பவாவும் யோகியும் நானும்

1992ல் நான் நண்பர் பவா செல்லத்துரையுடன் சென்று யோகி ராம் சுரத் குமாரைச் சந்தித்தேன். சின்னஞ்சிறிய ஒரு திண்ணை. கிட்டத்தட்ட பாழடைந்தது. அதில்தான் அவரது வாசம். உள்ளும் வெளியும் பெருங்கூட்டம். கைகளில் பூசைத்தட்டுகள். ‘யோகி ராம் சுரது குமார்!’ என்ற பஜனை. நாங்கள் வெளியே பிதுங்கி நின்றிருந்தோம். அப்போது யோகியே பவாவை அடையாளம் கண்டு ‘பவா…வா வா’ என்று கூவினார். கூட்டம் பிளந்து வழியாகியது.

உள்ளே சென்று இயல்பாக அவர் முன் அமர்ந்துகொண்டோம். நான் அன்று ஒரு நீண்டதேடல் முடிந்து போலிகள் வழியாக பயணம்செய்து சோர்ந்து சாமியார்கள்மேல் கசப்புடன் இருந்த காலம். நித்யாவைச் சந்தித்திருக்கவில்லை. அவர் முன் அமர்ந்தேன். அவர் உற்சாகமாக என்னிடம் பேச ஆரம்பித்தார். நான் அவரை சீண்டினேன். விமர்சனம் செய்தேன். அவர் சிரித்தார். மீண்டும் மீண்டும்.

கூட்டம் பொறுமை இழந்துகொண்டே இருந்தது. நான் கிளம்ப எண்ணினேன். அவர் விடவில்லை. உட்கார் என்று தரையை தட்டி ஆணையிட்டுக் கொண்டே இருந்தார். நெடு நேரம் ஆனதும் நானே எழுந்து கொண்டேன். ஒரு ஆப்பிளை எனக்கு அளித்தார். ‘என் தந்தை உன்னை ஆசீர்வதிப்பார்’ என்றார். பின்னர் இன்னொரு ஆப்பிளை அளித்து ‘உன் மனைவிக்கு’ என்றார். அப்போது அவள் அஜிதனைக் கருவுற்றிருந்தாள்.

அன்று அவர் எனக்குள் நுழையவில்லை என்றே சொல்ல வேண்டும். மீண்டும் வரும்படி அவர் இருமுறை அழுத்திச் சொன்ன பிறகும்கூட நான் செல்ல வில்லை. அங்கிருந்த கூட்டம் மானசீகமான தடையாக இருந்தது. மெல்ல மெல்ல அவரைச் சுற்றி ஒரு பெரும் அமைப்பு உருவாகி எங்களைப் போன்றவர்கள் அவரை நெருங்க முடியாமலாக்கியது.

ஓரிரு நாட்களுக்குள் நான் நித்ய சைதன்ய யதியைச் சந்தித்தேன். இச்சந்திப்பைப் பற்றி அவரிடம் பேசினேன். அதன்பின்னரே நான் யோகியை உள்ளூர வாங்கிக் கொண்டேன் எனலாம். இன்று அவர்மேல் சுமத்தப் பட்டுள்ள புராண வேடங்களை தாண்டிச் சென்று அவருள் இருந்த விடுபட்ட மனிதனை, முழுமையானவனை, யோகியை என்னால் காண முடிகிறது. அந்த ஆப்பிள் அவரது அருள் என நினைக்கிறேன். தான் கனிந்தவர்கள் பிறருக்கு அக்கனிவை எப்பொருள் வழியாகவும் கொடுக்க முடியும்

அவருடனான சந்திப்பை நான் பலவருடங்கள் கழித்து சொல் புதிதில் எழுதினேன். என் ‘வாழ்விலே ஒருமுறை’ நூலில் அக்கட்டுரை உள்ளது. இப்போது என் பிரிய நண்பர் பவா செல்லத்துரை எழுதியிருக்கும் இக்கட்டுரை வழியாக நினைவுகளை மீட்டுக் கொண்டேன்

http://bavachelladurai.blogspot.com/2009/06/impossible-friend-1.html
http://bavachelladurai.blogspot.com/2009/07/impossible-friend-2.html

முந்தைய கட்டுரைகாந்தியும் விதவைகளும்
அடுத்த கட்டுரைராஜராஜன், மேலும் கடிதங்கள்