‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ -1

முதற்காடு : கௌஷீதகம்

[1]

தொன்மையான மலைநிலமாகிய கௌஷீதகத்தில் அசிதர் என்னும் வேதமுனிவரின் மைந்தராக பிறந்தார் தௌம்யர். தந்தையிடம் வேதம் பயின்றார். போர்க்கலை வல்லுநராக அவர் வளர்ந்தமையால் அதன்பொருட்டு அவர் அயோததௌம்யர் என்றழைக்கப்பட்டார். அவருக்கு ஆருணி, உபமன்யூ, வேதன் என்னும் மூன்று மாணவர்கள் அமைந்தனர். தாழ்வரையின் காடு திருத்தி வயல் சமைத்து, குடில்கட்டி கல்விநிலை அமைத்து மாணவர்களுடன் அங்கு அவர் குடியிருந்தார். அவரது மாணவர்களில் ஆருணி வேளாண்தொழிலியற்றினான். உபமன்யூ கன்றுபுரந்தான். வேதன் பொதிசுமக்கச் சென்றான். மலைச்சரிவில் அமைந்திருந்த தவக்குடிலில் அந்தியில் அனலெழுப்பி சூழ்ந்தமர்ந்து வேதப்பொருளாய்ந்தனர். விளைந்ததும் சுரந்ததுமான உணவை விண்ணவர்களுக்கு அவியாக்கி அருள்கொண்டனர்.

பாஞ்சாலநாட்டைச் சேர்ந்தவனும் கௌதம கோத்திரத்தவனும் அருணரின் மைந்தனுமாகிய ஆருணி முதற்புலரியில் எழுந்து நீராடி நெருப்புக்கொடை அளித்தபின் கதிரெழுவதற்கு முன்னரே வயலுக்குச் சென்றான். வயல்நீரிலேயே பொழுதிணைவு வணக்கத்தை முடித்தபின் சேறளாவியும் நீரளாவியும் கழனியில் உழைத்தான். மேழிபற்றி உழுதான். நாற்று தேர்ந்து நட்டான். நீர்புரந்தான். களைகட்டினான். கதிர் கொய்து மணிபிரித்து களஞ்சியம் நிறைத்தான். மூவரில் முதல்வனென்றே ஆசிரியரால் எண்ணப்பட்டான். மாலையில் அழியாச்சொல் கொண்ட ஆழ்பொருள்சூழும் அவையிலும் அவனே முதல்வனென்று அமைந்திருந்தான்.

மாதத்தில் ஒருநாள் தன் மாணவர்களின் தொழில்தேர்ச்சியை நோக்க ஆசிரியர் வருவதுண்டு. அன்றொருநாள் ஆருணி நெல்வயலில் சேறுகுழைத்து வரம்புகட்டி கீழே ஓடிய சிற்றோடையிலிருந்து மென்மரத்தாலான இறைப்பானை கால்களால் இயக்கி பகல்முழுக்க நீர்பாய்ச்சி கணுக்கால் வரை நீர் நிறைத்தான். அந்திசாயும்வேளையில் நாற்றுக்கள் வேரூறிக்கொண்டிருப்பதைப்பார்த்து மகிழ்ந்தபடி கைகால்களைக் கழுவி அந்திப்பொழுது வணக்கத்திற்கென கதிர்முகம் நோக்கி திரும்பி நின்றிருக்கையில் ஆசிரியர் வெண்ணிற ஆடை அணிந்து நரைமுடித்தொகை தோளில் புரள இளங்காற்றில் அலையடித்த பசும்நாற்றுப் பரப்பை மலர்ந்த முகத்துடன் நோக்கியபடி வருவதைக் கண்டான். தானும் உவகைகொண்டு அவரை நோக்கி திரும்பியபோது தனக்குப் பின்பக்கம் மென்சேற்று வரப்பு உடைந்து வயல்நீர் ஓசையுடன் வழிந்தோடத் தொடங்குவதை கேட்டான்.

