பெருமாள் முருகன் தீர்ப்பு- சட்டத்தின் நோக்கில்…

1

 

ஆசிரியருக்கு,

இணைப்பு –http://www.legallyindia.com/bar-bench-litigation/read-justice-sanjay-kishan-kaul-s-epic-defence-of-freedom-of-expression-author-perumal-murugan

நீங்கள் நீதிமன்றங்களுக்கு வழங்கியிருக்கும் பாராட்டுதல்கள் சற்று அதிகப் படியானது, போகட்டும்.

முதலில் இந்த விஷயத்தில் இரண்டு முக்கிய பேசுபொருட்கள் சற்றேறக் குறைய அனைத்து விவாதங்களிலும் இத்தீர்ப்பிலும் விடுபட்டுள்ளது.

புனைவென்பதும் ஒரு மாற்று வரலாறே : தற்போது வரலாற்று மறுஉருவாக்கம் ஏராளமாக அசலிலும் மொழிபெயர்ப்பிலும் வருகிறது. நிகழ்ந்த சம்பவங்களுக்கும் புனைவுக்குமான கோட்டை கடந்த சில ஆண்டுகளுக்குள்ளாக கிட்டத்தட்ட அழித்தே விட்டது புனைவு எழுத்து. இப்புனைவு இதை ஒரு மாற்று வரலாறு என கோருகிறது. அது போக ஏற்கனவே எழுதப்பட்ட வரலாறை ஒரு புனைவு எனவும் குற்றம் சாட்டத் துவங்கி விட்டது.

ஆய்வுக் கட்டுரைகளில் சான்றாக புனைவுகளை சுட்டும் போக்கும் இன்று உள்ளது. ஆக இன்றைய தேதியில் புனைவு என்பது சான்றாக முன்வைக்கத் தகாத கற்பனை அல்ல, ஆதாரமாகும் அளவுக்கு மதிப்புடையது என ஆகிவிட்டிருக்கிறது.

மாதொரு பாகன் ஒர் ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்டது என ஆசிரியர் தனது முன்னுரையில் கூறுகிறார். பின்னர் சர்ச்சை எழுந்தவுடன் இது கற்பனை தான் என மாற்றிக் கூறினார். எனவே இது உண்மையா அல்லவா என்பன பற்றி நீதிமன்றம் ஒரு முடிவு செய்திருக்க வேண்டும். இதற்கான பதிலை எதிர்மனுதாரரான அரசிடம் இருந்து கேட்டுப் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் அரசின் நிலைப் பாடு என்ன என தெரிவிக்க வற்புறுத்தியிருக்க வேண்டும். இதை தடை செய்யலாமா வேண்டாமா எனக் கூட அரசு தெரிவிக்கவில்லை. ஆக இவ்வழக்கில் நீதிமன்றம் முதலில் ஒரு சிந்தனைக் குறையுடனேயே தான் இதை அணுகியுள்ளது. கூடவே போதிய திடமற்றும் இதை அணுகியுள்ளது.

நிதி பெற்று எழுதும் புனைவின் மதிப்பு : இந்நாவலுக்கு டாட்டா நிறுவன நிதி பெறப்பட்டதாக அதன் முன்னுரையிலேயே உள்ளது, அந்நிறுவனம் ஃபோர்டு நிறுவன உதவிபெற்றது. இது பற்றி இந்துத்துவ எதிர்தரப்பு நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் தெரிவித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் இதை ஒரு விவாதப் பொருளாக மாற்றியிருக்க வேண்டும், அவைகளும் இதை செய்யத் தவறி விட்டன.

ஆனால் இந்த முற்போக்கு, பெரியாரிய பாரம்பர்யத்தில் வந்த பெருமாள் முருகனுக்கு அவர் சார்ந்துள்ள சிந்தனைப் பள்ளியைப் போன்றே இந்து பண்பாட்டின் மீது எவ்வித மரியாதையும் இல்லை என்கிற ஒரு தரப்பையாவது அது சொல்லி இருக்கிறது. இந்த சிந்தனை பொதுவெளியில் வர வாய்ப்புள்ளது. .ஆனாலும் இந்த எதிர் தரப்பும் ஒரு சிந்தனைக் குறையுடனேயே இதை அணுகியுள்ளது.

 

**

ஆனாலும் நீதிமன்றம் இத்தீர்ப்பில் கவனிக்கத்தக்க இரண்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது, கூடவே இரண்டு குறிப்பிடத்தக்க அவதானிப்புகளும் உள்ளன. இது பொதுவெளியில் நமது சிந்தனையை சற்று உயர்த்தும்.

