கருத்துரிமையும் இடதுசாரிகளும்

1

லீனா மணிமேகலை

ஜெயமோகன் அவர்களுக்கு

 

திரு எஸ்.பி.சொக்கலிங்கம் வழக்கறிஞர் அவர்கள் எஸ்குருமூர்த்திக்கு எழுதியிருக்கும் கடிதம் இது.

*

திரு. குருமூர்த்தி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
—————————————————————————
ஆண்டாள் ஒரு வேசி. பெரியாழ்வாரும் தான் என்று ஒரு புதிய பார்வையில் தோழர் டேனியல் செல்வராஜ் ‘நோன்பு’ என்ற தலைப்பில் சிறுகதை தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். விஷமத்தனமான இச்சிறுகதையின் நோக்கம் மரபுவழி வந்த பண்பாட்டு நியதிகளை இழிவுபடுத்துவதாகும். ஆண்டாள், பெரியாழ்வார், பாண்டிய மன்னன் – ஸ்ரீ வல்லப தேவன் ஆகிய மூன்று பேரும்தான் இந்த சிறுகதையின் முக்கிய கதாபாத்திரங்கள். இவர்கள் மூவரையும் டேனியல் செல்வராஜ் இழிவாகப்பேசி கொச்சைப்படுத்தும் வேலையை செவ்வனே செய்திருக்கிறார்.

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் இந்த சிறுகதை தொகுப்பை மனோண்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தன்னுடைய பாடத் திட்டத்தில் 2012 ஆம் ஆண்டு சேர்த்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பவே இந்த நோம்பு தொகுப்பில் இருந்து ’ஆண்டாள்’நீக்கப்பட்டு சரஸ்வதி சேர்க்கப்பட்டார். ஆனால் ஆண்டாளை அசிங்கப்படுத்திய/அசிங்கப்படுத்தும் ‘நோம்பு’இன்னும் சந்தையில் கிடைக்கிறது.

மற்றுமொரு தோழர் 2012 ஆம் ஆண்டு, தாண்டவபுரம் எனும் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். எழுதியவர் தோழர் சோலை சுந்தர பெருமாள். திருஞானசம்பந்தரைப் பற்றியும், அவர் வாழ்ந்த காலம், பண்பாடு, வரலாறு ஆகியவற்றை ஆவணப்படுத்தும் ஒரு புத்தகம்.

சமயக் குரவர்களில் ஒருவரும், 16000 பதிகங்களைப் பாடியவரும், சிவாலயங்கள் தோறும் வீற்றிருக்கும் ஞானக் குழந்தையாம் திருஞானசம்பந்தரைப் பற்றி அந்த நூலில் கண்ட விவரங்கள்.

1) திருநனிப்பள்ளியில் தலையாத்திரைக்கு சென்றிருந்த திருஞானசம்பந்தர் அங்கு தன் மாமன் மகளைப் பார்த்து அவள் அழகில் சொக்கிப்போய், —-

“அவர் மனசும் உடம்பும் ஒரே திக்கில் நெளுநெளுப்பைத் தூண்டிக் கொண்டிருந்தன.அதில் இருந்து விடுபட தன்னைத் தயார்படுத்திக் கொள்வதில் ஈடுபட்டு இருந்தார்”
“எப்போது அசந்து உறங்கிப் போனாரோ அவருக்கே நினைவில்லை. அவர் உடம்பிலும் மனசிலும் ஏறி முறுகிக் கிடந்த நெளுநெளுப்பு முற்றிலும் வடிந்து போய் சாசுவதமாய் உணர்ந்தார்.” – பக்கம் 320

“இடுப்பில் இருந்த உத்தரியத்தில் திட்டுதிட்டாய் படிந்திருந்த கொழகொழப்பு இப்போது காய்ந்து முடமுடப்பாக ஆகியிருந்தது. அதிலிருந்து வெளிப்படும் மெல்லிதான இனம் புரிந்து கொள்ளக் கூடிய அம்மணத்தை தன்னோடு நிழலாக இருக்கும் சரணாலயரோ யாழ்ப்பாணரோ உணர்ந்துவிடக் கூடாது என்ற பரபரப்பில் எழுந்தார்” – பக்கம்-321

2) பக்தி செய்ய வீதி மருங்கில் கூடும் பெண்களை திருஞானசம்பந்தர் நோட்டமிட்டார்.

3) மனோன்மணி என்ற கன்னிகையுடன் உறவு கொண்டு ஒரு மகனை பெற்றுக்கொண்டார்.

இப்படியாக சோலை சுந்தர பெருமாளின் புத்தகம் (மன்னிக்கவும் ஆவணம்) செல்கிறது.