SOLVALAR_KAADU_EPI_01

ஆசிரியர் வருவதற்குள் மலைச்சரிவின் வயலில் இருந்து நீர்வழிந்தோடி வெறும் சேறே எஞ்சுமென்பதை உணர்ந்தான். விடாய்கொண்டு பயிர்நிற்பதை அவர் ஒருகணமும் தாளமாட்டார் என்றறிந்திருந்தான். அக்கணமே அந்த உடைப்பில் தன் உடல்பதித்து படுத்துக்கொண்டான். சேற்றுடன் கலங்கிய நீர் அவன் உடல்கொண்டு தேங்கி நிறைந்து கவிந்து வழிந்தது. மறுபக்க வரப்பில் வந்து நின்ற அயோததௌம்யர் நீர் திளைத்த வயலில் நாற்றுக்கள் சிலிர்த்து நிற்பதைக் கண்டு உவகை கொண்டார். “நன்று செய்தாய் ஆருணி, என் முன் வருக!” என்று அழைத்தார். அவர் மும்முறை அழைத்தும் ஆருணி அந்த உடைவிலிருந்து எழவில்லை. இருள்பரப்பதைக் கண்டு ஆசிரியர் திரும்பிச்சென்றார்.

அன்று அனல்முகப்பில் அவியிடல் முடிந்தபின் மிச்சம் உண்டு நிறைந்து சொல்கூட்டி வேதப்பொருள் உசாவிக்கொண்டிருக்கையில் “ஆருணி எங்கே?” என்று ஆசிரியர் ஏழு முறை வினவினார். ஆருணி அவர் சென்றபின்னரே எழுந்து உடைந்த வயல்வரப்பைத் திருத்தி நீர்தேக்கத் தொடங்கினான். இரவு வெளுப்பதுவரை நீர்தேக்கிவிட்டு காலைக்கருக்கலில் உடலெங்கும் சேறுசொட்ட குடில்வளைப்பில் நுழைந்த அத்தருணத்தில் காலையின் அனல்செயல் ஆற்ற அமர்ந்திருந்த ஆசிரியர் தன் மாணவர்களிடம் “வேதமென வந்த இதில் மாறாதிருப்பது எது? சொல்லா பொருளா?” என்று வினவினார். உபமன்யூவும் வேதனும் “பொருளே. ஏனென்றால் பொருளுக்கெனவே சொல் அமைந்துள்ளது” என்றனர். “பாஞ்சாலனாகிய ஆருணியே, நீயே உரை” என்றார் ஆசிரியர். இருளில் நின்றிருந்த ஆருணி “சொல்லே” என்றுரைத்தான்.

விழிதிருப்பி அவனை நோக்கிய ஆசிரியர் “சொல், அது ஏன்?” என்றார். ஆருணி “விண்ணிழிந்து இங்கு வந்தது சொல்லே. மண்ணிலுருவானதே சொற்பொருள். அறிதோறும் வளர்வதென்பதனால் அது மாறக்கூடியது. அறியப்படவேண்டியது என்பதனால் சொல் மாறுவதில்லை” என்றான். “சொல்லென்பது ஒலி. ஒலிமேல் படியும் எண்ணங்கள் அதை நமக்கு பொருளாக்குகின்றன. பொருளூறிப் பெருகி நிலம்நனைத்து விளைபெருகியபின்னரும் சொல் அவ்வண்ணமே எஞ்சுகின்றது. முளைத்தாலும் கரு அழியாத விதையென்பதே வேதம் என்று சொல்கின்றனர் முனிவர்.”

