தாயுமாதல்

11

 

மத்தியப்பிரதேசத்திலுள்ள ஜான்சி ரயில் நிலையம் மிகப்பிரமாண்டமானது இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் ரயில் பாதைகள் அங்குதான் சந்தித்துக் கொள்கின்றன. அது ஒரு சிலுவையின் மையம் போல. அந்த ஊர் அந்த ரயில்வே நிலையத்து அளவுக்கு பெரியது அல்ல. அன்று அது பெரும்பாலும் தகரக் கூரையிட்ட சிறிய வீடுகளும், குப்பைக் கூளங்களும் இடிபாடுகளும், மிகப்பழமையான கட்டிடங்களும் கொண்ட புழுதிமூடிய ஊர்.

அவ்வூருக்கு சற்று அப்பால் பிரம்மாண்டமான ஜான்சி கோட்டை இருந்தது. ஜான்சி ஊரின் சிறப்பு அங்கு ஜான்சி ராணி லட்சுமிபாய் பிறந்தார் என்பது தான். இக்காரணத்தால் என் ஊரில் பெண்களுக்கு ஜான்சி என்று பெயர் போட்டிருப்பார்கள். என்னுடனேயே இரண்டு ஜான்சி படித்தனர். அது ஊரின் பெயர் என்பது எனக்கே அங்கே சென்ற பின்னர்தான் தெரிந்தது. ஜான்சியின் கைவிடப்பட்ட பெரிய கோட்டையை சுற்றிப்பார்த்தேன். நான் சென்ற போது அங்கே ஒரு சில பயணிகள் மட்டுமே இருந்தார்கள். ஜான்சிராணிலட்சுமிபாயின் அரண்மனையைச் சேர்ந்த பிறபெண்கள் தீயில் குதித்து ஜோகர் செய்து கொண்ட குழி ஒன்றைக் காட்டினார்கள்.

முட்புதர்கள் அடர்ந்திருந்த பெரிய கற்சுவர்களுக்கு இடையே நடந்து கொண்டிருந்தபோது பழமையையும் தனிமையையும் உணர்ந்து கொண்டிருந்தேன். சென்ற காலம் நம்மைத் தனியர்களாக்குகிறது. நாம் வாழும் காலத்தில் மட்டுமே நமக்குத் துணைவர்கள் இருக்கிறார்கள். பிரம்மாண்டமான பருந்து நம்மை நம் கூட்டத்திலிருந்து தன் கால்களால் தூக்கிக் கொண்டு போவது போல கடந்த காலம் கொண்டு சென்று வேறு இடத்தில் போட்டுவிடுகிறது

மூச்சுத் திணற வைக்கும் அனுபவம் அது. இதிலிருந்து எப்படியோ வெளியேறிவிடவேண்டும் என்று தோன்றும். ஆனால் அதன் கனவுத்தன்மை காரணமாக மீண்டும் அதனுள் புகுந்து கொள்ளும் ஆவலும் ஏற்படும். இத்தனை ஆண்டுகளாக அந்த மோகம் கூடிக்கூடித்தான் வருகிறது.

ஜான்சியிலியிருந்து திரும்பி குவாலியருக்கு ரயில் ஏறும்பொருட்டு ரயில் நிலையத்துக்கு வந்தேன். ரயில் நிலையத்துக்கு சுற்றும் உள்ள சிறிய தகரக்கூரையிட்ட உணவகங்களை நோக்கியபடி நடந்தேன். நான் சோறு சாப்பிட்டு பல நாட்களாகிவிட்டிருந்தது. எங்காவது சோறு கிடைக்குமா என்று பார்க்கலாம் என்று நடந்தேன். அன்றெல்லாம் சோறு சமைத்து பெரிய கூம்புத் தாம்பாளங்களில் மலைபோல் குவித்து முன்னால் வைத்திருப்பார்கள். சோறு கிடைக்கும் என்பதற்கான அடையாளம் அதுதான் எழுதி வைக்கும் வழக்கம் இல்லை, வாசிப்பவர்கள் குறைவாக இருந்திருக்கலாம்.