இந்தப் புத்தகங்களை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம் என்று இருக்கிறேன். விஷயம் தெரிந்தவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு எனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த வழக்கினுடைய அனைத்து செலவும் என்னுடையது. இந்த வழக்கினால் ஏதேனும் கெட்ட பெயர், அவமானம் ஏற்பட்டால் அதுவும் என்னேயே சாரும்.

ஆனால் ஒரே ஒரு வேண்டுகோள், இந்த வழக்குகளை திரு குருமூர்த்தி அவர்கள் ‘தகுதியான’ வக்கீலை வைத்து நடத்துவதாக இருந்தால் நான் பின்வாங்கிக் கொள்கிறேன். அவர் இதை எப்பொழுதோ செய்திருக்கவேண்டும். ஆனால் அவர் அதை செய்யாமல் நான் செய்த பிறகு அதில் குற்றம் கண்டுபிடிப்பது சாலச் சிறந்ததன்று.

தோழர்களே நீங்கள் எழுதிக் கொண்டேயிருங்கள் நாங்கள் அதை எதிர்த்துக்கொண்டே இருப்போம்.

எஸ்.பி.சொக்கலிங்கம்

 

 

*

நாவுக்கரசரும் சம்பந்தரும் இந்து துறவிகள் என்பதை விடுங்கள். அவர்கள் தமிழ்க்கவிஞர்கள். சுந்தர ராமசாமியைப்பற்றியோ பிரமிளைப்பற்றியோ இப்படி ஒரு நாவல் எழுதப்பட்டிருந்தால் தமிழ் இலக்கிய உலகம் எப்படி எதிர்வினையாற்றும்?

வேறு ஒரு தரப்பு கம்யூனிஸ்டுத்தலைவர்களான  பாலதண்டாயுதம் பற்றியோ  சங்கரய்யா பற்றியோ இப்படி ஒருநாவலை எழுதினால் இடதுசாரிகள் அதை அவர்களின் கருத்துரிமை என்று சும்மா விடுவார்களா?

அருந்ததி ராய் அவரது  நாவலில் ‘அரசியலுக்கு வந்த ஒரு நம்பூதிரியின் வீடு ஒரு நட்சத்திர ஓட்டலாக மாற்றப்பட்டது’ என்ற ஒற்றை வரியை எழுதியதற்காக அந்த எழுத்தாளரை கேரளத்துக்கே வரவிடமாட்டேன் என்று இடதுசாரிகள் கொதித்தார்கள். ஈ.கே.நாயனார் பொதுமேடையில் எச்சரித்தார். தெருக்களின் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்

பால் ஜக்காரியா  ஒரு மேடையில் இடதுசாரித்தலைவர்களை  தனிப்பட்ட முறையில் பேசினார் என்று சொல்லி பையன்னூர் என்னும் ஊரில் அவர் ஒரு விழாவுக்குச் செல்லும் வழியில் கூட்டமாக வழிமறித்து நிறுத்தி அடித்தார்கள். பால் ஜக்காரியா  கேரளத்தின் முதுபெரும் எழுத்தாளர்

[அவரது பேச்சின் இணைப்பை அனுப்பியிருக்கிறேன். கேளுங்கள். அப்படி என்ன பெரிதாக விமர்சனம் செய்துவிட்டார்? அவரை அடித்தவர்கள் பெருமாள் முருகனுக்கு எதிராக அறப்போராட்டம் செய்ததை கருத்து ஒடுக்குமுறை என்று கூச்சலிடுகிறார்கள்]

இடதுசாரித் தலைவர்களை விமர்சித்ததற்காக எழுத்தாளர்கள் தாக்கப்பட்ட 23 நிகழ்ச்சிகளை கேரள இதழ் ஒன்று பட்டியல் இட்டது. எதற்காகவாவது நம் எழுத்தாளர்கள் கண்டனம் தெரிவித்தார்களா?

ஏன், கொஞ்சநாள் முன்னால் லீனா மணிமேகலை என்னும் கவிஞர் இடதுசாரி பிம்பங்களான மார்க்ஸ் எங்கல்ஸ் ஆகியோருக்கு பாலுறவுச்சித்தரிப்பு அளித்து ஒரு கவிதையை எழுதினார். அவரை வசைபாடி, வீடு புகுந்து மிரட்டல்விட்டவர்கள் இதே இடதுசாரிகள். அதாவது அவர்களின் புனிதபிம்பங்கள் வழிபாட்டுக்குரியவர்கள். அவர்களை சாதாரணமாக விமர்சித்தால்கூட அடிப்பார்கள். ஆனால் மற்றவர்களின்  பிம்பங்களை உடைப்பது அவர்களின் கருத்துரிமை