“ஆம், அவ்வண்ணமே” என்று சொல்லி மகிழ்ந்து எழுந்து வந்த அயோததௌம்யர் மாணவனை அள்ளி மார்புறத் தழுவிக்கொண்டார். அவன் உடலில் வழிந்த சேறு அவரது வெண்ணிற ஆடையை கறையாக்கியது. தன் முகத்திலும் மார்பிலும் படிந்த சேறுடன் பிற மாணவர்களை நோக்கி திரும்பிய அயோததௌம்யர் “இனிய சந்தனத்தால் முழுக்காட்டப்பட்ட இவ்வுடல்கொண்டவனே என் முதல்மாணவன் என்றறிக! இவன் சொல் என்றும் இங்கு திகழ்க!” என்றார்.

வயல்வரம்பை பிளந்து எழுந்தவர் என்பதனால் ஆருணியை அதன்பின்னர் உத்தாலகர் என்று அழைத்தனர் பிறமாணவர்கள். ஆருணியாகிய உத்தாலகர் தன் ஆசிரியரிடமிருந்து சம்ஹிதை, பிராமணம், ஆரண்யம், உபநிடதம் எனும் நான்கு முகங்களுடன் எழுந்துவரும் நால்வேதங்களை கற்றுத்தேர்ந்தார். வேதச்சொல் மாறாதிருக்க பதம், கிரமம், ஜடை, கனம் எனும் நான்கு வழிகளில் சொல்லெண்ணிக் கற்கும் முறையை உத்தாலகரே உருவாக்கினார். சொல்தொகையென பதமும், சொல்லிணைவு என கிரமமும், சொல்பின்னுதல் என ஜடையும், சொல்கூட்டல் என கனமும் நெறிவகுத்தமைக்கப்பட்டன. அவை காலைநதியை கதிர்களென வேதங்களை ஊடுருவிச்சென்று ஒளியுறச்செய்தன.

அவர் வகுத்த முறைபற்றி பிரித்துப்பிரித்து வெற்றொலியாக்கி பொருள்நீக்கம் செய்தும் இணைத்து இணைத்து பொருள்தொகையாக்கி ஒலிமறையச்செய்தும் வேதத்தை ஆடல் கொள்ளச்செய்தனர் வைதிகர். தேயு, மித்திரன், வருணன், ஆதித்யன், சூரியன், சவிதா, பூஷன், விஷ்ணு என்னும் விண்புரக்கும் தெய்வங்களும், பிருத்வி, அக்னி, பிருகஸ்பதி, சோமன், துவஷ்டா என்னும் மண்ணாளும் தெய்வங்களும், விண்ணையும் மண்ணையும் இணைத்தாடும் இந்திரன், உருத்திரன், மருத்துக்கள், வாயு, பர்ஜன்யன் என்னும் ஆற்றல்மிக்க தேவர்களும், ஸிந்து, விபாட், சுதுத்ரீ, சரஸ்வதி, கங்கை எனும் நீரன்னையரும் அவர்களின் சொல்லில் எழுந்து அனலில் நின்று அவிகொண்டனர்.

தைத்திரியக் காட்டில் வேதம் முழங்கிய அவையொன்றில் தன் சொல்பயில்முறையை உத்தாலகர் முன்வைத்தார். அதை எதிர்த்து “வேதச்சொல் பிரிவுபட்டால் ஒலிமாறுபாடு கொள்கிறது. வேதமென்று செவிக்கு ஒலிக்காத சொல் வேதமாவதில்லை” என்று சொன்ன முதிய வைதிகமுனிவர்களிடம் “ஒவ்வொரு மணற்பருவையும் தழுவி ஆழத்தில் ஓடுவது சரஸ்வதியே. எண்ணும்போது எழுபவள் அவள்” என்று உத்தாலகர் மறுமொழி சொன்னார். “அவ்வண்ணமெனில் உங்கள் காலடியில் எழுக சரஸ்வதி” என்றனர் முனிவர். அங்கேயே தன் இரும்புமுனை தண்டத்தால் ஓங்கிக் குத்தி “எழுக என்னுளம் நிறைந்த நீர்மகள்!” என்றார். அச்சிறு துளையில் யானைமுகத்தில் மதம் என நீர் ஊற்றெழுந்தது. பெருகி சரஸ்வதி என காட்டி சிற்றோடையாகி சரிந்தோடியது. எண்ணியதும் எழுந்த பெருநதி அங்கிருந்து மனோரமை என்னும் பெயரில் ஒழுகலாயிற்று.

