வணக்கம்,
நலமாக இருக்க என் வேண்டுதல்கள்.
அகநானூறு படிக்க முயன்று தோற்று மறுபடியும் முயலும் போது எழும் சந்தேகம். தீர்த்தால் மகிழ்ச்சி.
கவிதைக்கு இணைப்பை பார்க்க. .
கவிதையை எப்படி அர்த்தம் பண்ணிக்கொள்வது.
முதல் 4 வரி
விளங்குகின்ற என் காமத்தை சமூகமென்னும் மேகங்கள் பகலிலே மறைத்துக்கொள்கின்றன. நள் இரவிலே மேகங்களை ஊடறுத்து எழும் மின்னல் போல காமம், எல்லாவற்றையும் பிளந்து பொழிகிறது. அந்த ஆரா காம நோய் வருதத்துகிறது, மேலும் அலைகழிக்கிறது.
அல்லது
பகற்குறியிலே நீ வந்து கண்டதால் என் காமம, சூரியனை மறைக்கும் மேகம் போல மறைந்துகொண்டது. ஆனால் இரவுக்குறிக்கு வராததால், காமம் மின்னலேன பிளந்து கொண்டு, மழை போல் கொட்டிக்கிடக்கிற இந்த நள் இரவில ஆரா காமம் வருத்த தவிக்கிறேன்.
வயங்கு வெயில் ஞெமிய பாஅய் மின்னு வசிபு
மயங்கு துளி பொழிந்த பானாள் கங்குல்
ஆரா காமம் அடூஉ நின்று அலைப்ப
இறுவரை வீழ்நரின் நடுங்கி தெறுவர
பாம்பு எறி கோலின் தமியை வைகி
தேம்புதி-கொல்லோ நெஞ்சே உரும் இசை
களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின்
ஒளிறு வேல் தானை கடும் தேர் திதியன்
வரு புனல் இழிதரு மரம் பயில் இறும்பில்
பிறை உறழ் மருப்பின் கடுங்கண் பன்றி
குறை ஆர் கொடு_வரி குழுமும் சாரல்
அறை உறு தீம் தேன் குறவர் அறுப்ப
முயலுநர் முற்றா ஏற்று அரு நெடும் சிமை
புகல் அரும் பொதியில் போல
பெறல் அரும்-குரையள் எம் அணங்கியோளே.
பரணர்
*
அன்புடன்
மகேந்திரன்
அன்புள்ள மகேந்திரன்
சங்கப்பாடல்களை வாசிப்பதிலுள்ள இடர்களைப்பற்றி நான் பலவாறாக எழுதியிருக்கிறேன். அவற்றை நீங்கள் ஆய்வாளராக வாசிக்கிறீர்களா அல்லது கவிதைவாசகராக வாசிக்கிறீர்களா என்பது முக்கியமானது.
கவிதை வாசகர் என்றால் ஒன்று தெரிந்துகொள்ளுங்கள், அக்கவிதையில் உள்ள சொற்களும் அச்சொற்கள் அளிக்கும் பண்பாட்டு உட்குறிப்புகளும் அக்கவிதை அதன்மூலம் விடும் வாசக இடைவெளிகளும் மட்டுமே முக்கியமானவை. அவற்றைப்பற்றி அறிஞர்களும் ஆய்வாளர்களும் முன்னர் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பது அல்ல
சங்கப்பாடல்களுக்கு திணை, துறைப் பகுப்புகள் எல்லாம் அவை எழுதப்பட்டு ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின்னர் சோழர்காலத்திலும் பின்னர் மேலும் ஆயிரமாண்டுக்காலம் கழித்து பத்தொன்பதாம்நூற்றாண்டிலும் உருவானவை. ஆகவே உரைகளை முழுக்கவே தவிர்த்துவிடுங்கள். சொற்பொருள்கொண்டு கவிதையை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை புதியதமிழுக்கு மாற்றிக்கொள்ளுங்கள்
திகழ்ந்த வெயில் மங்க
கார்முகில் மூடி மின்னல் சுடர
இருண்டு மழைபொழியும் நள்ளிரவில்
அணையாத காமம் பெருகி அலைக்கழிக்க
மலைவிளிம்பிலிருந்து வீழ்பவனைப்போல
நடுங்கி அதிர்ந்து
கோலால் அடிபட்ட பாம்பென நெளிந்து
தனித்திருந்து வருந்துகிறாய் நெஞ்சே!
பிளிறிமுழங்கும் யானைகளும்
பின்னிக் குழம்பிய வாள்களும்
சூழ்ந்த களத்திற்கு
ஒளிர்வேல் கொண்ட படையும்
விசைமிக்கத் தேருமாகப் புகும் திதியனின்
பெருகி அருவி விழும் மரங்கள் செறிந்த காட்டில்
பிறைப்பல் கொண்டஅஞ்சாத பன்றிகளும்
ஊனுக்குப் பூசலிடும் வரிப்புலிகளும்
குழுமிய மலைச்சாரலில்
பாறையுச்சியில் கனிந்த தேனை
அறுத்தெடுக்க முயலும் குறவர்கள்
இறுதிவரை ஏறி அடையமுடியாததும்
சொல்லுக்கு அப்பாற்பட்டதுமான
பொதிகை உச்சியைப்போல
பெறுவதற்கு அரியவள்
நம்மை பித்தெழச்செய்த இவள்
*
மேலே உள்ள வரிகளில் எங்கே இரவுக்குறி பகற்குறி எல்லாம் உள்ளன? அவை ஒருகாலத்தில் பொருள்கொள்ளப்பட்டவை. இப்பாடல்கள் அன்றைய நிகழ்த்துகலைகளுக்கான வரிவடிவமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆகவே அந்த அவைக்குரிய அரசனாகிய திதியன் தொடர்பில்லாமல் உள்ளே கொண்டுவரப்பட்டு புகழ்பாடப்பட்டிருக்கிறான்.