அதுகூட எளிமையான இலக்குகளையே எடுப்பார்கள். துணிச்சல் இருந்தால் சார்லி ஹெப்டோவின் கருத்துரிமையை ஆதரிக்கிறோம் என்று சொல்லிப்பார்க்கட்டுமே. முகமதுவின் கார்ட்டூன்களைப்பற்றி கருத்துரிமை என்ன சொல்கிறது என்று சொல்லட்டுமே

தமிழின் ஒரு அதிபயங்கர ‘ திராவிடமுஸ்லீம் ‘ கவிஞர் ஒருவர் முகமது கார்ட்டூன்கள் வெளிவந்தபோது ‘கருத்துரிமைக்கு எல்லை உண்டு’  என்று எழுதினார். இன்றைக்கு அவரே ‘கருத்துரிமைக்கு எல்லை உண்டு என்றெல்லாம் பேசுவது அயோக்கியத்தனம்’ என்கிறார். ஏனென்றால் இது இந்துக் கடவுள்கள்.

ஏதோ ஒரு கவிதையிலே மார்க்ஸியத்தலைவர்களை பூடகமாக வசைபாடிவிட்டார் என்று சந்தேகம் வந்தபோது சங்கர ராமசுப்ரமணியம் என்னும் கவிஞரை இடதுசாரிகள் வீடுபுகுந்து இழுத்துவந்து அடித்து மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கினார்கள். கவிஞர் விக்ரமாதித்தன் ஒரு கவிதையில் மார்க்ஸை ஏதோ சொல்லிவிட்டார் என்று மன்னிப்புக்கடிதம் எழுதி வாங்கினார்கள். இதெல்லாமே இலக்கிய உலகம் அறிந்தவை . நீங்களும் அறிந்தவை. நீங்களும் கண்டிக்கவில்லை.

அன்றைக்கு தமிழகத்தின் எந்த இடதுசாரி கருத்துரிமைக்கு ஆதரவாகக் குரல்கொடுத்தார்.? கருத்துரிமை என்பது என்ன? இந்து தெய்வங்களை வசைபாடும் உரிமை, இந்து மக்களை இழிவுபடுத்தும் உரிமை மட்டும்தானா?

 

உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்

 

மனோகர்

 

 

அன்புள்ள மனோகர்,

சோலை சுந்தரப்பெருமாள் அல்லது டி.செல்வராஜ் எதையாவது பொருட்படுத்தும்படியாக எழுதிவிடமுடியும் என நான் நினைக்கவில்லை. ஆகவே அந்நூல்களைப் படிக்கவில்லை. படிக்கப்போவதுமில்லை. இந்தப்பகுதிகளை வாசிக்கையில் சீண்டும் நோக்குடன் திட்டமிட்டு எழுதப்பட்டது எனத்தெரிகிறது. இது இடதுசாரிகளின் வழி அல்ல, திக காரர்களின் வழி.

ஆனால் இந்நூலையும்  ‘சர்வதேச’ அளவில் புகழ்பெறச்செய்யவேண்டுமா என்பதுதான் என்னுடைய கேள்வி. ஏனென்றால் உலகமனநிலை என்பது இத்தகைய கோபங்களுக்கு எதிரானதாகவே உள்ளது

பொதுவாக இந்த ‘மதநிந்தனை’ ‘மனம்புண்படுதல்’ போன்றவை எல்லாம் இந்துமதத்திற்கும் இந்துப்பண்பாட்டுக்கும் முற்றிலும் அன்னியமானவை என்பதை மீண்டும் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். அவை விசுவாசத்தையும் நம்பிக்கையையும் மட்டும் முன்வைக்கும் நிறுவனமதங்களுக்குரியவை. அவற்றை எதிர்க்கப்போய் அவற்றைப்போலவே ஆகிக்கொண்டிருக்கிறார்கள் இந்துத்துவர்கள்

இந்துப்பண்பாடு விவாதங்களை,  விமர்சனங்களை, மீறல்களை, ஏன் அத்துமீறல்களைக்கூட ஏற்றுக்கொள்ளும்படித்தான் அமைந்துள்ளது.அப்படித்தான் இருந்தாகவேண்டும். ஏனென்றால் இந்துமதமும் அதன் ஆன்மிகமும் தத்துவமும் தொடர்ச்சியான விவாதங்கள், மறுப்புகள், விரிவாக்கங்கள் வழியாக வளர்ந்து செல்லும் இயல்பு கொண்டவை.