விதியும் அர்த்தமும் கொண்டு வேதங்கள் கௌஷீதகத்தில் விரிவடைந்தன. பிராமணங்கள் சொல்வடிவாக செவிகளில் ஊர்ந்து வளர்ந்தன. நுண்பொருள் ஒவ்வொன்றும் தழைத்தெழ ஆரண்யகங்கள் உருவாகி வந்தன. மைந்தரை இடையில் தூக்கி முலையூட்டி நின்றிருக்கும் அன்னையர் என ஆயின வேதாங்கங்களால் பொலிவுற்ற நால்வேதங்களும்.

முதிர்ந்து கனிந்து உயிர்துறக்கும் நிலையிலிருந்த அயோததௌம்யர் தன் முதல்மாணவனை அழைத்துவரும்படி சொன்னார். கையில் நூறு வேதமெய்ப்பொருளவைகளில் வென்று நிறுத்தப்பட்ட அறிவுக்கோலுடன் ஆசிரியரை காணச்சென்றார் உத்தாலகர். தர்ப்பைப்புல் படுக்கையில் மரவுரி அணிந்து படுத்திருந்த அயோததௌம்யர் புலித்தோலாடையும் அறிவுக்கு அடையாளமாகிய நுதல்விழியுமாக வந்த மாணவரைக் கண்டு  அவர் மட்டும் தன்னருகே நின்றிருக்கட்டும் என ஆணையிட பிற மாணவர் விலகிச்சென்றனர்.

ஆசிரியர் அருகே மண்டியிட்ட உத்தாலகர் “நன்று எண்ணி நீங்குக, ஆசிரியரே! தாங்கள் என்னுள் விதைத்த வேதச்சொல்லை நூறுமேனி விளையச்செய்துள்ளேன். தங்கள் பெயர் சொல்லி என் மரபு இங்கு என்றும் வாழும்” என்றார். அயோததௌம்யர் இதழ்கள் விரிய புன்னகைத்து “கற்றறிந்தவனே, என் இளமையில் எந்தையும் ஆசிரியருமான அசிதர் எனக்கு தூய காயத்ரியை அளித்து இந்த மரவுரியை அளித்தார். இதை நான் ஆடையென்றும் அணியென்றும் கொண்டேன். இன்று என்னில் இது மட்டுமே எஞ்சுகிறது. இதையும் அகற்றுக!” என்றார்.

உத்தாலகர் தௌம்யரின் ஆடையை அகற்றினார். எலும்புகள் புடைத்த வெளிறிச்சுருங்கிய வெற்றுடலுடன் கிடந்த தௌம்யர் “ஓங்கிய சொல்லுடையவனே, ஒன்றுகேள்! அறிஞர்கள் தங்கள் சொற்களால்தான் இறுதியில் வெல்லப்படுகிறார்கள். அதுவே அவர்களின் விடுதலை என்று அறிக!” என்றார். அவர் தலைமேல் கைகளை வைத்து “ஆம், அவ்வாறே ஆகுக!” என்று உரைத்தபின் விழிமூடி விண்புகுந்தார்.

[ 2 ]

கௌதம உத்தாலகர் வேதங்களை முழுதறிய நாற்பதாண்டுகாலம் ஆயிற்று. அதன்பின்னர் மைந்தரைப் பெற்று உலகறத்தை நிறைவுறச் செய்யும்பொருட்டு குசிகமுனிவரின் மகளை மணந்தார். கௌஷீதகக் காட்டில் அவளுடன் விறகுவெட்டியும் வேளாண்மைசெய்தும் ஆபுரந்தும் வாழ்ந்தார். மூன்று தலைமுறைகளாக நூற்றுப்பன்னிரண்டு மாணாக்கர்கள் அவருக்கு அமைந்தனர். முதியவயதில் மணம்கொண்டதனால் அவருக்கு மகவு பிறக்கவில்லை. ஆறாண்டுகாலம் நோன்பிருந்து அவர் தன் மனைவியில் பெற்றெடுத்தது பெண்ணாக இருந்தது. அவளுக்கு சுஜாதை என்று பெயரிட்டார்.