  • இதுபோன்ற சம்பவங்களில் RDO க்கள் மட்டும் விசாரிக்கக் கூடாது, கலை இலக்கிய நிபுணத்துவம் உடையவர்கள் இந்த சமரச நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க வேண்டும்
  • நமது கலைகளிலும் இலக்கியத்திலும் நியோகம் உள்ளிட்ட பல வாழ்க்கை முறைகள் சித்தரிக்கப் பட்டுள்ளன. தற்போது நிலவுவது விக்டோரியா நெறி. நாம் நமதைதான் முன் வைக்க வேண்டும்.
  • இது போன்ற விஷயங்களில் ஒரு சராசரியின் பார்வையில் இந்நாவலை அணுக்க கூடாது ஒரு வலுவான நுண்ணுணர்வுள்ள நபரின் பார்வையில் தான் அணுகவேண்டும், கலைஎன்பது பொதுவாகவே எல்லோருக்குமானது அல்ல. ஒரு வலுவான நுண்ணுணர்வுள்ள வாசகனின் பார்வையில் இது அவதூறோ ஆபாசமோ அல்ல.
  • தமிழகத்திலும் இந்தியாவின்பிற பகுதிகளிலும் இதற்கு (விழாக்களில் கட்டற்ற பாலியல் உறவு) சான்று உள்ளது. ஒரு காலத்தில் தவறாக உள்ளது பிறகு சரியாகும், அதேபோல மாறாகவும் ஆகும்.

***

இந்த தீர்ப்பின் அடிப்படையில் நமது சிந்தனையை வளர்த்துக் கொள்ள சிறிது இடம் தான் உள்ளது. மற்றபடி இத்தீர்ப்பில் சான்றாக எடுத்துக் கொள்ளப்பட்ட தமிழில் எழுதப்பட்ட கிட்டத்தட்ட அனைத்து மாதொருபாகன் ஆதரவுக் கருத்துக்களும் (உங்களது “சிலுவையின் பெயரால்” நூலில் உள்ளவை நீங்கலாக ) இந்த சர்ச்சை எழுந்த பிறகு  ஒரு தரப்பு எடுத்து எழுதப்பட்டவையாகும். பரிசீலனையில் இது சற்று தகுதி குறைவே.

ஒரு வாசகனாக இவ்விஷயத்தில் எனது கருத்து –

அ.இது ஆய்வுக்கான நிதி பெற்று ,ஆய்வு என்றே எழுதப்பட்டது. ஆனால் ஆய்வு அல்ல. எனவே இதற்கு பெரிய முக்கியத்துவம் இல்லை.

ஆ.பெருமாள் முருகன் தனது முன்னுரையை மீறி நீதிமன்றத்தில் இது ஆய்வல்ல புனைவே எனக் கூறியது பிழையானது. அது பிரச்னையின் தீவிரம் கருதி பின்னர் கூறப்பட்டது. அவ்வாறு அவர் சொல்லியிருக்கக் கூடாது.

இ. ஆய்வின் அடிப்படையில் இது சற்றேனும் உண்மை என்றால்தான் இன்றைய தேதியில் (2005 இக்குப் பிறகு கூட) ஒரு புனைவில் இதை சேர்க்க முடியும். அவ்வாறு குறைந்தபட்சத் தரவுகள் இல்லை எனில் (இது அக்காலத்தில் நமது கலாச்சார வழக்கம் என்றாலும் கூட) இன்றைய புனைவு- மாற்று-வரலாறுக் காலத்தில் இது ஒருவகை அவதூறே.

கிருஷ்ணன்

வழக்கறிஞர்

ஈரோடு

 

 

1அன்புள்ள ஜெ, பெருமாள் முருகன் தீர்ப்பை வாசித்தேன். சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். திருச்செங்கோடு மக்களுக்கும் அவர்களின் பிரதிநிதிகளுக்கும் ஒரு சாதாரண குற்றவழக்குக்கும் இப்படிப்பட்ட கலாச்சாரப் பிரச்சினை உள்ள வழக்குக்கும் வேறுபாடு தெரியவில்லை. அவர்கள் வழக்கமான அடிதடிப் பிரச்சினையை கையாளும் வழக்கறிஞர்களை அமைத்திருக்கிறார்கள்.
இந்துத்துவத் தரப்பினர் வழக்கம்போல மொக்கையான, கட்சி சார்புள்ள வழக்கறிஞரை நியமித்துள்ளனர். அவர்களுக்குச் சாதகமான எந்த அம்சத்தையும் இந்த வழக்கறிஞர்கள் அறிந்திருப்பதாகவே தெரியவில்லை.
இந்த இருதரப்பும் சரியான வழக்கறிஞர் தேவை என்ற கோணத்தில் அணுகியிருக்கமாட்டார்கள், வழக்கறிஞர் நம்மாளா என்று மட்டுமே பார்த்திருப்பார்கள் என நினைக்கிறேன்.ஆகவே இது இதை ஒரு முக்கியமான பண்பாட்டுப் பிரச்சினையாக அணுகிய காலச்சுவடின் வழக்கறிஞரின் வெற்றி. காலச்சுவடு சரியான வழக்கறிஞரை நியமித்து, அவருக்குச் சரியான தரவுகளையும் அளித்துள்ளது. தீர்ப்பு மொத்தமும் காலச்சுவடு வழக்கறிஞர் அளித்த தரவுகளே விரவிக்கிடக்கின்றன- உங்கள் மேற்கோள் உட்பட