இரண்டு முறை சுற்றியபோது ஒரு உணவகத்தின் முன்னால் சோற்றுக் குவியலைப் பார்த்தேன் அன்று எனக்கு பக்தன் சிவலிங்கத்தைப் பார்த்தது போன்ற ஒரு பரவசம் ஏற்பட்டது. நேராகச் சென்று அதைச் சுட்டிக்காட்டி “கானா?’ என்றேன். “சாவல்!” என்று சொல்லி உள்ளே வந்து அமரும்படி சொன்னார். “டால்?” என்றேன். இருக்கிறது என்று தலையசைத்தார். பிறகு “மூர்த்தி!” என்று அவர் அழைக்க உள்ளிருந்து ஒருவர் வந்து இந்தியில் என்னிடம் சாவல், டால் இரண்டுமே இருக்கிறது. சப்ஜி இருக்கிறது சாம்பார் இருக்கிறது என்றார்,

“சாம்பாரா ?”என்று நான் கேட்டேன். அவர் என்னிடம் “நீங்கள் தமிழா?” என்றார். நான் ஆம் என்று தலையசைத்தேன். “எந்த ஊர்?” என்றார். “நாகர்கோவில்” என்றேன். “நான் மதுரை சார். உள்ளே வாங்க” என்று அழைத்தார் மூர்த்தி.

கடை உரிமையாளர் என்னைப்பார்த்து புன்னகைத்து “சாப்பிடுங்கள் சார்” என்று தமிழில் சொன்னார். ‘இத்தனை தொலைவில் வந்து கடை வைத்திருக்கிறீர்கள்?’ என்றேன். ”வந்தாச்சு” என்றார். அந்தக் கடையில் அப்போது எவருமே உணவருந்திக் கொண்டிருக்கவில்லை. மூர்த்தி என்னை உள்ளே அழைத்துச் சென்றார் உள்ளே தகர மேஜையில் அமரவைத்து உணவு பரிமாறினார்.

நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது காய்கறிக்கூட்டுடனும் மோருடனும் ரசத்துடனும் சமையலறையில் இருந்து வெளியே வந்து பரிமாறி சென்றாள் ஒரு கரிய பெண். காதில் பெரிய ஜிமிக்கி அணிந்திருந்தாள். நெற்றியில் அன்று பரவத்தொடங்கியிருந்த பிந்தி என்று அழைக்கப்படும் தங்க நிற வெல்வெட் பொட்டு ஒட்டியிருந்தாள். மூர்த்தியிடம் சிரித்துப்பேசி ஏதோ இந்தியில் சொல்லிக் கொண்டு உள்ளே சென்றாள்.

”உரிமையாளரின் மனைவி சார். நாங்கள் மூன்று பேர்தான் இந்த ஹோட்டலை நடத்துகிறோம்” என்றார் மூர்த்தி. “அவர்கள் பெயர் என்ன?” என்று கேட்டேன். “சாந்தா” என்று அவர் சொன்னார். சாந்தா மீண்டும் வந்து எனக்கு மேலதிகமான ஒரு அப்பளத்தை அளித்தாள். நான் அவளைப்பார்த்து சிரிக்க என்னைப்பார்த்து சிரித்து “கல்யாணமாகிவிட்டதா?” என்றார் “இல்லை” என்றேன். “சீக்கிரம் கல்யாணம் பண்ணிக் கொள்ளுங்கள்” என்றாள். “ஏன்?” என்றேன். “இல்லாவிட்டால் இப்படித்தான் ஊர் ஊராக செல்லவேண்டியிருக்கும்” என்றாள். “நான் அதனால்தான் கல்யாணம் செய்யாமல் இருக்கிறேன் ”என்றேன். சிரித்துக் கொண்டு அவள் உள்ளே சென்றாள்.

மூர்த்தி என்னிடம் என்னுடைய வேலை மற்றும் ஊர் குடும்பம் அம்மா அப்பா எல்லாவற்றையும் பற்றி பேசினார். என் அம்மாவும் அப்பாவும் இறந்துவிட்டார்கள் என்று சொன்னபோது வருத்தப்பட்டு “அவள் சொன்னது சரிதான் சார். உங்களைப்பார்த்ததுமே தாய் தந்தை இல்லாதவர் என்று தெரிந்திருக்கிறது ஆகவே தான் உங்களை திருமணம் செய்து கொள்ள சொல்கிறாள். மிகவும் நுட்பமானவள். உடனே திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்றார். நான் சிரித்துவிட்டு “சரி” என்றேன்.