நீரளித்து தன்னை விண்ணேற்ற மைந்தன் இல்லை என்பதனால் உத்தாலகர் வருந்தினார். முதுமை மீதூறியதனால் இனியொரு மைந்தன் பிறக்க வழியில்லை என்றுணர்ந்தார். எனவே காசியப கோத்திரத்தைச் சேர்ந்த தன் முதல்மாணாக்கனை தன் மனைவியுடன் உறவுகொள்ளச்செய்து ஒரு மைந்தனை பெற்றெடுத்தார். அம்மைந்தன் ஸ்வேதகேது என்றழைக்கப்பட்டான்.

சுஜாதையை உத்தாலகரின் இரண்டாம்தலைமுறை மாணவனாகிய கஹோடகன் மணந்தான். கஹோடகனின் குருதியில் சுஜாதையின் கருவில் அஷ்டவக்ரன் என்னும் மைந்தன் பிறந்தான். எட்டு உடற்குறைகளுடன் பிறந்த அஷ்டவக்ரன் ஸ்வேதகேதுவுக்கு இளையோன் என்றே அக்கல்விநிலையில் எண்ணப்பட்டான். உருத்திரிபடைந்திருந்தமையால் கைக்குழவி என்றே நீணாள் இருந்த அவன் உத்தாலகரின் தோளிலும் மடியிலும் தவழ்ந்து வளர்ந்தான். முழுமையற்ற உடலை காண்கையில் மானுட உள்ளம் எழுந்து அதை முழுமைசெய்து அடையும் கனிவால் அவர் அவன்மேல் பிறிதெவரிடமும் இல்லாத பேரன்பைக் கொண்டிருந்தார்.

ஸ்வேதகேது தன் தந்தையின் மாணவனாக உடனமர்ந்து கிளைகளும் நிழல்களுமாகப் பிரிந்த வேதமுழுமையும் நான்குவழிகளில் சொல்தேர்ந்து கற்றான். தந்தையின் தவச்சாலையிலேயே காடுபுகுந்து விறகு வெட்டியும், கன்று மேய்த்தும், மலைச்சரிவுகளில் வயல் பேணியும் வாழ்ந்தான். தந்தையென்பதனால் ஆருணியாகிய உத்தாலகரிடம் பிற மாணவரைக்காட்டிலும் உரிமைகொண்டவனாக தன்னை அவன் எண்ணிக்கொண்டிருந்தான். ஒருநாள் தன் தந்தையின் மடியில் தவழ்ந்த அஷ்டவக்ரனைக் கண்டு பொறாமைகொண்டு அவன் கைபிடித்து இழுத்து கீழே விட்டான். குறையுடலில் வலிமிகவே அஷ்டவக்ரன் அலறி அழுதான்.

அவ்வொலி கேட்டு சினந்து கையை ஓங்கியபடி வந்த சுஜாதை “அன்பிலாதோனே, அவனை ஏன் துன்புறுத்தினாய்?” என்று தம்பியிடம் கேட்டாள். “என் தந்தையின் மடி எனக்குரியது மட்டுமே. அவன் அங்கே தனக்குரிய அரியணையில் என அமர்ந்திருக்கிறான். அதைக்கண்டு என் உள்ளம் கொதிக்கிறது” என்றான் ஸ்வேதகேது. கண்கள் சிவக்க “விலகு மூடா! பிரம்மனுக்குரிய குருதிமுறையால் அவனே உன் தந்தையின் கொடிவழியினன்” என்றாள் சுஜாதை. “எவ்வண்ணம்?” என்று திகைப்புடன் கேட்ட ஸ்வேதகேதுவிடம் “அந்தியில் வேதக்களத்தில் நீயே உன் தந்தையிடம் கேள்” என்றாள் சுஜாதை.