அதைத் தவிர்த்தால் இக்கவிதையில் உள்ள வரிகளின் பொருள் இதுவே. பெறுதற்கரியவளாகிய ஒருத்தியைப்பற்றி ஒருவன் தன் நெஞ்சுக்குச் சொல்லிக்கொள்கிறான். அணங்குதல் என்றால் மோகினிப்பேய்க்கு ஆட்ப்படுதல். அந்த அளவுக்கு தன்னைப் பித்துகொள்ளச்செய்தவளை சில உருவகங்கள் வழியாக முன்வைக்கிறான்
உச்சிவரை சென்றடைய முடியாத மலை.,அந்த மலை அமைந்த மரம்செறிந்த காடு. அங்கே பெருகி விழும் மலையருவி, ஊன்வெறிகொண்ட புலிகள் ,மூர்க்கமான பன்றி ஆகிய தடைகளுக்கு அப்பால் உள்ள மலைத்தேன் அவள். அந்தத் தடைகளை அப்பெண்ணை சூழ்ந்துள்ள உறவையும் சுற்றத்தையும் குறித்தவை என வாசிக்கலாம்.
அப்பெண்ணை நினைத்து வருந்துபவன் தன் மனநிலையைச் சில உருவகங்கள் வழியாகச்சொல்கிறான். பகலைமூடி மறைத்த கருமுகில். அதைக்கிழித்து அதிரும் மின்னல்கள். மூடிப்பொழியும் மழை..அடிபட்ட பாம்பெனவும் மலையுச்சியில் நிலைதடுமாறியவனின் உடல் எனவும் தவித்து துடிக்கிறது அவன் உள்ளம்.
மழைமூடி மின்னல் எழுவதை , மூடிப்பொழியும் மழையை அவன் உள்ளக்கொந்தளிப்பாக வாசிப்பதில் என்ன தடை இருக்கமுடியும்? அடிபட்ட பாம்பு போல துடிப்பதன் வலியை அவளை அடைவதிலுள்ள தடைகளாகிய பன்றிகளுடனும் புலியுடனும் இணைத்துக்கொள்ளலாம். மலையுச்சியில் நிலைதடுமாறிவிழப்போவதை மலைத்தேன் எடுக்கும் குறவர்களுடன் இணைத்துக்கொள்ளலாம்
அத்துடன் திதியனின் யானைப்படையையும் தேர்ப்படையையும் வாள்பூசலையும் இணைத்து வாசித்தால் அணுகமுடியாமையின் துயரம் நம்மை வந்தடைகிறது
இவ்வாறும் இதற்கு அப்பாலும் நம் வாசிப்பை விரித்துக் கொள்ளலாம். அதுவே கவிதை வாசிப்பு. அதைத்தான் கவிஞன் கோருகிறான். கவிதைக்கு காலம் இல்லை. அழியா நிகழ்காலத்தில் உள்ளது அது. இந்தத்தவிப்பு இன்றைய கவிஞனும் எழுதுவதுதான். காலம்தோறும் அது மாறிமாறி வாசிக்கப்படும், பொருள்கொள்ளப்படும்.. இன்றைய வாசிப்பே நாம் அதற்கு அளிக்கவேண்டியது.
நீங்கள் சுட்டிக்காட்டிய பொருள்கோடலில் உள்ள சிக்கல் என்ன? திணை, துறைப் பிரிவினையின் விளைவான வாசிப்பு அது. இதில் குறவர், அருவி, பன்றி, யானை, மலை ஆகியவை வருவதனால் இதை குறிஞ்சி என வகுத்துக்கொண்டனர். புணர்தலும் புணர்தல் நிமித்தமும் என்பது குறிஞ்சியின் இலக்கணம். ஆகவே இங்கே எங்கே புணர்தல் உள்ளது என தேடினர். இவ்வரிகளில் புணர்தல் இல்லை. ஆகவே வலிந்து அதை கண்டுபிடித்தனர்
திணை,துறை வகுத்து வாசிப்பதென்பது இலக்கண வாசிப்பு. இலக்கியத்தை இலக்கணமாக ஆக்குவது. இலக்கணத்தின் தளையிட்டு பரணர் என்னும் காட்டுக்களிற்றை கட்டியிடுவது அது. அதை நவீன வாசகன் செய்யக்கூடாது. நான் என் சங்கசித்திரங்கள் என்னும் நூலில் இதை விரிவாக விவாதித்திருக்கிறேன்.
இவ்வரிகளில் இருப்பது அணுகமுடியாதவனின் தவிப்பு மட்டுமே. அணுகிவிடுவோம் என்னும் மெல்லிய நம்பிக்கை இருக்கிறது, அது குறவர் தேனை எடுப்பதைப்பற்றிச் சொல்லுமிடத்தில் தெரிகிறது.அந்த நம்பிக்கையின் ஒளியே கார் மீறி மின்னுகிறது போலும்.
ஜெ