சாப்பிட்டு கைகழுவி பணம் கொடுத்துவிட்டு நான் கிளம்பியபோது மூர்த்தியும் வேட்டியை மடித்துக் கட்டியபடி என்னுடன் வந்தார். நாங்கள் சாலையில் நடந்தபோது “இங்கெல்லாம் வேட்டியை இப்படி மடித்துக் கட்டமாட்டார்கள். நான் ஆரம்பத்தில் வந்த்போது இப்படிக்கட்டக்கூடாது என்று என்னிடம் பலபேர் சொன்னார்கள். இப்படி வேட்டியை கட்டுவது நம் மதராசிகளுடைய உரிமை. நான் அதை ஏன் விட்டுக் கொடுக்கவேண்டும்? இவர்கள் யாராவது இவர்களுடைய பழக்கத்தை விட்டுக் கொடுக்கிறார்களா? மதுரையில் அடகுக் கடை வைத்திருக்கும் சேட்டுகள் கூட காந்தி குல்லாய் வைத்துக் கொண்டு தானே அலைகிறார்கள்?” என்றார் மூர்த்தி. “ஆம் விடவே கூடாது” என்று நான் சொன்னேன்.

மூர்த்தி என்னிடம் “ஒரு டீ சாப்பிடலாம் சார்” என்றார். “டீயா இப்போது தானே சோறு சாப்பிட்டேன்?” என்றேன். “இங்கெல்லாம் சோறுக்கு பிறகு டீ சாப்பிடும் வழக்கம் உண்டு வாருங்கள்” என்று கூட்டிச் சென்று ஒரு டீக்கடையில் டீக்கு உத்தரவிட்டார். சிறிய மண் கோப்பைகளில் டீ வந்தது. மிக கசப்பான கொழுப்பான டீ. அதை ஒரு கீர் என்று தான் சொல்லவேண்டும்.

மூர்த்தி “இங்கெல்லாம் இப்படித்தான் வாயில் ஊறுவது போல டீ போடுகிறார்கள். ஆரம்பத்தில் எனக்கு குமட்டல் வரும் இப்போது இது பழகிவிட்டது. ஒரு போதைப்பொருள் மாதிரி அதை சாப்பிடுகிறேன் ” என்றார்.

பிறகு அந்தக் கடையிலிருந்து ஒரு மாவா வாங்கி அதைக் கையில் வைத்து அடித்து கசக்கி தூளாக்கி வாயில் ஈறுகளுக்கு இடையில் செருகிக் கொண்டார். ”இது இல்லையென்றால் இங்கு நிம்மதியாக இருக்கமுடியாது சார்” என்றார். ”ஏன்?” என்றேன். “இதைப் போட்டுவிட்டால் எல்லா படபடப்பும் அடங்கிவிடும். இல்லாவிட்டால் கைகள் நடுங்கும் எங்கோ ரயிலைத் தவறவிட்டது போலவே இருக்கும்” என்றார்.

“முன்பு இந்தப் பழக்கம் இருந்ததா? என்றேன். “இல்ல சார் இதெல்லாம் நம்ம ஊரில் கிடையாது. இங்கே வந்தபிறகு தான் இது ஆரம்பித்தது. ஆனால் இதைப் போட்டால் எவ்வளவு நேரமாயிற்றென்று தெரியாது. காலையா மாலையா என்று கூட தெரியாது. நமது வேலையை நாம் செய்து கொண்டே இருப்போம். எவ்வளவு வேலை செய்தோம் என்று கூட நமக்குத் தெரியாது. நானெல்லாம் ஒரு நாளைக்கு ஐந்தாயிரம் சப்பாத்திகள் போட்ட நாள் கூட உண்டு. என்னைக் கேட்டால் எத்தனை சப்பாத்திகள் போட்டேன் ஐந்தா ஐந்தாயிரமா என்று கூட சொல்ல முடியாது”.

