குடைநிழல் -மென்மையின் வல்லமை

asd

அன்புள்ள ஜெயமோகன்,

தி ஹிந்து நாளிதழில் மண்குதிரை எழுதிய “குடைநிழல்” குறுநாவலின் மதீப்பிட்டை வாசித்துவிட்டு, அக்குறுநாவலை மிகச்சமீபத்தில்தான் வாசித்தேன். தெளிவத்தை ஜோசப் மிகமுக்கிய கதை சொல்லி என்பதில் சந்தேகமேயில்லை.

மிக நேரடியான மொழியில் சொல்லிவிட்டுச் செல்லும் சம்பவ சித்தரிப்புகள். இத்தனை நேரடியான யதார்த்தவாத சித்தரிப்பு தேவையா என்றால் அதுவே இக்குறுநாவலின் அழகியலாகவும் பலமாகவும் இருந்துவிடுகின்றது.

கைது விசாரணைகள் என்று வரும்போது நாயகனுக்கு நேரும் அனுபவத்தைவிட அவன் கேள்விப்பட்ட அனுபவம்தான் இம்சிக்க வைக்கின்றது. எத்தனை எளிமையாக ஒருவனை வீழ்த்த முடிகின்றது. உண்மையில் இந்த நாவலின் மையம் அதிகாரம் என்றே பட்டது. அதிகாரத்தின் உச்சியில் எழும் கொந்தளிப்பின் விளைவே நாவலின் கதை. அந்த அதிகாரம் ஒரு கட்டத்தில் அழியும் என்ற நம்பிக்கை நாவலில் இருக்கின்றது.

என்னை மிகக்கவர்ந்தது நாயகனின் தந்தையார் பற்றிய சித்தரிப்பு. தந்தையைச் சிறுவனாக இருக்கும்போது அவன் அணுகும் கண்ணோட்டமும், நுண்மையான சித்தரிப்புகளும் வீரியம் மிக்க இலக்கியமாக்குகின்றது. தோட்டத்தில் கங்காணியாக, தேவைக்கு அதிகமான பணத்தில் புரளும் அவனது தந்தையின் வாழ்வு மிகச் சொகுசாக இருக்கின்றது. வௌவால் இறைச்சி, காளான் கறி, ஹித்துள் கள்ளு குடிப்பது என்று அவரின் வாழ்க்கை நீள்கிறது. புறவயமான சித்தரிப்புக்களும் நுண்ணியத் தகவலும் விவரிப்புக்களை அழகாக்குகின்றது. தலைக்கேறும் போதையில் தடுமாறுவதும், சுருட்டு பற்ற வைப்பதில் ஏற்படும் தடுமாற்றங்களும் தேர்ந்த எழுத்துகளால் சித்தரிக்கப்படுகின்றன.

ஒரு நாள் குடிபோதையில் மனைவியை, வேலைக்காரன் கிருஷ்ணாவுடன் இணைத்துப் பேசுகிறார். அனைத்தையும் அந்தநாள் மாற்றிப்போட்டு விடுகின்றது. தினமும் தந்தையின் கொடுமையை அனுபவித்துவந்த அவன் தாய் ஒரு கணப்பொழுதில் யட்சியாகின்றாள். உக்கிரமாகப் பொங்கி எழுகிறாள். அந்த உக்கிரம் அவரை நடுங்கச் செய்கின்றது. ஒரு கணத்தில் அதிகாரம் இல்லாதவராக உணர்ந்து பயந்து நடுங்கி ஒதுங்குகின்றார்.

பூ வேலைப்பாடுகள் கொண்ட மரக்கால் கட்டிலை, லாம்பெண்ணை ஊற்றித் எரிக்கின்றாள். இருவரும் இணைந்து இன்புற்றிருந்த கட்டில் எரிகிறது. இருவருக்கும் இடையிலான உறவு முடிவுக்கு வருகின்றது. பிள்ளைகளுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். தந்தை அழிந்து இல்லாமல் போகிறார். அதிகாரத்தின் பிடி கொந்தளிக்கவைத்த ஆட்டம் அவரைச் மெல்லமெல்ல கரைந்துபோக வைகின்றது.

இலங்கை இலக்கியத்தில் இக்குறுநாவல் மிக முக்கியமான அரசியல் பதிவாக எப்போதும் இருக்கும். பிளவுண்டிருக்கும் இனவாதம், மொழிவாதம், பிரதேசவாதம் ஏதோவொரு விதத்தில் இரண்டு இனத்தையும் சேர்ப்பதும், அதிகாரத்தின் சுயநலம் அதனைப் பிரிப்பதுமாக இருக்கின்றது. அதே நேரம் இனத்துக்குள் உள்ளிருக்கும் பிரதேசவாத முரண்பாடுகளையும் உய்த்தறிய வைகின்றது.

தந்தையின் அதிகாரப் பின்னணியும் அவை உதிர்ந்து சென்று பலகாலம் ஆனபின், நாலாம் மாடியில் சிறைச்சாலையில் அவன் காத்திருக்போது தந்தையின் வாழ்கையில் அதிகாரம் வீழ்ந்த கணத்தை எமக்கு நினைவூட்டுகின்றது. அவன் சிக்குண்டிருக்கும் அதிகாரம் ஒரு கட்டத்தில் விலகும் என்றே அது நம்பவைக்கின்றது. அதிகாரம் ஒரு குடை நிழலாக இருக்கின்றது. அந்த நிழல் விலகும் தருணமே ஒடுக்கப்பட்டவனுக்கு விடிவாக இருக்கின்றது.ஆனால், அந்த தருணம் எப்படி வாய்க்கும்? அதையே இக்குறுநாவல் கேள்விகளாக எழுப்பிக்கொண்டு இருகின்றது.

அன்புடன்
அனோஜன் பாலகிருஷ்ணன்

 

முந்தைய கட்டுரைஅயல் வாழ்க்கை – குறிப்பு
அடுத்த கட்டுரைபெருமாள் முருகன் தீர்ப்பு- சட்டத்தின் நோக்கில்…