ப்ரெக்ஸிட் முடிவும் கொய்மலர் வர்த்தகமும்

Eyal, Mallika and Me

 

 

ப்ரெக்ஸிட் முடிவும் கொய்மலர் வர்த்தகமும்

1.கென்ய மலர் மன்றம் தன் சுற்றறிக்கையில், ப்ரெக்ஸிட் முடிவினால் கென்ய கொய்மலர் ஏற்றுமதி குறிப்பிட்ட அளவு சரிவடையக்கூடும் என்று அறிவித்துள்ளது.

2.உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடான பிரிட்டன், மலரும், மலர் சார்ந்த பொருட்களிலும் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் யூரோக்கள் சந்தை பங்கு கொண்டதும், நெதர்லாந்தின் இரண்டாவது பெரிய இறக்குமதி சந்தையுமாகும். அதன், 2015-ன் நெதர்லாந்திலிருந்து கொய்மலர் மற்றும் உள்ளரங்க செடிகள் இறக்குமதி மதிப்பு 900 மில்லியன் யூரோக்கள். பிரிட்டனின் மொத்த கொய்மலர் விற்பனையில் 15 சதவிகிதம் மட்டுமே உள்நாட்டு உற்பத்தி. பிரிட்டனின் மலர் இறக்குமதி நிறுவனங்கள் மெல்லிய பதட்டத்திலுள்ளன.

ஜெர்மன், இத்தாலி, டென்மார்க், பெல்ஜியம் போன்ற ஐரோப்பிய நாடுகளின் மலர் வர்த்தக நிறுவனங்கள் குழப்பத்தில். கொலம்பியாவும், ஈக்வடாரும் கூட ஏற்றுமதியில் சரிவு காணக்கூடும். இடைநிலை வர்த்தக நிறுவனமான யூனியன் ஃப்ளூயர்ஸ் “இப்போதைக்கு எதுவுமே தெளிவில்லாமல், நிச்சயமற்றதாய் இருக்கிறது. பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்ய இனிமேல் ஐரோப்பிய இறக்குமதி கொள்கைகளை பயன்படுத்த முடியாது. பிரிட்டன் புதிய கொள்கைகளை அறிவித்தபின் அதன் சாதக/பாதக அம்சங்களை ஆராயவேண்டும். யூரோ, பிரிட்டன் பவுண்டிற்கு இடையிலான பரிமாற்ற மதிப்பின் நிலைத்தன்மையும் கேள்விக்குறிதான்” என்கிறது.

பிரிட்டனில் கிளைகள் வைத்திருக்கும் சில நிறுவனங்கள் தற்காலிகமாக வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு நகர ஆரம்பித்திருக்கின்றன. ஒரு மலர் இனப்பெருக்க நிறுவனத்தில் வேலை செய்யும் ஃப்ரான்ஸின் லூசியிடம், “ப்ரெக்ஸிட் முடிவு மலரினப்பெருக்க நிறுவனங்களை பாதிக்குமா?” என்று கேட்டபோது “நிச்சயமாக சொல்லமுடியாது” என்றார். அவருடனான விவாதத்தில் அவரின் “போனால் போகட்டும்” என்ற புன்னகை மனநிலையை காணமுடிந்தது. “வருத்தப்படவேண்டியது பிரிட்டானியர்கள்” என்றார்.

3.ஐரோப்பாவின் வேலையாட்கள் இல்லாமல், பிரிட்டனின் தோட்டக்கலை துறை சரிவை சந்திக்க நேரும் என்று நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள். பழங்கள் மற்றும் காய்கறிகள் அறுவடை செய்யும் பருவங்களில், ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான வேலையாட்கள் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு பயணிக்கிறார்கள். பிரிட்டனின் தோட்டக்கலை நிறுவனங்கள், புதிய மாற்றங்களால் பயணக் கட்டுப்பாடுகள் வரும் பட்சத்தில் விளைவு மோசமாக இருக்ககூடும் என்கிறார்கள். பிரிட்டனின் 7 சதவிகித வேலையாட்கள் (கிட்டத்தட்ட இரண்டு மில்லியன்களுக்கும் மேல்) ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள்.

பிரிட்டனின் தோட்டக்கலை மற்றும் உருளைக்கிழங்கு துறையின் தலைமை ஆலோசகர் “பிரிட்டனின் பொதுஜனத்திற்கு தோட்டக்கலை துறை எப்படி செயல்படுகிறது என்றும், அவர்கள் சமையலறை மேஜைக்கு பழங்களும், காய்கறிகளும் எப்படி வந்துசேருகின்றன என்பதை பற்றிய புரிதலும் இல்லை” என்கிறார்.

பிரிட்டனின், பெரும்பாலும் ஐரோப்பிய வேலையாட்களை பருவ பணிகளுக்கு எடுக்கும் பச்சை இலை காய்கறி வளர்க்கும் ”நிக்”கும், தானிய உற்பத்தியாளர் லாரன்சும், அவர்களின் ஐரோப்பிய வேலையாட்கள் பொருட்கள் வாங்க வணிக வளாகங்களுக்கு செல்லும்போது பிரிட்டானியர்கள் அவர்களை அணுகி “உங்களை நாங்கள் இனிமேல் வரவேற்க போவதில்லை” என்று கூறுவதாக தெரிவிக்கின்றனர். உள்ளூர் வேலையாட்கள் கிடைப்பது மிகப்பெரும் சவால் என்றும், அவர்கள் நிரந்தர வேலைதான் கேட்பார்களென்றும், பருவ வேலைகளுக்கு ஒத்துக்கொள்வதில்லை என்றும் கூறுகின்றனர்.

வெங்கடேஷ் சீனிவாசகம்

முந்தைய கட்டுரைநண்பர்களின் நாட்கள்
அடுத்த கட்டுரைகடிதங்கள்