அன்று நடந்த வேதச்சொல் மன்றில் தன் சொல்லை மறுத்து பூசல் எடுத்த மாணவனை நோக்கி சினந்தெழுந்த ஸ்வேதகேது “நான் அவர் குருதி என்பதனால் என் சொல் தந்தைக்கு மேலும் உகந்ததே” என்று சொன்னான். “தந்தை என்பதனால் தன்குருதி என்றாக வேண்டுமென்பதில்லை” என்று அம்மாணவன் மறுமொழி சொன்னான். துணுக்குற்று “தந்தையே, அதன் பொருளென்ன?” என்று ஸ்வேதகேது உத்தாலகரிடம் கேட்டான். “ஆசிரியர் என்பதைப்போல தந்தை என்பதும் அளிப்பதும் ஏற்பதுமான ஓர் உறவுநிலை மட்டுமே, மைந்தா” என்றார் உத்தாலகர். “இல்லை, நான் கேட்பது அதுவல்ல. அச்சொல்லை அவன் சொல்வது எப்பொருளில்?” என்றான் ஸ்வேதகேது.

“நீ என் குருதியில் பிறந்தவன் அல்ல. காசியப குலத்தோனாகிய என் முதல்மாணவனின் குருதியில் என் மனைவியின் வயிற்றில் பிறந்தவன். என்னால் மைந்தன் என நீர்தொட்டு வைத்து ஏற்கப்பட்டவன். எனவே காசியப கோத்திரத்தான் என்றே நீ அறியப்படுகிறாய்” என்றார் உத்தாலகர். உளம்சிறுத்து கண்கலங்கிய ஸ்வேதகேதுவிடம் “மைந்தா, தொல்வேதங்கள் மானுடரிடமும் அசுரரிடமும் நாகர்களிடமும் ‘பெருகுங்கள், எந்நிலையிலும் அழிவிலாதிருங்கள், ஒன்றுசேருங்கள், எது நிகழ்ந்தபின்னரும் எவ்வண்ணமேனும் எஞ்சியிருங்கள்’ என்றே உரைத்தன. அப்பெருநதியில் அள்ளிய நால்வேதங்களும் அச்செய்தியையே கொண்டுள்ளன. ஈட்டி, அளித்து, துய்த்து, பெற்று, நிறைந்து கடந்துசெல்வதன் பேருவகையையே அவை ஆணையிடுகின்றன” என்றார்.

“வாழ்க்கையை வாழ்பவனைச் சூழ்ந்து தெய்வங்கள் நின்றுள்ளன. அவன் கையின் அவிபெற்று அவை வாழ்கின்றன. மானுடம் வளர்கையிலேயே தெய்வங்கள் வளர்கின்றன. எனவே வேதங்களை அறிந்தவன் விழைவுகளை துறப்பதில்லை, அவற்றை வெய்யோன் தேரின்வெண்புரவிகளென ஆள்வான்” என்றார் உத்தாலகர். “வேதத்தை அடிநிலமெனக்கொண்டு முளைத்த நெறிகள் அனைத்துக்கும் நோக்கம் இது ஒன்றேயாகும்.”

கைகூப்பியபடி எழுந்த ஸ்வேதகேது “இல்லை தந்தையே, அழியாச்சொல்லென எழுந்த ஒன்று இங்கு இக்காலம் இவ்வாறு அடையப்பெறுவனவற்றுக்காக மட்டும் அமைந்திருக்காதென்றே என் உள்ளம் சொல்கிறது. வேதங்களில் இருந்து பெறவேண்டிய விழுப்பொருள் மெய்மையே என்று எண்ணுகிறேன்” என்றான். சினம்கொண்டாரென்றாலும் தன்னை அடக்கிக்கொண்ட உத்தாலகர் “வேதங்கள் மொழிவன ஒன்றே. தெய்வங்களுக்கு அளித்து மானுடருக்குரியவற்றைப் பெறுவது. அளிப்பவற்றை மீளப்பெறுகின்றன தெய்வங்கள். அவியளிப்பவன் அறம் ,பொருள், இன்பத்தையும் வீட்டையும் அடைகிறான். அவையன்றி மானுடருக்கு இங்கு அடையப்படுவன பிறிதில்லை” என்றார்.