 

வழக்கறிஞர் என்றமுறையில் காலச்சுவடு வழக்கறிஞர் சுரேஷ் அவர்களை பாராட்டுகிறேன். இது அவரது சாதனை.

திருநாவுக்கரசு

 

index
Sanjay Kishan Kaul

 

அன்புள்ள நண்பர்களுக்கு,

நான் தீர்ப்பின் சுருக்கத்தை வாசித்தேன். அதன்பின் முழுத்தீர்ப்பையும் தேவையான பகுதிகளை மட்டும் வாசித்தேன். முக்கியமான தீர்ப்பு.

இதைப்பற்றி என் தரப்பைச் சொல்லி முடிக்கலாமென நினைக்கிறேன்

  1. ஓர் ஊர் அல்லது குடும்பம் அல்லது தனிமனிதரைப்பற்றி எழுத்தாளர் எழுதும்போது, அதை அவர் ஆய்வுமுடிவாக கண்டடைந்த உண்மை என்று சொல்லும்போது. அதை அவதூறு என்று கருத அவர்களுக்கு உரிமை உண்டு
  2. அதை அவர்கள் கருத்தியல் தளத்தில் எதிர்கொள்ளலாம். அது போதாது என்றால் சட்டபூர்வ முறைகளில் மேற்கொள்ளலாம்.
  3. ஆனால் அவர்கள் அதன்பொருட்டு கும்பல் கூட்டி சட்டத்தைக் கையில் எடுப்பார்கள் என்றால் அது மிகத்தவறான முன்னுதாரணம். அதன்பின் எல்லா கலாச்ச்சாரச் செயல்பாடுகளுக்கும் கும்பலின் அங்கீகாரம் தேவை என்றாகிவிடும். கும்பல் கூட்டத்தெரிந்த எவரும் கலாச்சாரச் செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியும். நீதிமன்றத்தின் தீர்ப்பு இங்கேதான் முக்கியமானது ஆகிறது
  4. அரசு அதிகாரிகளின் கடமை சட்டம் ஒழுங்கைப் பேணுவது மட்டுமே. கலாச்சாரநடவடிக்கைகளை தீர்மானிப்பது அல்ல. ஆகவே அவர்கள் சமரசம்பேசியதும், பெருமாள் முருகனுக்கு அழுத்தம் அளிப்பதாக அது மாறியதும் இயல்பானதே
  5. இத்தீர்ப்பு அவர்கள் இத்தகைய கலாச்சாரப் பிரச்சினைகளில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என தெளிவாக வழிகாட்டியிருக்கிறது. சட்டம் ஒழுங்கைப் பேணுவது அவர்களின் கடமையே. ஆனால் கலாச்சார நடவடிக்கைகளுக்கு எதிரானதாக அது ஆகிவிடக்கூடாது. அவர்கள் நிபுணர்களின் உதவியை நாடவேண்டும். பேச்சுரிமை, சிந்தனை உரிமையை பாதுகாக்கவேண்டும் என வலியுறுத்துகிறது. அதற்கு அவர்கள் மேலதிக உதவிகளைக் கோரியிருக்கவேண்டும் என வழிகாட்டுகிறது.
  6. ஒரு தனிநபரின் சிந்தனைப் பேச்சுரிமையின்மீது ஒரு குழுவோ அல்லது அரசுநிர்வாகமோ கட்டுப்பாடுகளையோ நிபந்தனைகளையோ விதிக்கக்கூடாது, அதை அரசு அனுமதிக்கக்கூடாது என ஆணையிடுகிறது
  7. நாவலின் மொழி முரட்டுத்தனமானது, அது சற்று எல்லைமீறி நயமற்று பேசுகிறது என்றே நீதிபதி கருதுகிறார். ஆனால் அது அந்நாவலை தடுப்பதற்குரிய காரணம் அல்ல என்கிறார்.

அவ்வகையில் இது முக்கியமான தீர்ப்பே. நீதிபதி சஞ்சய் கிஷன் கௌல் நன்றிக்குரியவர்.

ஜெ

முந்தைய கட்டுரைகுடைநிழல் -மென்மையின் வல்லமை
அடுத்த கட்டுரைவெண்முரசு கலந்துரையாடல் : சென்னை – ஜூலை 2016