இத்தகைய ‘மதநிந்தனை’ ‘புண்படுதல்’ பண்பாடு இந்துமதத்தை உறைந்த நிறுவனமாக ஆக்கும். புதிய கருத்துக்கள் நிகழாமல் தடுக்கும். நிறுவன அதிகாரங்களை, கும்பலை கையில் வைத்திருப்பவர்களிடம் அனைத்துக் கருத்துக்களையும் முடிவுசெய்யும் பொறுப்பை அளிக்கும்.

ஒரு விஷயத்துக்காக  புண்பட்டு மதநிந்தனை என்னும் கருத்தை எடுத்தோம் என்றால் கடைசியில் எல்லாவற்றுக்கும் புண்படவேண்டியிருக்கும். எந்த மறுப்பும் எதிர்ப்பும் நிந்தனையாகக் கருதப்படும். அந்த எல்லையை எவர் வரையறுப்பது? எங்கே நிறுத்துவது?

இந்தமனநிலை இருந்திருந்தால் ஆரியசமாஜமோ பிரம்மசமாஜமோ ஏன் விவேகானந்தரின் இயக்கமோகூட உருவாகியிருக்கமுடியாது. அவை பலவகையான கடும் விமர்சனங்களை பழமையின்மேல் முன்வைத்தபடி எழுந்தவை. அவை அன்று பலரைப் புண்படுத்தியிருக்கும். ஆனால் அப்புண்படுத்தல் இயக்கமாக எழவில்லை.

மதநிந்தனை என்னும் கருத்தை ஆதரிப்பவர், புண்படும் மனநிலை உள்ளவர் விவாதிக்கவே வரக்கூடாது. என்னைப்பொறுத்தவரை அத்தகையவர்களை ‘நம்பிக்கைநோயாளிகள்’ என்றே எண்ணுகிறேன். அனேகமாக தினமும் ஒரு இஸ்லாமியர் என்னை ‘பொதுவிவாதத்துக்கு’ அழைத்து கடிதம்போடுவதுண்டு

ஒரே கேள்விதான் நான் கேட்பேன். ‘உங்கள் மதம் அமைப்புரீதியாக, கும்பல்முறைமூலம் செயல்படுத்திவரும் மதநிந்தனை என்னும் கருத்தை பொதுவெளியில் கண்டிப்பீர்களா? மதநிந்தனைக்காக தண்டனைகள் பிறப்பித்ததை எதிர்ப்பீர்களா? மதநிந்தனை என்னும் கருத்தை ஏற்றிருக்கும்வரை விவாதம் என்று சொல்லும் தகுதியே உங்களுக்கில்லை. நீங்கள் நம்பிக்கைத்தொற்று ஏற்பட்ட நோயாளி மட்டுமே’

அதைத்தான் அனைவரிடமும் சொல்வேன். இந்த அசட்டு எழுத்தை உதாசீனம் செய்வதே சரியானது. இதன் உள்நோக்கத்தை, எளிய இலக்குகளை மட்டுமே எடுக்கும் இதன் கோழைத்தனத்தை, இந்த முற்போக்கின் இரட்டைவேடத்தை புரிந்துகொள்ளலாம். இத்தகைய எழுத்து அமைப்பு சார்ந்து அங்கீகரிக்கப்படும் என்றால், எதிர்க்கலாம்.

இடதுசாரிகள் மெய்யியல் ரீதியாக நிறுவன மதங்களின் அதேமரபில் வந்தவர்கள். அவர்களின் மனநிலையும் அவர்களின் அமைப்பும் மதங்களே. உள்ளே இருக்கும் விசுவாசிகளின் நம்பிக்கையும் சரி . மாற்றுத்தரப்பு மீதான் வெறுப்பும் சரி அதே வார்ப்பு கொண்டவை. எப்போதும் அவர்கள் கருத்துரிமைக்கு ஆதரவானவர்கள் அல்ல. எதிர்க்கருத்து என்பது எவ்வகையிலும் பூமியின் முகத்திலிருந்து அழித்தொழிக்கப்படவேண்டியது என்று சொன்ன லெனின் அவர்களின் வழிகாட்டி. அவர்கள் பேசும் கருத்துரிமை என்பது ஒரு அரசியல் உத்தி, அதற்கப்பால் ஒன்றுமில்லை.

மற்றபடி இதை எதிர்த்தரப்பாக கட்டமைப்பது எல்லாம் எதிர்மறை விளைவுகளை உருவாக்கும் வெட்டிவேலை. அரசியல்நோக்கு இருந்தால் ஆடலாம். மற்றபடி ஒன்றுமில்லை

 

ஜெ

முந்தைய கட்டுரைதாயுமாதல்
அடுத்த கட்டுரைகோவையில்…