“நூல்கள் சொல்லும் நான்கு விழுப்பொருட்களுக்கும் அப்பாலுள்ளது பெரும்பொருள் ஒன்று. அதை மெய்யறிதல் என்று உரைக்கத்துணிவேன். அடைதல், ஆதல், அமைதலுக்கு அப்பாலுள்ளது அறிதலென்னும் முழுமை. தன்னை உணர்ந்து உயிருடல் கொண்டு இங்கு வந்துள்ள அனைத்தும் அறிதலுக்கான வேட்கையுடன் இருப்பதே அதற்குச் சான்றாகும்” என்றான் ஸ்வேதகேது. “ஒவ்வொரு வேதச்சொல்லும் காதல்கொண்ட பெண்ணின் கடைவிழிநோக்கு போல, சுனையில் இனிக்கும் மலையுச்சித் தேன்போல, மழையுணர்த்தும் காற்றின் ஈரம்போல, காட்டுத்தீயின் எரிமணம் போல, பதுங்கிவரும் புலியின் காலடியோசைபோல அனைத்து நுண்மைகளாலும் பொருளுணரத்தக்கது. உணரும்தோறும் வளர்வது மட்டுமே முடிவின்மையைச் சொல்லும் தகைமை கொண்டது.”

“வேதமென்பது வைதிகர் சொல்லில் அமைவது” என்ற உத்தாலகரிடம் “விதைக்கூடையை கையில் வைத்திருப்பவன் காலம்தோறும் முளைத்தெழும் காட்டை ஆள்பவன் அல்ல, தந்தையே” என்றபின் தலைவணங்கி ஸ்வேதகேது அவைவிட்டு வெளியேறினான். அந்த முதல் எதிர்ச்சொல்லைக் கேட்டு திகைத்து அமர்ந்திருந்த உத்தாலகர் தன் ஆசிரியர்களின் காலடிகளை ஒவ்வொன்றாக அகவிழியில் கண்டு வணங்கினார்.

உத்தாலகருக்கும் அவர் மைந்தனாகிய ஸ்வேதகேதுவுக்கும் வேதமெய்மை சார்ந்து பன்னிரு பெருஞ்சொல்லாடல்கள் நிகழ்ந்தன. அவை அக்கல்விநிலையின் மாணவர்களால் எழுதப்பட்டு வேதநீட்சிகளான கானூல்களில் இடம்பெற்றன. பன்னிரண்டாவது சொல்நிகழ்வு சாமவேதம் ஓதி ஒலிவடிவான விண்திகழ்வோரை நிறைவுறச்செய்யும் பெருவேள்வியொன்றின் இறுதியில் நிகழ்ந்தது. வேள்விமிச்சமென பகிர்ந்துண்ணப்பட்ட அன்னத்துடனிருந்த மலைத்தேன் கல்விநோன்பு கொண்ட இளையோருக்கு மட்டும் விலக்கப்பட்டது. இளையோரில் ஒருவனாக நின்றிருந்த ஸ்வேதகேது “ஆசிரியரே, அந்தத் தேன் எங்கள் கைகளிலிருந்து விண்ணவர்க்கு அளிக்கப்படும் என்றால் நாங்களும் அதற்குத் தகுதியானவர்களே” என்றான்.