“கடை எப்போது வியாபாரம் ஆகும்?” என்றேன். “இங்கெல்லாம் வியாபாரம் என்பதெல்லாம் சாயங்காலம் மட்டும் தான் இங்குள்ளவர்கள் பகலில் சாப்பிடுவது மிகவும் குறைவு. பார்த்தீர்களா எல்லாரும் மெலிந்து வயிறு ஒட்டித்தான் இருக்கிறார்கள். இரண்டு வேளைக்கு மேல் உணவுண்பவர்களை இங்கே பார்க்கமுடியாது வீடுகளைப்பாருங்கள் தகரக்கூரைப் போட்டு மேலே கல்லை தூக்கி வைத்திருக்கிறார்கள். நமது ஊரே கொஞ்சம் தரித்திரமாகத்தான் இருக்கும். இது அதைவிடப்பரிதாபமாக இருக்கிறது” என்றார்.

“அப்படியென்றால் ஏன் இங்கு வந்து கடை வைத்தீர்கள் ?’ என்று நான் கேட்டேன்.” நான் கடை வைக்கவில்லை நான் வேலைக்கு வந்தேன்” என்றார். “வேலைக்கா, இவ்வளவுதூரமா?” என்றேன். “நீங்கள் பார்த்தீர்களே சாந்தா, அவள் என்னுடைய மனைவிதான்” என்றார். “உரிமையாளரின் மனைவி என்று சொன்னீர்களே?” என்றேன். “அந்த உரிமையாளர் அங்கே எங்கள் வீட்டுப்பக்கத்தில் ஒரு சிறிய டீக்கடை வைத்திருந்தார். நான் அங்கு பழைய இரும்பு பொருட்களை வைத்து விற்றுக்கொண்டிருந்தேன். ஒரு நாள் இவள் என்னைவிட்டு இவருடன் ஓடிவந்துவிட்டாள்” என்றார்.

எனக்கு அவர் என்ன சொல்லவருகிறார் என்பதே குத்துமதிப்பாகத்தான் புரிந்தது. “நான் அவளை தேடாத இடம் கிடையாது. எந்தத் தகவலும் இல்லை. அப்போது தான் இவர் கடையை காலி செய்துவிட்டுப்போன தகவல் தெரிந்தது. ஒரு சின்ன சந்தேகம் இருந்தது. ஏனென்றால் பலமுறை இவர்கள் ஒருவரை ஒருவர் கண்களால் பார்த்துக் கொள்வதை வைத்து ஏதோ உறவிருக்கும் என்று நான் ஊகித்திருந்தேன். ஆகவே இவருடைய வீட்டுக்குச் சென்று கேட்டேன். அங்கும் எதுவும் தகவல் தெரியவில்லை. இவருடைய மனைவி முன்னால் இறந்துவிட்டிருந்தார். தனியாகத்தான் இருந்தார்”

”நான் விசாரித்துக் கொண்டே இருந்தேன்” என்றார் மூர்த்தி “ஒருவருடம் கழித்து தான் இவருடைய கடிதம் ஒன்று இவர் தங்கைக்கு வந்தது. அந்த கடிதத்திலிருந்த விலாசத்தை தெரிந்து கொண்டு நேராக இங்கே வந்துவிட்டேன்” என்றார். நான் அவர் என்ன சொல்லப்போகிறார் என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். “நான் வந்து இவளை அடித்தேன். அவள் என்னைத் திருப்பி அடித்து என்னுடன் வரமாட்டேன் என்று சொன்னாள். நான் கெஞ்சினேன். காலில் விழுந்து அழுதேன் என்னை கைவிட்டுவிட வேண்டாம் என்று சொன்னேன்”

“அவள் என்ன சொன்னா?” என்றேன். “பெண்களின் மனம் இறுகிவிட்டால் ஒன்றுமே செய்ய முடியாது சார். இரும்பு போல. ஈவு இரக்கம் ஒன்றும் இல்லை” என்றார் மூர்த்தி. “அவர் ஒன்றும் சொல்லவில்லையா?” என்றேன். “அவள் வந்தால் கூட்டிக் கொண்டு போ எனக்கொன்றும் பிரச்னையில்லை என்று சொன்னார். எனக்கு வேறு ஒன்றும் தெரியவில்லை. நான் இரண்டு நாட்கள் அந்தக் கடைக்கு வெளியே சாலையில் ஒரு கல்லிலே தான் அமர்ந்திருந்தேன். இரண்டாவது நாள் அவளே வெளியே வந்து என்னைக் கூப்பிட்டு உட்காரவைத்து சப்பாத்தியும் டாலும் தந்தாள். நான் அதை சாப்பிட்டுவிட்டு அழுதேன் அவள் இங்கேயே இருந்து கொள் என்று சொன்னாள். நான் சரி என்று சொன்னேன்.”

