் முழக்கம் என நான் அறிவேன். நான் காண்பது குருதிபெருகும் பேரழிவை மட்டுமே என்றார். அவரைத் தழுவி, இப்போது அறிந்தோம் நாம் ஒவ்வொருவரும் எத்தனை சிறியோர் என்று. அதுவே இத்தருணம் நமக்களித்த நற்கொடை. இனி நமக்கு ஆணவங்கள் இல்லை. தன்மயக்கங்களும் இல்லை. இது பெருஞ்சுழல்காற்று. நாம் சருகுகள். நம்மால் இயன்றவரை நன்று சூழ்வோம். நடப்பது தொடர்க என்று அரசர் சொன்னார். அத்தருணத்திலும் அவரது நிகர்நிலையை எண்ணி நான் உளம் விம்மினேன்” என்றார் தௌம்யர்.

“அப்பால் திரும்பி நின்றிருந்த பீமனை நோக்கி அரசர் விரித்த கைகளுடன் செல்வதைக்கண்டு அவையினர் அறியாது நெஞ்சைத் தொட்டு விம்மிவிட்டனர். இளையோனை அணுகி தோள்களைத் தொட்டு சொல் எடுப்பதற்குள்ளாகவே அவர் திரும்பி தமையன் கால்களில் படிந்து உரத்தகுரலில் என் நாவை அறுத்துவீசவேண்டும். மூத்தவரே, என் தலை உடைந்து சிதறவேண்டும். அதைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். பிற எதுவும் பிழையீடல்ல என்று கூவினார். அரசர் அவரை அணைத்தபடி, நம் ஐவரில் என் வழியாகவே எந்தை பேசுகிறார் என்று எண்ணியிருந்தேன். இல்லை இளையோனே, அவர் தேர்வது உன் நாவை. நமது உளச்சான்று நீயே. என்றும் உன் நா இவ்வண்ணமே ஒலிக்கட்டும் என்றார்” என்று தௌம்யர் சொன்னார்.

“அவையினர் கண்ணீருடன் அரற்றியபடி அரசரையும் தம்பியரையும் சூழ்வதைக்கண்ட நான் சௌனகரிடம் அவர்களை உள்ளே அழைத்துச்செல்வோம் என்றேன். அவர் காவல்வீரர்களுக்கு ஆணையிட அவர்கள் அவரையும் இளையோரையும் சூழ்ந்து காத்து அரண்மனைக்குள் கொண்டுசென்றனர். அவையமர்ந்திருந்த மூத்தகுடிகளும் வணிகரும் வீரரும் பெரும் இழப்பொன்றின் முன் சித்தம் உறைந்தவர்கள் போலிருந்தனர். நிகரற்ற இழிவொன்றை அடைந்தபின் சற்றே உளம்தேறிய அமைதியையும் சிலர் காட்டினர். ஒருவர் விழிகளை ஒருவர் நோக்காது ஒருசொல்லும் எடுக்க ஒண்ணாது அவர்கள் ஒவ்வொருவரும் முழுத் தனிமையிலிருந்தனர். பலர் விழிகளிலிருந்து கண்ணீர் அவர்களை அறியாது ஊறி வழிந்துகொண்டிருந்ததை கண்டேன். பலர் உதடுகள் துடிக்க நெஞ்சை கைகளால் அழுத்திக்கொண்டனர். தொண்டைகள் தீட்டப்படும் செருமலும் அறியாதெழும் விம்மலும் மூக்குறிஞ்சும் ஒலிகளும் மட்டுமே அவையில் நிறைந்திருந்தன.”

“அவையமர்ந்திருந்த அஸ்தினபுரியின் அரசர் உடல் பன்மடங்கு எடைகொண்டவர் போல மெல்ல எழுந்து தலைகுனிந்து தனித்து உள்ளே சென்றார். சகுனியையும் கணிகரையும் காந்தார வீரர்கள் காத்து உள்ளே கொண்டுசென்றனர். தலைகவிழ்ந்தவர்களாக பீஷ்மரும் கிருபரும் துரோணரும் தங்கள் மாணவர்களுடன் அவைநீங்கினர். துச்சாதனனை என் விழிகள் தேடின. கௌரவர்கள் அவரை உள்ளே விட்டு உடல்சூழ்ந்து ஒற்றைக் கரும்பெருக்கென ஆகி அவை அகன்றனர். விதுரர் அப்போதும் மீளாதவராக அவைபீடத்திலேயே அமர்ந்திருந்தார். குண்டாசி பீடத்தில் சரிந்து வாய்திறந்து தொண்டைமுழை அதிர துயில்கொண்டிருந்தார். விகர்ணன் இரு கைகளையும் விரித்து கண்ணீர் விட்டு அழுதபடி அரசரை நோக்கி வந்து வீரர்களால் தடுக்கப்பட்டு நின்று அரசே, இந்திரப்பிரஸ்தத்திற்கு அரசே, மூத்தவரே என்று கூவினார். அப்பால் சுவர் அருகே யுயுத்ஸு கண்ணீர் வழிய சாய்ந்து நிலம்நோக்கி நின்றிருந்தார். அந்த அவையின் காட்சியை ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு முகத்தையும் கணம் கணம் என நான் நினைவில் மீட்க முடியும்.” தௌம்யர் சொல்லி முடித்துப் பெருமூச்சுவிட்டார்.

காத்யாயனர் அவைநோக்கி “அறமெனும் சொல்லின் ஒவ்வொரு அசையையும் ஒலியையும் பிரித்து தனித்தெடுத்து ஆராய உகந்த தருணம் அன்று அவைநிகழ்ந்தது. நாமறிந்த நூல்கள் அனைத்தையும் கொண்டு அதை புரிந்துகொண்டாகவேண்டும். அதை கடந்துசெல்லும் நூல்களை நாம் இயற்றவும் கூடும்” என்றார். திரும்பி சௌனகரிடம் “அதன் ஒவ்வொரு கணத்தையும் இங்கே சொல்லுங்கள், அமைச்சரே. இங்குளோர் கேட்கட்டும். இனி வரும் கொடிவழியினர் ஒருநாளும் அதை மறவாதிருக்கட்டும்” என்றார்.

முந்தைய கட்டுரைஅன்னையின் சிறகுக்குள்
அடுத்த கட்டுரைமகத்துவத்தின் கண்ணீர்- பின் தொடரும் நிழலின் குரல்