சினம்கொண்ட தந்தை உரத்தகுரலில் “இதுகாறும் நீ உரைத்த எதிர்ச்சொற்கள் அனைத்தையும் பொறுத்தேன். இது என் கல்விநிலையின் நெறிமீது நீ கொள்ளும் மீறல். இதை ஒப்பமாட்டேன்” என்றார். “ஆணையிடும் உரிமை உங்களுக்குள்ளது, தந்தையே. அவ்வாணை எதன்பொருட்டென்று அறியும் உரிமை மாணவர்களாக எங்களுக்குண்டு” என்றான் ஸ்வேதகேது. “வேதச்சொல் விளங்கும் உளம்கொண்டவர்களாக மாணவர் திகழவேண்டும் என்பதற்கான நெறி இது. உளமயக்களிக்கும் கள்ளும் தேனும் நறுமணங்களும் காமமும் அவர்களுக்கு விலக்கப்பட்டுள்ளன” என்றார் உத்தாலகர்.

“தந்தையே, தாங்கள் ஆற்றுவதை அறியாது இவர்கள் அடைவதுதான் என்ன? தேவர்களென சூழ வந்து நிறைவது இவர்களின் உள்ளத்தில் ஊறி எழுந்த விண் அல்லவா? இவர்கள் அந்தத் தேனை தங்கள் அகத்தால் முன்னரே அருந்திவிட்டனர் என்றல்லவா அதற்குப் பொருள்?” என்று ஸ்வேதகேது கேட்டான். “அறிவே பிரம்மம் என்பதனால் அறியப்படுவதொன்றும் விலக்கல்ல.” சினத்தை அடக்கமுடியாத உத்தாலகர் “சிறியவனே, வேதச்சொல்லை முழுதறிவதென்பது தவம். தவமென்பது துறத்தல்” என்றார். “ஆசிரியரே, துய்த்தறிவதைத் துறப்பவன் அறிவையே துறக்கிறான். வேதம் சுட்டுவது எதையென்றறியாது சொல் மட்டும் அறிந்தவர் வேதமறியாதோர்” என்றான்.

“இனி ஒரு சொல் இல்லை. இங்கு நிறுத்திக்கொள்வோம்” என்றார் உத்தாலகர். “வைதிகமுனிவரே, இப்புவியிலுள்ள அனைத்தறிவையும்கொண்டு அறியப்படவேண்டியதே வேதமென்றாகும். எனவே அறிபடக்கூடியவை அனைத்தும் வைதிகருக்குரியவையே” என்று ஸ்வேதகேது சொன்னான். “இது என் இறுதியாணை. பிறிதொன்று பேச இனி ஒப்புதல் இல்லை” என்று உத்தாலகர் எழுந்து சென்றார். அதன்பின் அவர்களுக்குள் சொல்லாடல் என ஏதும் நிகழவில்லை. தந்தை மைந்தனுக்கிட்ட ஒற்றைச்சொல் ஆணைகளும் மைந்தன் தந்தைக்கு அளிக்கும் மறுமொழியில்லா பணிவும் மட்டுமே எஞ்சின.

தனிமையிலிருக்கையில் தன் ஆசிரியர் சொன்ன இறுதிச்சொற்களை மீண்டும் மீண்டும் எண்ணிக்கொண்டிருந்தார் உத்தாலகர். எவ்வண்ணம் தன் சொல் எழுந்து தன்னை வெல்லும் என்று பல வழிகளிலும் நோக்கினார். ஒருநாள் வேதச்சொல்லெடுத்து அனலுக்கு அவியூட்டும்போது அதை ஒரு தொடுகையென தன் உடலெங்கும் உணர்ந்தார். சொல் பனிமுடி சூடிய பெருமலைகளைப்போல் மாறாது அங்கிருக்க சொல்லில் உறைந்த வேதம் அறியாமல் மாறிக்கொண்டிருந்தது.

முந்தைய கட்டுரைஉற்றுநோக்கும் பறவை [சிறுகதை]
அடுத்த கட்டுரைபியுஷ் சில வினாக்கள்