“உங்கள் மனைவியாகவா இருக்கிறாள்?” என்றேன். “இல்லை சார் நான் அவர்கள் வீட்டு வேலையாளாக இருக்கிறேன். அவருக்குத்தான் மனைவியாக இருக்கிறாள். ஆனால் நான்தான் இங்கே சமையல் பரிமாறுதல் எல்லாத்தையும் பார்த்துக் கொள்கிறேன். நான் வந்த பிறகு தான் வியாபாரம் நன்றாக நடக்கிறது. எனக்கெல்லாம் ஒரு குறையுமில்லை சார். வேட்டி துணியெல்லாம் எடுத்துக் கொடுப்பார்கள். நல்ல சாப்பாடு. அவள் மிகவும் அன்பாகத்தான் இருக்கிறாள்” என்றார்.

“அவர்களுக்கு குழந்தைகள் இருக்கிறதா?’ என்று கேட்டேன். “நான் வந்த பிறகு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. மூத்த குழந்தை மூன்றாம் வகுப்பு படிக்கிறது. சின்னக்குழந்தைக்கு ஒருவயது” என்றார். “நீங்கள் அவளிடம் அன்பாகத்தான் பேசியது போலத் தெரிந்தது” என்றேன். “ஆமாம், அவர்கள் என்னை நன்றாகத்தானே பார்த்துக் கொள்கிறார்கள். நான் மிகவும் அன்பாகத்தான் இருக்கிறேன். அந்தக் குழந்தைகளை நன்றாகத்தான் பார்த்துக் கொள்கிறேன். மூத்தவளை ஒவ்வொரு நாளும் நான் தான் பள்ளிக்கு கொண்டு சென்று விட்டு கூட்டிக்கொண்டு வருகிறேன். சிறிய குழந்தையை இரவில் என் பக்கத்தில் படுக்கவைத்து தூங்குவதுண்டு” என்றார்.

நான் அவர் என்னிடம் இதையெல்லாம் சொல்வதற்காகத்தான் வந்திருக்கிறார் என்று தெரிந்து கொண்டேன். எப்படி இதை புரிந்துகொள்வது என்று எனக்குத் தெரியவில்லை. அவர் சொல்லாத ஏதோ அதில் இருந்தது. திடீரென்று அவர் “பிள்ளைக இருக்கில்ல சார்? இல்லேன்னா எப்பவோ விட்டுட்டு போயிருப்பேன். இந்தப்பிள்ளைகளால் தான் என் வாழ்க்கைக்கு அர்த்தமே வந்திருக்கிறது. நான் கடுமையாக வேலை செய்வதே இந்தப் பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டுமென்பதற்காகத்தான்” என்றார். அப்போது அவர் கண்கள் கலங்கின.

நான் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு டெல்லிக்கு ரயில் ஏறினேன். நெடுநாட்கள் அவரது முகம் நினைவில் இருந்தது. எனக்கு குழந்தைகள் பிறந்தபோது தான் நான் ஒன்றை உணர்ந்தேன். பெண்ணுக்குள் இருப்பதற்கு சமானமான அன்னை ஒருத்தி ஆணுக்குள்ளும் இருக்கிறாள். ஆண்களை இவ்வாழ்க்கையில் கட்டிப்போட்டிருப்பது எது? அந்த தாய்மைதான்.

[குங்குமம் முகங்களின் தேசம் தொடரில் இருந்து]

முந்தைய கட்டுரைசட்டமும் அறமும்
அடுத்த கட்டுரைகருத்துரிமையும் இடதுசாரிகளும்